பொங்கல் விவசாயம் சார்ந்த திருவிழா. குறிப்பாக மண் சார்ந்த திருவிழா. மண்ணிலிருந்து விளைவித்த புத்தரிசிப் பொங்கல், மண்ணிலிருந்து விளைந்த கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை, தேங்காய் என்று அத்தனைப் பொருட்களிலும் மண் மணம் மணக்கும். எல்லாவற்றையும் விட பொங்கல் வைக்கும் பானையும் மண்ணால் வனையப்பட்ட பானையாகவே இருக்கும்.
மண் பானையில் அரிசிமாவுக் கோலமிட்டு, அதன் கழுத்தில் மஞ்சள், மாவிலைகள், பூக்கள் கட்டி, சந்தனம், குங்குமமிட்டு, சூரிய ஒளி படுமாறு கிழக்கு வெளியில் வைத்துப் பொங்கல் பொங்குவார்கள்.
இப்படியாகப் பொங்கல் என்றவுடனேயே மண் பானைக்கு மவுசு கூடிவிடும். பொங்கல் நாள் நெருங்குவதற்கு இரண்டு மாதம் முன்பிருந்தே, குயவர் வீடுகளின் திரிகைகள் ஓயாமல் சுழா ஆரம்பித்து விடும். கரம்பை மண் கண்மாயிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்து வீட்டு முற்றத்தில் குவித்து, அவற்றைப் பரப்பி வட்டமாகக் குழி பறித்து, நடுவில் குடம் குடமாய்த் தண்ணீர் விட்டு, சுற்றிலும் ஆற்று மணல் அணைத்து வைத்து ஊற வைப்பார்கள். கரம்பை நன்றாய்த் தண்ணீர் குடித்து ஊறியதும், அவற்றில் வரித்துக் கட்டிய கோவணத்தோடு இறங்கி, தொடைகள் அதிர, ஆற்று மணல் சேர்த்து மிதிப்பார்கள். மிதிப்பது அநேகமாய் ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள் இருக்கும். அளவைப் பொறுத்து மாறுபடும்.
ஆற்று மணலும், ஊறிய கரம்பையும் ஒரு விதமான பக்குவ நிலையில் ஒன்று கலக்கும் வரை கால்கலால் பூப்போல வட்டம் தோன்றுமாறு மிதிப்பார்கள். சக்கரத்தின் அலங்காரமான ஆரக்கால்கள் போன்ற ஒரு விதத் தோற்றம் கிடைக்கும். பின் அது அகன்று விடும். அதன் மீது வலது கைச் சுட்டு விரல் மட்டும் நீளுமாறு வைத்து நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் கோடு கிழித்து, அப்படியே ஆட்டுத்தோல் சுருட்டுவது போலச் சுருட்டிச் சுருட்டி எடுப்பார்கள். எடுத்தவற்றை ஆற்று மணல் சேர்த்து மீண்டும் மிதிப்பார்கள். பானை செய்யத் தேவையான அளவு பக்குவம் வந்தவுடன் அவற்றை அப்படியே எடுத்துச் சிறு குன்று போல் குவித்து வைப்பார்கள். அதன் மீது சாக்குப் போட்டு தண்ணீர் தெளித்து மூடி வைப்பார்கள். மழைக் காகிதம் வந்த போது, அதனாலும் மூடி வைப்பார்கள்.
எல்லாம் உள்ளிருக்கும் மண்ணின் பிறகு சிறிது ஓய்வு மற்றும் உணவுக்குப் பின், திரிகையைத் தூக்கி, அதன் அடிப்புறக் கம்பிக்கு எண்ணெய் இடுவார்கள். திரிகைக் குழியில் வாழைப் பட்டையைக் குச்சியில் மடித்து அதன் உட்புறச் சுற்றுச் சுவர்களில் வைத்திருப்பார்கள். அதிலும் எண்ணெய் இடுவார்கள். பின்னர் திரிகைக் குழியில் திரிகைக் கம்பியைப் பொருத்திச் சுழலவிட்டுப் பார்ப்பார்கள். சில திரிகைகளில், கம்பிகளுக்குப் பதில், ஆரஞ்சுப் பழச் சாறு பிழியும் கருவியில் இருப்பது போலக் குமிழ் மற்றும் அது பொருந்தும் வகையிலான குழி இருக்கும். அதிலும் எண்ணெய் இடுவார்கள். இப்போது, இயந்திரத் திரிகை வந்து விட்டது. இந்த வகைத் திரிகைகளில் மேலே வட்டப் பலகை இருக்கும். அதனை எதிரே ஒருவர் அமர்ந்து சுற்ற வேண்டும். இன்னும் சில பகுதிகளில், வண்டிச் சக்கர வடிவில் நடுவில் சிறு இடம் விட்டு இருக்கும். இதனைப் பானை வனைபவரே கம்பினால் சுற்றிக் கொள்ளலாம்.
அப்புறம் திரிகையில் நடுவில் குழைத்த பதப்படுத்திய மண் தேவையான அளவு எடுத்து, நடுவில் வைத்து, திரிகை சுழல ஆரம்பிக்கும். வனைபவரின் கை அதை அணைத்து மேலெழுப்பி, சுற்றுச்சுழற்சியின் விஞ்ஞான அனுபவத்தில், உச்சி நடுவில் லாவகமாகக் கை நுழைத்துக் குழி உண்டாக்கிப் பானை வடிவில் மண் வனையப்படும். பானையில் உச்சிவாய் வடிவம் உருவான பின்பு, கழுத்துப்பகுதி ஆரங்கள், சுழற்சியின் வேகத்திலேயே லாவகத்தோடு, கீற்றுக் குச்சியின் துணையோடும், விரல்களின் துணையோடும் இடப்படும், பானையின் வடிவம் தேவையான அளவுக்கு வந்தவுடன், இடது கையில் அல்லது வலது கை மணிக்கட்டில் கட்டியிருக்கும் நூலால் அடிப்பகுதியை லாவகமாக அறுத்தெடுப்பார் வனைபவர்.
பின்னர் அவை சற்று உலர்ந்தவுடன், அவற்றை எடுத்து, கரண்டி வடிவிலிருக்கும் தட்டுக் கட்டை, பவுடர் பூசும் பிளாஸ்டிக் பிடி போட்ட வட்ட வடிவப் பஞ்சு வடிவிலிருக்கும், தட்டுக் கல் உதவியுடன், வனைந்த அடியற்ற பானைகளைத் தேவையான அளவு தட்டி உருண்டை வடிவம் கொண்டு வருவதற்காக, இடது கையில் தட்டுக் கல்லை உட்புறம் வைத்துக் கொண்டு, வெளிப்புறம் வலது கையால் தட்டுக் கட்டையில் வட்டப் பகுதியினால் லாவகமாகத் தட்டுவார்கள். பல இடங்களில் பெண்களும், சில இடங்களில் ஆண்களும் இந்த வேலைகளைச் செய்வார்கள். கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் தொடை வரை வழித்த புடவை அல்லது வேட்டிகள். தொடையில் வைத்து, ஒரு பிள்ளையைக் குளிப்பாட்டுவது போன்ற நிலையில் வைத்துத் தட்டுவார்கள். அந்தக் காலத்தில் பானை தட்டத் தெரிந்த பெண் என்றால் அவளுக்குக் கல்யாண மவுசு அதிகம். ஒரு உழைப்பு சக்தியல்லவா?
பின்னர்த் தட்டிய பானைகளைக் கூடாரத்திற்குள்ளோ அறைக்குள்ளோ வரிசையாகத் தரையில் அடுக்கி உலர வைப்பார்கள். வெயிலில் காய வைத்தால், மண மண் என்பதால் வெடித்துவிடும். மண மண் என்றால் மணல் மண். அதாவது ஆற்று மணல் சேர்த்த மண். இதையே அடுப்பு போன்ற, திரிகை தேவைப்படாத கை கைவேலைகளில் உருவாகும் பொருட்கள் செய்வதற்கான மண் என்றால் அதனைச் சண்டு மண் என்பார்கள். சண்டு என்றால், அறுவடைக் காலத்தில் கிடைக்கும் வைக்கோல்களின் உதிரிகள் அல்லது உதிரிகளாகத் தரிக்கப்பட்ட வைக்கோல்கள். மணலோடு அத்தகைய சண்டும் சேர்த்த மண் என்றால், வெயிலில் உலர வைப்பார்கள். வெயிலில் அது வெடிக்காது. வைக்கோல் நார்கள் மண் வெடித்து விடாத படி காக்கும்.
இனக்காய்ச்சலில் (நிழல் காய்ச்சலில்) உலர்ந்த பானைகளைப் பின்னர் சற்று வெயிலிலும் வைத்துக் காய வைப்பார்கள். பின்னர் பானைகள், சூளை வைப்பதற்குத் தயாராகிவிடும். அதையடுத்துச் சூளை வைப்பார்கள்.
பானைகளைச் சுள்ளாக்கரை எனப்படும் சூளைக் கரையில் அதாவது சூளை வைக்கும் இடத்தில், வட்ட வடிவில் அரை வட்டக் கோள உயரத்தில் குவியலாக, இடையிடையே காய்ந்த தேங்காய் மட்டைகள், சிறிய சிறிய காய்ந்த தென்னை மட்டைகள் சேர்த்து அடுக்குவார்கள். பின்னர், அடுக்கி முடித்ததன் மேல், தேங்காய் மட்டை, தென்னை மட்டை, வைக்கோல்கள் முதலிய எரிபொருட்களால் மூடுவார்கள். மூடியபின் மாட்டுச் சாணத்தைக் கரைத்து, மேலாகத் தெளித்துப் பூசுவார்கள். பின்னர், மூன்று நான்கு முனைகளில் வைக்கோலுக்குள் துளையிட்டு, நெருப்பு மூட்டுவார்கள். அடர்த்தியான வெண்புகை எழும்பும். இரண்டு மணி நேரத்தில் வெந்து விடும். இடையிடையே கவைக் கம்பால் மேலாக இருக்கும் பானையில் வேக்காட்ப் பதம் பார்ப்பார்கள். இத்தகைய சூளைகள் பெரும்பாலும் உச்சி வெயில் தாண்டிய நடுவெயில் நேரத்திலேயே வைக்கப்படும். திடீர் மழை வந்தால் உழைப்பெல்லாம் வீண்தான். அதீத நெருப்பென்றாலும், பானைகள் முறுகித் திருகி விடும். கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் அனுபவ நெருப்பில் எரியவிட வேண்டும்.
அப்புறம் அந்த நாளின் மசங்கிய மாலையிலோ, அல்லது மறுநாள் காலையிலோ, பானைகளைப் பிரித்தெடுப்பார்கள். பானைகள் செவ செவ என்று சிவந்து மலர்ந்திருக்கும். சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்சுகள் போலிருக்கும் பானைகள் ஒவ்வொன்றும் வாய் திறந்து சிரிக்கும். சிறுவர், பெண்கள், ஆண்களென்று அனைவரும் இந்தப் பிரித்தெடுக்கும் வேலையில் மகிழ்ச்சியாக சில போனது வந்ததுகளைப் பண்டுவம் பார்க்கும் வேலைகளும் தொடர்ந்து நடக்கும். இப்போது அவை விற்பனைப் பண்டங்களல்லவா. அப்புறம் அவற்றை வண்டிகளில் ஏற்றிச் சந்தைக்குக் கொண்டு செல்வார்கள். சில நேரம் வீடுகளே சந்தையாகிவிடும். சில இடங்களில், பானைகளைக் கயிற்றால் கழுதில் கட்டி, சுற்றிச் சுற்றிப் பூ வடிவத்தில் கட்டி, தலையில் சுமந்து சென்று கூவி விற்பார்கள்.
அப்படியான கூட்டுழைப்பில் உருவாகி வந்த புதுப் பானைகளே, பொங்கல் நேரத்தில் வீடுகளுக்குப் பயணம் போய், வீட்டார்களால் கோல மேனி பெற்று, மஞ்சள், மாவிலைப் பூக்கள் அலங்காரம் பெற்று, வண்ணம் பெற்று, சந்தன வாசம் பெற்று, குங்குமக் கோலம் பெற்று, விபூதியின் வேசம் பெற்று, நீர் தாங்கி, நீரிலிட்ட அரிசி, பருப்பு, வெல்லம் தாங்கி, கரும்பின் அணைப்புத்தாங்கி, அடியில் வைத்த விறகுச் சூட்டின் வெம்மை தாங்கி, வேண்டிய வெப்பத்தை உள்ளே கடத்தி, உணவைச் சமைத்து, உள்ளிருந்து மகிழ்வாக நுரைகளை வெளித்தள்ளி, பொங்கலோ பொங்கல் என்று தமிழர்களை ஆதவன் பார்த்துக் கையுயர வைத்தது.
பொங்கல் பண்டிகை என்றவுடனேயே நினைவுகளில் நிற்கின்ற வடிவமாகத் தோன்றும் பொங்குகின்ற பொங்கல் பானை, இன்று உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது. விஞ்ஞானம் பெற்ற நவீனப் பாத்திரங்கள் அவற்றை நொறுக்கி விட்டன. அவற்றை உருவாக்கிய மனிதர்களையும் தான்.
சுற்றுச்சூழலைக் கெடுக்காத தொழில் நுட்பம் ஒன்று நவீனப்படுத்தப்படாமல், நவீன வாழ்விற்காகத் தகவமைக்கப்படாமல் அது ஒரு விஞ்ஞானம்சார் கலையென்று புரிந்து கொள்ளப்படாமல், வருண சாதி அமைப்பின் கொடூரம் அதனை ஒரு சாதி சார் தொழிலாகச் சுருக்கி, நிலப்பிரபுத்துவ வாழ்நிலைமைகளோடு பொருந்திய வாழ்க்கை நிலைமைகளை அத்தகைய கலைஞர்களுக்கு வழங்கியதன் விளைவை இன்று சமூகம் அனுபவித்துக் கொண்டுள்ளது.
அவர்கள், ஐயனார் கோவில் சார் பூசாரிகளாகவும், கோவில் சார் நிகழ்வுகளுக்கான குறிப்பாகக் குதிரையெடுப்புத் திருவிழாவுக்கான மண்குதிரைகள், கருப்பு சாமி, முனியாண்டி சாமி வகையறா சுடுமண் உருவங்களை உருவாக்கும் கலைஞர்களாகவுமே வாழ்நிலை உள்ளவர்களாயிருக்கிறார்கள். விவாசாய வாழ்வின் நொறுங்கல் அவர்களின் புதிய தலைமுறைகள் பல இடங்களில் இன்று அநேகமாக பாரம்பரியக் கலைத் தொழிலான சுடுமண் கலையிலிருந்து அந்நியப்பட்டு விட்டார்கள். ஏனைய பாரம்பரியக் கலைத் தொழில் போலவே முதலாளித்துவ வாழ்முறையின் பல்வேறு பிழைப்பு வழிகளைத் தேர்ந்து கொண்டு விட்டார்கள். மிகச் சிறிய அளவிலேயே இவை நகர்சார் சுற்றுப் புறங்களில் நிகழ்கின்றன.
அனேகமாக இன்று நகர்சார் வாழ்விலிருக்கும் இந்தக் கலைப் பரம்பரையினரின் இளைய தலைமுறையினருக்கு இந்தக் கலையின் வாசம் கூடத் தெரியாது. குலசாமி வழிபாடு என்கிற வகையில் அய்யனார் கோவிலுக்குச் செல்லுதலே, அவர்களது இணைப்புக் கன்னியாக உள்ளது. இந்தத் தலைமுறையினரின் கைகளிலிருந்தும், சமூகத்தின் கைகளிலிருந்தும் மண் பானைகள் விழுந்து நொறுங்கி உடைந்து விட்டன. அவை சினிமாக்களின் சண்டைக்காட்சிகளில் உடைத்து நொறுக்கப் பயன்படும் காட்சிப் பொருளாகிவிட்டன. மானாமதுரை போன்ற ஓரிரு இடங்களிலேயே கூட்டுறவு சொசைட்டி அமைத்து இந்தக் கலையின் ஒரு பகுதி காப்பாற்றப்பட்டு வருகிறது.
விளாச்சேரி போன்ற பகுதிகளில் சுடுமண் கலை பொம்மைத் தொழிலாக வளர்ந்துள்ளது. அங்கே சாதிய வட்டம் தாண்டி இன்று அது ஒரு பிழைப்பு முறையாக, பல்வேறு சாதியினரும் கற்றுக் கொண்டு செயல்படும் தொழில் முறையாக முதலாளித்துவ வடிவமெடுத்துள்ளது. முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதை நோக்கிய நகர்விருக்கிறது.
சில இடங்களில் வனத்துறையினருக்கான தொட்டிகள் செய்யும் தொழிலாக மாறியுள்ளது. பூத்தொட்டிகளின் இடத்தையும் இன்று பிளாஸ்டிக்குகளும், சிமிண்டுத் தொழில் நுட்பங்களும் பிடித்துள்ளன.
குதிர்கள், அடுப்புகள், மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கும் குளுதாடி, சட்டிகள் போன்ற எல்லாவற்றிலும் சுடுமண் கலையின் மீதான தாக்குதல் கொடூரமாக நிகழ்ந்தபடியேயுள்ளது. மானாமதுரை போன்ற பகுதிகளில் சுடுமண்ணாலான குளிரூட்டி (பிரிட்ஜ்) கண்டுபிடித்தார்கள். ஏழைகளுக்கான எளிமையான குளிரூட்டி அது. ஆனால் முறையான விளம்பரங்களின்றித் தொழில் வாய்ப்பை இழந்தது இந்தத் தொழில் நுட்பம்.
பாரம்பரியமான கலை அறிவாளர்களைக் கொண்டு கல்விக் கூடங்களில் கூட இந்தக் கலையைச் சொல்லித் தரலாம். அனால் அங்கே கிளே மாடலிங் என்று வண்ண வண்ண இரசாயணக் கலவைக் களி மண் போன்ற ஒன்றினால் அவ்விடங்கள் நிரப்பப் படுகின்றன. முப்பரிமாணக் கலையான சுடுமண் கலையின் நுட்பங்கள் இன்று விஷூவல் கம்யூனிகேசன் மாணவர்களுக்குக் கூடத் தேவைப்படுகிறது. அரங்க அமைப்புகள், அரங்க அலங்காரக் கலை, வீட்டலங்காரம், அறையலங்காரம் என்று பல இடங்களிலும் இதன் நவீன காலத் தேவைகள் உள்ளன. ஆனால் முறையான அரசு உதவி, கலைஞர்களுக்கிடையேயான முறையான இணைப்பு, அவர்களுக்கான பொருளாதார ஏற்பாடு, விற்பனை ஏற்பாடு இன்ன பிற முறைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் இன்றி, அவர்கள் இன்னும் சாதிய முறைமையின் கட்டுக்களுக்குள் சிக்குண்டு, நிலப்பிரபுத்துவச் சிந்தனை முறைமைகளினால் சிதைந்து போனவர்களாகவே இருக்கிறார்கள்.
மனித குலத்தின் நாகரிகப் படிக்கட்டில் வெகு ஆரம்பத்திலேயே சக்கரத்தின் கண்டுபிடிப்போடும், நெருப்பின் உதவியோடும், அறிவின் துணையோடும், உழைப்பின் உன்னதத்தோடும், இயற்கையின் அரவணைப்போடும் உருவான புராதனமாக இந்தச் சுடுமண் கலை மனித குலத்திற்கான நடைமுறை வாழ்வியல், உளவியல் வாழ்வியலின் தேவைகளை எப்போதும் நிறைவு செய்தே வந்துள்ளது.
நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டங்களுடனும் முதலாளித்துவக் காலத்தின் மூர்க்கத்துடனும் மதவெறி களிமண் பிள்ளையார்களையும் காணாமலடித்துவிட்டது. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பிள்ளையார் விசுவரூபமெடுக்க, சுற்றுச் சூழல் பிள்ளையாரான மண் பிள்ளையார், காணாமல் போய்விட்டார்.
கார்த்திகைக் காலத்தில் விளக்கேற்ற உதவும் கிளியாஞ்சிட்டிகளும் இன்று பிளாஸ்டிக் சிட்டிகளின் வருகையால் உடைந்து நொறுங்கிவிட்டன. லாலு பிரசாத் கொண்டு வந்த இரயில்வே டீ கப்புகளுக்குப் பதிலான சிறிய மண் சட்டிகளின் பயன்பாடு என்னவாயிற்றென்று தெரியவில்லை.
மனித குலத்தின் பாரம்பரியக் கலைஞர்களை நவீன நாகரிகம் நட்டாற்றில் விட்டு விட்டது. அவர்களின் கலையும், தொழிலும் வருமான சாதிச் சான்றிதழில் பெயர்போட உதவுகின்ற பெயர் தாங்கி, குலசாமி கோயில்களில் பூசை வைத்துக் கும்பிட்டபடி, தம் பேரக் குழந்தைகளுக்கு அந்தக் காலத்தில் உங்க தாத்தா எப்படி சாமி செய்வார் தெரியுமா என்று கதை சொல்லியபடி, மண்பானை எப்படிச் செய்வாங்க தெரியுமா என்று பழைய நினைவுகளில் உழன்றபடி செத்துக் கொண்டிருக்கிறார்கள் சுடுமண் கலைஞர்கள்.
மண்பானைச் சமையல் என்று போர்டு போட்டபடி இன்றும், சில கடைகள் இருக்கின்றன. மீன் உரச மண் சட்டி வாங்கி இன்றும் சில வீடுகளில் வைத்துக் கொள்கிறார்கள். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து மண் வளத்தைக் கொள்ளை கொண்ட முதலாளித்துவக் கொடூரத்திலிருந்து, தன்னையே கொஞ்சமாய் மீட்டுக் கொள்கிற சிரத்தையற்ற முயற்சியில் மாநகராட்சிகள் பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளைத் தடை செய்ய ஆலோசனைகளும், சட்டமும் இட்டுக் கொண்டிருக்கின்றன. பிரம்மாண்டப் பிள்ளையார்களை நீர் நிலைகளில் கரைக்க கலெக்டர்கள் தடையுத்தரவு பிறப்பித்தபடி இருக்கிறார்கள். மண்பானைக் குளிர் நீர் நினைவில் மட்டும் குளிரூட்டுகிறது.
உடைந்து நொறுங்கிய சுடுமண் சில்லுகளிலிருந்து பண்பாடு, நாகரிகம், கலை கசிந்தபடி இருக்கின்றன.
குக்கரில் பொங்கல் கொதித்தபடி இருக்கிறது. நகர வெளிகளில் இடுக்குகளிலிருந்து, விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிக் கவலைப்படாத மனிதர்களும் சொல்கிறார்கள்... பொங்கலோ... பொங்கல்!
- ஸ்ரீரசா (