நான் சில நாட்களுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடான "தமிழில் அழகிய அமெரிக்கக் கவிதைகள் நூற்றுப் பதினொன்று" என்ற புத்தகம் ஒன்று வாங்கினேன். அப்பல்கலைக் கழக முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர் திரு.இர.கணபதி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் பிரபலமான 19, 20 ஆம் நூற்றாண்டு கவிஞர்கள் மற்றும் Afro-American கவிஞர்களின் கவிதைகளில் தனக்கு மிகவும் பிடித்த 111 கவிதைகளை அழகு தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இவற்றில் அனைத்துமே  எனக்குப் பிடித்திருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் Emily Dickinson ஐப் பற்றி இணைய தளத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைத்தன.

அமெரிக்க இலக்கிய வரலாற்றில் Emily Dickinson என்ற பெண் கவிஞர் பிரபல கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கள் ஆண்களுக்கு அடங்கி, கட்டுப் பெட்டியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாறாக வெளிப்படையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் கருத்துக்களை அவர் கவிதைகளில் வெளியிட்டார். இவர் 1830 ல் அமெரிக்காவின் Massachusetts, Amherst என்ற ஊரில் ஒரு பிரபல குடும்பத்தில் பிறந்தார். இவர் நல்ல சமூக பழக்க வழக்கங்களில் வளர்க்கப்பட்டார். பள்ளிப் பருவத்தை Amherst Academy (1834 - 47) யிலும், Mount Holyoke Seminary (1847 - 48) யிலும் படித்தார்.

இவர் தம் 23 வயதிலிருந்து பிறரிடமிருந்து விலகி, 30 வயதில் ஒரு துறவியைப் போல வீட்டிற்குள்ளேயே இருக்கலானார். அவவப்போது விருந்தினர்களை வரவேற்பதிலும், இங்கிலாந்துக்குள்ளேயே உறவினர்களைச் சந்திப்பதிலும், நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவதிலும், குறிப்பாக Susan Huntington Gilbert (Sister-in-law) என்பவரிடம் தன் கவிதைகள் பற்றி விவாதிப்பதிலும் ஈடுபட்டார். இவர் கவிதைகளில் தனிமை, வேதனை, மகிழ்ச்சி, காதல், மதம், ஒழுக்கம், மரணம் பற்றி உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார். கவிதை அமைப்புகளில் சொற் ஜாலம், எதுகை மோனை, ஆங்காங்கே இடைவெளிகளில் கோடிட்டும் (Dashes used as a pause), முக்கியமான இடங்களில் சொற்கள் பெரிய எழுத்துகளிலும் (Capitalisation) இருந்தன.

இவர் புதிய எண்ணங்களுடன் நிறைய எழுதியிருந்தாலும், இவர் திறமையை இவர் உயிருடன் இருந்தபோது யாரும் உணரவில்லை. இவர் வாழ் நாளில் 'Safe in their Alabaster Chambers' உட்பட 7 கவிதைகளை மட்டுமே 'Springfield Daily Republican' என்ற பத்திரிக்கையில் 1862 ல் வெளியிட்டுள்ளார். இவர் மரணத்துக்குப் பின் (1886) இவர் சகோதரி, Lavinia சிறு சிறு கோப்புகளாக நூலில் கட்டப்பட்ட சுமார் 1000 கவிதைகளை தேடி எடுத்தார். இவைகளை சரியான முறையில் தொகுத்து, Mabel Loomis Todd மற்றும் Thomas Wentworth Higginson என்ற இலக்கிய விமர்சகர்கள் மூன்று தொகுப்புகளாக 1890, 1891 மற்றும் 1896 ல் வெளியிட்டனர்.

இவர் கவிதைகள் Life, Nature, Love, Time and Eternity, The Single Hound என்று 5 தொகுப்புகளாக 1924 ல் வெளியானது. இவரது மேலும் சில கவிதைகள் 1945 லும், பின் Thomas H.Johnson என்பவரால் 'The Poems of Emily Dickinson' என்று முழுமையாக 1955 லும் புத்தகங்களாக வெளியிடப்பட்டது.

இவர் தம் கவிதைகளை 'This Is My Letter to the World' என்ற கவிதையில் 'என்னை அன்புடன் மதிப்பிடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிவுமிகு மாண்புடன்,
இயற்கை சொல்லும்,
எளிமைமிகு செய்திகளை,
எனக்கெழுதாத இவ்வுலகிற்கு,
இதோ என் கடிதம்

நான் பார்க்க முடியாத கைகளில்,
ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன,
இயற்கையின் செய்திகள்.
நாட்டின் இனிய மக்களே!
இயற்கையினைப் போற்றிட,
என்னை அன்புடன் மதிப்பிடுங்கள்.

(தமிழாக்கம்: பேராசிரியர் திரு. இர.கணபதி)

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ரசனையாளர்களும், தமிழ், ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களும் அமெரிக்கக் கவிதை இலக்கியத்தைப் பற்றி அறியவும், அதன் நுட்பங்களில் ஈடுபாடு கொள்ளவும் ஓர் அறிமுகமாக இம்மொழிபெயர்ப்பு அமையும் என்று பேராசிரியர் கூறுகிறார். இது முற்றிலும் உண்மை.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It