உற்பத்திச் செயலில் ஈடுபடுதல் என்பது மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டும் முதன்மையான கூறு ஆகும். பிற உயிரினங்கள் தம் தேவைகளுக்காக இயற்கையில் இருப்பவற்றை அப்படியே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே இயற்கையில் இருப்பவற்றைக் கருவியைக் கொண்டு தன் உழைப்பைச் செலுத்தி தன் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்கிறான்.

may1 job fair 600ஆதிகாலத்தில் மனிதர்கள் உற்பத்திச் செயலில் கூட்டாகத் தம் உழைப்பைச் செலுத்தினர். உற்பத்தி யில் கிடைத்ததைச் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். காலப்போக்கில் தனிச் சொத்துடைமை ஏற்பட்டது. சமூகத்தில் வர்க்கப் பிரிவினை உண்டாயிற்று. அடிமை முறை தோன்றியது. உற்பத்திச் சாதனங்களை உடைமையாகப் பெற்றிருந்தோர், இவை இல்லாதவர்களின் உழைப்பைச் சுரண்டினர். நிலவுடைமைச் சமுதாயத் தில் நிலப்பிரபு-பண்ணையடிமை என்கிற உற்பத்தி உறவின் மூலம் உழைப்புச் சுரண்டல் நிலவியது. முதலாளிய உற்பத்தி முறை ஏற்பட்ட பிறகு முதலாளி-தொழிலாளி என்கிற உற்பத்தி உறவு தோன்றியது.

முதலாளிய உற்பத்தியின் முதன்மையான கூறு எரி சக்தியைக் கொண்டு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் பெருவீத அளவில் உற்பத்தி செய்வதே ஆகும். அதற்கு முன்வரை மனித உடலுழைப்பைக் கொண்டே உற்பத்தி நிகழ்ந்தது.

முதலாளியம் பற்றிய வரலாற்றில் கி.பி.1500-1750 வரையிலான காலத்தை வணிக முதலாளியக் கட்டம் என்று குறிப்பிடுகின்றனர். பிரிட்டன், பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஹாலந்து முதலான அய்ரோப்பிய நாடுகள் தங்களுடைய வணிக ஆதிக்கத்தை இக்காலக் கட்டத்தில் பல நாடுகளிலும் விரிவுபடுத்த முனைந்தன.

1759 முதல் நீராவியின் ஆற்றலைக் கொண்டு இயந்திரங்கள் மூலமாகப் பொருள்களை உற்பத்தி செய்வது என்பது தொடங்கியது. அதனால் அதற்குமுன் பத்துப் பேர் செய்த வேலையை ஒரே இயந்திரம் செய்து விடக் கூடிய நிலை ஏற்பட்டது. 1814-இல் இரயில் என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், முதலாளிய உற்பத்திக்குத் தேவையான இரும்பு, நிலக்கரி முதலான கனிமங்களையும், பருத்தி முதலான மூலப் பொருள் களையும் மலிவான விலையில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பெறக்கூடிய பேராற்றலை முதலாளியம் பெற்றது. இதேபோன்று உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கான சந்தையையும் விரிவுபடுத்த உதவியது.

முதலாளிய உற்பத்தியில் கடுமையான போட்டி நிலவியது. தொடக்கத்தில் 14 மணிமுதல் 18 மணிநேரம் வரை தொழிலாளர்கள் உழைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இக்கொடிய உழைப்புச் சுரண்டலால் எண்ணற்ற தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலேயே மடிந்தனர். உயிரையே உண்ணும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். தொழிற்சங்கம் அமைத்தனர்.

வடஅமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் 1806-இல் தொடங்கப்பட்ட தொழிற்சங்கம்தான் உலகின் முதலாவது தொழிற்சங்கம் என்று கருதப்படுகிறது. இது உருவான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் இங்கி லாந்தில் தொழிற்சங்கம் ஏற்பட்டது. வேலை நேரத்தைப் பத்துமணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரி 1827-இல் பிலடெல்பியா நகரில் கட்டுமானத் தொழி லாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அதன் பின் அய்ரோப்பிய நாடுகளிலும் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. முதலாளிகள் தொழிலாளர்கள் மீது கொடுமை யான ஒடுக்குமுறைகளை ஏவினர். அரசுகளும் முதலாளி களுக்குச் சார்பாகவே செயல்பட்டன.

1848 பிப்பிரவரியில் காரல்மார்க்சு, பிரடெரிக் எங்கல்சு எழுதிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியானது. இந்த அறிக்கை தொழிற்சங்க இயக்கம் வீறுகொண்டு செயல்பட உந்து விசையாக அமைந்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்களை ஒருங்கி ணைக்கும் வகையில் ‘தேசியத் தொழிற்சங்கம்’ உரு வாக்கப்பட்டது. தேசியத் தொழிற்சங்கங்களை ஒருங்கி ணைத்து உலக அளவில் தொழிலாளர்களிடையே ஓர்மையை உருவாக்கவும் வழிகாட்டவும் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ (International Workingmen’s Association) செப்டம்பர் 24 அன்று இலண்டன் மாநகரில் செயின்ட் மார்டின் மண்டபத்தில் உருவாக்கப்பட்டது. இதில் முதன்மையானவர்களில் ஒருவராகக் காரல்மார்க்சு இருந்தார். இக்கூட்டத்தில் அய்ரோப்பாவின் பல நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் பிரதிநிதிகள் 2000 பேர் கலந்துகொண்டனர். சர்வதேசத் தொழிலாளர் சங்கம் தமிழில் ‘முதலாவது அகிலம்’ என்று குறிப்பிடப் படுகிறது. முதலாவது அகிலத்தின் கூட்டம் 1866 செப்டம்பரில் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்போது 8 மணிநேர வேலை என்பது சட்டமாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே கோரிக் கையை முன்வைத்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலி யாவிலும் தொழிற்சங்கங்கள் போராடிவந்தன.

அமெரிக்காவில் 1886 மே முதல் நாள் முதல், எட்டு மணிநேர வேலை என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்று தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தன. சிக்காகோ நகரில் அனைத்துத் தொழிலாளர்களும் 1886 மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்தனர். 1886 மே 3 அன்று தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்திய தைக் கண்டித்து மே 4 அன்று வைக்கோல் சந்தை (Hay Market) இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திடத் தொழிலாளர் கள் கூடினர்.

அப்போது கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு இராணுவ அதிகாரி ஒருவரைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த மோதலில், ஏழு காவல் துறையி னரும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தொழிலாளர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலில் வைக்கோல் சந்தை வெளியில் தொழிலாளர் குருதி ஆறாய் ஓடியது. இக்குருதியில் தோய்ந்த தொழிலாளர்களின் சட்டைகளே தொழிலாளர் களின் போர்க் குணத்தையும் விடுதலையையும் குறிக்கும் செங்கொடியாக மாறியது. சிக்காகோ தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவர்களில் நால்வர் தூக்கிலிடப்பட்டனர். பலருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் தொழிலாளர் களிடையே பேரெழுச்சியை உண்டாக்கியது.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப் பட்ட ஓராண்டுக்குப்பின், 1888 திசம்பரில் செயின்ட் லூயிஸ் நகரில் அமெரிக்காவின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூடியது. அக்கூட்டத்தில் 1890 மே முதல் நாளை 8 மணிநேர வேலை நாள் மற்றும் தொழிலா ளர்களின் மற்ற கோரிக்கைகளுக்கான நாளாக அறிவித்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் செய்வ தென முடிவு செய்யப்பட்டது.

பிரெஞ்சுப் புரட்சியில் 1789 சூலை 14 பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதன் நூற்றாண்டையொட்டி, 1889 சூலை 14 அன்று பாரிசு நகரில் சோசலிச இயக்கத் தலைவர்கள் கூடினார்கள். இரண்டாம் அகிலத்தை உருவாக்க வேண்டும் என்பதும் இக்கூட்டத்தின் நோக்க மாக இருந்தது. இக்கூட்டத்தில் பிரடெரிக் கெங்கெல்சு, “சிகாகோ தொழிலாளர்களின் ஈகத்தை நினைவு கூரும் வகையில், மே முதல்நாளை 1890 ஆம் ஆண்டு முதல் ‘மே நாள்’ என்ற பெயரில் உலகத் தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டும்” என்று முன் மொழிந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. இதன்படி 1890ஆம் ஆண்டு அய்ரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மே நாள் கொண்டாடப்பட்டது.

1893-இல் இரண்டாம் அகிலத்தின் கூட்டம் ஜுரிச்சில் நடைபெற்றது. அம்மாநாட்டில், “உழைக்கும் வர்க்கத்தின் முதன்மையான நோக்கம் சமூக மாற்றத் தின் மூலம் வர்க்க வேறுபாடுகளை அழித்தொழிப்பது மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். எனவே மே நாள் ஆர்ப்பாட்டங்கள் எட்டுமணி நேர வேலை நாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய நோக்கங்களுக்காகவும் பயன்பட வேண்டும்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இம்மாநாட்டில் எங்கெல்சு கலந்து கொண்டார், எனவே எங்கெல்சு வாழ்ந்த காலத்திலேயே மே நாள் என்பது உழைக்கும் மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த விடுதலைக்கான குறிக்கோளை அடைவதற்கான போராட் டத்தை உழைக்கும் வர்க்கம் சூளுரைக்கும் நாள் என்பது தெளிவாக்கப்பட்டது.

8 மணிநேர வேலை என்பதில் வெற்றி கண்ட பின், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான சூழ்நிலை, வீட்டு வசதி, தொழிற்சாலைகளில் நியாயமான விலையில் உணவு, மருத்துவ வசதி, போனஸ், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் முதலான கோரிக்கைகளை முன்னிறுத் தித் தொடர்ந்து போராடின, 1917இல் இரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று சோசலிச சோவியத் நாடு அமைந்த பின், அங்கு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு வேகமாக உயர்ந்தது. உலகத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத் துக்கு இது உந்து விசையாக விளங்கியது.

Neyveli strike 600 copy1929 முதல் 1933 வரை முதலாளித்துவ நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்தது. அலைவட்டம் போல் முதலாளிய உற்பத்தி முறையால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்று காரல் மார்க்சு கூறியது நடந்தது. இந்த நெருக்கடிக்குத் தீர்வாக பிரித்தானியப் பொருளியல் வல்லுநர் ஜான் மேனார்டு கீன்ஸ் ஒரு கோட்பாட்டை முன் மொழிந்தார். அதில், தொழிலாளர்களுக்கு முழு வேலை வாய்ப்பு, நிரந்தர வேலை, குறைந்தபட்ச ஊதியம், கல்வி, நலவாழ்வு, ஓய்வூதியம், உறைவிடம் போன்ற சமூகப் பாது காப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்று கீன்சு வலியுறுத்தினார். இதுவே மக்கள் நல - அரசு (Welfare Sate) எனும் கோட்பாடாயிற்று.

முதலாளிய நாடுகளில் தொழிலாளர்களின் போராட் டங்கள் சோசலிசப் புரட்சியாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தால் அரசுகள் தொழிலாளர்களின் கோரிக்கை களைப் படிப்படியாக நிறைவேற்றின. இரண்டாம் உலகப் போருக்குப்பின் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா போன்ற நாடுகளிலும் தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கான பல சட்டங்கள் இயற்றப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

1970 முதல் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய - முதலாளித்துவ நாடுகள் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் துணையுடன் சோசலிசக் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டன. இதனால் 1990-இல் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் சோசலிச அரச மைப்பு வீழ்த் தப்பட்டு, சோவியத் நாடு 15 நாடுகளாகச் சிதறுண்டது. கிழக்கு அய்ரோப்பாவில் இருந்த சோசலிச நாடுக ளிலும் முதலாளித்துவ ஆட்சி முறை ஏற்பட்டது.

1980-களில் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் தாராள மயம், தனியார் மயம் தீவிரமாகச் செயல்படுத் தப்பட்டது. 1990 முதல், உலக வணிக அமைப்பின் மூலம் உலக அளவில் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் எனும் கோட்பாட்டை எல்லா நாடுகளிலும் செயல்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் தொழிலா ளர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமை களை முதலாளித்துவ அரசுகள் பறித்து வருகின்றன அல்லது நீர்த்துப் போகச் செய்கின்றன.

இந்தியாவில் 1991-இல் பிரதமராக பி.பி. நரசிம்ம ராவும் நிதி அமைச்சராக மன்மோகன் சிங்கும் பதவி ஏற்றது முதல் தாராளமய-தனியார்மயக் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலாளிகள் தொழில்களைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக, தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்குக் கேடு ஏற்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராக அரசு களும் முதலாளிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு ஒடுக்கு முறைகளை ஏவிவருகின்றனர்.

கடுமையான போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்தனர். அதுபோல் இப்போது பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கத் தொழிலாளர்கள் தொடர்ந்து  போராடுவதற்கு மே நாள் வரலாறு ஊக்கமளிக்கும் என்பது உறுதி.