அழைக்கிறது இளைஞர் அரண்!

தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் இளைஞர்கள் சற்றொப்ப 30 விழுக்காடு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இளமையின் செயல்துடிப்பைக் கருத்தில் கொள்ளும் போது, தமிழ்நாட்டின் வாழ்விலும் வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்கு இந்த விழுக்காட்டையும் விஞ்சி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இளைஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போராட்டத்திலும், மொழியுரிமைப் போராட்டங்களிலும், பிற வகையிலான தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் இளைஞர்களின் பங்கு மகத்தானது.

கடந்த 2008-09 காலத்தில் தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போர் உச்சம் தொட்ட போது, ”போரை நிறுத்து!” என்ற முழக்கத்துடன் பலதரப்பட்ட இளைஞர்களும் இலட்சக்கணக்கில் உணர்ச்சிப் பெருக்கோடு களங்கண்டனர். அப்போதைய இளைஞர் எழுச்சியின் ஒரு வெளிப்பாடாகவே வீரத்தமிழன் முத்துக்குமாரின் உயிரீகம் அமைந்தது. அது வரை தமக்குள்ள சிக்கல்களுக்காகக் கூடத் தெருவில் இறங்கிப் போராடியறியாத இளைஞர்களும் மாணவர்களும் கூட இப்போது ஈழத் தமிழர் இனவழிப்பைத் தடுக்கக் கிளந்தெழுந்து போராடக் கண்டோம். அந்தப் போராட்டம் தோல்வியில் முடிவுற்றாலும் அதன் தாக்கம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஆழ்ந்த அரசியல் கல்வி புகட்டிச் சென்றது என்பதே மெய்.

மெரினாவில் ஒரு வசந்தம் என்று வரலாறும் இலக்கியமும் குறித்துக் கொண்ட சல்லிக்கட்டுப் போராட்டம் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடும் ஈட்டியதொரு பெருவெற்றியாகும்.

இன்றைய நிலையில் அரசின் கொள்கைகள் இளைஞர்தம் வாழ்வை நெருக்கடியில் தள்ளியுள்ளன. கல்வித் துறையில் வரைமுறையற்ற வணிகமயம் எல்லா நிலைகளிலும் கல்வியைக் கடைச் சரக்காக்கி விட்டது. ஏழை எளிய, ஒடுக்குண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி விட்டது. நீட் போன்ற தகுதிகாண் நுழைவுத் தேர்வுகள் மருத்துவம் போன்ற துறைகளில் ஒடுக்குண்ட விளிம்புநிலை மாணவர்களின் வாய்ப்பை மென்மேலும் பறித்துக் கொள்கின்றன. அனைவருக்கும் கல்வி எனும் கனவுகள் கரைந்து மறைந்து ஒருசிலருக்கு மட்டுமே கல்வி எனும் கெடுநிலை முழுமையாக மீண்டு வரும் அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை என்பது கல்வித் துறையை வணிகமயமாக்குவதோடு காவிமயமாக்கவும், மையத்தில் அதிகாரக் குவிப்பை வளர்க்கவுமான முயற்சியே ஆகும். இந்த முயற்சியை எதிர்த்து நின்று தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய தமிழக அரசோ ’இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ எனும் பெயரில் அதே தேசியக் கல்விக் கொள்கையின் சில கூறுகளைச் செயலாக்க முற்பட்டுள்ளது. நீட் தேர்வைக் கூட நீக்கம் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் சமூகநீதி மரபு என்பதெல்லாம் சொல்லளவிலேயே நிற்கிறது. உயர்கல்வியில் மட்டுமின்றி பள்ளிக் கல்வியிலேயே தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் பரப்பு மென்மேலும் சுருக்கப்பெறும் அவலம் காணப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய அயல்மொழிகளின் திணிப்பு அன்னைத் தமிழைக் காணாமலாக்கி வருகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் மறந்து போய் எங்கே தமிழ்? எதிலே தமிழ்? என்று கேட்கும் நிலை தலைதூக்கி வருகிறது.

இந்தப் போக்கினை எதிர்த்துப் போராடித் தமிழ்நாட்டின் கல்வியைக் காக்கவும் அறிவியல், அறவியல் நோக்கில் மாற்றியமைக்கவும் வேண்டும் என்பது தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களின் முன்னுள்ள கடமை.

மாறாக, சமூக வலைத்தளங்களின் கூடாப் பயன்பாடும் சமூகக் குடிப் பழக்கம் எனப்படும் கூடிக் குடிப்பதும், போதைக்கு அடிமைப்பட்ட நிலையும், வன்முறைப் பண்பாடும் ஆபாசச் செயல்பாடுகளும் சாதி சமய வெறியும் நம் இளைஞர்கள்-மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளன. இளைஞர்கள் இந்தச் சமூகத்தை மாற்றியமைக்கவும் தங்களைத் தாங்களே மாற்றியமைத்துக் கொள்ளவும் வேண்டிய கடமை உள்ளது.

பொருளியல் நோக்கில் மட்டுமல்ல, தன்மதிப்பு நோக்கிலும் நம் இளைஞர்கள் முகங்கொடுக்க வேண்டிய பெருந்துயராக வேலையின்மைச் சிக்கல் உருவெடுத்து நிற்கிறது. முதலிய வளர்ச்சிப் பாதைக்கே உரித்தான வறுமையும் வேலையின்மையும் புதுத்தாராளியத்தால் மேலும் மோசமாக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இதனால் கடுமையாகியுள்ளன.

தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத் துறையிலும் அரசுத் துறையிலும் கூட ஒப்பந்தப் பணியாளர் முறை கோலோச்சுகிறது. தமிழக அரசின் மின்வாரியம் போன்ற நிறுவனங்களில் ஒப்பந்தமில்லாத ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒளிவுமறைவின்றி வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள படி சற்றொப்ப ஒன்றரைக் கோடி இளைஞர்கள் (இளைஞர்கள் மட்டுமல்ல) வேலையில்லாது திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பதிவு செய்யப்படாதவர்களின் தொகை இன்னும் பெரிது. இந்தச் சேம உழைப்புப் பட்டாளத்தின் அளவு நாளும் பெருகி வருகிறது. வேலையற்றோரைக் காட்டி அரைத் தொழிலாளர்களும் அரைத் தொழிலாளரைக் காட்டி அமைப்புசார் தொழிலாளர்களும் அச்சுறுத்தி ஒடுக்கப்படுகின்றனர். அனைத்து உழைப்பாளர்களையும் ஒன்றுபடுத்தி ஓரணியில் திரட்டும் பணி இளைஞர்களுக்காகக் காத்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைப் போராட்ட அரசியலில் இளைஞர்கள் வகித்து வந்த பங்கினை அரசுகள் திட்டமிட்டே ஒழித்து விட்டன எனலாம். குறிப்பாகக் கல்லூரிகளில் மாணவர் தலைவர் தேர்தல்கள் தடை செய்யப்பட்டன. எல்லாத் தடைகளையும் மீறி சமூக அக்கறை கொண்டு பல்வேறு உரிமைப் போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை அரசு அடக்கி ஒடுக்கி விடுகிறது. மாணவர்கள் கல்லூரிக்குள் அரசியல் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிண்றனர்.

ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் இளைஞர்கள்-மாணவர்களின் அரசியல் ஆர்வம் மீண்டும் துளிர்த்துள்ளது. மறுபுறம் எண்பதுகளுக்குப் பிறகு தலைதூக்கிய சாதி சமயக் குறுநோக்குக் கட்சிகள், அமைப்புகளின் தாக்கம் இளைஞர்கள், மாணவர்களையும் தொற்றியுள்ளது. பள்ளி கல்லூரிகளில் சாதி அடையாளங்களைக் கட்டித் திரியும் போக்கு பெருகியுள்ளது. இது தமிழ்ச் சமூகத்திற்கு பெருங்கேடு. மாணவர்கள் இளைஞர்களின் ஒற்றுமைக்கு மட்டுமல்லாமல் மக்கள் ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் படியான பெருங்கேடு.

சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமன்று. ஆனால் இட ஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி இல்லை. இட ஒதுக்கீட்டுக்கான சமூக நீதிப் போராட்ட அரசியல் சாதியப் பதவி அரசியல் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் இளைஞர்கள் இடையே இட ஒதுக்கீடு குறித்து அலட்சியமும் அவநம்பிக்கையும் வளர்ந்துள்ளன. இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டியாகப் பெயர் பெற்ற தமிழ்நாட்டிலேயே சமூகநீதிக்கு எதிரான குரல்கள் உரக்க ஒலிப்பதைத் தமிழ்நாட்டின் மெய்யான சமூகநீதி ஆற்றல்கள் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகளை சாதிய அரசியலுக்கு உரமாக்கிக் கொள்ளும் முயற்சிகளைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் முறியடிக்க வேண்டும். பொருளியலில் நலிந்த பிரிவினர் (EWS) என்ற பெயரில் இடஒதுக்கீட்டின் அடித்தளங்களைத் தகர்க்கும் நச்சுத் திட்டங்களையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும்.

 சாதிச் சமூகத்தின் காவல் கோட்டமாக விளங்கும் சொந்த சாதிக்குள் மணம் செய்யும் அகமண முறையைத் தகர்க்க இளைஞர்களால் மட்டுமே இயலும். இந்த அகமணமுறையைக் காக்க வேண்டி அவ்வப்போது ஆணவக் கொலைகள் நடப்பது தமிழ்நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய செய்தி. இதனால் தமிழர் ஓர்மை சிதைக்கப்படுவதை உணர வேண்டும். காதலையும் காதலர்களையும் பேணிக் காப்பதை இளைஞர்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக வன்கொடுமைகள் நடக்கும் போதெல்லாம் தமிழன்னையின் முகத்தில் கரி பூசப்படுகிறது. பாலியல் கல்வியும், பாலின நிகர்மை நோக்கும், மாற்றுப் பாலினத்தவர் பற்றிய புரிதலும் நம் இளைஞர்களுக்குத் தேவை. .

சமூகத்தில் சரிபாதியான பெண்கள் கடந்த காலத்துடன் ஒப்பிட்டால் துறை தோறும் துறைதோறும் ஓரளவு முன்னேறியுள்ளனர். அவர்களின் உழைப்புக்கும் ஆற்றலுக்கும் தடைகளை வென்ற போராட்டத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி இது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற காலம் மலையேறி விட்டது. பொதுத் தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னுக்கு நிற்கும் பெண்களைப் பார்த்து நாடே பூரிக்கிறது. பெண்களின் அரசியல் விழிப்புணர்வும் பங்கேற்பும் ஓரளவு வளர்ந்திருப்பினும் ஆணாதிக்கச் சமூகம் தொடர்ந்து முட்டுக்கட்டை இடக் காண்கிறோம். அரசியலில் 33% இட ஒதுக்கீடு என்பது ஆணாதிக்கச் சுவரைத் தாண்ட முடியாமல் ஆண்டுக்கணக்கில் கூண்டுக் கிளியின் பேச்சாகவே இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டால் பெண் பதவி பெற்றுள்ள இடத்தும் பெரும்பாலும் ஆணின் கைப்பாவையாக இருக்கவே உரிமம் தரப்பட்டுள்ளது

கல்விக்கூடங்கள், பணியிடங்கள், அலுவலகங்கள், வழிபாட்டுக்கூடங்கள், பயண ஊர்திகள் என்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. வீட்டுக்குள்ளேயும் அவர்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தனிச் சட்டம் போட்டும் அடங்க மறுக்கிறது.

எல்லாத் துறைகளிலும் பெண்ணுரிமைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் ஆண்-பெண் நிகர்மைக்காகவும் போராடும் கடமை பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இளைஞர்களுக்கும் உண்டு.

இன்று பூவுலகை அவசரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம், போன்ற சூழலியல் சீர்கெடுகள் பற்றி உணர்வு பெறுவதும் மக்களுக்கு உணர்வூட்டுவதும் இளைஞர்களின் உடனடிக் கடமையாகும்.

தமிழ்ச் சமூகம் முகங்கொடுக்கும் சிக்கல்களையும் அவற்றுக்குரிய தீர்வுகளையும் எண்ணிப்பார்த்துச் செயலாற்றும் பெருங்கடன் இளைஞர்களைச் சாரும்.

ஆகவே தமிழ்நாட்டு இளைஞர்களே! மாணவர்களே! சமூக அநீதிகளுக்கு எதிராக நாம் ஓரணியாகத் திரண்டு உறுதியாகப் போராட இளைஞர் அரண் உங்களை அறைகூவி அழைக்கிறது,

நாம் நமக்கு அரண், நம் தமிழ் மக்களுக்கு அரண்!

நாமே இளைஞர் அரண்!

இளைஞர் அரண் முழக்கங்கள்:

அனைவர்க்கும் கல்வி! அனைவர்க்கும் வேலை! கல்வியும் வேலையும் அடிப்படை உரிமைகள்!

சமூகநீதி! சரிநிகர்வாழ்வு!

தமிழர் ஓர்மை! தமிழ்நாட்டின் உரிமை!

அறவாழ்வு! அறிவியல் நோக்கு! புவிநேயம்! இயற்கைச் சூழல் நேயம்!

இரந்து கேட்கும் சலுகைகள் இல்லை! இளையோர் எழுப்பும் உரிமை முழக்கம்!

 நாம் நமக்கு அரண்!

நம் தமிழ் மக்களுக்கு அரண்!

நாமே இளைஞர் அரண்!

- இளைஞர் அரண்

Pin It