பரிசு பெற்ற சில நூல்கள்

1. முற்றத்துக்கரடி : அகளங்கன் சிறுகதைகள்

சமீபத்தில் அறுபது வயதைக்கடந்திருக்கிறார் அகளங்கன். அவரின் எழுத்துப் பணியில் கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என்றிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு என்ற வகையில் இதுதான் முதலாவதாகும். 42 வது வயதில் அவரின் இந்நூல் 21 சிறுகதைகளை உள்ளடக்கியதாகும்.

இனத்தன்மையின் தனித்துவமும், வன்னிப்பகுதிமக்களின் இன்றைய வாழ்வியலும் என்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன. வவுனியாவின் பம்பைமடு என்ற விவசாய கிராமத்தின் மண்ணின் வனப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் அசைபோடும் மனிதர்களைக் காட்டுகிறார்.

மரபு வகையில் அமையப்பெற்ற நடத்தை முறைகளின் விசித்திரங்களையும் வாழ்வியலையும் போர்க்காலச் சூழலையும் அதன் பின்னதான வாழ்க்கையையும் விரிவான அளவில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். மிருகங்களும் தாவரங்களும், பறவைகளும் வெறும் குறிப்பீட்டளவில் மட்டுமில்லாமல் அதன் வெவ்வேறு வகைப் பெயர்களுடனும் இயல்புடனும் இவரின் கதைகளில் தென்படுகின்றன.

ஆண்களின் உளவியல், மற்றும் கிராமிய பெண்களின் உளவியலை கூர்ந்து நோக்கும் உரையாடல்களால் நிரம்பியிருக்கிறது. வழக்கமானக் கட்டமைபை தகர்க்கும் பெண்களும் இதில் தென்படுகிறார்கள்.

புலம்பலுக்குள் மாட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். குமார் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு பல கதைகளின் உருவாக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அகதிமுகாம் நிலைகளும் போர்சூழலும் தீவிரமாக நம் கண்களில் நடமாட வைத்து விட்டார். அதேபோல் வவுனியா பிரதேச நில அமைப்பும்,வைத்யசாலைகளும், விவசாய நிலங்களும் மண்ணின் மணத்தோடு பதிவாகியுள்ளன. (முற்றத்துக்கரடி - அகளங்கன் சிறுகதைகள்- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு)

2. ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள்நாவல்

அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது. அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது. விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடமே அவரது இந்நாவல் உலகம்.... நோய்களுக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்கள் இல்லாமல், நோய்கள் வராமல் இருக்க ஆய்வு செய்யும் விஞ்ஞான மருத்துவர்களைப் பற்றி இந்நாவல் பேசுகிறது. “ஆளுத்தான் குட்டை. மூளை நெட்டை” என்ற வகையைச் சார்ந்தவர்கள் இவர்கள். எல்லாத் துறையைச் சார்ந்தவர்களைப் போல இவர்களின் வாழக்கையும் பொறாமையும், துர்குணங்களும், பெருமிதங்களும், உழைப்பும் கொண்டதாக இருக்கிறது.

ரங்கநாதன் என்ற விஞ்ஞானி தான் துறையின் மூத்தவர் என்ற தகுதியில் எல்லா துஸ்பிரயோகங்களையும் செய்கிறார். ஆனந்த மூர்த்தி உழைப்பால் உயர்ந்து நின்று முன்னுதரமான இருந்தாலும் பிரச்சினைகளாலும், தனிமையாலும் மன நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார். கதை கட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அர்ச்சுனன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பெண் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்ற அளவில் சிரமப்படுகிறார்கள்.

துருப்புச் சீட்டுகள் போல ஆய்வுக்கூடத்து மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மைதிலி என்ற பெண் விஞ்ஞானி இந்த குழப்பங்களிலும் தன்னை ஒரு வெடிகுண்டாகவே நகர்த்திக் கொள்கிறாள். அறிவியல் உலகம் சார்ந்தவர்கள் ஆய்வுக்கூடத்தின் உலகிற்குள்ளேயே முடங்கிப் போகிறார்கள். அவர்களை ஆட்டுவிக்கும் தனிமனித உணர்வுகளின் கூட்டிசைவாய் சம்பவங்கள் அமைந்து விடுகின்றன.

வெளி உலகமோ, அரசியல் தாக்கமோ, கலாச்சார நடவடிக்கைகளோ அவர்களை பாதிக்காமல் இருப்பதாலேயே அவர்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலப் பின்னணியும், திராவிட அரசியல் சார்ந்த அம்சங்களும் இந்நாவலில் இழையோடி இருப்பது அறிவியலாளர்களுக்குள் இருக்கும் தமிழ் அரசியல், மொழி சார்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. இலக்கியம் காட்டும் அறம் என்றைக்குமானதாக வெளிச்சம் காட்டும் எனபதை உள்ளுணர்வாக்கியிருக்கிறார். அறிவியல் சார்ந்த உலகத்தை முகக்கண்ணாடியாய் வெளிப்படுத்தும் முக்கியப் பதிவாய் இந்நாவல் அமைந்திருக்கிறது.

 (நெடுஞ்சாலை விளக்குகள் - ப. க. பொன்னுசாமியின் நாவல், 350 பக்கங்கள், ரூ.280, என் சி பி எச் வெளியீடு, சென்னை)

3. பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்: சேதுபதி கட்டுரைகள்

பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.

1. நமக்குத் தொழில் கவிதை.

2. நாட்டிற்குழைத்தல்

3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது

வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத் தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக அமைந்தவை.

சமகாலத் தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை. இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார். ஈனர்கள் என்று சாடுகிறார்.

தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பாரத தேசம் சுதந்திரமடைந்து. மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப் பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல் என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது.

அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின் வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கை ஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.

(பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள், முனைவர் சொ. சேதுபதி, ரூபாய். 115, நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை)

சுப்ரபாரதிமணியனின் சில புதிய நூல்கள்

ஓ ..செகந்திராபாத் ..

வேலை காரணமாய் எட்டு ஆண்டுகள் செகந்திராபாத்-ஹைதராபாத் நகரங்களில் சுப்ரபாரதிமணியன் வாழ்ந்த போது கண்டடைந்த அனுபவங்கள் கலாச்சாரப்பின்னணியுடன், இலக்கிய அம்சங்களுடன் 25 கட்டுரைகளாக பதிவு பெற்றுள்ளது (ரூ.100, என்சிபிஎச்)

எட்டுத்திக்கும் (பயண அனுபவங்கள்)

இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகள் உட்பட பல வெளிநாட்டுப் பயண அனுபவங்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பதிவுகளும் அடங்கியுள்ளன. இலக்கியம் சார்ந்த பதிவுகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். (ரூ.100, என்சிபிஎச்)

சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் (சிறுவர் கதைகள்)

கதை சொல்லி நிகழ்ச்சிகளின் போதும் குழந்தை இதழ்களிலும் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட குழந்தைகளின் உலகங்கள் சார்ந்த கதைகள் (ரூ.30, விஜயா)

அன்பே உலகம் (சிறுவர் கதைகள்)

ரூ.50, திருப்பூர் நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, திருப்பூர்.

சூழல் அறம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) ரூ.60

மேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) ரூ.50

மூன்றாம் உலகப்போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) ரூ.70

மூன்றும் ( என்சிபிஎச் )

புத்துமண் : நாவல்

சமூகம் சார்ந்த செயல்பாடுகளை அக வழிப்பயணமாகக் கொண்டு அற உணர்வுகளின் வீச்சுக்குள் வாழும் மனிதன் ஒருவனின் வாழ்க்கைப் பயணம்தான் இந்த நாவல். ஒற்றை ஆண். தனிமையாக்கப்பட்டவரோ..

அல்லது தனிமைப்படுத்திக் கொண்டவரோ.. எதுவும் பொருந்தும் கதையின் நாயகருக்கு. சொந்த மனிதர்கள் மீதான நேயத்தை விட மனிதநேயம் அதிகப்பட்டுப் போகிறது. சுற்றுச்சூழல் மீதான அவரின் அதீத அக்கறை வழக்கம்போல அங்கீகாரமற்ற சூழலுக்குள் அவரை தள்ளுகிறது. அடுத்த தலைமுறையின் மீதான அக்கறையில் அம்பது சதவீதம் கூட அங்கீகாரமற்ற தனது நிலைக் குறித்த அக்கறையற்று இருப்பதால் சுய புலம்பலோ.. பச்சாதாபமோ அற்ற காத்திரமான மனிதராக வலம் வருகிறார். தனிமை.. முதிர்ச்சியான ஆணின் மன..

மற்றும் உடல் நிலை மாற்றங்கள் அதீதமாக அலசப்பட்டிருப்பது நல்லத் தொடக்கம். பெண்களின் உள்.. வெளி.. அக.. புற.. என அனைத்து வெளிகளுக்கும் பயணிக்கும் இலக்கியம் ஆணின் உயர்நிலையை சாடிக் கொண்டுதான் செயல்பட வேண்டியிருக்கிறது. முதிர்ந்த ஆணின் மனவோட்டங்கள் வெளிப்பட்டிருப்பது சற்று ஆரோக்கியமான மாற்றம்தான். சொந்த வாழ்க்கைச் சூழலும் அவரை பின்னகர்த்தும் தன்மைக்குள்தான் பயணிக்கிறது. (உயிர்மை, ரூ.100)

தேனீர் இடைவேளை - நாவல்

இன்றைய விழிபிதுங்கும் தொழில் நகரமாம் திருப்பூரை வாழிடமாகக் கொண்டவர். மூச்சு முட்டும் சூழலில் மாறுதலுக்குள்ளான தொழில் நகரத்தில் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் விடியலைத் தேடும் மனிதர்கள்.

சுப்ரபாரதிமணியன் என்ற சூழலியல் ஆர்வலர், கட்டுரையாளர், கவிஞர், இதழியலாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்டவரது நாவல் 'தேநீர் இடைவேளை'. வெவ்வேறு நபர்கள் எழுத நினைத்து அல்லது தவிர்த்துவிடும் அன்றாட அவலங்கள் முதல் பாகமாக பத்து கடிதங்களின் வடிவில் எழுதா எழுத்துகளாக வடிவம் பெறுகின்றன.

இக்கடிதங்களின் சேரல் முகவரி நமதாகவே இருக்கின்றன. பெரும்பான்மையான வேளைகளில், நமது பிரச்சனைகளே நம்மை வந்தடையும்போது விட்டு வெளியேறாமல் மூழ்கித் தவிக்கிறோம். சில நேரங்களில் அவலங்கள் பொதுத் தன்மையுடன் மூச்சுக்காற்றாய் உள்ளிறங்கி வெம்மையோடு வெளியேறுகின்றன. ( ரூ 70, என்சிபிஎச்)

விமோசனம்

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. பதினாறு சிறுகதைகள்... அவருடைய பதினைந்து தொகுதிகிள்ல 250 கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. “சமூக யதார்த்தம் தன் மனித ஆளுமையுடன் சேர்ந்து கலையாக உருவெடுக்கிறது. கலை வெற்றிடத்திலிருந்து பிறக்க முடியாது என்கிற காரணத்தினாலேயே, எந்த சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக அது இருக்கிறது. எனும் இந்திரனின் கூற்றை உறுதி செய்வது போல இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன. (ரூ.80, காவ்யா)

சப்பரம் நாவல்

சுப்ரபாரதிமணியன் என்னும் இலக்கிய ஆளுமையின் படைப்புகளில் ஒன்றான ‘சப்பரம்’ நாவலைப்படிக்கிற வாய்ப்பு கிடைத்தது. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வாழ்க்கையில்தான் பெற்ற வலியைப் பொறுக்க முடியாமல் துவண்டு போகிறநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் தொடரப் போகிறது. கண்ணகியும், நல்லதங்காளும், சீதாவும், பாஞ்சாலியுமாய் எத்தனை பெண்கள். (ரூ.100, என்சிபிஎச்)

சமையலறைக்கலயங்கள் - நாவல்

இரு பெண்களை வைத்து திருப்பூர் பனியன் கம்பனி தொழில் வாழ்க்கையைச் சொல்கிறார். ஆப் நைட், புல் நைட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்நாவலில் தொழிலாளர்கள் வெடி நைட் செயவதாக எழுதியுள்ளார். அதிசயமாக உள்ளது. எட்டு மணி நேர வேலை உரிமையை போராடிப் பெற்றோம். ஆனால் வெடி நைட் என்று தங்கள் உழைப்பை மக்கள் செலுத்ட வேண்டிய கட்டாயத்தால் பெண்கள் உள்ளனர். பத்மா போன்ற பெண்களின் வாழ்க்கை தொடந்து கொண்டிருக்கிறது. (ரூ.160, என்சிபிஎச்) (ஆர்.நல்லகண்ணு)

நீர்த்துளி நாவல்

திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன்.

சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப் படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார்.

 உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான கதாபாத்திரங்கள், விளிம்பு நிலை மக்களை இந்த நாவலில் நிறைத்திருக்கிறார். இடம்பெயர்ந்து வந்து வேலைக்காக அந்த நகரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களின் வாழ்க்கையைச் கூர்ந்து பார்த்து எழுதியிருக்கிறார்.

சுற்றுசூழல் பிரச்சினையால் சாயப்பட்டறைகள் மூடப்படுதல், அதனால் வரும் பொருளாதரப்பிரச்சினைகள், விவாகரத்து பெற முடியாமல் அப்பெண் தன்னை மனச்சிதைவுக்கு ஆட்படுத்திக் கொள்வது என்பது பற்றி கலை அனுபவங்களுடன் நுணுக்கமாகப் பேசுகிறார். (ரூ.180, உயிர்மை) (-பிரபஞ்சன்)

சுடுமணல் - நாவல்

மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன. நதிநீர் பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “சுடுமணல்”. தமிழில் மறுபதிப்புகள் கண்டது. (ரூ.90, என்சிபிஎச்) - தோப்பில்முகம்மது மீரான்

சுப்ரபாரதிமணியன் கதைகள் : முழுத்தொகுப்பு

வாழ்க்கை எவ்வளவு வகையான மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது. ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும் உள்ள இக்கதைகளை படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம் கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான். (ரூ.950, 1200 பக்கங்கள். வெளியீடு : காவ்யா, சென்னை)

சாயத்திரை – நாவல்

விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக் கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத- அல்ல, மறக்கக்கூடாத - புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது. - இந்தியா டுடே (எதிர், பொள்ளாச்சி. ரூ.180)

தறிநாடா நாவல்

நெசவாளர் வாழ்க்கை சார்ந்த இலக்கிய பதிவுகள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன. சோசலிச யதார்த்தவாதம் என்ற முத்திரையுடன் தொ.மு.சி இரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ முன் நிற்கிறது. திருப்பூரில் நடைபெற்ற நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காககூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரிதான் அப்போராட்டம் நடைபெற்றது.

தொழிற்சஙக ரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப் போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொனம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது. ஜாதீய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப் போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது.

பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கட்த்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது. “இதென்பீ எம்.ஜி.

ஆர் வாளா. கையில் எடுத்ததும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும்” என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது.போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது. (தறிநாடா, பக். 240, ரூ.185, என்சிபிஎச் வெளியீடு, சென்னை)

மற்றும் சிலர் : நாவல்

(டிஸ்கவரி கிளாசிக் வரிசை 2015 வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ்) சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் ‘அவன் ஆனது’ போலவே சுப்ரபாரதிமணியனின் ‘மற்றும் சிலர்.

இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை.

அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள்கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் ‘மற்றும் சிலரும்’ ஒன்று. –நகுலன் நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும்.

புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். (18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது.

இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன.

ஆற்றூர் ரவிவர்மாசார் ‘நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது’ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம்.

இவை மட்டும் போதாது. இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா, திஜா. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான நாவல்மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள். (புகழ்ச்சி இல்லை. வெட்கம் வேண்டாம்) -ஜெயமோகன்

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை. ரூ.180) மாலு - இயக்குனர் ஞான ராஜசேகரன் நான் இரு முறை மலேசியா சென்றிருக்கிறேன். அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்திருக்கிறேன்.

மலேசியாவைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த நாவல் அமைந்துள்ளது என்பது இந்நாவலின் வெற்றி. மலேசிய தமிழர்கள் பற்றிய கூரிய பார்வையாக இது பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத்தை ஒரு பண்பாடாக ஏற்றுக் கொண்ட சமூகம் அவர்களில் ஒரு பகுதியினர். அதுவும் பாமரத்தனமான தமிழ் திரைப்படத்தை.

அப்பாசாமி என்ற பெரியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலைவது, தன் மகன் திருச்செல்வத்திற்கு மலேசியாவில் வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை விலக்கக் கோரி, நாவல் முழுக்க ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இன்னொரு பகுதி சுற்றுலா விசாவில் அங்கு சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் தங்கி அந்நாட்டு காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ரப்பர் தோட்ட மொன்றில் அடைக்கலமாகிற விக்னேஷ் என்ற இளைஞனின் மனப் போராட்டங்களும் ஆகும். திருச்செல்வமும், விக்னேஷ§ம் நண்பர்கள்.

மலேசியாவிற்கு செல்ல ஆசைப்படும் குணசேகரன் என்ற இளைஞன் மலேசியா பற்றிய நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பிடித்ததாய் குறிப்பிடப்படும் பகுதிகள் இன்னொரு பகுதியாகும். மலேசிய தமிழர்களின் வாழ்க்கை, மலேசிய நாட்டு வரலாறு,தமிழர்களின் மனக்குமறல்கள் என்பதன் இலக்கியச் சாட்சியாக அப்பகுதிகள் அமைந்துள்ளன..

ரப்பர் தோட்ட வீட்டிற்குள் அடைபட்ட விக்னேஷின் இயங்காதத் தன்மை அவனை மன நோயாளியாக்கும் தனமையில் அலைக்கழிக்கிறது. கனவும், எண்ணங்களும் சிதிலமாக்குகிறது. சரியான பதிவேடுகள் இல்லாமல் சிறையில் அடைபட்ட தமிழர்களை அந்நாட்டுச் சிறையில் பார்த்திருக்கிறேன்.

அடையாளமற்ற மனிதர்கள் அவர்கள். அந்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் உழைத்திருந்தாலும் தமிழர்கள் அடையாளம்  மறுக்கப்படுகிறவர்களாக  இருப்பதை இந்நாவல் காட்டுகிறது.

இதில் அப்பாசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு தரவே முடிவதில்லை. மனு தர முடிவது சிரமமானதல்ல. பெற்றபின் காரியங்கள் நடக்குமா என்பது சந்தேகமான வேறு விசயம்.

இலக்கியப்பிரதிகள் மூலம் குணசேகரன் கண்டடைவது எதிர்மறையான விசயங்களாய் இங்கு பதிவாகியிருக்கும் போது அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதாய் முடிவது குறையாகச் சொல்லலாம். மலேசிய தமிழர்களின் வாழ்க்கை இலக்கியப் பிரதிகளில் தமிழகத்தில் காணக் கிடைப்பது அபூர்வமாகி விட்ட சூழலில் இந்நாவல் கூரிய சமகாலப் பதிவாகும்.  

(ரூ.80, உயிர்மை பதிப்பகம், சென்னை)

Pin It