சென்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டன. அவை முறையாகச் செயல்படுத் தப்பட்டன. அதன் விளைவாக மக்கள் அடைந்த பயன்கள் ஏராளம். என்றாலும் கடந்த தேர்தலில் மக்கள் ஆட்சியை மாற்றி விட்டார்கள்.

விளைவு?

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், வங்கிக்கொள்ளை, என்கவுன்டர் கொலைகள் என்ற நிலைக்குப் போய்விட்டது.

எல்லாவற்றையும்விட மிகப் பெரிய பிரச்சனை மின்சாரம். ஏறத்தாழத் தமிழகம் இருளில் இருக் கிறது பல நேரங்களில்.

சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 8 மணிநேரம், 10 மணிநேரம் மின்சாரமே இருப்ப தில்லை. இப்பொழுது சென்னையிலும் மின்வெட்டு இரண்டு மணிநேரம் என்று நடைமுறைப் படுத்தப்பட்டு விட்டது.

Otermac_370கடலூரில் தானே புயலால் மக்கள் பெரும்பதிப்புக்கு ஆளாகி, வீடு இழந்து, விளைந்த பயிர் அழிந்து அங்கும் மின் வெட்டு இருளின் கோரப்பிடி.

இவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாத தமிழக முதல்வர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் இடைத்தேர்தலைத் தன் கவுரவப் பிரச்சினை என்று மொத்த அமைச்சர்களையும் அங்கே அனுப்பிவிட்டார்.

இப்பொழுது சங்கரன்கோயில் அமைச்சர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

என்ன ஆகும் தலைமைச் செயலகப் பணிகள்? எல்லா அமைச்சர்களும் கடலூருக்குப் போய், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து நிவாரணப் பணிகளைச் செய்தார்களா?

ஆனால் மொத்த பலத்தையும் ஒரே ஒரு தொகுதிக்காக சங்கரன் கோயிலில் குவித்துவிட்டார் ஜெயலலிதா.

தேர்தல் அறிவிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்தார் ஜெயா. அந்தத் தொகுதியை தனிக் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின்னரும் அதற்கு மாறாக அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக மின்சாரம். எல்லா மாவட்டங்களிலும் 8 மணி முதல் 10 மணி நேரம் மின் வெட்டு இருக்கும்போது சங்கரன் கோயிலில் மட்டும் வெறும் 3 மணி நேரம்தான் மின்வெட்டு. பக்கத்தில் இருக்கும் பாளையங்கோட்டை, நெல்லைக்குக்கூட இந்தச் சலுகை இல்லை.

தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தலுக்குரிய சங்கரன் கோயில் தொகுதியில் மட்டும் 3 மணிநேரம் மட்டும்தான் மின்தடை என்று சலுகை காட்டுவது தேர்தல் விதிமுறைக்கு மாறானதா, இல்லையா?

இதைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க் கட்சிகள் எடுத்துச் சொல்லியும், ஆணையம் இது குறித்து மவுனமாகவே இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகள் எதிர்க்கட்சிகளை மட்டும்தான் கட்டுப்படுத்துமா? ஆளும் கட்சியைக் கட்டுப்படுத்தாதா?

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு, தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால் தொகுதி மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இடைத்தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அங்கே மின்வெட்டு நேரம் கூடிவிடும் என்பதும் புரியாதா அவர்களுக்கு!

காத்திருக்கிறது சங்கரன்கோயில் - அரசுக்கு முதல் எச்சரிக்கை மணியை அடிப்பதற்கு.

Pin It