நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, மிகுந்த பரபரப்புகளோடு 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கிற்கு அலகாபாத் நீதிமன்றம் கடந்த செப் 30 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் மீது பல்வேறு கருத்து வேறுபாடுகளும், மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும் நாம் மகிழ்ச்சியோடு பார்க்கும் ஒரே விஷயம் இந்திய நாடெங்கும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காததைத்தான். ஆனால், இந்த இயல்பான சூழலை கெடுக்கும் வகையில் வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தங்கள் கோரமான கலகக்குரலில் சம்மந்தப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு இத்தீர்ப்பு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்திய நாட்டின் சட்ட நடைமுறைகளின் படி கடந்த 60 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட இந்த பெஞ்சில் தீர்ப்பளித்துள்ளனர். வழக்கில் எழுப்பப்பட்டுள்ள பாபர் மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததா? அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா? போன்றவைகளுக்கு மாறுபட்ட வகையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் பாபர் மசூதி, இந்துக் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சொன்னதாக கூறியுள்ளனர். பிரச்சனை எழுந்துள்ள 2.7 ஏக்கர் நிலம் மூன்று சமமான பங்குகளாக பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா வீராஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இறுதி முடிவு உச்சநீதிமன்றம் வசம்தான் உள்ளது.

அதே சமயம், உண்மை என்னவென்றால் பாபர் தனது மகன் ஹீமாயூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “எந்தவொரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது’’ என்று திட்டவட்டமாக அறிவிறுத்தியுள்ளார். இந்தக் கடிதம் இப்போதும் போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட கடித சான்று எந்தளவு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.

வரலாற்றினையும், அதன்மீதான ஆதாரங்களையும் செல்லாக் காசாக்கிவிட்டு நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் தீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றம் வழங்கியிருப்பது பேரதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அதேபோல நடந்த பல வரலாற்று ரீதியான நிகழ்வுகளை புறக்கணித்து இருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும். வழக்கு அதன்மீதான அணுகுமுறை என்பதில் இவ்வழக்கு மாறுபட்டு இருப்பதால் இத்தீர்ப்பு விமர்சனத்திற்குரியதாக மாறியுள்ளது.

இத்தீர்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி ஏற்றுக் கொண்டுவிட முடியாது என்றும், பாபர் மசூதி இடிப்பு என்பது அருவருக்கத் தக்க ஒன்று, அது குறித்த குற்ற வழக்கு தனிப்பட்டது அது தொடர்ந்து நடைபெறும் என்று உள்துறை அமைச்சர். ப. சிதம்பரத்தின் கருத்து வரவேற்கத்தக்கது.

மத நம்பிக்கையின் பெயரால் சேது கால்வாய் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், மக்கள் ஒற்றுமை, மாலேகான் போன்ற சம்பவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனுக்குடன் செயல்படத் தவறுமேயானால் மதவாதப் பிரிவினை சக்திகள் தங்களை மேலும் மேலும் பலமாக்கிக் கொள்ளவே உதவும் என்பதையும் நினைவில் கொண்டு செயலாற்றிட வேண்டும். அதுவே, இந்தியாவின் மதச்சார்ப்பற்ற கோட்பாட்டை மேலும் வலுவாக எடுத்துச் செல்ல உதவும்.

                                                        ஆசிரியர் குழு

Pin It