நவம்பர் 24, 2012இல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் தாஸ் நினைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எல்லா கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர்களும், மக்களாட்சி இயக்கத்தின் செயல்வீரர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் தோழர் தாஸ் அவர்களுக்கு புகழாரம் சூட்டினர்.

cgpi_meeting_600

இக்கூட்டத்திற்கு தோழர் ஆப்ரகாம் அவர்கள் தலைமை வகித்தார். கம்யூனிச இயக்கத்தைக் கட்டுவதற்காகவும், தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும் இரவு பகலாக ஓடி உழைத்துப் பணியாற்றியவர் தோழர் தாஸ் அவர்கள் என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினருடைய பிரச்சனைகளைப் பற்றியும் பொருட்படுத்தாமல், கம்யூனிசம் ஒன்றே தனது உயர் மூச்சென வாழ்ந்து தன் முழு வாழ்க்கையையும் அர்பணித்தவர் தோழர் தாஸ். அவருடைய வாழ்க்கை இன்றைய இளைஞர்களும், தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்பற்றத் தக்கதாகும் என்றார் அவர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தோழர் பாஸ்கர், தோழர் தாஸ் ஆற்றிய முன்னணிப் பணிகளை நினைவு கூர்ந்தார். கம்யூனிச இயக்கத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டியமைக்கவும், அதைச் சரியான பாதையில் வழி நடத்தவும் அவர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். கம்யூனிசம் பற்றிய தீவிர ஆய்வும், இந்திய கம்யூனிச இயக்கத்தைப் பற்றிய சரியான கணிப்பும் அவரை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுத்தியது. தன் கடைசி மூச்சு இருக்கும்வரை தோழர் தாஸ் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியைக் கட்டி பலப்படுத்துவதற்காகவும், கம்யூனிஸ்டுகளுடைய ஒற்றுமையைக் கட்டியமைக்கவும் அயராது பாடுபட்டார். தொழிலாளி - விவசாயிகளுடைய ஆட்சியதிகாரத்தை அமைக்க வேண்டுமென்பதை வாழ்நாள் முழுவதும் தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய பணிகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும், அவற்றை நிறைவேற்றுவதே தோழர் தாஸ் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும் என்றார் அவர்.

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி பேசுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழக மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களைப்  பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். அதிமுகவின் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொள்ளையடிப்பது தடையின்றித் தொடர்வதற்காக சமச்சீர் கல்வியை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களுடைய விழிப்புணர்வு காரணமாகவும், மக்கள் இயக்கங்களின் போராட்டம் காரணமாகவும் செயலலிதாவின் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலினுடைய விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. குழந்தைகளுடைய நல்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமான பாலின் விலையை அதிமுக அரசு உயர்த்தியதன் காரணமாக குழந்தைகளுடைய ஊட்டம் மேலும் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்களையும் செயலலிதா இருமடங்கிற்கும் மேல் ஒரேயடியாக உயர்த்தி அனைத்துத் தரப்பு மக்களுடைய போக்குவரத்துச் செலவினங்களைப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். வேலைக்காக போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். மின்சார கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தி, மக்களுடைய சுமையை தமிழக அரசாங்கம் மேலும் கூட்டியிருக்கிறது.

மின்சார கட்டணங்களை உயர்த்தியிருப்பதன் பின்னணி என்ன? அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி செய்ய ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ 1.95 மட்டுமே ஆகிறது. ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் கொண்டு வந்துள்ள தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் காரணமாக, மின்சார உற்பத்தித் துறையில் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ள தனியார் மின் உற்பத்தி ஆலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அரசாங்கம் அவர்களுக்கு 14 இலிருந்து 18 ரூபாய் விலை கொடுக்கிறது. இப்படி பொது மக்களுடைய வரிப்பணத்தை தனிப்பட்ட முதலைகள் கொள்ளையடிக்க வாரி வழங்கினால், மின்வாரியத்தில் நட்டம் ஏற்படாமல் இலாபமா கிடைக்கும்? இந்த நட்டத்தை பொது மக்கள் மீது சுமத்துவதற்காகவே செயலலிதா மின்கட்டணங்களைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார். இப்படித்தான் டீசல் விலை உயர்விலிருந்து ஒவ்வொரு விலை உயர்வும், கட்டண உயர்வும், முதலாளிகள் இலாபமடிப்பதற்காக பொதுமக்களைக் கொள்ளையடிக்கின்றனர்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலைவாசியை உயர்த்தியும், வரிச் சுமையை மேலும் கூட்டியும் அரசாங்கம், மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை சீரழித்து வந்திருக்கிறது. வருகின்ற ஐந்தாண்டுகளுக்கு விருப்பம்போல கொள்ளையடிக்க தமிழ்நாடு குத்தகைக்கு விடப்பட்டு விட்டதாக எண்ணி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை அதிமுக அரசாங்கம் தொடுத்து வருகிறது. தொழிலாளிகள் மீதும் அரசாங்கம் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது. பதிமூன்றாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை நீதி மன்றத் தீர்ப்பினையும் மீறி பாசிச முறையில் செயலலிதா, வேலை நீக்கம் செய்திருக்கிறார். வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள உண்டாய், ஃபோர்டு போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து, இந்த முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடிவரும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக பயங்கரமான அடக்குமுறைத் தாக்குதல்களையும், ஊரடங்குச் சட்டத்தையும் செயலலிதா தீவிரமாக கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு மக்கள் அமைப்புக்களும் கட்சிகளும் போராடி வந்திருக்கின்றனர். அதிமுக-வை ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவந்த கூட்டணி கட்சிகள் மக்களுடைய கடுமையான வெறுப்பைப் புரிந்து கொண்டு, அதிமுகவை அரியணையில் அமர்த்தியதற்கும் அரசாங்கத்தின் இந்தத் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், அவர்களும் இந்த மக்கள் விரோதத் தாக்குதல்களை எதிர்ப்பது போலவும் நாடகம் ஆடுகின்றனர். அதிமுக ஆட்சியதிகாரத்திற்கு வருவது முதல் முறையல்ல. முன்னர் செயலலிதா ஆட்சியில் இருந்த போது தொழிலாளர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகள் மூலமாகவும், ஊழல்கள் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தியதை யாரும் மறந்துவிடவில்லை.

இருந்துங்கூட சிபிஎம் போன்ற கட்சிகள் கடந்த காலத்திலிருந்து எவ்வித பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் அதே கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல, அதிமுகவை ஆட்சியதிகாரத்தில் அமர்த்திவிட்டு, இன்று மக்களை ஏமாற்றுவதற்காக, அதிமுக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்த இரட்டை வேடத்தை நம்புவதற்கு மக்கள் இன்னமும் தயாராக இல்லை. ஒரு கம்யூனிஸ்டு கட்சி சமுதாயத்தைப் பற்றியும் அதில் இயங்குகின்ற பல்வேறு சக்திகளைப் பற்றியும் தெளிவான புரிதலோடு செயல்பட வேண்டும். ஒரு முதலாளித்துவக் கட்சியை மாற்றி வேறு ஒரு முதலாளித்துவக் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென மார்க்சிசம்-லெனினிசம் நமக்குத் தெளிவாக அறிவுறுத்துகிறது.

கடந்த தேர்தலில் சிபிஎம், பெரு முதலாளி வர்க்கத்தின் கட்சியான அதிமுக-வோடு கூட்டணி அமைத்துக் கொண்டு, அவர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக வேலை செய்த அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி என்ன செய்தது? கெதர் கட்சி, இந்த சமுதாய அமைப்பை மாற்றாமல், தொழிலாளிகள்-விவசாயிகளுடைய ஆட்சியதிகாரத்தை அமைக்காமல் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும், மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதற்கும், ஊழலுக்கும் முடிவு கட்ட முடியாதென்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது.

இன்றுள்ள தேர்தல் வழிமுறையானது தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் பொது மக்களுடைய வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தவோ, அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவோ, சமுதாயத்தில் உண்மையான மாற்றங்களை உருவாக்கவோ பெரிய தடையாக இருப்பதை கெதர் கட்சியினுடைய தோழர்கள் எடுத்து விளக்கினர். இன்று செயலலிதாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சிகளின் பித்தலாட்டமான இரட்டை வேடங்களும், கம்யூனிஸ்டு கெதர் கட்சி கூறியதை ஆணித்தரமாக நிரூபித்து வருகின்றன. கெதர் கட்சி, சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவருகின்ற விடிவெள்ளியாக செயல்பட்டு வருகிறது என்பதை தோழர் பாஸ்கர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

கம்யூனிஸ்டு இயக்கம் இன்று பிளவு பட்டிருந்தாலும், மார்க்சிச-லெனினிச அடிப்படையில் கம்யூனிஸ்டு களிடையே ஒற்றுமையை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. சில கம்யூனிஸ்டு கட்சிகளுடைய தலைமையின் துரோகத்தனத்தால் கம்யூனிஸ்டுகள் மனந்தளர்ந்து விடாமல், கம்யூனிச இயக்கத்தை ஒன்றுபடுத்திக் கொண்டு செல்ல முன்வர வேண்டுமென எல்லா கம்யூனிஸ்டுகளையும் தோழர் தாஸின் நினைவு நாளன்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சரவணமுத்துவேல் பேசுகையில், தோழர் தாஸ் விவசாயிகளுடைய நலன்களுக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். இலவச மின்சாரத்தைப் பெறுவதற்காக மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திய போது தோழர் தாஸ் அவர்கள் அப்போராட்டத்தின் முன்னணியில் நின்று போராடியவர் ஆவார். அது போலவே, விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காகவும், விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காகவும் நடைபெற்றப் போராட்டங்களில் தோழர் தாஸ் தன்னுடைய பங்களிப்பைத் தந்திருக்கிறார். விவசாயிகளுடைய நல்வாழ்விற்காகவும், தொழிலாளி-விவசாயி கூட்டணியை உருவாக்கவும், அவர்களுடைய ஆட்சியதிகாரத்திற்கு வழிவகுக்கவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தோழர் தாஸ் அவர்களுக்கு தன்னுடைய செவ்வணக்கத்தைத் தெரிவித்து உரையை முடித்துக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களாட்சி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஐசக் தாமஸ் தொடர்ந்து பேசினார். அவர், தோழர் தாஸ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், உண்மையான போராட்ட இயக்கங்களைக் கட்டியமைக்கவும், இரப்பர் தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தொழிலாளிகள்-விவசாயிகளுடைய சுரண்டலை ஒழிக்கவும் கடுமையாக உழைத்தவர் ஆவார் என்று கூறினார். மக்களாட்சி இயக்கத்தை குமரிமாவட்டத்தில் நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டியவர், தோழர் தாஸ். அவருடைய கொள்கைத் தெளிவும், மக்களுக்கு ஆதரவாக அவர் கொண்டிருந்த விடாப்பிடியான உறுதியும் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன் உதாரணமாகும் என்றார் அவர்.

தோழர் தாஸோடு பல்லாண்டுகள் உழைத்த தோழர் இராஜேந்திரன் தன்னுடைய உரையில் சிபிஎம்-னுடைய துரோகத் தனத்தையும், அந்த கட்சி தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக செயல்பட்டு வருவதையும் அவர் எடுத்துரைத்தார். தோழர் தாஸ் ஒரு தொழிலாளியாக இருந்திருந்தாலும், மார்க்சிச அறிவியலைப் படித்து, அதில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதன் காரணமாகவே தொழிலாளிகள்-விவசாயிகளுடைய ஆட்சியதிகாரத்திற்காக அவர் கடுமையாக உழைத்தார். மார்க்ஸ் - லெனினுடைய கோட்பாட்டில் எப்போதும் உறுதியாக நின்றார். அவருடைய பணிகளை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்வதும், கம்யூனிஸ்டு கெதர் கட்சியை கட்டி வளர்ப்பதும் மட்டுமே நாம் அவருக்கு ஆற்றுகின்ற கடமையாக இருக்கும் என்று தோழர் இராஜேந்திரன் கூறினார்.

கெதர் கட்சியின் முன்னணி செயல் வீரர்களில் ஒருவரான தோழர் பி.ஆர்.வில்லியம் அவர்கள் பேசுகையில், சாதாரணத் தொழிலாளியாக இருந்த தோழர் தாஸ் அவர்கள் கம்யூனிசத்தின் மீது கொண்டிருந்த பற்றுதல் காரணமாகவும், தொழிலாளி வர்க்கத்தை நாட்டின் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்ற உறுதியான கொள்கைப் பிடிப்பின் காரணமாகவும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தன் இறுதிவரை உழைத்தவர் ஆவார். அவருடைய உழைப்பையும், கோட்பாட்டையும் நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுடைய ஒற்றுமையைக் கட்டியமைக்கவும், அவர்களுடைய போராட்டங்களை தோழர் தாஸ் காட்டிய வழியில் கொண்டு செல்லவும் நாம் பாடுபட வேண்டுமென்றார்.

கம்யூனிஸ்டு கெதர் கட்சி - கன்னியா குமரி மாவட்டத்தின் தலைவர் தோழர் வில்சன் அவர்கள் தோழர் தாஸ் ஆற்றிய கம்யூனிச முன்னோடிப் பணிகளை எடுத்துக் கூறினார். கம்யூனிச இயக்கத்தை திசை திருப்புவதற்காகவும், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காகவும், பல கம்யூனிச கட்சிகள் செயல்பட்ட போது, கம்யூனிச கொள்கையிலிருந்து சிறிதும் விலகாமலும், விட்டுக் கொடுக்காமலும், அரசின் அடக்குமுறைக்கு பணிந்துவிடாமலும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தோழர் தாஸ். முதலாளித்துவ அரசு அவரை பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளாலும், சதிகளாலும் பலமுறை சிறையிலிட்டிருக்கிறது. அவர் ஏறத்தாழ 7 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார். குமரி மாவட்டத்தில் கம்யூனிச இயக்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைக்கவும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியை கட்டி வளர்க்கவும் இரவு பகலாக தன்னுடைய உழைப்பை ஈந்தவர் அவர். தோழர் தாஸினுடைய உயர்ந்த வாழ்க்கையைப் பின்பற்றி தொழிலாளர்களும், இளைஞர்களும், கம்யூனிச ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டு கெதர் கட்சியில் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றும், சுரண்டலுக்கும் வறுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

குமரி மாவட்டத்தின் கெதர் கட்சித் தோழர்களும், கம்யூனிஸ்டுகளும் மிகுந்த ஆர்வத்தோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் தாஸ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதோடு, கட்சியை இடைவிடாமல் கட்டி வலுப்படுத்துவோமென்ற உறுதியோடு கூட்டம் நிறைவு பெற்றது.

Pin It