ஐந்து ஆண்டு காலம் இவர்கள் ஆண்டு விட்டனர், இனி அடுத்த ஐந்து ஆண்டு காலம் அவர்கள் ஆளட்டுமே என்று சிலர்  ‘கட்டப்பஞ்சாயத்து ’க் காண முயல்கின்றனர். மாறி மாறிக் கொடுப்பதற்கு ஆட்சி என்பது, விளையாட்டுப் பொம்மையன்று. அது ஒரு நாட்டின் உயிர்நாடி. மக்களின் வாழ்க்கைச் சிக்கல்.

karunanidhi_5032001ஆம் ஆண்டு, அந்த அம்மையாரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, அல்லல்பட்ட தமிழினம் அதனை எப்படி எளிதில் மறக்கும் ?

தப்பித் தவறி மீண்டும் அந்த அம்மையார் ஆட்சி வருமானால், இன்றைய அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு விடாதா?

1996 ‡ 2001 இல், கலைஞர் அரசு நடைமுறைப்படுத்திய புதிய திட்டம் உழவர் சந்தை. ஆனால் 2001 இல் ஆட்சி மாறியதும் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதை நாம் மறக்க முடியுமா? அத்திட்டத்தால் உழவர்களும் பயன் பெற்றனர். பொதுமக்களும் பயன் பெற்றனர். பிறகு ஏன் அத்திட்டம் கைவிடப்பட்டது? கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதைத் தவிர, அதைக் கைவிடுதவற்கு வேறு என்ன காரணம் ?

இன்று மீண்டும் புதிய பொலிவுடன் 117 உழவர் சந்தைகள் இயங்குகின்றன. மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆட்சி மாற்றத்தை உண்டாக்கி, 162 உழவர் சந்தைகளையும் நாம் இழக்க வேண்டுமா?

கரும்பு விவசாயிகளுக்குப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2000/‡ வழங்கப்படுகிறதே, இந்நிலை அரசு மாறினால் நீடிக்குமா?

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் 8.33% ஊக்க ஊதியம் ( போனஸ் ) மட்டுமே அன்றைய ஆட்சியில் வழங்கப்பட்டது. எவ்வளவோ கோரிக்கைகள் வைத்தும், எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், தன் நிலையை அந்த அரசு மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தி.மு.கழக அரசு பொறுப்பு ஏற்றவுடன், தொழிலாளர்கள் கேட்காமலேயே, ஒவ்வொரு ஆண்டும் 20% ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறதே ! மீண்டும் 8.33% ஊக்க ஊதியம் போதும் என்று, அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் கருதுவார்களா?

பெண்களுக்காக இந்த அரசு எத்தனை நன்மைகளைச் செய்துள்ளது !  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்  திட்டத்தின் மூலம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இன்று அத்தொகையைக் கலைஞர் அரசு, 25,000/‡ ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்த உதவி,  திருமணத்தோடு நின்றுபோய் விடவில்லை. ஏழைப் பெண்கள் கருவுற்றால், அவர்களுக்கு ரூ.6000/‡ வீடு தேடி வருகிறதே. இந்த உண்மையை யாராவது மறுக்க முடியுமா?

இந்தியாவிலேயே, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கூடுதல் நிதி பெறும் மாநிலம் தமிழகம்தானே ! எத்தனை நிகழ்ச்சிகளில், நம்முடைய துணை முதல்வர், மேடையில் மணிக்கணக்கில் நின்றுகொண்டே அந்த உதவிகளை வழங்குகின்றார் என்பதை நாடு அன்றாடம் பார்க்கிறதே !

இத்தனை உதவிகளையும் இழப்பதற்குத் தமிழகப் பெண்கள் எப்படிச் சம்மதிப்பார்கள்? அதனால்தான், வாக்குச் சாவடிகளில் பெண்களின் நீண்ட வரிசை நிற்குமானால், தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று அரசியல் நோக்கர்கள் இன்று கருதுகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில், பெண்களின் வாக்குகள் மிகுதியாக அ.தி.மு.க.விற்குச் சென்றன என்பது உண்மைதான். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அவ்வாறே, கால்நடைக் காப்பீட்டுத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் முதலான பல திட்டங்களால் கிராம மக்களின் மனநிலையும் மகிழ்ச்சியாக உள்ளது. கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் பற்றி மாநகர, நகர மக்கள் மிகுதியும் அறியாதிருக்கலாம். ஆனால் கிராமங்களில் அத்திட்டம் மக்களுக்குப் பேருதவியாக உள்ளது. ஆடு, மாடு, கோழி ஆகியனவற்றைத் தங்களின் செல்வமாக மட்டுமின்றி, தங்களில் ஒருவராகவே கருதும் சிற்றூர் மக்கள், அவற்றைக் காப்பாற்றும் திட்டத்தைப் போற்றி வரவேற்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், ஆடு, மாடுகளும் கூட அனாதைகள் ஆகிவிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.

அன்றைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் எவ்வளவு அல்லலுக்கு உள்ளானார்கள் ! ஒரே ஒரு கையயழுத்தில்,  எந்த விசாரணையும் இல்லாமல், ஏறத்தாழ 12,000 அரசு ஊழியர்களின் வேலையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ள முயன்ற  அரசன்றோ அது ! எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் எத்தனை ஆயிரம் பேர் கைதானார்கள் ! உடை மாற்றிக் கொள்ளக் கூட நேரம் தராமல், பெண்கள் பலரை இரவு உடைகளோடு, காவல்துறை வண்டிகளில் அள்ளிக் கொண்டல்லவா போனார்கள். அரசு ஊழியர்கள் என்ன கிரிமினல் குற்றவாளிகளா? அடுத்த நாள் காலையில் ஊரை விட்டே ஓடிவிடுவார்களா? இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?

இன்றை ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு அதுபோன்ற கெடுபிடிகள் ஏதும் இருப்பதாய் எவரேனும் கூற முடியுமா? இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ உதவி வழங்கும், புதிய மருந்துக் காப்பீட்டுத் திட்டம் அல்லவா இன்று அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கண்ணியமான இவ்வாழ்க்கை முறை தொடர வேண்டுமானால், தி.மு.க. ஆட்சியும் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள்.

சுருக்கமாகச் சொன்னால், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள், ஏழை மக்கள், கலைத்துறையினர் என எந்தப் பிரிவினரை எடுத்துக் கொண்டாலும், கலைஞர் ஆட்சியில் பயன் பெறாத பிரிவினரே கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் பாதிக்கப்படாத பிரிவினரே கிடையாது.

மீண்டும் நமக்குப் பயன்பாடுகள் வேண்டுமா, பாதிப்புகள் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்வதற்கான ‘ நமக்கு நாமே ’ திட்டம்தான் வருகின்ற தேர்தல். உணர்ச்சி வயப்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்டோ, பொய்யான பரப்புரைகளை நம்பியோ, ஒரு நாளில் நாம் எடுக்கும் தவறான முடிவு, ஐந்து ஆண்டுகளுக்கு நம்மைப் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் !

தேர்தல் நாளன்று, உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்... உங்களுக்கு எது தேவை, கலைஞர் தலைமையிலான தி.மு.க.ஆட்சியா? ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.ஆட்சியா? நல்லாட்சி தொடரவேண்டுமா? கொடுங்கோலாட்சி கோலோச்ச வேண்டுமா? உங்களுக்காகவும், நாட்டுக்காகவும் நல்ல விடையைச் சொல்லுங்கள் !

Comments

6 comments

6
யுகேந்தர்
@karunchattai -

சில மக்களுக்கு மட்டும் நன்மைகள் இந்த ஆட்சியில் நட்ந்தது - ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் பல பல மக்களுக்கு தீமைகளை செய்தது இந்த ஆட்சி தானே ...

* நம் மீனவர்களுக்காக எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை இந்த அரசு. மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டார்கள்.

* நம் மக்கள் இலங்கையில் பரிதாபமாக இறந்தனர். எதுவும் செய்யவில்லை இந்த அரசு.

* 1.76 லட்சம் கோடி ஊழல். இது எல்லாருக்கும் தெரியும். ஒன்னும் சொல்லுரதுக்கு இல்லை இதுல.

* TASMAC - பல குடும்பங்களை விதீக் கொண்டு வந்தது இந்த அரசு தான்.

* தேவையில்லாத இலவசங்கள் மூலம், மக்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றதும் இந்த அரசு தான்.

* திரைபடத்துரை முழுவதும் தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இன்னும் பல....

உங்கள் கருத்து ???
srinivasan
nice
thamizhchudar
makkalin visuvasam poonaikkutti visuvasam than.idhellam avaru appan oottu kasaiya alli kodutharu .arasangap panam thane - enru pesum koottamum irukkathan seigiradhu.poruthirunthu parkkalam.

thamizhchudar
சந்திரன்
ஒரு புறம் தி.மு.காவின் ஊழலை மற்றும் அதன் மக்கள் விரோத போக்கை கண்டித்து கட்டுரைகள், மறுபக்கம் சுப.வீயின் தி.மு.க **** கட்டுரைகள். இதென்ன கீற்றின் அசிங்கமான முரண்பாடு.
பரிமளராசன்
நேற்று முன் தினம் சுபவீ அறிக்கை "மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும் திமுகவின் உயர்மட்ட செயற்குழுவின் முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், திமுக சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்ட குழுவினர் மறுபடியும் மெய்பித்துள்ளனர்."
நேற்று கருணா(நிதி) அறிக்கை,''காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள 63 தொகுதிகளை, பக்தி மனம் கமழ, அவர்கள் வரவேற்பார்கள், ஏனெனில் 63 நாயன்மார்கள் புராணத்தில் உள்ளனர் ''
இப்பொழுது குறைந்த பட்சம் கருணா(நிதி) ஒரு மானம் கெட்ட சுயமரியாதைக்காரர் என்ற உண்மையை சுபவீ ஒப்புக்கொண்டால்,அய்யாவின் வார்த்தைகளில் சொன்னால் ''அறிவு நாணயமாக இருக்கும்''.அதன் பிறகு தமிழர்களிடம் ஓட்டு கேட்க வரட்டும்.
கருணா(நிதி)க்கு ஏன் ஓட்டு போடக்கூடாது என ஒரு லட்சம் காரணங்களை சொல்லுகிறோம். எதிரில் எதிரி பார்ப்பாத்தி இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே துரோகி தப்பித்துக்கொண்டே போவது எப்படி நியாயம்?இருவரில் யாரை வீழ்த்துவது என்பதில், உலக தமிழினமே துடித்துக்கொண்டு இருப்பதும்,முன்னுரிமை வழங்கியுள்ளதும் கருணா(நிதி)க்குதான்.ஜெ வந்தால் அப்படி செய்தார் இப்படி செய்தார் இனி இப்படி நடந்து கொள்வார் என்கிற வாதங்கள் இனி பயன் தராது.கருணா(நிதி) ஆட்சியில் நடந்தது போல தமிழினத்திற்க்கு ஒரு பேரழிவு இனி ஒரு போதும் வரலாற்றில் நிகழப்போவது இல்லை எனும்போது ஜெ என்ன கருணா(நிதி) என்ன?இதில் துரோகிக்கு முன்னுரிமை என்பதால் தான் கருணா(நிதி)யை வீழ்த்தவேண்டும் என்கிறோம். இரண்டு நாளுக்கு முன் தன் குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ள கருணா(நிதி)க்கு வந்த மொன்னை கோபம்.ரோசம் இனம் அழியும் போது வரவில்லையே ஏன்? அப்பொழுது மட்டும் "நானே ஒரு அடிமை" என பெரியார் சொன்னதை கூறி நயவஞ்சக நாசடகமாடி இனத்தை அழிக்க துணை போனாரே? டெல்லிக்கு அடிமை வேலை பார்க்க கருணா(நிதி) துடிப்பது ஏன்? இவர் எங்கு வேண்டுமானாலும் அடிமை வேலை பார்க்கட்டும் இனத்தை காட்டி கொடுக்க இவர் யார்? ஆட்சி அதிகாரம் இருப்பதால் தானே அதை பிடுங்கி விட்டால் இவருக்கு அடிமை வேலையிலிருந்து விடுதலை கிடைக்கும். அடுத்து வரும் டெல்லி அடிமைக்கு விடுதலை பிறகு கொடுப்போம்.இனத்திற்க்கான தன்மானம்,சுயமரியாதை, போராட்ட குணத்தோடு ஒரு ஆட்சி தமிழகத்தில் அமைக்கவே முடியாது என கங்கணம் கட்டி திரிகிறார்களா இவர்கள்? அப்படி ஒரு ஆட்சியை அமைக்க வேண்டுமானால் இவர்களை எல்லாம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசி எறிவதுதான் முதல் பணியாக இருக்கவேண்டும். கருணா(நிதி) போய் விட்டால் அடுத்து ஸ்டாலினாம். இது என்ன மன்னராட்சியா?மக்களாட்சியா? யார் ஆளப்போவது என முடிவு செய்வது மக்கள். அதை முதலில் கவனத்தில் வைத்துக்கொள்ளட்டும்.
4 ஆண்டுகளுக்கு முன் இருந்த விற்பனையை விட 3 மடங்க்குகளுக்கு மேல் சாராய விற்பனையை அதிகரித்து சாதனை புரிந்தவர் கருணா(நிதி). சாராய விற்பனைக்கு இலக்கு(target) நிரணயம் செய்து நிர்வாகத்தில் புதிய இழிவான நடைமுறையை அறிமுகப்படுத்தியவர். தமிழ்நாட்டில் சாராய ஆறை ஓடவிட்டு,தமிழைனத்தையே குடிகார இனமாக்கி இவர்களின் இன மான உணர்வையும்,போராட்ட குணத்தையும் காணாமல் செய்துவிட்டால் நம்மையும் நம் சந்ததிகளையும் கேள்வி கேட்க ஆள் இருக்காது என சூழ்ச்சி செய்கிறார். இன்னமும் இனமான உணர்வு அற்றுப்போகவில்லை என இந்த தேர்தல் நிரூபிக்கும். இன உணர்வுள்ள இளைஞர் கூட்டம் இந்த துரோகியை வீழ்த்தும்.
பெரும்பாலான தமிழர்களை குடிகாரனாக்கி கையை திருகி காசை பிடுங்குவது போல் குறந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு குடிமகனிடம் 100 ரூபாயை பிடுங்க்கி கொண்டு மலை போல மக்களிடம் பிடுங்கி துகள் போல இலவசம் என்கிற பெயரில் மக்களுக்கு பிச்சை போடுவதை சாதனை என்று சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லை? வெட்கம் மானம் இவர்களிடம் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு என டெல்லிகாரனிடம் இவர்கள் நடக்கும் விதம் பார்த்தாலே தெரிகிறது. இதை ஒரு சிறந்த நிர்வாகம் என பிரச்சாரம் செய்து வெற்றி பெறலாம் என கருணா(நிதி) கனவு காண்கிறார். அது நடக்காது.
elagnairu
சந்திரன் உங்களைப்போல் எனக்கும் கீற்றின்மீது கோபம் இருந்தது.. கீற்று ஒரு நடுநிலையான இணைய தளம்.. முஸ்லீம்களின் இன்னல்களை அம்பலப்படுத்தியதற்காக அரபு நாடுகளில் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறது என்று இந்து அமைப்பால் மேடைகளில் விமர்சிக்கப்பட்டது கீற்று.. பொதுவுடமை இயக்க கட்டுரை வந்தால் கீற்று பொதுவுடமை இயக்கம் சார்ந்தது என விமர்சிக்கப்படுவதும் உண்டு.. இதே போல்தான் பெரியாரியல் சார்பானது என்றும் சொல்லப்படுவது உண்டு.. ஆகாத செய்திகளை வெளியிடாமல்... சிந்தனைக்குறிய விவாதக் கருத்துகளை... சுற்றுச்சூழல் ஆய்வு பிரச்சனைகளை வித்தியாசமான தளத்தில் இருந்து வெளீயிடும் கீற்றிலிருந்து.. நாம் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்... மாற்றுக் கருத்து என்னவென்று நாம் அறியாமல் எதையும் கண்மூடி விமர்சிக்க முடியாது தோழ்ரே

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.