ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் தய்யா எனும் கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள இராமன் கோயிலை பார்வதி தேவி என்பவர் நிர்வகித்து வருகிறார். கோயிலில் மகாவீர் சிலையும் இருக்கிறது. கிராமத்து மக்கள், கோயிலையும் கோயில் நிலத்தையும் பொதுச் சொத்தாக அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஊர் மக்கள் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரர்களாக, ராமன், மகாவீரையும் சேர்த்துள்ளனர். வழக்கை விசாரித்த முதன்மை நீதிமன்றம், கோயிலை பொதுச் சொத்தாக அறிவித்தது. பார்வதி தேவி - மாவட்ட நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார். அங்கிருந்து வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்த ‘கடவுள்களான’ ராமன், மற்றும் மகாவீர் நேரில் வர நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற ஆணையை எடுத்துச்சென்ற நீதிமன்ற ஊழியர்கள் ‘ராமன்’ மற்றும் ‘மகாவீர்’ முகவரியைக் கண்டறிய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, ராமன் மற்றும் மகாவீரின் முழுமையான முகவரியைத் தருமாறு நீதிமன்ற ஊழியர், நீதிபதியிடம் கேட்டார். அந்த ஊழியரின் பெயரும் ஸ்ரீராம் குமார். நீதிமன்றத்துக்கு மட்டும் ராமன் முகவரி எப்படி தெரியும்? எனவே விரைவு நீதிமன்றம் நாளிதழில் கீழ்க்கண்ட விளம்பரத்தை வெளியிட்டது. அதில்,
“பகவான் ஸ்ரீராமர் மற்றும் மகாவீர் ஆகியோருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவது யாதெனில் - உங்கள் முகவரிக்கு அனுப்பப்பட்ட பதிவுத் தபாலைப் பெற்று, இந்த நீதிமன்றத்தில் நீங்கள் நேரில் வரத் தவறியுள்ளீர்கள். எனவே இந்த விளம்பரம் வழியாக உங்களுக்கு தெரிவிக்கப்படுவது யாதெனில் - நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நீங்கள் இருவரும் இந்த நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும். தவறினால், இந்த வழக்கில் ஒரு சார்பான தீர்ப்பு வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
ராமனும், மகாவீரும் நேரில் வரவில்லை என்பதால் வழக்கம்போல் நீதிமன்ற வழக்கப்படி, ‘பிடி ஆணை’யைத் தான் பிறப்பிக்க வேண்டும். இல்லாத ‘ராமனை’ எப்படி பிடிக்க முடியும் என்பது நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும் எனவே இத்தகைய வீண் முயற்சிகளில் நீதிபதிகள் இறங்கவில்லை.
ஆனாலும்கூட, நீதிமன்றத்துக்கு சில இலவச ஆலோசனைகளை கட்டணம் ஏதுமின்றி வழங்க நாம் தயார். தேடப்படும் நபர்கள் கிடைக்காதபோது, அந்த நபர்களோடு, நெருக்கம் உள்ளவர்களிடம் உரிய முறையில் - ‘துருவி துருவி’ காவல் துறை விசாரணை நடத்துவது வழக்கம். அந்த முறையில் - ‘ராமன் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் பிறந்தான்; அது எங்களுக்குத் தெரியும்” என்று கூறி வரும் பல நபர்கள் நாட்டில் உலவி வருகிறார்கள்! (மகாவீர் பற்றி நமக்கு தெரியாது) அப்படிப்பட்ட ‘ராமனோடு’ ஒரே அறையில் உண்டு, படுத்துப் புரண்ட அத்வானி, ராமகோபாலன், ‘துக்ளக்’ சோ போன்றவர்களைப் பிடித்து, இப்போது ராமன் பதுங்கியிருக்கும் இடம் பற்றி விசாரணை நடத்தலாம்; தமிழ்நாட்டில் ராமேசுவரம் அருகே உள்ள கடல் பகுதியில் ராமன் பாலம் கட்டியது தனக்குத் தெரியும் என்று சுப்பிரமணியசாமி என்ற நபர் உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்திருப்பதால், அவரைப் பிடித்து விசாரித்தால், அவர் ஏராளமான திடுக்கிடும் தகவல்களை தனது பூணூலுக்குள் மறைத்து வைத்திருப்பார்;
இவர்களை விடக்கூடாது; விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மையை கக்குவார்கள் என்பது நமது தாழ்மையான கருத்து. ஜெயலலிதா அம்மையாரிடம் கூட - விசாரிக்கலாம். ஆனால், என்ன பிரச்சினை என்றால், அவர் தன்னை விசாரிக்காமல் இருப்பதற்காக நீதிமன்றத்தில் தடை வாங்கி, விசாரணையையே கிடப்பில் போடக் கூடிய தகுதியும் திறமையும் கொண்டவர். ‘ராமனை’ கருணாநிதி மறைத்து வைத்துக் கொண்டு, தன்னை பழி வாங்குவதாகக் கூறி அதற்கு ஓர்் ஆர்ப்பாட்டம் அறிவித்து விடுவார். எனவே ஜெயலலிதாவை விசாரித்துப் பயனில்லை.
இப்படி எந்த வழியிலும் ‘ராமன்’ பற்றிய தகவல் கிடைக்காவிட்டால் - ‘ராமன்’ என்று ஒரு ஆசாமி இல்லை என்பதை மேலும் ஒரு விளம்பரத்தின் மூலம் நாட்டுக்கு அறிவித்து வழக்கை ‘ஸ்ரீராம தோல்வி’யோடு (அதாவது ஸ்ரீராம ஜெயத்துக்கு எதிர்ப்பதம்) முடித்து விடலாம்! நீதிமன்றமே - இப்படி அறிவித்து விட்ட பிறகு, நீதிமன்றம் எங்களைப் புண்படுத்தி விட்டது. எனவே, நீதிபதிகளின் தலையைக் கொண்டு வரவேண்டும் என்று வேதாந்திகள் - சிண்டு, முண்டுகள், அம்பிகள் எதுவும், வெளியே வராது, வாயை இறுக பொத்திக் கொண்டு ‘ராமா’ என்று கிடப்பார்கள். நாட்டு மக்களும் - அப்பாடா, இனி கலவரம் எதுவும் வராது என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
எல்லாம் சுபமாகி விடும்; சரிதானே!