'திண்ணை'யில் உட்கார்ந்து வெட்டிப் பேச்சு பேசும் பார்ப்பனர்கள், ஆப்ரஹாமிய மதங்களான யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களே உலகம் முழுவதும் நடக்கும் வன்முறைகளுக்கு காரணம் என்றும், இந்த மதங்கள் தங்களுக்குள் பலத்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், இவையனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் மதங்கள் - இந்த மதங்களின் ஓரிறைக் கொள்கையே இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாமைக்கு காரணம் என்று அவர்கள் பல்வேறு பதிவுகளில் எழுதியுள்ளார்கள். பலதெய்வ வணக்கத்தை வலியுறுத்தும் இந்து மதத்தையோ, கடவுள் கொள்கையைப் பற்றி தெளிவாக எதையும் கூறாத பௌத்த மதத்தையோ பின்பற்றுபவர்களுக்கு சகிப்பு தன்மையும், மனித நேயமும் அதிகமுள்ளதாக அவர்கள் அந்த பதிவுகளில் எழுதியுள்ளார்கள். இலங்கையின் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களில் இந்துமத நம்பிக்கையுள்ளவர்களுக்கு அடுத்து கிறித்துவர்களே அதிகம். இந்த படுகொலையை முன்னின்று நடத்திய அரசு பௌத்த மேலாண்மையை வலியுறுத்தும் சிங்கள அரசு. பௌத்தத்துக்கும், ஆப்ரஹாமிய மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் மயம், தாராள மயம், உலகமயம் ஆகியவற்றைக் காக்கவே அரசு பயங்கரவாதம் ஏவப்படுகிறது. இலங்கை அரசு சிங்கள இனவெறி ஜேவிபி இயக்கத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த வரலாறும் உண்டு.

தமிழ் நாட்டில் இலங்கைத் தூதராக அம்சா பணியாற்றியதையும், இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, சிங்கள அதிபருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதையும் வைத்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தும், பாரதீய ஃபார்வார்டு பிளாக் தலைவர் நகைமுகனும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்களை பகை சக்திகளாக முன்னிறுத்த முயற்சி செய்தனர். இவர்கள் இருவரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை, இந்துக்களின் போராட்டமாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். இது அபத்தமான உளறல் என்று ஈழத் தமிழர் வரலாற்றை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். ஈழத் தமிழர்களில் இந்துக்களைப் போன்று கிறித்துவர்களும் உள்ளனர். நகைமுகன், அர்ஜுன் சம்பத் போன்ற கோமாளிகளின் உளறலை ஈழத்தமிழர்களில் எவரும் காது கொடுத்து கேட்பதில்லை என்பது ஆறுதலான செய்தி.

தமிழ் முஸ்லிம்களில் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது அவர்களும், இயக்குநர் அமீரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் எழுச்சியுடன் பங்கேற்றனர். மனித நேய மக்கள் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அறிவித்தது. புதிய தமிழகமும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் இணைந்து புது டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் வழக்கு இன்றும் நடந்து வருகிறது. தமிழக முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். இலங்கையில் வாழும் முஸ்லிம்களைப் போன்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தனி தேசிய இனமன்று. அவர்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியே. ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டுத் தமிழர்களின் நிலைப்பாடு எதுவோ, அதுவே தமிழ் நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாடு. இதில் அவர்களுக்கென்று தனி நிலைப்பாடு எதுவும் இல்லை.

ஈழத் தமிழர்களுக்கான போராட்ட அணிகளில் இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரதீய ஃபார்வார்டு பிளாக் போன்ற இந்து வகுப்புவாதக் கட்சிகள் இடம் பெறுவதைப் பார்க்கிறோம். இலங்கை எம்.பியான சிவாஜிலிங்கம் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் இல. கணேசனை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார். இதை விடக் கேடாக அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் மேடையிலும் பேசினார். இது தமிழக முஸ்லிம்கள் தமிழ் தேசியவாதிகளின் கொள்கை நேர்மையை சந்தேகப்பட வைக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களின் ஒரு கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர், புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு முஸ்லிம்களிடம் இருந்து மாணிக்கக் கற்கள் வணிகத்தை வலுவந்தமாய் பிடுங்கி சிங்களர்களிடம் கொடுத்ததை வரலாறு பதிவு செய்துள்ளதே! அதற்கு என்ன செய்யப் போகிறார்? முஸ்லிம்களிடம் தோன்றிய ஆயுதக் குழுக்களை, இலங்கை அரசு தமிழ் போராளிக் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்த துணிந்தது. இதற்கு உடன்பட மறுத்த முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைத் துறந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தன. இது இலங்கை ஆளும் வர்க்கத்தின் சதி வேலைகளுக்கு ஒரு வகையில் இழப்பு தான். இதன் முழு விபரமும் அறியாத டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழ் முஸ்லிம் இளைஞர்களை கூலிப்படைக் கொலையாளிகளாக சித்தரித்தார்.

சென்ற ஆண்டு, இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே தமிழ் நாட்டில் உள்ள சில இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தார். சிங்கள அதிபர் ராஜபக்சே ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இவர் நேபாளத்துக்கு சென்ற போதும் அங்குள்ள இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இருவருமே இந்து மத வியாபாரச் சாமியார் ஸ்ரீரவிசங்கரின் சீடர்கள். இலங்கை ஆளும் வர்க்கத்துக்கும் இந்திய சனாதனவாதிகளுக்கும் உள்ள தொடர்பை இதனால் அறிகிறோம்.

- அருளடியான்

Pin It