கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இனி மேல் எல்லாம் இப்படித்தான் இருக்கும். அரசியல்வாதிகள் திருடர்களாக  இருப்பார்கள், போலீஸ்காரர்கள் பொறுக்கிகளாக இருப்பார்கள், அரசு ஊழியர்கள் ஊழல் பேர்வழிகளாக இருப்பார்கள்... குறிப்பாக நீதிபதிகள் திருடன், கொலைகாரன், பாலியல் வக்கிரம் பிடித்தவன், பொறுக்கி, புறம்போக்கு என அனைத்தும் கலந்த கலவையாக இருப்பார்கள். எதுவுமே இனி தவறாக இங்கு கருதப்படாது. Just like that என கடந்து போக மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள். நடு ரோட்டிலே சங்கரை வெட்டிக்கொன்ற போது அதை ஏதோ சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதுபோல பார்த்து விட்டு கடந்து போன நம் இனிய தமிழ் மக்கள் இனி பி.ஆர். பியை வெளியே விட்டாலும் கவலைப்பட மாட்டார்கள், வைகுண்ட ராஜனை வெளியே விட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்.  அவ்வளவு ஏன் கன்டெய்னர் கன்டெய்னராக சிறுதாவூர் பங்களாவிலே ஊழல் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஜெயலலிதாவை வெளியே விட்டாலும் கவலைப்பட மாட்டார்கள் (உபயம்: வைகோ).  ஏன் என்றால் இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும் என்பதை  மக்கள் தம் சமூக அறிவின் மூலம் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

PR Palanichamy Granite scam

   இனி எந்த நீதிபதியையும் பார்த்து ஏன் நீ ஊழல்வாதியாக இருக்கின்றாய் என யாரும் கேட்க முடியாது. கேட்டால் அவன் RI கொள்ளையடிக்கவில்லையா, முன்சீப் கொள்ளையடிக்கவில்லையா,  தாசில்தார் கொள்ளையடிக்கவில்லையா, கலெக்டர் கொள்ளையடிக்கவில்லையா, போலீஸ்காரன் கொள்ளையடிக்கவில்லையா, நம்ம ஜெயலலிதா கொள்ளையடிக்கவில்லையா... அப்புறம் என்ன மயித்துக்கு என்னை மட்டும் கொள்ளையடிக்க கூடாதுன்னு சொல்ற என்று நம்மீதே பாய்வார்கள். அதனால் மக்கள் இனி யாரையும் பார்த்து அப்படி எல்லாம் கேள்வி கேட்டுவிட முடியாது.

  ஒவ்வொரு காலத்திலும் ஒரு நோய் வந்து மக்களை பயமுறுத்தும் - பறவைக்காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குனியா, எபோலா என்று. அது போல இப்போது நீதிபதிகளுக்கு எல்லாம் குமாரசாமி காய்ச்சல் வந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நீதிபதிகள் தங்களைச் சுற்றி சிசிடிவி கேமராவையே வைத்தால் கூட கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் பணம் வாங்குவார்கள். அது மட்டும் அல்ல... கொஞ்சம் காசு சேர்த்துக் கொடுத்தால் நீதியை மட்டும் அல்ல... வேறு எதை வேண்டும் என்றாலும் வந்த விலைக்குக் விற்று விடுவார்கள்.

  பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்வது என்பதெல்லாம்  இப்போது நீதித்துறையில் ஒரு கெளரவப் பிரச்சினையாகவே ஆகிவிட்டது. இந்த வழக்கில் இருந்து இவரை விடுவிக்க தான் இவ்வளவு பணம் வாங்கினேன் என்று பெருமையோடு அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்கின்றார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நீதிபதிகளின் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

  இதில் இருந்து மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி கொஞ்சம் வித்தியாசப்பட்டவர். எப்படி என்றால் மற்ற நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்த பின்புதான் பணம் வாங்கிய விவகாரம் வெளியே தெரியவரும். ஆனால் மகேந்திர பூபதி பணம் வாங்கப்போவது முன்கூட்டியே தெரிந்து போய்விட்டது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனுமதி இன்றி முறைகேடான வகையில் பட்டா நிலத்தில் அடுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக பி.ஆர். பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பம் முதலே மகேந்திர பூபதி பி.ஆர்.பி க்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகவும், பி.ஆர்.பி யின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பிரிவில் மட்டுமே விசாரணை செய்கின்றார் எனவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மகேந்திர பூபதி மீது ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இப்படி வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில்தான் தைரியமாக என்னை எவனும் ஒன்றும் கிழிக்க முடியாது என்று இந்த வழக்கில்  இருந்து பி.ஆர்.பியை வெளியே விட்டிருக்கின்றார். அத்தோடு வழக்கு தொடர்ந்த முன்னாள் ஆட்சியாளர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197(1பி) பிரிவின் படி வழக்கு பதிவு செய்யவும் திமிராக உத்திரவிட்டுள்ளார். தோட்டி முதல் கலெக்டர் வரை அனைவரையும் விலைக்கு வாங்கிய பி.ஆர்.பி ஆல்  இந்த நீதிபதியை  மட்டும் என்ன விலைக்கு வாங்கமுடியாதா?

 மதுரை மாவட்டத்தில் உள்ள பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மலைகளை எல்லாம் அழித்து அந்தக் கற்களை ஏரிகள், குளங்கள், கன்மாய்கள், விளைநிலங்கள் என அனைத்திலும் அடுக்கிவைத்து இயற்கையையே நாசம் செய்த இந்த அயோக்கியனை எந்தவித மனித மதிப்பீடுகளும் இன்றி ஒரு நீதிபதி வெளியே விடுகின்றான் என்றால்  அவன் எப்படிப்பட்ட கீழ்த்தரமான பேர்வழியாக இருப்பான்?

  பொதுவாகவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் எல்லாம் தன்னிடம் நீதியை பெற்றுத்தர வேண்டிவரும் மக்களை ஏடிஎம் மிசின்களாகவே பார்க்கின்றார்கள். சாதாரணமாக ஒரு கையெழுத்துப் போடுவதற்குக் கூட  இருநூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை பணத்தை பிடுங்கிக் கொள்கின்றார்கள். விபத்துக் காப்பீடு என்றால்  அதை பெற்றுத் தருவதற்கு 40 முதல் 50 சதவீதம் வரை கமிசன் பெற்றுக் கொள்கின்றார்கள். வழக்குகளில் ஆஜராவதற்கு எந்த வித தார்மீக  நெறிகளையும் அவர்கள் கடைபிடிப்பது கிடையாது. பணம் கொடுத்தால் எவ்வளவு கேடுகெட்ட செயல்களை செய்தவனுக்கும் ஆதரவாக ஆஜராவார்கள். அவனுக்கு விடுதலையைக் கூட வாங்கித் தருவார்கள். எப்போதுமே வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் கள்ளக் கூட்டாளிகள். எந்த நீதிபதியின் முன்னால் வழக்கு வந்தால் தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்க முடியும் என்று வழக்கறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும். கொடுப்பதை கொடுத்தால் நீதிபதி அவர்களை விடுதலை செய்துவிடுவார். இதுதான் இந்தியாவில் இருக்கும் கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை உள்ள நடைமுறை.

  அப்படி என்றால் சாமானிய மக்களுக்கு இந்த நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைக்காதா என நீங்கள் நினைக்கலாம். நிச்சயம் கிடைக்காது. எப்போது நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாக மாற்றப்படுகின்றார்களோ, எப்போது அவர்கள் தங்களுடைய கடமையில் இருந்து தவறும் போது அவர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமையை அவர்களைத் தேர்ந்தெடுத்த அனுப்பிய மக்களுக்கு கொடுக்கப்படுகின்றதோ அப்போதுதான் அது மக்கள் நீதிமன்றங்களாக மாறும். அதுவரை அது பணக்காரர்களை நக்கிப் பிழைக்கும் ஒரு அதிகார அமைப்பாகவே இருக்கும்.

- செ.கார்கி