ரஷ்யாவில் செர்னோபில் என்னும் இடத்தில் அமைந்திருந்த அணுஉலை விபத்துக்குள்ளாகி ஏப்ரல் 26ம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், அணுக்கதிர் வீச்சாலும், அது ஏற்படுத்திய தொடர்விளைவுகளாலும் உலகம் முழுவதிலும் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 85ஆயிரம் பேர் என ஒரு சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. செர்னோபில் அணு உலை விபத்திற்கு இணையான விபத்தை கடந்த மாதம் இந்த உலகம் கண்டது. ஜப்பானில் சில நிமிட நேரத்தில் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சுனாமிப் பேரலைகளால் புகுஷிமாவில் உள்ள அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துச்சிதறின. இந்த அணு உலைகளில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்பட, இன்னும் தெற்கே வெகுதொலைவில் அமைந்துள்ள நகரங்களில்கூட நீரும், பாலும், காய்கறிகளும் அணுக்கதிர்வீச்சால் விஷமாகிப்போயின.

புகுஷிமாவில் அணு உலையிலிருந்து சிதறிய புளுட்டோனியம் கொட்டிக்கிடப்பதால் அந்தப் பகுதியையே நெருங்கமுடியாத நிலைமை நீடிக்கிறது என செய்திகள் கூறுகின்றன. கதிர்வீச்சு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு முழுவீச்சில் தனது சக்தியையெல்லாம் திரட்டி போராடிக்கொண்டிருக்கிறது. நிலைமை சீராக மாதங்கள் அல்ல, வருடங்கள் பல செலவாகும். ஏற்கனவே, சுனாமியாலும், கதிர்வீச்சாலும் இதுவரை 27ஆயிரத்து 500பேர் பலியாகியுள்ளனர். தொடரும் கதிர்வீச்சு இன்னும் எத்தனை உயிர்களை பறிக்க இருக்கிறதோ; எத்தனைபேரை முடமாக்க இருக்கிறதோ! கண்முன்னால் இத்தனை பெரும் பேரழிவு நடந்துள்ளபோதிலும்கூட, காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, அணு உலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு தீனிபோட்டே ஆக வேண்டும் என பிடிவாதத்துடன் நிற்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜெய்தாப்பூர் என்னும் இடத்தில், அணு சக்தி உடன்பாட்டின்படி தனியார் பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்து பெறப்போகும் அணு உலைகளை நிறுவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. எப்படிப்பட்ட அணு உலை?

ஜப்பானின் புகுஷிமாவில் கடந்த மாதம் 11ம் தேதி சுனாமி பேரலைகளால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி வெடித்துச்சிதறி அந்நாட்டையே கதிர்வீச்சு அபாயத்திற்கு உள்ளாக்கியிருக்கும் அதே அணு உலை. இந்தியாவில் கல்பாக்கம் உள்பட, விரைவில் இயங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ள கூடங்குளம் மற்றும் மறுசுழற்சி எரிபொருள் பயன்பாடுகொண்ட தாராப்பூர் உள்பட ஏராளமான அணு உலைகள் உள்ளன. கூடங்குளம் தவிர 17 அணு உலைகள் தற்போது செயல்படுகின்றன. இந்திய நாட்டிற்கு மொத்தம் தேவைப்படுகிற மின்சக்தியில் இந்த அணு உலைகள் வெறும் 3.2 சதவீதம் மின்சாரத்தையே உற்பத்தி செய்கின்றன. தற்போது இயங்கும் அணு உலைகளோடு ஒப்பிடும்போது தமிழகத்தின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் கூடிய அணு உலைகள், செர்னோபில் விபத்து உள்பட உலகில் இதுவரை ஏற்பட்ட 3 அணு விபத்துக்களையும் (ஒன்று அமெரிக்காவில்; மற்றொன்று ஜப்பானில்) ஆய்வு செய்து, அதன்மூலம் பெறப்பட்ட படிப்பினைகளை உள்வாங்கிக்கொண்டு நிறுவப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நிலநடுக்கம், சுனாமி உள்பட எவ்வித இயற்கை சீற்றத்தாலும் தாக்குதலுக்கு உள்ளாகாதவாறு கடல்மட்டத்திற்கு மேலே, உலகில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளைவிட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் தாண்டி ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டால்கூட அடுத்தநொடியே இந்த அணுஉலைகள் முற்றிலும் செயலிழந்துபோகும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன.

ரஷ்யஅரசும், இந்திய அரசும் மிகவும் நிதானமாக ஆய்வு செய்து, நீண்ட பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடத்தி இரு நாட்டு நல்லுறவின் அடையாளமாக கூடங்குளம் அணு உலை நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவிதமான அடிப்படை ஏற்பாடுகளும் இன்றி, இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளாமல், மிகப்பெரிய அளவிற்கு பூகம்ப அபாயம் உள்ள பகுதியான மகாராஷ்டிரத்தில் உள்ள ஜெய்தாப்பூரில், மிக சமீபத்தில் ஜப்பானில் பெரும் விபத்துக்குள்ளாகி இருக்கிற அதே வடிவமைப்புடன்கூடிய அணு உலைகளை நிறுவுவதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சிக்கிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பணக்கார நாடுகளில் மையம் கொண்டிருக்கும் பெரும் அணுஉலை வியாபாரப் பன்னாட்டு நிறுவனங்களே இருக்கின்றன. அவர்களது கொள்ளை லாபத்திற்காக ஜெய்தாப்பூர் பகுதியில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி அப்பிரதேசத்தில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைக்கத் தயாராகிவிட்டது காங்கிரஸ் தலைமையிலான அரசு.

மத்திய அரசு சொல்வதை மாநில காங்கிரஸ் அரசு அப்படியே செயல்படுத்துகிறது. உண்மைகளை உணர்ந்துள்ள மக்கள், ஜெய்தாப்பூர் அணு உலை திட்டத்திற்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளனர். நிலம் பறிபோவது மட்டுமல்ல ; வாழ்க்கையே பறிபோகும் ஆபத்தும் இருப்பதால், ஜெய்தாப்பூர் அணு உலை திட்டத்தை நிறுத்து என்று முழங்கிவருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் இதர பல்வேறு கட்சிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் அமைப்புகளும் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நிற்கின்றன. மக்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தையும், அச்சத்தையும் உணர மறுக்கும் அரசு, வழக்கம்போல ஒடுக்குமுறையை ஏவிவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு போலீசை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியது. 3 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. ஜெய்தாப்பூர் - சாக்ரி -நாதே ரத்னகிரி உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன. இத்தனை எதிர்ப்பு எழுந்துள்ளபோதிலும்கூட, ஜெய்தாப்பூர் அணு மின் திட்டத்திற்கு முழு அனுமதி அளிக்கிறோம் என்று, செர்னோபில் அணு விபத்தின் 25-ம் ஆண்டு தினமான ஏப்ரல் 26-ம்தேதி மன்மோகன் சிங் அரசு அறிவித்துள்ளது.அனுதினமும் உயிர்வாழப் போராடும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அணு உலைகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ; மரண வியாபாரியான அமெரிக்காவின் இளைய கூட்டாளியாகிப் போன இவர்கள் மக்களின் மரணங்களையே விரும்புவார்கள்; அந்த மக்களின் கைகளால் மரணஅடி கிடைக்கப்பெறும்வரை!

Pin It