கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நீர் கசிகிறது. இடுக்கியில் நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட இருக்கிறது. முல்லை பெரியாறு அணை உறுதியாக இல்லை. அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் அழிந்துபோவார்கள். இந்த அணையை இடிக்க வேண்டும் புதிய அணை கட்ட வேண்டும் &

இப்படி மக்களை பீதிக்கு உள்ளாக்கி அரசியல் செய்தவர்கள் கேரள முதல்வர்கள் அச்சுதானந்தனும், உமன்சான்டியும்.

1895ஆம் அண்டு ஒப்பந்தப்படி 999 ஆண்டுகள் முல்லை பெரியாறு அணையின் நீர் தமிழகத்திற்கு வரவேண்டும். அதாவது 2895 ஆம் அண்டு வரை.

ஏற்க மறுத்த கேரளம், கொடுத்த தொல்லைகள் ஏராளம்.

முல்லை பெரியாறு அணை இடிக்கவும், புதிய அணை கட்டவும் தீர்மானம் இயற்றி, நிதியும் கூட ஒதுக்கினார்கள் உமன்சான்டிகள்.

அணை பலமாக இருக்கிறது. 142 அடி நீர் மட்டம் உயர்த்தப்பட்டாலும் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள அரசு தலைமை வழக்கறிஞர் கே.பி.தண்டபாணி 2.12.2011 ஆம் ஆண்டு உயர்நிதி மன்றத்தில் அறிக்கை கொடுத்தார்.

உச்சநீதி மன்றம் 142 அடிக்கு நீர் மட்டம் உயர்த்தப்பட ஆணைபிறப்பித்தும் கேரள அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. புழுதிவாரி இறைத்துக் கொண்டிருந்த இப்படிப்பட்ட அரசியல்களுக்கு இடையே, இன்று தென்றல் வீசத் தொடங்கியிருக்கிறது.

இன்றைய கேரள முதல்வர் பினராய் விஜயன் சொல்கிறார் “முல்லை பெரியாறில் தற்போதைக்கு அணை கட்ட வேண்டியதில்லை”

அணை பலமாக இருக்கிறது என்ற தமிழகத்தின் வாதம் இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் தமிழகத்துடன் மோதல் போக்கு இல்லாமல், இணக்கமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் கேரள முதல்வர்.

புதிய அணை கட்டவேண்டியதில்லை என்று அவர் சொன்னபோதே, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.

இது தமிழகம், கேரளம் மக்களின் உறவு வலிமை பெற வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேரள முதல்வர் பினராய் விஜயன் சென்னதுடன் நிற்காமல் அவர் சொன்னதை செயல்வடிவப்படுத்துவார் என்ற நம்பிக்கை எழுகிறது.