நீண்ட நாளாக ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கொஞ்சமும் இணங்காமலிருந்ததினாலும் பதினாயிரக்கணக்கான பேர்கள் திடீரென்று வேலையை விட்டுப் போக வேண்டியிருந்ததினாலும் வேறு கதியில்லாமல் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகமும் வேலை நிறுத்தமும் செய்தே தீர வேண்டியதாய் விட்டது.

periyar and gt naiduவேலை நிறுத்த விஷயத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவியும் இல்லாமல், அதாவது தொழிலாளர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும் பல ரயில்வேக் கம்பெனிக்காரர்களிடமிருந்து தங்கள் சுற்றத்தார்களுக்கு உத்தியோகங்கள் பெற்றிருக்கும் முறையிலும், பெற எதிர்பார்த்திருக்கும் முறையிலும், மற்றும் தங்கள் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் பெற்றிருக்கும் முறையிலும் ரயில்வேக்காரர்களுக்கு அடிமைகளாகி வேலை நிறுத்தத்தை தக்கபடி ஆதரிக்காமல் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும், வேலை நிறுத்தம் அனாவசியம் என்றும், ஏஜண்டு கூடியவரை நெருங்கி வந்திருக்கிறார் என்றும், இன்னும் மற்ற பொது ஜனங்களுக்கும் தொழிலாளருக்கும் அதிகாரிகளின் கொடுமையையும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் சரியானபடி எடுத்துக்காட்டாமல் எவ்வளவோ மறைத்துக் கொண்டு வந்திருந்தும், சென்ற 19 - ஆம் தேதி தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட வேலை நிறுத்தமானது ஒருவாறு வெற்றிக்குறியுடனேயே மிக அமைதியாகவும், சமாதானமாகவும் நடந்து வருவதாகவே சமாச்சாரங்கள் எட்டி இருக்கின்றன.

தொழிலாளர்களின் கடைசி வேண்டுகோள்களாவன :-

  1. கதவடைப்பு செய்த காலத்திற்கு கூலி கொடுக்க வேண்டும்.
  1. ராஜீனாமாச் செய்தவர்களைத் தவிர மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
  1. கீழ்த்தர வேலையாட்களுக்கு சம்பளம் கூட்ட வேண்டும்.
  1. ரன்னிங்ஸ்டாவ் என்னும் ரயில் போக்குவரத்தில் சேர்ந்த ஆட்களின் குறைகளை நீக்க வேண்டும்.

இவைகள் ரயில்வே அதிகாரிகளால் சரியானபடி கவனிக்கப்படவில்லை. இதனால் வேலை நிறுத்தம் செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

வேலைநிறுத்த விபரம்

சென்னை 20 - காலையில் சென்னைக்கும் எழும்பூருக்கும் வரவேண்டிய வண்டிகள் வரவில்லை.

தாம்பிரம் என்னும் இடத்தில் 30 தொழிலாளர்கள் லயினில் படுத்துக் கொண்டு சத்தியாக்கிரகம் செய்ததாக அரஸ்ட் செய்யப்பட்டார்கள்.

சேத்துப்பட்டுக்கும் எழும்பூருக்கும் ஓடும் ஆபீஷியல் டிரெயின் ஓடிக் கொண்டிருக்கையில் நெருப்பை அணைத்து விட்டபடியால் வழியில் நின்று விட நேர்ந்தது.

எழும்பூர் ஸ்டேஷன் கீழ்த்தர சிப்பந்திகள் வேலைக்குப் போகவில்லை.

19 இரவு எழும்பூரை விட்டுப் புறப்பட்ட போட்மெயில் முதலியவைகள் விழுப்புரமிருந்து சரியானபடி ஓடாமல் தகராறுபட்டுக் கொண்டேயிருந்தது.

உயர்தர அதிகாரிகளே வண்டி போக்குவரத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் தோட்டி, போர்ட்டர் எல்லோரும் வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள்.

திருச்சிக்கும் ஈரோட்டிற்கு செல்ல வேண்டிய வண்டிகள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. ஈரோட்டுக்கு வரவேண்டிய வண்டிகள் வரவில்லை.

திருநெல்வேலியில் நடுராத்திரியில் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து செல்ல வேண்டிய வண்டிகளும் தெற்கிலும் வடக்கிலுமிருந்து வர வேண்டிய வண்டிகளும் போக்குவரத்து நடைபெறவில்லை.

மதுரையில் மணியடிக்கும் சிப்பந்திகள், நிலக்கரி வாரும் ஆட்கள் உட்பட பலர் வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள். மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய ஷட்டில் வண்டிகளில் ஒன்றுமே போகவில்லை.

ஈரோடு ஸ்டேஷனில் நடுராத்திரியில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

போத்தனூரிலும் நடுராத்திரியில் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது.

ஆங்கிலோ இந்தியர், ஸ்டேஷன் மாஸ்டர் முதலியவர்களின் பிரயத்தினங்களினாலே சிற்சில மெயில் வண்டிகள் மாத்திரம் ஆங்காங்கு காலந்தவறிப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வேலை நிறுத்தத்தை வெற்றியடையாமற் செய்யப் பல சூழ்ச்சிகள் நடப்பதாகவும் தெரிய வருகிறது.

ஏஜண்டின் தந்தி

தொழிலாளர்களுக்குள்ள குறைகளை லக்ஷியம் செய்யாமல் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் கீழ்த்தர சிப்பந்திகளுடையவும் வண்டியில் போகும் சிப்பந்திகளுடையவும் குறைகளை மாத்திரம் கவனிப்பதாக ஏஜண்டு சம்மதித்திருப்பதாய் வெளியிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. தொழிலாளர்கள் இதை ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியாகவே கருதியிருக்கின்றனர். வேலை நிறுத்தம் வளர்ந்து கொண்டும் வலுத்துக் கொண்டும் போவதாகவே தெரிகிறது. தொழிலாளர்கள் வெற்றி பெற்று தொழிலாளர்களின் குறைகள் நீங்கி சுகப்பட வேண்டும் என்று மனப்பூர்வமாய் ஆசைப்படுகிறோம். பொது மக்களை வேலை நிறுத்தத்திற்கு எல்லாவுதவியும் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். தொழிலாளர்களையும் பொறுமையோடும் அமைதியாகவும் பலாத்காரமற்ற தன்மையோடும் உறுதியோடும் எவ்விதத் தியாகத்துக்கும் தயாராகயிருந்து முழு வெற்றி யடைய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.07.1928)

Pin It