கீற்றில் தேட...

உலகின் மிகப் பிரபலமான 'பாப்' இசைப் பாடகரான மைக்கேல் ஜாக்ஸனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அச்சு மற்றும் மின் ஊடகங்களால், இருவரது பாலியல் உறவுகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் 'புலன்விசாரணைகள்' செய்யப்பட்டன; அரைகுறை ஆடைகளுடன் தங்கள் உடற் கவர்ச்சிகளைக் காட்டும் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமில்லாது, கஜுராஹோ, கோனார்க் பாணியிலமைந்த சினிமாக் காட்சிகளையும் பாலியல் வக்கிரக் கதைகளையும் செய்திகளையும் பிரசுரித்துத் 'தொழில்' நடத்தும் பத்திரிகைகளும்கூட 'அறவொழுக்கக் காவல் துறையினராக' செயல்பட்டன.

கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து ' நீதி விசாரணையையும்' செய்து முடித்து அவர்கள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பும் கூறி தங்கள் 'அதிகாரத்திற்கு' ஏற்ற தண்டனைகளையும் வழங்கிவிட்டன. 'குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்ற விசாரணயின் மூலம் மெய்ப்பிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் ( நிரபராதி) என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும்' என்பது அமெரிக்க, இந்திய சட்டங்களில் வற்புறுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை ஊழல், கையூட்டு வழக்குகளைச் சந்திக்க நேரும் அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நெறியை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.

எனினும் சங்கராச்சாரியார், மைக்கேல் ஜாக்ஸன் விவகாரங்களில் சில அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. முன்னவரைப் பொருத்தவரை இந்தியாவில், தமிழகத்தில், சிறு எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள், இந்துத்துவவாதிகள் தவிர பரந்துபட்ட வெகுமக்களின் அனுதாபம் ஏதும் அவருக்குக் கிடைக்கவில்லை. பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுடன் மட்டுமே அவரை சரியாக அடையாளப்படுத்திப் பார்த்தனர்.

வெகுமக்கள். ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பலிகொண்ட மதவெறிச் சக்திகளுக்குத் துணைபோனது, தலித்துகளையும் பெண்களையும் இழிவுபடுத்தியது போன்ற, இந்தியத் தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களை வெளிப்படையாவே, மக்கள் கண்களுக்கு முன்பாகவே அவர் செய்து வந்தார். (தமிழக ஆட்சியாளர்களுக்கு இவை குற்றமாகத் தெரியவில்லை என்பதன் அடையாளமே சிறையிலும்கூட அவர் வெகு எச்சரிக்கையுடன் பார்ப்பன சம்பிரதாயத்துடன் நடத்தப்பட்டார் என்பதாகும்.)

மக்களின் அறவியல் சார்ந்த, கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வெறுப்புணர்வு நியாயமானதே. ஆனால், மிகக் கொடுரமான குற்றங்களைச் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் மேற்சொன்ன அனுமானத்தைப் பிரயோகிக்க வேண்டும். நீதி விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறப்படும் வரை அவர்களுக்கும் சில சட்டப் பாதுகாப்புகளும் உரிமைகளும் உள்ளன. ஆளும் கட்சித் தலைவியையோ தலைவரையோ திருப்தி செய்வதற்காக அவர் மீது அத்துமீறிய செயல்களைச் செய்யக் காவல்துறையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

நீதிமன்ற விசாரணைக்கு உட்படாத, 'தடா', 'பொடா'போலவே' குண்டர்சட்டமும்' ஜனநாயக விரோதமானது என்பனவற்றை நிலையாக எப்போதும் இருக்காத 'வெகுமக்கள் உணர்ச்சிகள்' என்பதற்கு அப்பால் உணர்ச்சிவசப்படாமல், நடுநிலையில் சிந்திக்க வேண்டிய, எந்த ஒரு அரசியல் கட்சியினதும் கருத்துநிலையாளர்களனிதும் கைதட்டலுக்கு ஒருபோதும் காத்திருக்கத் தேவையில்லாத மனித உரிமை ஆர்வலர்கள் மறந்துவிட்டது ஒரு அவப் பேறாகும்.

சமூகக் குற்றங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட அரசியல் பகைமைகள், அவற்றோடு சேர்ந்த 'கொடுக்கல் வாங்கல்கள்' ஆகியவற்றுக்காக மட்டுமே சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பரவலாக நம்பப்படும் சூழல் இருப்பதால் மட்டுமின்றி, 'சட்டமுறைகளுக்கு விரோதமான சட்டம்' என்னும் காரணத்தால் அவரோடு சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் மீது 'குண்டர் சட்டம்' பயன்படுத்தப்பட்டதையாவது மனித உரிமை அமைப்புகள் எதிர்த்திருக்க வேண்டும். ஏனெனில், காவல் துறையினருக்கு 'மாமூல்' கொடுப்பதை நிறுத்திவிட்ட தாதாக்களுக்குப் பாடம் புகட்ட மட்டுமின்றி, தங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க, சமூகப் பிரச்சனைகளைப் போராடுபவர்களை நசுக்க இதே சட்டம் நாளை ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

மற்றோர் புறம், மைக்கேல் ஜாக்ஸனோ உலகு தழுவிய ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றவர். அவரது இரசிகர்கள் உலகம் முழுவதிலும் எல்லா இனங்களிலும் சாதிகளிலும் வர்க்கங்களிலும் உள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நாள் முதல் அமெரிக்காவில் கறுப்பின மக்களிடமிருந்து மட்டுமின்றி வெள்ளை இனத்தவரிடமிருந்தும் குறிப்பாக இள வயதுடையோரிடமிருந்து அவருக்கு ஆதரவும் அனுதாபமும் பெருகிவந்திருக்கின்றன.

தீவிர வலதுசாரிப் பிற்போக்கு வெள்ளை அதிகாரச் சக்திகளுக்கும், சட்டத்தின் நடுநிலைத்தன்மையிலும் ஜனநாயக ஆட்சியிலும் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்க வெகுமக்களுக்குமிடையான போராட்டமாகவே ஜாக்ஸன் மீதான வழக்கு விசாரணை தொடக்கத்திலிருந்தே பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமாக உள்ளவர்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய 'செய்திகளை'ச் சப்புக் கொட்டிக்கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஊடகங்களில் பணியாற்றும் 'வல்லுநர்கள்' ஜாக்ஸன் மீதான வழக்கு குறித்துப் பல்வேறு கோணங்களிலிருந்து 'அலசல்களை' தொடர்ந்து வழங்கி வந்தனர்.

கடந்த இரண்டாண்டுகளாக ஈராக்கில் தொடர்ந்து நடைபெறும் இரத்தக் களரிகள், வன்முறை, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் சரிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ( இங்கு சிவகாசி ஜெயலட்சுமி, சங்கராச்சாரியர் விவகாரங்கள் போல்) ஜாக்ஸன் விவகாரம் இந்த ஊடகங்களுக்குப் பயன்பட்டன. 'குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை நிராபராதியாகவே கருதப்பட வேண்டும்' என்னும் நெறிமுறை தூக்கி எறியப்பட்டது.

தன்னிடம் தகாத பாலுறவை மேற்கொள்ள முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டைப் பதிவு செய்த 12, 13வயதுச் சிறுவனின் (இவன் புற்று நோயாளி) தாய், செல்வந்தர்களை மிரட்டியோ அவதூறு செய்தோ பணம் பறிக்கும் வேலையில் முன்பு ஆட்பட்டவள் என்ற செய்தியும் வெளியாகியது. ஜாக்ஸன் தங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது கடவுளின் அருளே என்றும் அவர் தகாத நடத்தைகள் எதிலும் ஆட்படுபவரல்லர் என்றும் அப் பெண்மணியே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகளடங்கிய ஒரு ஒலி நாடா இரண்டாண்டுகளுக்கு முன் அப் பெண்மணியாலேயே வெளியிடப்பட்டது.

ஜாக்ஸன் மீது இந்த வழக்குத் தொடரப்பட்ட பின், அதுவரை அவருடன் பிணக்குக் கொண்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர். காவல் துறையினர் தங்களது முக்கியமான சாட்சிகளிலொருவராகக் கருதிய ஜாக்ஸனின் முன்னாள் மனைவி , குற்றம் சொல்லப்படக்கூடிய நடத்தைகள் ஏதும் ஜாக்ஸனிடம் இருந்ததில்லை என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருந்தும் ஜாக்ஸனை ஆபாசமாகச் சித்திரிக்கும் புகைப்படங்கள், பேட்டிகள், ஆதாரமற்ற வதந்திகள் ஆகியன ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.

ஜாக்ஸனின் மீது இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் அப்பட்டமான வலதுசாரி வெள்ளை இன அதிகாரிகளாவர். சாண்ட்டா பார்பரா மாவட்ட அரசு வழக்குரைஞர். டாம் ஸ்னெட்டன், ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். புகழின் உச்சியில் இருந்த ஜாக்ஸனுக்குக் களங்கம் கற்பிக்கவும் பாப் இசைத் தொழிலிருந்து அவரை அப்புறப்படுத்தவும் 1993 ஆம் ஆண்டிலேயே சிறுவர்களுடன் தகாத உறவில் ஆடுபட்டதாக ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

இந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்காகவும், தேவையற்ற ஊடகக் கவனத்தைத் தவிர்ப்பதற்காகவும் ஜாக்ஸன், தன் மீது குற்றம் சாட்டியவர்களுக்குப் பெருந் தொகையொன்றைக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சமரசம் செய்துகொண்டார். தன்னை இந்த நெருக்கடியில் சிக்க வைத்த ஸ்னெட்டனைத் தனது எழுத்துகளிலும் பாடல்களிலும் மறைமுகமாகக் கண்டனம் செய்தார் ஜாக்ஸன்.

ஜாக்ஸனைப் பழி தீர்க்க மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த ஸ்னெட்டனுக்கு கான்ஸர் நோயாளியான சிறுவனிடமிருந்து பெற்ற புகார்க் கடிதம் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஜாக்ஸனுக்குக் கைவிலங்கு பூட்டி நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்ததுடன் , அவரது பண்ணை வீட்டை சோதனை போடுவது என்னும் பெயரால் ஏராளமான ஆயுதமேந்திய காவல் துறையினரை அங்கு அனுப்பியும் ஊடகங்களுக்குப் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் ஜாக்ஸன் பற்றிய அவதூறு இயக்கத்தை முனைப்பாகச் செய்து வந்தார்.

சமுதாயம் முழுவதற்குமான அறவியல், பண்பாட்டு அளவுகோலாகச் செயல்படும் தகுதி தங்களுக்கு உள்ளது எனக் கருதும் வலதுசாரி கிறிஸ்துவ வெள்ளை இனத்தவர் அமெரிக்க சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 1993 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே ஜாக்ஸன் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறாமல் போனதில் ஏமாற்றமடைந்து தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்த இந்த சக்திகளுக்குத் தூபம் போடும் வேலையை ஸ்னெட்டன் தொடர்ந்து செய்து வந்தார்.

ஜாக்ஸனின் குடும்பப் பின்னணியையும் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் கருத்தில் கொள்ளும் எந்தவொரு மனிதநேய சமுதாயமும் அவர் மீது பரிவும் இரக்கமும் கொள்ளுமே தவிர வெறுப்பையும் கண்டனத்தையும் உமிழ்ந்து அவரைத் தண்டிக்காது. தொழிலாளிகள் மிகுதியாக வாழும் சிக்காகோ புறநகர்ப் பகுதியொன்றில் உருக்குத் தொழிற்சாலையொன்றில் கிரேன் ஆப்பரேட்டராகப் பணி புரிந்து வந்த தொழிலாளியொருவரின் மகனாக 1958 இல் பிறந்தவர்.

உடன் பிறப்புகள் எட்டு. ' ஜாக்ஸன் 5' அவரும் அவரது சகோதர சகோதரிகளுமடங்கிய இசைக் குழு. அதில் தனது ஐந்தாவது வயதிலிருந்தே பாடத்தொடங்கினார். 1968 இல் அக் குழுவின் பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்யும் முதல் ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டது. அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1970களின் பிற்பகுதியில் ஜாக்ஸன் தனியாகப் பாடத் தொடங்கியதிலிருந்தே உலகளவில் மிகப் பிரபல்யமான பாப் இசைப் பாடகர் என்னும் வரலாறு எழுதப்படத் தொடங்கியது. 1982 இல் வெளிவந்த 'த்ரில்லர்' என்னும் அவரது பாடல் தொகுப்பின் விற்பனை 5 கோடியைத் தாண்டி பாப் இசை வட்டாரத்தினரை வியப்பிலாழ்த்தியது. 1984 இல் மட்டும் (பாப் இசைக்கான ) எட்டு கிராம்மி விருதுகளைத் தட்டிச் சென்றார் ஜாக்ஸன்.

உலகளாவிய புகழையும் கோடிக்கணக்கான டாலர் செல்வத்தையும் அவர் ஈட்டிய போதிலும், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி அரிதாகவே இருந்தது. கண்டிப்பும் கோபமும் நிறைந்த தனது தந்தையால் இளம் வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் கேலிக்கும் வசைகளுக்கும் உட்படுத்தப்பட்டதையும் அவரால் மறக்கமுடியவில்லை. 1993 இல் நடத்தப்பட்ட பேட்டியொன்றில், சோகமும் தனிமையுமே தனது வாழ்க்கையில் நிறைந்திருப்பதாகக் கூறினார்.

கறுப்பினத்தவரைச் சேர்ந்த அவர் தனது முகத் தோற்றத்தையும் சருமத்தின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதற்காகச் செய்து கொண்ட ஏராளமான அறுவை சிகிச்சைகளும் உட்கொண்ட மருந்துகளும் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தன. அமெரிக்காவின் ஆதிக்க வெள்ளை இனக் கலாச்சாரத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சந்தையின் தேவைகளுக்கும் அவர் இப்படித் தன்னைப் பலி கொடுத்துக் கொண்டார்.

அமெரிக்காவில் இதுவரை வேறு எந்தக் கறுப்பினக் கலைஞரோ பெறாத புகழையும் செல்வத்தையும் அடைந்தவரும் அமெரிக்க வெள்ளை இன சந்தைக் கலாச்சாரத்தின் மாயத் தோற்றங்களுக்கு மயங்கியவரும் ' என்றும் மாறாத இளமை' பற்றிய அமெரிக்கக் கனவுகளைப் பகிர்ந்து கொண்டவருமான ஜாக்ஸனின் அடிமனத்தில் இளவயதில் குடும்பத்தில் அனுபவித்த கொடுமைகள் மட்டுமல்லாது, புகழையும் செல்வத்தையும் பெறுவதற்காகத் தனது சொந்த கறுப்பின அடையாளத்தையே புதைக்கவேண்டியிருந்ததும் பெரும் உறுத்தல்களாக இருந்திருக்க வேண்டும்.

மாய யதார்த்தம் நிரம்பிய பின் நவீனத்துவ உலகிற்கு ஏற்ற ஒரு கதாநாயகனாக விளங்கவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். முகத் தோற்றத்தையும் தோலின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதன் மூலம் தானும் ஒரு வெள்ளையனாகக் கருதப்படுவோம் என்னும் நம்பிக்கை, பாலியல் தொடர்பாக அமெரிக்க புரோடெஸ்டெண்ட் கிறிஸ்துவ வலதுசாரிச் சக்திகள் வகுத்திருக்கும் விழுமியங்களுக்கு உகந்த வகையில் தனது நடத்தைமுறைகள் இருப்பதை உறுதிசெய்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் ( எடுத்துக்காட்டாக அவரது மூன்றாவது குழந்தைக்கு ஒரு பதிலித் தாயை அவர் ஏற்பாடு செய்தது, நல்ல குடும்பஸ்தன் என்ற பெயர் எடுக்க விரும்பியது, தான் ஒரினச்சேர்க்கையாளன் அல்ல என்பதை மெய்ப்பிப்பது)

ஆகியன அவரது எந்தவொரு ஆசையையும் தேவையயும் நிறைவு செய்யக் கூடிய பெருஞ்செல்வம், அவரை எப்போதும் சுற்றியிருக்கும் பெருங்கூட்டம் ஆகியவற்றின் இருப்போடு கூர்மையாக முரண்பட்டன. யதார்த்த வாழ்வின் சோகங்களுக்கான இழப்பீடாக அவர் கருதியது அவரது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் என்னும் மாய யதார்த்தைத்தான். இதனுடைய நீட்சியாகவே அவர் தன்னையும் ஒரு குழந்தையாகவே பாவித்துக் கொண்டதும், குழந்தைகளின் உலகத்திலேயே தனது வாழ்க்கையை வாழ நினைத்ததுமாக இருந்திருக்கக்கூடும். இதுதான் அவரை இருமுறை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்திருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே பாடலிலும் ஆடலிலும் அசாதரணமான திறமை வாய்க்கப் பெற்றிருந்த ஜாக்ஸன், அமெரிக்கப் பாப் இசைத் துறையில் தன் தடம் பதிக்கத் தொடங்கிய காலகட்டம் குறிப்பிடத்தக்கது. ரொனால்ட் ரீகனின் தீவிர வலதுசாரிப் பிற்போக்கு ஆட்சி நிலவிய 1970 களில், வியத்நாமில் அமெரிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக 1960 களில் எழுந்த போர் எதிர்ப்பு இயக்கங்கள், கறுப்பின மக்களின் புரட்சிகர இயக்கங்கங்கள் முதலியன மங்கி மறைந்து கொண்டிருந்தன.

சுயநலம், தனி நபர்வாதம், கேளிக்கை நாட்டம், பேராசை முதலியன மேலோங்கியிருந்தன. இருப்பினும் மெர்வி கேயி (Mervin Gaye), ஸ்டீவி வொண்டெர் (Steve WonBer), கர்ட்டிஸ் மேஃபீல்ட் (Curtis MayfielB) போன்ற கறுப்பினப் பாடகர்கள் போரை எதிர்த்தும் நிக்ஸன் போன்ற பிற்போக்கு அரசியல்வாதிகளை விமர்சித்தும் பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், அமெரிக்காவின் அன்றைய மனோநிலைக்கு ஏற்ற, மிகக் கவர்ச்சிகரமான, மனத்தை சுண்டியிழுக்கக்கூடிய பாடல்களை மட்டுமே பாடினார் ஜாக்ஸன்.

இன்று வரை அவர் எழுதிப் பாடியுள்ள பாடல்களில் பொருள் செறிவு எதனையும் பார்க்க முடியாது. ஜாக்ஸன் பற்றிய அமெரிக்க மதிப்பீடுகளில், அவரது திறமை பற்றிய கருத்துகளைக் காட்டிலும் அவரது குறுந்தகடுகளின் விற்பனை, அவர் ஆட்டிய வருவாய் ஆகியன பற்றி வியப்புத் தெரிவிக்கும் கருத்துகளே அதிகம் இருப்பதைக் காணலாம். 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் போன்றோர் மின்னணு சாதனங்களின் துணை கொண்டு உருவாக்கிய நவீன மாயாஜாலத் திரைப்படங்கள் அமெரிக்க மக்களின் இரசனையை வடிவமைப்பதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. அத்தைகைய தாக்கத்திற்கு ஏற்பவே ஜாக்ஸனின் பாடல்களும் ஆடல்களும் அமைந்தன. அதாவது, ஆதிக்க, சுரண்டல் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பல்வேறு கறுப்பினக் கலைஞர்களுக்கு மாறாக, ஜாக்ஸன் 'ஆபத்தில்லாத' 'அச்சுறுத்தாத' கலைஞராகவே விளங்கினார்.

அவரது தனிப்பட்ட நடத்தை முறைகளிலுள்ள விசித்திரங்களை இலாபகரமாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கக் கலாச்சாரத் தொழிலுற்பத்தித் துறையைப் பொருத்தவரை கடந்த இரண்டாண்டுகளாக அவற்றை அவரைப் பற்றிய கிளுகிளுப்பூட்டும் வதந்திகளாகப் பரப்பிவந்ததும்கூட ஒரு இலாபகரமான தொழில் முயற்சிதான். ஜாக்ஸனின் வழக்கு விசாரணையையொட்டி பத்திரிகைகளின் விற்பனை பெருகியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது. தொலைக்காட்சிகளும் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயைப் பெருக்கிக் கொண்டன.

இந்த முறை ஜாக்ஸன் கட்டாயம் குற்றவாளி என மெய்ப்பிக்கப்ப்ட்டு தண்டனை விதிக்கப்படுவார் என்று ஆரூடம் கூறி வந்த மீடியா பண்டிதர்களால் ( குறிப்பாக CNN, Fox) அவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதியுடன் 12 நடுவர்களும் (Juries) சேர்ந்து , அவர் மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றங்கள் ஒன்றைக்கூட காவல் துறையினர் ஐயந்திரிபுற மெய்ப்பிக்கவில்லை என ஒருமனதாகத் தீர்ப்புக் கூறியதைச் செரிக்க முடியவில்லை. தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, இப்போது அந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஜாக்ஸன் நிரபராதி எனக் கூறிய நடுவர்கள் சட்ட அறிவும் விவேகமும் அற்றவர்கள் என விமர்சிக்கின்றனர். நடுவர்களில் ஒருவர் இந்த வழக்குடன் தொடர்புள்ள குற்றங்களை ஜாக்ஸன் செய்ததாகச் சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்னும் போதிலும் கடந்த காலத்தில் சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டிருக்கக்கூடும் எனக் கூறியதை அக்கூற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுத்து ஊதிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் மைக்கேல் ஜாக்ஸனும் சரி, பிற அமெரிக்கப் பிரபலங்களும் சரி காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலகக் கலைஞருமான ஆண்டி வோர்ரோலின் (Andy Worhol) புகழ் பெற்ற வாசகத்தை மெய்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது In America any Body can Be famous for fifteen minutes!