பணவீக்கத்தை சரியாக புரிந்துகொள்ள, பொருட்களின் விலைவாசி நிலையும், அதில் ஏற்படும் மாற்றமும் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.

விலைவாசியும், அளவீடும்:

ஒரு பொருளை அல்லது சேவையை வாங்குவதற்கோ, விற்பதற்கோ தேவைப்படும் பணத்தையே அப்பொருளின் விலையாகக் குறிப்பிடுகிறோம். பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தை அளவிட விலைக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் விலைவாசி நிலவரம் என்பது ஓரிரு பொருட்களின் விலைகளை மட்டும் குறிப்பிடுவதில்லை, மொத்தமாக பல்வேறு பொருட்கள்/சேவைகளின் விலைகளின் நிலவரத்தைக் குறிப்பிடுகிறது.

விலைக் குறியீடு:

விலைக் குறியீடு என்பது இரண்டு கால இடைவெளிகளில் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தை அளவிடப் பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் காணப்படும் விலை நிலையை அடிப்படையாகக் கொண்டு அதனுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டின் விலைக்குறியீடு கணக்கிடப்படுகிறது. அடிப்படையாக கொள்ளப்படும் ஆண்டின் விலை மதிப்பு 100ஆகக் கொண்டு இந்த ஆண்டின் விலையில் ஏற்படும் மாற்ற விகிதம் கணக்கிடப்படுகிறது.

விலைக் குறியீடு= 100* இந்த ஆண்டின் விலை/ அடிப்படை ஆண்டின் விலை

ஒரு கிலோ அரிசியின் விலை 2020ல் 20 ரூபாயாக இருந்தது 2021ல் 25 ரூபாயாக உயருமானால்

அதற்கான விலைக் குறியீடு= 100*25/20 =125

இங்கே 125 விலைக்குறியீடு அரிசியின் விலை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 25 விழுக்காடு உயர்ந்துள்ளதைக் குறிப்பிடுகிறது. அதாவது சென்ற ஆண்டு செலவழித்ததை விட 25 விழுக்காடு கூடுதலாக பணம் இருந்தால் மட்டுமே அதே அளவு பொருளை வாங்கமுடியும்.

பொதுவான விலைக் குறியீட்டின் தலைகீழி அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கான பணத்தின் வாங்கும் திறனைக் குறிப்பிடுகிறது. மேலே கணக்கிடப்பட்ட விலைக்குறியீட்டின் தலைகீழி= 20/25*100 =80

விலைக் குறியீடு எண் 125 ஆக உயர்ந்தால், 20 ரூபாய் பணத்தைக் கொண்டு அடிப்படை ஆண்டில் வாங்கியதில் 80 விழுக்காடு மட்டுமே வாங்கமுடியும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அரசு, தனியார் அமைப்புகள் விலைக் குறியீட்டு எண்களை கணக்கிடுகின்றன. அவை வணிக மற்றும் பொருளாதார நிலைமைகளை வெளிப்படுத்தும் குறியீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பைப் பொறுத்து, பல வகையான விலைக் குறியீடுகள் கணக்கிடப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

இரண்டு விலைக் குறியீடுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-Consumer price index) மொத்த விலைக் குறியீடு (WPI- wholesale price index). ஒரு தேசத்தின் பணவீக்கம் முக்கியமாக இந்த இரண்டு குறியீடுகளால் அளவிடப்படுகிறது. இவை பொருளாதார நலனையும், பொருட்களின் விலைகளில் காணப்படும் நிலைத்தன்மையையும் அறிவதற்கான மிக முக்கியமான பொருளாதாரக் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில், விலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலமும் , மொத்த விலைக் குறியீட்டின் மூலம் அளவிடப்படுகின்றன. இந்த குறியீடுகள் முறையே சில்லறை மற்றும் மொத்த விலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகின்றன.

 நுகர்வோர் விலை குறியீடு:

இது சில்லறை பணவீக்கம் என்றும், வாழ்வாதார செலவு குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. சில்லறை சந்தையின் விலை மாற்றம் அதாவது தினசரி வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் பொருட்கள், சேவைகளின் விலை மாற்றம் இதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இது பொதுவாக நுகர்வுப் பொருட்களின் விலைகளின் சராசரி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. இது மக்களின் வாழ்வாதார செலவினங்களை அறிந்துகொள்ள பயன்படுகிறது.

ஒரு தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்வாதாரச் செலவுகளை கணக்கிட்டு பணத்தின் வாங்கும் திறனில் ஏற்படும் மாற்றங்கள் இக்குறியீட்டின் மூலம் அளவிடப்படுகிறது. நுகர்வுப் பொருட்களின் விலை உயரும் போது நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிக்கிறது, அவற்றின் விலை குறையும் போது நுகர்வோர் விலைக் குறியீடும் குறைகிறது.

சராசரி குடும்பங்கள், தொழிலாளர்கள் போன்ற ஒத்த மக்கள் குழுவினரால் பொதுவாக நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இக்குறியீட்டின் மூலம் அளவிடப்படுகிறது.

 நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கான நுகர்வுக்கூடையின் பகுதிப்பொருட்கள் குடும்பங்களிடம் மேற்கொள்ளும் கணக்கெடுப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் வீடுகளில் வாங்கப்படும் பொருட்கள், தினசரி செலவுகள் குறித்து தரவுகள் பெறப்படுகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் விலை பற்றிய தகவல்கள் நுகர்வோர் வாங்கும் பல்வேறு சில்லறைச் சந்தைகளிலிருந்து பெறப்படுகிறது.

இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அளவிடுவதற்கான சமீபத்தைய அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும். 2011-12ல் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட 68வது சுற்றின் நுகர்வோர் செலவின தரவுகளின் அடிப்படையில் நுகர்வுக்கூடையின் பொருட்களும், அளவுகளும் தேர்ந்தெடுப்பட்டுள்ளன. 2011-12ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வுக்கூடை 299 பொருட்களையும், சேவைகளையும் கொண்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கான நுகர்வுக் கூடையின் பகுதிப் பொருட்கள் பின்வருமாறு: 1) உணவு, பானங்கள் 2) புகையிலை, போதைப்பொருட்கள் 3) ஆடை, காலணி 4) வீட்டு வாடகை 5) எரிபொருள், ஆற்றல் 6) இதரவை.

இந்த 6 பிரிவுகளிலும் ஒரு சராசரி குடும்பத்தால் நுகரப்படும் விகிதாசார அளவில் விலைக் குறியீடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

6 பிரிவுகளில் ஒவ்வொன்றும் பல துணை பிரிவுகளைக் கொண்டுள்ளன.

 'உணவு' என்பதன் உள்ளடக்கமாக தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்கள், இறைச்சி, மீன், முட்டை, மசாலா, காய்கறிகள், பழங்கள், தேநீர், காபி போன்ற பானங்கள், ஆகியவை உள்ளன. இதரவை என்பதன் உள்ளடக்கமாக வீட்டு உபயோகப் பொருட்கள், கருவிகள், மருத்துவச் சேவை, போக்குவரத்து ஆகியவை அடங்கும். இந்த மாறாத நுகர்வுக்கூடையின் விலை 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் குறிப்பிட்ட மாதத்தில் எவ்வளவு மாற்றத்திற்குட்பட்டுள்ளது என்பதே இக்குறியீட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

லாஸ்பியர்ஸ் சூத்திரத்தைப் பயன்படுத்தி நுகர்வோர் குறியீடும், மொத்த விலைக் குறியீடும் கணக்கிடப்படுகிறது.

லாஸ்பியர்ஸ் சூத்திரம்

மொத்த எடை X புதியவிலை / பழையவிலை X 100 X மொத்த எடை

அல்லது

எளிதாக விதமாகக் குறிப்பிடவேண்டும் என்றால்

நுகர்வோர் விலைக் குறியீடு = நுகர்வுக் கூடையின் தற்போதைய விலை / அடிப்படை ஆண்டில் நுகர்வுக் கூடையின் விலை x 100

இந்தியாவின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் நுகர்வோர் விலைக்குறியீட்டை கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும், அகில இந்திய அளவுக்கும் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதி வெளியிடுகிறது.

இந்தியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் துறைசார் தொழிலாளர்களுக்கான மூன்று நுகர்வோர் விலைக்குறியீடுகளை வெளியிடுகிறது. அவை பின்வருமாறு

  1. ஆலைத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு CPI (IW)
  2. விவசாய தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு CPI (AL)
  3. கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு CPI (RL)
  4. உடலுழைப்பில் ஈடுபடாத நகர்ப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை (UNME) வெளியிடுவது 2010ல் நிறுத்தப்பட்டது.

ஊதியங்கள் அல்லது வருவாயை நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணால் வகுக்கும் போது, விலை உயர்வு அல்லது வீழ்ச்சியின் விளைவு நீக்கப்படும். இது பணவீக்க நீக்க செயல்முறை என்று அழைக்கப்படுகிறது, நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 'உண்மையான ஊதியத்தின் மதிப்பு' அல்லது 'உண்மையான வருவாயை’ கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.

ஊதிய ஒழுங்குமுறைக்கு நுகர்வோர் விலைக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களின் உண்மையான ஊதியத்தின் மதிப்பு குறையாமல் இருக்க அகவிலைப்படி கணக்கிடுவதற்கு நுகர்வோர் விலைக் குறியீடு பயன்படுகிறது.

பொருட்கள்/சேவைகளின் விலைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கும் ஊதியங்கள், கூலிகள், ஓய்வூதியங்கள், ஒரு நாட்டின் நாணயத்தின் வாங்கும் திறன் ஆகியவற்றின் உண்மையான மதிப்பை அளவிடுவதற்கும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பயன்படுகிறது.

பொதுவாக, நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் சில்லறை பணவீக்கத்தை குறிப்பிடும் ஒரு பெரும பொருளாதாரக் குறியீடாகவும், விலையின் நிலைத்தன்மையை ஆய்வு செய்வதற்கும், பணவீக்கத்தை கண்காணிப்பதற்கும், அதை ஒரு இலக்குக்குள் கட்டுப்படுத்துவதற்கும், தேசியக் கணக்குகளில் பணவீக்கத்தை நீக்குவதற்கும் அரசு, மத்திய வங்கியின் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனங்களும் பல்வேறு பொருட்களின் விலை மாற்றத்தைப் புரிந்துகொண்டு பணவீக்கத்தைக் கண்காணிக்க நுகர்வோர் விலைக் குறியீட்டை பயன்படுத்துகின்றன

மொத்த விலைக்குறியீடு (WPI):

பொதுவாக உள்நாட்டு சந்தையில் செய்யப்படும் மொத்த பரிவர்த்தனைகளின் விலை மாற்றங்கள் மொத்த விலைக்குறியீட்டின் மூலம் அளவிடப்படுகிறது.

ஓரு நாட்டின் மொத்த சந்தைகளில் காணப்படும் பணவீக்கம் இக்குறியீட்டின் மூலம் அளவிடப்படுகிறது. இதன் மூலம் மொத்த வர்த்தகத்திலும், உற்பத்தித் துறைகளிலிலும் ஏற்படும் விலை அலைவுகள் கண்காணிக்கப்படுகிறது. தொழில்துறை, உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் வழங்கல், வேண்டல் ஆகியவற்றின் இயக்கவியலைக் கண்காணிக்க ஆய்வாளர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர்.

இக்குறியீட்டில் ஏற்படும் உயர்வு அதிகரிக்கும் பணவீக்க அழுத்தத்தையும், வீழ்ச்சி பணவாட்டத்தையும் குறிப்பிடுகிறது.

மொத்த விலைக் குறியீட்டை அளவிடப் பயன்படும் பொருட்கள், சேவைகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடும். இது நிறுவனங்களிடையே வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் விலையை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பொதுவாக உற்பத்தி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், இடைநிலைபொருட்கள், மூலதனப்பொருட்கள் ஆகியவற்றின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது.

 இந்தியாவில் மொத்த விலைக்குறியீட்டைக் கணக்கிடுவதற்கான சமீபத்தைய அடிப்படை ஆண்டு 2011-12ஆகும். 2011-12ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 697 பொருட்கள், சேவைகளை பயன்படுத்தி இக்குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மொத்த விலைக் குறியீட்டை கணக்கிட்டு ஒவ்வொரு மாத்த்திலும் வெளியிடுகிறது.

முதன்மை பொருட்கள் மொத்த விலைக்குறியீட்டில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன. இவற்றை உணவுப் பொருட்கள் என்றும், உணவு அல்லாத பொருட்கள் என்றும் பிரிக்கலாம். உணவுப் பொருட்களில் தானியங்கள், நெல், கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, சர்க்கரை, விலங்கு எண்ணெய்கள், கொழுப்புகள் இறைச்சி மற்றும் மீன் போன்றவை அடங்கும். உணவு அல்லாத பொருட்களில் எண்ணெய் வித்துகள், கனிமங்கள், கச்சா பெட்ரோலியம் ஆகியவை அடங்கும். மொத்த விலைக்குறியீட்டின் அடுத்த முக்கிய அங்கம் வகிப்பது எரிபொருள், ஆற்றல் ஆகியவை ஆகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை இதில் அடங்கும். மொத்த விலைக்குறியீட்டின் மிகப் பெரும் அங்கமாக உற்பத்திப் பொருட்கள் உள்ளன. இவை ஆயத்த ஆடை, காகிதம், வேதிப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள், சிமெண்ட், உலோகங்கள் காகிதப் பொருட்கள், தோல் பொருட்கள், மரப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், கருவிகள், மின்சாதனங்கள், உபகரணங்கள் என பலதரப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), தேசிய கணக்குகளில் பணவீக்க நீக்கியாக மொத்த விலைக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மத்தியவங்கியின் பணக்கொள்கையையும், அரசின் வர்த்தகம், நிதி, மற்றும் பிற பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்ணயிப்பதில் மொத்த விலைக்குறியீடு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

- சமந்தா

Pin It