தற்பொழுது மொழிவழி மாநிலங்களை இரண்டாக, மூன்றாக நான்காகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ்.-சும் அதன் துணை அமைப்புகளும் மற்றும் பா.ஜ.க.வும் பேசி வருகின்றன. தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. - மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி எம்.எல்.ஏ. பேசியது அப்படியான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இக்கருத் தின் தீங்கைத் தமிழ்த் தேசி யத்தை முன்னெடுப்பவர்கள், தமிழ் நாட்டின் உரிமையை விரும்புகின்றவர்கள், தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமைக்காகப் (சுய நிர்ணய உரிமைக்காக) போராடுகின்றவர்கள், மாநில சுயாட்சியைக் கோருகின்றவர்கள் ஓரணியில் நின்று மக்களிடையே விழிப்பை ஏற்படுத்த வேண்டும்.

மொழிவழி தேசிய இனங்களின் உரிமையை ஒழித்துக் கட்டி இந்திய தேசம் என்ற ஒற்றைத் தேசத்தைக் கட்டும் முயற்சியில் இந்திய ஆளும் வர்க்கம், அவர்களுக்குச் சேவை செய்யும் இந்திய தேசிய கட் சிகள், அவர்கள் வெவ்வேறாகச் செயல்பட்டாலும் இந்திய தேசியத்தைக் காப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.

இந்திய தேசியத்தைச் கட் டமைக்கும் முயற்சியில் வட நாட்டு பார்ப்பன, பனியா ஆளும் வர்க்கங்கள் தலைமை யேற்றுள்ளன. அவை இந்தி, இந்து, இந்தியா என்ற கருத்தை ஏந்தி வருகின்றன. இவை கோட்பாட்டு வழியிலும், நடை முறையிலும் முறியடிக்கப் பட வேண்டும்.

இலங்கையில் தமிழர் தாய கத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களாகப் பிரித்து சிங்கள அரசு ஒடுக்கியது. ஜம்மு காஷ்மீரை - காஷ்மீர், லடாக் என இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு ஒடுக்கி வருகிறது. முகிழ்த்து வரும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கவே தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிப்போம் என பா.ஜ.க.வும் அதன் அடிவருடிகளும் பேசி வருகின்றனர். இதனைத் தமிழக மக்களின் துணையுடன் முறியடிக்க வேண்டும்.

1947க்கு முன் மொழிவழி தேசிய இனங்கள் தங்களது அரசுரிமைக்காகப் போராடிய போது அதனை ஏற்றுக் கொள் வதாக வாக்குறுதி அளித்த காங்கிரசு கட்சி, 1947க்குப் பிறகு மொழிவழி தேசிய இனங்களின் போராட்டத்தைப் பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒடுக்கியது. இந்தியாவில் மொழி வழி தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, பொருளாதாரம் ஆகியன ஒடுக்கப்படுகின்றன. காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந் திருப்பதா, பாகிஸ்தானுடன் சேர்ந்திருப்பதா என பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என ஐ.நா. மன்றத்தில் வாக்குறுதி கொடுத்த இந்தியா அதனைக் காற்றில் பறக்க விட்டது. தற் பொழுது காஷ்மீரை இரண்டாகப் பிரித்துச் சிதைத்துள்ளது. இதனை பா.ஜ.க. இந்தியா முழுமைக்கும் விரிவுப்படுத்த வுள்ளது. எனவே தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிப்பது என்பது தமிழ்நாட்டின் சிக்கல் மட்டுமன்று; இந்தியாவிலுள்ள எல்லா மொழி வழி தேசிய இனங்களின் சிக்கலு மாகும். இதற்கு எதிராக மொழி வழி தேசிய இனங்கள் போராட முன் வர வேண்டும்!

Pin It