நேஷ்னல் கவுன்சில் பார் வோகேஷ்னல் டிரெய்னிங் (NCVT) கீழ் பயிற்சி பெற்ற இரயில் பெட்டி தொழிற்சாலையின் (ICF) பயிற்சித் தொழிலாளர்கள், இரயில்வேயும், அதனுடன் இணைந்த ஐசிஎப் போன்ற நிறுவனங்களும் தங்களை நிரந்தரத் தொழிலாளர்களாக நியமிக்க வேண்டுமென்று கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலுள்ள தொழிற்சாலைக்கு எதிரில் பயிற்சித் தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் காலவரையறையற்ற தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Insert a box item

தொழிலாளி தீக்குளித்து இறந்தார்

இந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களுடைய இந்தப் போராட்டத்தை உதாசீனப்படுத்திவரும் ஐசிஎப் நிர்வாகத்தைக் கண்டிப்பதற்காகவும், பயிற்சி பெற்றத் தொழிலாளர்களுடைய மோசமான நிலையை வெளிப்படுத்துவதற்காகவும், 32 வயதான ஹேமந்த் குமார் டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஐசிப் பொது மேலாளர் அலுவலகத்தின் முன்னர் தீக்குளித்தார்.

பின்னர் சிகிச்சைப் பயனின்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். ஐசிஎப் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் அலட்சியத்தாலும், தொழிலாளர் விரோதப் போக்கினாலும் நடைபெற்ற இந்த கொடூரத்தைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பயிற்சித் தொழிலாளர்களும், பொது மக்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் முன்னே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், உயிரிழந்த ஹேமந்த் குமாரின் குடும்பத்தினருக்கும், போராடிக் கொண்டிருக்கும் பயிற்சித் தொழிலாளர்களுக்கும் ஐசிஎப் வேலை கொடுக்க வேண்டுமெனக் கோரினர். ஆனால் இவர்களைக் காவல் துறை கைது செய்தனர்.

பெண் மற்றும் ஆண் பயிற்சித் தொழிலாளர்கள் பிட்டர், எலக்டிரிசியன், வெல்டர், பெயின்டர், தச்சர் போன்றவை உட்பட பல்வேறு துறைகளில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 1998-வரை காலி பணியிடங்கள்  எழும் போதெல்லாம், பயிற்சித் தொழிலாளர்கள் வேலையில் வைக்கப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னர் நிரந்தரத் தொழிலாளர்கள், இரயில்வே பணியமர்த்தும் போர்டு (RRB) மூலம் எடுக்கப்பட்டு வருகின்றனர். பயிற்சித் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை ஐசிஎப் நிறுத்தி விட்டது.

ICF Apprentices Protest 600ஐசிஎப்-இனால் நடத்தப்படும் தேர்வு, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனைக்குப் பின்னரே பயிற்சிக்குத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பயிற்சி, ஒராண்டு கால உற்பத்தி வேலை உட்பட ஒன்றிலிருந்து மூன்றாண்டு காலமாகும். இந்தப் பயிற்சிக்குப் பின்னர் அவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே மதிப்பெண்களுடன் தேர்ச்சிச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட முறையான பயிற்சி பெற்ற பின்னர், உற்பத்தித் தொழிற் கூடத்தில் அனுபவமும் பெற்றிருக்கும் அவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு எதற்கு என்று பயிற்சித் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 1998-க்கு முன்னர், வரிசையின் அடிப்படையில் பயிற்சித் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒரு நீதி மன்றத் தீர்ப்பைக் காரணமாகக் காட்டி, ஐசிஎப் நிர்வாகம் அவர்களுக்கு வேலை தர மறுத்து வருவதாக பயிற்சித் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இரயில்வேயின் மற்ற துறைகளிலுள்ள பயிற்சித் தொழிலாளர்களும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து வருகின்றனர். பாட்டியாலா, வாரணாசி, கபுர்த்தலா, தெற்கு இரயில்வே உட்பட ஏழு இடங்களில் இந்த ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாட்டியாலாவில் நடைபெற்று வரும் ஆர்பாட்டம் 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

இரயில்வேயில் இரயில் பெட்டி உற்பத்தி மற்றும் பல்வேறு சேவைகள் தனியார் மயப்படுத்தப்பட்டு வருவதையும் பயிற்சித் தொழிலாளர்கள் எதிர்த்து வருகின்றனர். தொழிலாளர்களுடைய எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு, எஞ்சியுள்ள தொழிலாளர்களும், பயிற்சித் தொழிலாளர்களும் கடுமையாக சுரண்டப்பட்டு வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் 250 இரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்ட போது 12,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். தற்போது வெறும் 8,000 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். ஆனால் உற்பத்தியோ 2,500 பெட்டிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஐசிஎப் தொழிற்சாலைகளில் இணைத்துப் பொருத்தும் வேலைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. உற்பத்தி மற்றும் சேவைகளின் பாதுகாப்புத் தரம் பற்றியும், ஒப்பந்தங்களில் நடைபெறும் ஊழல் பற்றியும் பயிற்சித் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்களின் உற்பத்தி, இரயில்வே பணியமர்த்தும் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட தொழிலாளர்களால் செய்யப்படுகிறதா எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

போராடும் பயிற்சித் தொழிலாளர்கள் காவல் துறையின் ஒடுக்குதல்களை தைரியத்தோடு எதிர்கொண்டு வருகின்றனர். ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரிடம் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுக்க முயன்ற பயிற்சித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுடைய போராட்டத்தைத் துவக்கிய மறு நாளே, அக்டோபர் 2, 2015 அன்று அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களுக்கும், ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக பயிற்சித் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் விடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பயிற்சித் தொழிலாளர்களுடைய இந்தப் போராட்டத்தை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஆதரிக்கிறது. தீக்குளித்து உயிர் நீத்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறது.

Pin It