இந்து சமூகத்தில், காரணமே இல்லாமல் ஒருவர் இன்னொருவரை அடித்தால் – அடிவாங்குபவர் கண்டிப்பாக ஒரு தலித் ஆணாகவோ, பெண்ணாகவோதான் இருப்பார். நட்ட நடுசாலையில் நூறு பேர் வேடிக்கை பார்க்க ஒருவன் விரட்டி, விரட்டி அடிக்கிறான் என்றால் – அவர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார். பெற்றவளாக இருந்தாலும் ஒரு பெண் யாரையாவது அடிக்கிறாள் என்றால், அது ஒரு குழந்தையாகத்தான் இருக்கும். சாதிப் படிநிலையில் ஒருவருக்கு கீழ் இன்னொருவர் எப்படி அடிமையோ, எதிர்த்துப் பேச முடியாதோ, எப்படி இழிவை சுமக்கிறார்களோ – அதுபோலத்தான் குழந்தைகளும்.

அனைத்து பெரியவர்களுக்கும் குழந்தைகள் அடிமைகள். அதுவும் தலித் குழந்தை என்றால், அடிமையிலும் அடிமை!

vennila_364என் பேரு வெண்ணிலாங்க. என் ஊட்டுக்கார் பேரு கண்ணன். எனக்கு 3 கொழந்தைங்க. அதுல 2 ஆவது பொண்ணுதாங்க அபினா. தோட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில 5 ஆவது படிச்சிட்டு இருந்தாள். அவள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, நாங்க ரெண்டு பேரும் கூலிக்கு போயிட்டோம். அங்கு தெரிஞ்சவங்களுக்கு போனு வந்ததுங்க. என் பொண்ணு கொளுத்திக்கிட்டான்னு சொன்னாங்க. அலறி அடிச்சி ஓடிப் போனேங்க. அதுக்குள்ள கடலூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிட்டாங்க.

“நான் உள்ள நொழையும்போது, "என் பேரு அபினா. என்னை டீச்சர் படிக்க சொன்னாங்க. நா சரியா படிக்கலன்னு 5 ஆவது படிக்கிற என்னை, ஒண்ணாவதுல ஒக்கார சொல்லி அடிச்சாங்க. நா போகல. திரும்ப அடிச்சாங்க. ஒண்ணாவது வகுப்புக்கு போக எனக்கு கூச்சமா இருந்திச்சி. அதனால வெளியில நின்னுக்கிட்டு இருந்தேன். எங்க டீச்சரு மத்த புள்ளைங்கள அனுப்பி, என்ன தரதரன்னு இழுத்துக்கிட்டு போய் ஒண்ணாவதுல ஒக்கார வச்சாங்க. அங்க உள்ள புள்ளைங்கள்ளாம் – என்னை படிக்காதவ, படிக்காதவன்னு கிண்டல் பண்ணி சிரிச்சாங்க. சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டேன்.

“மறுநாள் காலயில ஸ்கூலுக்கு போய் 5ஆவது வகுப்புல ஒக்காந்தேன். ஆனா, டீச்சர் என்னய ஒண்ணாவதுல ஒக்கார சொல்லி வெரட்டுனாங்க. எனக்கு அசிங்கமா இருந்தது. நேரா வீட்டுக்குப் போனேன். அம்மா அடுப்பு எரிக்க வைச்சிருந்த மண்ணெண்ணெய எடுத்து கொளுத்திக்கிட்டேன்' அப்படின்னு டாக்டர்கிட்ட வாக்குமூலம் கொடுத்துக்கிட்டு இருந்தா. அப்பதாங்க எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியும்'' என முழுவதையும் கோர்வையாக சொல்லக் கூட முடியாமல் வெம்பி, வெம்பி அழுத வெண்ணிலா, தனக்கு நியாயம் வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (NCPCR) முறையிட்டார்.

பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த பொது விசாரணையை, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சென்னையில் 28,29 நவம்பர் 2010 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியது. இதில் எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் வழக்கே அபினா என்ற கடலூர் மாணவியின் தற்கொலை வழக்குதான். படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தலித் சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக படிக்கப் போகும் குழந்தைகள் – பள்ளிக் கூடத்தின் உள்ளே நுழையும் போதேவா அ,ஆ,இ,ஈ அல்லது ஏ பி சி டி சொல்லுவார்கள்?

நகரம் சார்ந்த குழந்தைகளே திக்கித் திணறித்தான் படிக்கத் தொடங்குகின்றனர். சிலர் 6 ஆம் வகுப்புக்கு பின்னர்தான் சரளமாகப் பேசவே தொடங்குகின்றனர். கிராமச் சூழலில், அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் குழந்தைகள் சரளமாகப் படிக்கவில்லை என்ற காரணம் காட்டி – 5 ஆம் வகுப்பு மாணவியை 1 ஆம் வகுப்பில் அமர வைப்பதும், “படிப்பு வராத உங்களுக்கும், மாட்டுக் கறி தின்னு திமிரெடுத்த உங்களுக்கும் சொல்லித்தர வந்தது என் தப்புதான். டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு முதல்ல இங்கிருந்து போயிடணும்'' என்ற வன்னிய ஜாதித் திமிர் பிடித்த ஆசிரியரான சாந்தியின் சாதி வெறிக்கு பலியானவர்தான் அபினா.

எந்தப் பள்ளியிலாவது பார்ப்பன, சாதி இந்து குழந்தைகளோ, வெள்ளையாக இருக்கும் குழந்தைகளோ அடிவாங்கி நாம் பார்த்திருக்கிறோமா? அவர்கள் படிக்கவில்லை என்றாலும், பெற்றோர்களிடம் அன்பாய் கண்டித்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் அடித்தட்டு பிள்ளைகள் அப்படியா? கருத்த குழந்தைகள், அதுவும் முதல் தலைமுறையாகப் பள்ளி வாசலை எட்டிப் பார்க்கும் குழந்தைகள் – கூச்சமும், பள்ளி, கல்வி பற்றிய அச்சமும் பிடுங்கித் தின்ன, மனசஞ்சலத்துடன் கல்வியை தனதாக்க முயல்கின்றனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு முடித்து வருவதற்குள்ளேயே சந்திக்கும் சவால்கள்தான் எத்தனை?

இப்பொது விசாரணைக்கு வந்த ஒவ்வொரு வழக்கும் மனதை ரணப்படுத்தக் கூடியவை. ஜாதிவெறி, கடலூரில் அபினாவின் உயிரை எரித்தது என்றால், தலித் மாண வனான அரவிந்தனின் காதை பலிவாங்கிக் கொண்டது, சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி. கல்வியும் கெட்டு, காதும் கெட்டு, வாழ்க்கையும் கெட்டு திருப்பூரில் தற்பொழுது கூலித் தொழிலாளியாக வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறான் அரவிந்தன். சிவகங்கை மாவட்டம், கோளந்தி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன், சாக்கூர் உலகமாதா உயர் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வகுப்பறையில் அமர்ந்திருந்தவனின் கழுத்தில் எறும்பு ஒன்று கடித்துவிட, சட்டைக்குள் கையைவிட்டு சொறிந்திருக்கிறான். சட்டையின் காலர் மேலே தூக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்காமல் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தான்.

அப்போது வகுப்பறைக்கு வந்த கணித ஆசிரியர் பாலையா, காலர் தூக்கி இருப்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் “என்னடா பெரிய சண்டியரா நீ? காலர தூக்கிவிட்டு சண்டியர்த்தனம் செய்றியா? உங்கப்பா வெளியில சண்டித்தனம் பண்றான், நீ உள்ளே பண்றியா? பள்ளனுக்கெல்லாம் சண்டியர்னு நெனப்பு'' என திட்டிக் கொண்டே வந்து, அரவிந்தனின் இடது பக்க காதில் ஓங்கி அறைந்தார். அப்படியே சுருண்டு உட்கார்ந்த அரவிந்தனின் காதில் இருந்து நீரும், ரத்தமும் கொட்டியது. மருத்துவமனையில் சேர்ந்து 9 நாட்கள் மருத்துவம் எடுத்துக் கொண்டான்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அரவிந்தனுக்கு காது கேட்கும் திறனே அற்றுப்போயிற்று. உடல் தேறிய பிறகு, ஒரு காது போனால் என்ன மறு காது உள்ளதே என்ற தன்னம்பிக்கையுடன் பள்ளிக்குச் சென்ற அரவிந்தனை பள்ளியில் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுத்ததோடு, சான்றிதழையும் கொடுத்து அனுப்பிவிட்டது உலகமாதா பள்ளிக் கூடம். வேறு எந்தப் பள்ளியில் அவன் சேர முயற்சி செய்தாலும் அதனைத் தடுக்கும் வேலையையும் செய்து வருகிறார் ஜாதிக் கணித ஆசிரியர்.

இதுபோன்ற கொடுமைகள் ஒன்றிரண்டு இல்லை. சிறுவர், சிறுமிகளின் வயது, உளவியல், எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழங்கப்படும் தண்டனை களும் – பொது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக, கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, 32 மாணவர்களை பள்ளிப் பேருந்தில் ஏறவிடாமல், 200 மீட்டர் தொலைவுக்கு பேருந்தின் பின்னால் ஓடவிட்டு, பின்னர் ஏறச் சொல்லி தண்டனை வழங்கி இருக்கிறார்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில். வகுப்பறை குப்பையாக இருந்ததால் குப்பையை கூட்டி, அதையே பெண் பிள்ளைகளை தின்ன வைத்த கொடூரமும் நடந்துள்ளது, மதுரை மகபூப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்.

அவமானப்படுத்துவதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுவது, மற்றவர்கள் முன்பு இழிவுபடுத்துவது, முடியை வெட்டி அவமானம் செய்வது, கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துவது, அடித்து மண்டையை பிளப்பது, உதைப்பது என ஆசிரியர்களின் "அரும்பணிகள்'தான் பொதுவிசாரணைக்கு வந்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற பொது விசாரணையில், மொத்தம் 57 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், தலித் மாணவ – மாணவிகள் மீதான வன்முறைகள் தொடர்பாகவே அமைந்திருந்தன.

தலித் மாணவ – மாணவிகளின் பிரச்சனைகள் குறித்து ஆணையக் குழுவில் ஒருவராக இருந்த எழுத்தாளரும், ஆசிரியருமான பாமா பேசும்போது , “பள்ளிகள் அனைத்துமே "கஸ்டடி'களாகத்தான் உள்ளன. தலித் குழந்தைகளை அடித்தாலும், உதைத்தாலும், மானபங்கம் செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை. அவர்களிடம் அதிகாரம் இல்லை. பண பலமில்லை. அதனால் தலித் குழந்தைகளை அடிப்பது பிரச்சனைக்குரிய விஷயமில்லை என்று கருதப்படுகிறது.

“தலித்துகளால் வீட்டில் இருந்து படிக்க முடியாது. பள்ளிக்கூடம் வந்தால்தான் படிக்க முடியும். அந்த பள்ளிக்கூடத்திலும் ஒதுக்கப்படும் கொடுமை நடந்தால், அந்தக் குழந்தைகளின் உளவியல் சிக்கல் என்னவாக இருக்கும்? எல்லா குழந்தைகளும் பொக்கிஷம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டும் பொக்கிஷம் இல்லை. அதனால்தான் தாங்கள் சாப்பிட்ட மீதி எச்சில் சோற்றை மாணவர்களிடம் கொடுத்து, சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவிவிடு என்று ஆசிரியர்கள் சொல்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது'' என்பதைப் பதிவு செய்தார்.

சாதிவெறிக்கும், ஆசிரியரின் அதிகாரத்திற்கும் தங்கள் குழந்தைகளை பலி கொடுத்து விட்டு நிற்கும் பெற்றோர்கள் அனைவருமே சொல்வது, “அடிச்சாகூட பரவாயில்லிங்க, ஒரே அடியா சாவடிச்சிட்டாங்களே'' என்பதுதான். கல்வி மறுக்கப்பட்ட நம் சமூகத்தில் பெற்றோர்கள், நமக்குதான் படிப்பறிவில்லை; நம் பிள்ளைகளாவது நன்றாய் படித்து பெரிய ஆளாய் வர வேண்டும் என்பதையும் கடந்து – மருத்துவராக, பொறியியல் வல்லுநராக வர வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறார்கள்! அதனால் பிள்ளைகளை தங்கள் பங்கிற்கு அடித்து, உதைத்து, பள்ளிக் கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் டியூஷன் வைத்து, அவர்களை படிப்பாளிகளாக மாற்றும் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள். இதற்காக பெற்றோர்கள் கொடுக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், குழந்தைகளின் உயிரையும் சேர்த்தே பலி கொடுத்து விடுவதுதான் கொடுமை.

children_402வருங்கால தலைமுறையினரை உருவாக்கும் பள்ளி நிர்வாகங்கள் – எல்கேஜியா இவ்வளவு பணம்; ஆறாவதா இவ்வளவு பணம்; பத்தாவதா இவ்வளவு பணம் என மக்களிடம் இருந்து கறக்க வேண்டியதை சரியாக கறந்து விடுகிறார்கள். மாணவர்கள் இறந்தால் என்ன? அடிபட்டால் என்ன? கல்விக் கட்டணம் கட்டிய பிறகு பள்ளிக்கு வராமல் போனால்தான் என்ன? எது குறித்தும் அவர்களுக்கு கவலை இல்லை. தேவையானதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது பணம், பணம், பணம்...

100 சதவிகிதம் தேர்ச்சியை காட்டி, அடுத்த ஆண்டு பெற்றோர்களைக் கவர்ந்து பணம் பறிக்க, திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவி இந்துமதியை தூக்கு கயிறுக்கு பலி கொடுத்துள்ளது, புனித பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம். 7 ஆம் வகுப்பு மாணவிக்கு தேர்ச்சி அளிக்காமல், நீ பெயிலாகிவிட்டாய். அதனால் டி.சி.யை வாங்கிக் கொண்டு போ என்ற கடிதத்தை அனுப்பியது பள்ளி நிர்வாகம். கடிதத்தை பார்த்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கினாள் சிறுமி இந்துமதி. எத்தனையோ புகார் கொடுத்தும் காவல் துறை, கல்வி அதிகாரிகள் என எவரும் நடவடிக்கை எடுக்காததால், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் நீதி கேட்டு முறையிட வந்தார், இந்துமதியின் தாய் அமுதா.

குழந்தைகளை இத்தகைய கொடூர மான பள்ளிக்கல்வி முறைகளில் இருந்து மீட்டெடுப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாக இருக்கிறது. “குழந்தைகளை பள்ளிகளில் இருந்து பாதுகாக்க எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அத்தனையும் கண்துடைப்புதான். அடியாத மாடு படியாது, அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதுதானே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. குழந்தைகளின் உடல் மீது ஆதிக்கம் செலுத்த நாம் யார்? என்ற கேள்வியை ஆசிரியர்கள் தங்களது மனசாட்சியைக் கேட்டுக் கொண்டதுண்டா? ஆசிரியர்களின் மனோபாவத்தை முதலில் மாற்ற வேண்டியது அவசியம்'' என்கிறார், குழந்தைகளின் கல்வியாளர் மாடசாமி.

பொது விசாரணையின்போது நடைபெற்ற இன்னொரு அதிகாரத் திமிர் சம்பவம் என்னவென்றால், வழக்குகளில் ஆஜராகக் கூடிய ஆண் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டு, தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள பெண் அதிகாரிகளை அனுப்பி வைக்கின்றனர். வந்தவர்களுக்கோ குறிப்பிட்ட வழக்கு பற்றி எதுவும் தெரிவதில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் திணறல் மட்டுமே பதிலாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க, தனியார் பள்ளிகளில் நடந்துள்ள துன்புறுத்தல்கள், தற்கொலைகள், தாக்குதல்களால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களிடமிருந்து பதிலே இல்லை.

தவறிழைத்த தனியார் பள்ளி நிர்வாகிகளை தண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது என்பது போன்ற பதில்களையே அரசு அதிகாரிகள் வழங்கினர். அரசுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் பதில் சொல்லக் கூடியவர்கள்தான் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் என்ற அடிப்படை அறிவற்றவர்களாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். இதனால், தனியார் பள்ளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசு அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக, கூடியிருந்த பொது மக்கள் அரசு அதிகாரிகளை எள்ளி நகையாடினர்.

“அரசுப் பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர்கள் எந்த விசாரணை யும் நடத்துவதில்லை. தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலர்களிடம்கூட பிரச்சனைகளை கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை. இது, மாவட்டத்தின் தனிப் பிரச்சனை என்பது போல கருதுகின்றனர். ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், அது ஆதிதிராவிடர் நலத்துறை பார்த்துக் கொள்ளும் என்று அசட்டையாக இருப்பது அபத்தம். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பயன்படுத்தும் அனைத்து பள்ளிகளும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும். இவற்றிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் தனித்தனி இயக்குநரகங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை சீர்பெறும்'' என்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அடித்தால்தான் படிப்பு வரும் என்ற மூடநம்பிக்கை பெற்றோர்களிடையிலும், ஆசிரியர்களிடையிலும் ஆழமாகப் பதிந்துள்ள நம் சமூகத்தில், கல்வியை எளிதாகக் கற்க நாளாகும் பிள்ளைகளை அவமானம் செய்வதும், அடித்து துன்புறுத்துவதும் இயல்பாகிப் போயுள்ளது. அதனால்தான் மாணவர்களை அடிப்பதும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் இரண்டு நாட்களுக்கான பத்திரிகை செய்திகளாக மாறிவிடுகின்றன. அதற்கான சாதிப் பின்னணி, சமூகப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி, உளவியல் பின்னணி குறித்தெல்லாம் யாரும் பேசிக்கூட கேட்டுவிட முடிவதில்லை. ஒரு குழந்தை பள்ளிக் கூடத்தில் ஆசிரியரால் அடிக்கப்பட்டு உயிர் இழந்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. தலித் குழந்தையை சாதியை சொல்லி திட்டவோ, "மாட்டுக் கறி தின்போர்' என குறிப்பாக சாதியை உணர்த்தி அவமானப்படுத்தவோ செய்தால், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய்வதில்லை.

இரண்டு நாட்கள் நடைபெற்ற பொது விசாரணையின் முடிவில், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளால் ஏற்படும் தற்கொலை, தாக்குதலால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்டு கொள்ளாத தன்மையை கண்டித்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இனி குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும், குழந்தைகள் மீது வன்கொடுமைகளை இழைத்தாலோ, வன்முறைத் தாக்குதல் செய்தாலோ, உயிரிழப்புகள் ஏற்பட்டாலோ அது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், வன்முறைகள் பள்ளியில் நடைபெற்றாலும், மாணவர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றாலும் சம்பவம் பற்றிய தகவல்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியானால், அதன் அடிப்படையில் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துøரத்தது.

அரசும் கல்வித் துறையும் முறையான எந்த நடவடிக்கையும் எடுக்காத வரை –

“அன்புள்ள அம்மா, நான் இந்த முடிவு எடுத்ததுக்காக என்னை மன்னிச்சிடுங்க. எங்க ஸ்கூல்ல டீச்சர் அன்பா நடத்துறாங்க. ஆனால் டிரெய்னிங் வந்த டீச்சர்ஸ், எங்களுக்கு வச்ச டெஸ்ட நல்லா எழுதலன்னு அடிச்சாக்கூட பரவாயில்லை. ஆனால் எங்களால சகிச்சிக்க முடியாத வார்த்தைகளச் சொல்லி திட்டுறாங்க. அதக்கேட்டு நாங்க அடுத்த டெஸ்ட ரோசப்பட்டு நல்லா எழுதினாலும் அடிச்சு விட்டுடறாங்க. பணக்கார பிள்ளைங்களுக்கு மட்டும் அதுக நல்லா எழுதாட்டிக்கூட மார்க் போடுறாங்க. எங்க மூஞ்சியக்கூட பாக்க புடிக்கலன்னு சொல்றாங்க. நாங்க டவுட் கேட்டா சொல்லித்தர மாட்டேங்கிறாங்க. அந்தப் பிள்ளைங்க கேட்டா சொல்லித் தராங்க. இனிமே அப்படி நடக்கக் கூடாதுன்னு என் மூலம் அவுங்களுக்கு புரியட்டும்'' என ஆசிரியர்களிடம் உள்ள பாகுபாட்டால் மனமுடைந்து உடலில் தீ வைத்துக் கொண்டு எரிந்து சாம்பலான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் குழந்தை யோக தாரணி (13) களின் மரணக் கடிதங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்...

பொது விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள்

 ஆசிரியர்களின் தாக்குதல்களால் மாணவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு, அரசே மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்.

 வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தை புகார் தெரிவித்த பிறகு, மேலதிகமான வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகக் குழு வன்கொடுமைகளை தொடர அனுமதிக்கக் கூடாது.

 கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளது போல, மாதிரி விதிமுறைகளை மாநில அரசு தனது கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்க வேண்டும். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அம்சங்களின் மாதிரி விதிமுறைகளில் இருக்க வேண்டும்.

 வன்கொடுமைக்கு எதிரான விதிகளை கல்வித் துறை உருவாக்கி, அவற்றை கல்வி உரிமைச் சட்டத்தில் இணைக்க வேண்டும்.

 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தக் கூடாது.

 சீருடை இல்லை என்ற காரணம் காட்டி, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

 வயதுச் சான்று, இடமாற்றுச் சான்றிதழ் இல்லை என்ற காரணம் காட்டி, பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது.

 பள்ளியை விட்டு விலகி, மீண்டும் சேரும் குழந்தைகளிடம் வயதுச் சான்று கேட்கக் கூடாது.

Pin It