tha.jayaraman'தேர்தலில் வாக்களிப்பது நம் கடமை' என்றும் 'உரிமை' என்றும் உபதேசங்கள் ஆண்டுதோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.  'ஊருக்குச் செல்ல பாதை இல்லை, செத்தால் புதைக்க சுடுகாடு இல்லை; அவை கிடைக்கும்போது வாக்களிக்கிறோம்! அது வரை வாக்களிக்கப் போவதில்லை' என்று சாமானிய மக்கள் ஒரு போராட்ட வடிவமாகத் தேர்தலைப் புறக்கணித்து, வாக்களிக்க மறுக்கிறார்கள்.

மற்றொரு புறம், அரசியல் அறிவியல் அறிந்த, வரலாறு அறிந்த, மெத்தப் படித்த, சமூக அக்கறை கொண்டவர்களும் வாக்களிக்க மறுக்கிறார்கள். பலர் 'நோட்டா' வில் தங்கள் வாக்கைப் பதிவு செய்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களும்,  புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்க மறுக்கிறார்கள்.

இவர்கள் ஏதும் அறியாதவர்கள் என்பதால் வாக்களிக்க மறுக்கிறார்களா? தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும், அவற்றுக்கான நிரந்தரத் தீர்வு பற்றியும் அறிந்து கொண்டதாலேயே வாக்களிக்க மறுக்கிறார்கள்.

தேர்தல்களில், மக்களின் ஆதரவைப் பெற நலத் திட்டங்களை ஏராளமாக அறிவித்து, அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இப்போதும் 2021சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில்,  அதிமுக 173 நலத்திட்டங்களையும்,  திமுக  500  நலத்திட்டங்களையும்  அறிவித்துள்ளன.

இக்கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிகள்தான் தமிழகத்தின் பெரிய தேர்தல் கூட்டணிகள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பேசப்படுபவை தமிழக மக்களுக்கான நலத்திட்டங்கள் மட்டுமே; அவை தமிழகத்தின் உரிமை மீட்புக்கானவை அல்ல.

அப்படி ஏதேனும் உரிமைகள் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் பேசுவதாக இருந்தால், "நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்" என்று மட்டுமே கூறப்பட்டிருப்பதைக் காணலாம். ஏனென்றால், அரசியல் கட்சிகளுக்கே தெரியும், தாங்கள் உரிமை மீட்டெடுப்பு பற்றிப் பேச முடியாது என்பது. ஏனெனில், மாநில அதிகாரம் என்பது மொட்டையடிக்கப்பட்ட ஒன்று. 

வாக்களிக்க மறுப்பதற்குக் காரணம் சனநாயகத்தின் மீதான நம்பிக்கைக் குறைவா? அல்லது தேர்தல் முறையில் அவநம்பிக்கையும் சலிப்பும் கொண்டு விட்டார்களா? அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையற்றவர்கள் மற்றும் அக்கறையற்றவர்கள் என்பதாலா? இவை எதுவும் காரணம் இல்லை.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் தீர்மானிப்பதும், செயல்படுத்துவதும் அரசாங்கம்தான் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், தமிழ்த்தேசியர்கள் வாக்களிக்க மறுப்பதை ஒரு தொடர் போராட்டமாக நடத்தி வருகிறார்கள். வாக்களிப்பதற்கு எதுவும் தேவையில்லை.

வாக்களிக்க 18 வயதும், ஓர் ஆட்காட்டி விரலும் இருந்தால் போதுமானது. ஆனால் வாக்களிக்க மறுப்பதற்கு ஏராளமான காரணங்களும், அதற்கான நியாயப்பாடுகளும் இருக்கின்றன. 

ஒரு மக்கள் (a people) தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கவும், ஆயுதங்கள் இல்லாமல் அரசை மாற்றியமைக்கவும், தங்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும், உலகில் தேர்தல் முறைதான் கைக் கொள்ளப்படுகிறது. உலகில் 167 நாடுகளில் மிகுந்த சனநாயகத் தன்மையுடன், தேர்தல் மூலம் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 

ஒரு தேசத்தில் தேர்தல் என்பது சனநாயக வழிமுறை ஆகும். அதேநேரம், பல தேசிய இனங்கள் உள்ள இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டில், அதே தேர்தல் சனநாயகம் அப்பெருந்தேசிய இனத்தின் மேலாதிக்கத்தை பிற தேசிய இனங்களின் மீது நிறுவவும், சிறிய தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அத்தகைய நாடுகளில் தேசிய இனங்களின் இருப்பும், சமத்துவமும் உறுதி செய்யப்பட வேண்டும். சாதிகள் இருப்பதையும், சமயங்கள் இருப்பதையும் ஏற்கிற இந்திய அரசியல் சட்டம், இந்தியாவில் தேசிய இனங்கள் என்ற ஒன்று இருப்பதையே ஏற்கவில்லை.

மாநில உரிமைகள் : ஆங்கிலேயர் ஆட்சியிலும் விடுதலை பெற்ற இந்தியாவிலும் 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரைமுறை இல்லாமல் வாள்முனையால் உருவாக்கப்பட்ட இந்தியா இன்றளவும் அப்படியே தொடர்கிறது. மொழிவாரி மாநிலங்கள் (1956) உருவாக்கப்பட்டாலும், அவை அதிகாரமற்ற அரசுகளைக் கொண்ட மாநிலங்களாகவே திகழ்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவில் போராட்டங்கள் மூண்டு விட்ட சூழலில், அரசியல் அதிகாரங்களில் சிறிதளவை இந்தியர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில், 1909 முதல் சட்டங்களை இயற்றத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. மின்டோ -மார்லி சீர்திருத்த சட்டம் (1909), மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டம் (1919), இந்திய அரசுச் சட்டம் (1935) ஆகியவை இந்நோக்கில் கொண்டுவரப்பட்டன. 

1920ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை உருவாக்கியது. முக்கியமற்ற சில அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்கும் அமைச்சர்களுக்கு வழங்கியது. அதை வைத்துக்கொண்டு நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் சில சீர்திருத்தங்கள் செய்தது. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாண சுயாட்சி வழங்கியது.

மத்தியில் இரட்டை ஆட்சியை உருவாக்கியது. ஒப்பீட்டளவில், 1935 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களுக்கு அதிக உரிமைகளை, அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும்கூட, ஒரு நாட்டை அடக்கி மேலாளுகை செய்வதற்கான ஒரு சட்டமாகத்தான் ஆங்கிலேய அரசு அதை உருவாக்கம் செய்திருந்தது.

மாகாணங்களுக்கு அது மாகாண சுயாட்சி அளித்திருந்தாலும்கூட, மாகாணங்களை "மதிப்பிற்குரிய முனிசிபாலிட்டி கள்" (Honourable Municipalities) என்று காந்தியார் விமர்சித்தார். அப்படி விமர்சிக்கப்பட்ட 1935ஆம் ஆண்டுச் சட்டம் சிறிய மாற்றங்களுடன் 1950ஆம் ஆண்டு இந்திய குடியரசு அரசியலமைப்புச் சட்டமாக நடைமுறைக்கு வந்தது.

அரசியலமைப்பு அவையில் இருந்த கே. சந்தானம் இவ்வாறு கூறுகிறார்: 

"பிரிட்டிஷ் அரசை வன்மையாக எதிர்த்து வந்த இந்தியத் தலைவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கத்துடன் உருவாக்கிய ஓர் அரசியல் சட்டத்தை அப்படியே அடிமைத்தனத்துடன் ஏற்றுக்கொண்ட அசாதாரணமான உண்மையை விளக்குவது சுலபமானது அன்று".

உண்மையில் 1935ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டத்தில் மாகாணங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை விட, மிகவும் குறைவாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டம்-1950இல் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

மிகக்குறைந்த அதிகாரங்களுடன் தட்டுத் தடுமாறி, தள்ளாடி, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. புழக்கடையில் நின்று பிச்சை கேட்டுக் குரல்கொடுக்கும் பிச்சைக்காரனின் நிலையில் மாநில அரசுகள் இருப்பதாக பல அரசியல் அறிஞர்கள் முன்னமே விமர்சித்து இருக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தை எழுதத் தகுதியானவர் என்று கருதப்பட்ட சர் ஐவர் ஜென்னிங்ஸ் இவ்வாறு கூறுகிறார்: 

"அதிகபட்சம் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, மத்திய அரசைத்தான் மாநில அரசுகள் தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, மாநிலங்களுக்கு அந்த அதிகாரம் கூட கிடையாது."

இந்தியாவுக்குள் ஓரளவு உரிமையுடன் வாழ்வது என்ற நோக்கில்,1974இல் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானத்தை இந்திய நடுவண் அரசு குப்பைக் கூடையில் வீசி 46 ஆண்டுகள் ஆகின்றன

இப்போது, எஞ்சி இருந்த அதிகாரங்களும் மாநிலங்களிடமிருந்து மேலும் பிடுங்கப்பட்டிருக்கின்றன. 

தமிழகம் பொருளாதார ரீதியாக சூறையாடப்படுகிறது. பண்பாட்டிலும், சமூகத்திலும் பார்ப்பனியம் மேலாண்மை செய்கிறது. அரசியல் சட்டம் குறைவான அதிகாரங்களை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரங்களும் கூட நடுவண் அரசால் பறிக்கப்படுகின்றன.

தமிழ் மொழி ஆட்சிமொழியாக, வீட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக விளங்க வாய்ப்பில்லாமல் கிடக்கிறது. இந்திய வல்லாதிக்கத்திற்குப் பயந்து தமிழினம் வாழ்கிறது. ஒரு தேசிய இனத்திற்குரிய முழுமையான உரிமை பெற்ற இனமாக தமிழினம் வாழ வேண்டும் என்ற இலக்கைக் கொண்டவர்கள், குறைபாடுள்ள இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுக்கிறார்கள். 

இந்த அரசமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரி தேர்தல் அரசியலில் பங்கேற்க மறுக்கிறார்கள். பிரிந்து போகும் உரிமையோடு கூடிய சுயநிர்ணய உரிமை (தன்னுரிமை) கோருகிறார்கள்.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை அரசியல் இலக்காகக் கொண்டவர்கள் தமிழ்த்தேசியர்கள். ஆரியத்தின் அரசியல் வடிவமாகிய இந்திய தேசியத்தை ஏற்க மறுத்து, தேசிய இனங்களின் இருப்பையே ஏற்காத இந்திய அரசியலமைப்புக்கு இணங்கி அரசியல் நடத்துவதை மறுத்து, தமிழ்த் தேசிய இனத் தன்னுரிமையை வென்றெடுக்கும் கருத்தியல் தளத்தில் அல்லது தமிழ்நாடு விடுதலையை இலக்காக வைத்துத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் செயல்படுகின்றன.

பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் தாயகங்களை வலுக்கட்டாயமாகப் பிணைத்து, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவுக்கு, விடுதலைக்குப் பின்னர் எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்டம் பல்தேசிய இனங்களின் அடையாளத்தையும்,  உரிமைகளையும் ஏற்பதாக இல்லை.

இந்திய அரசியல் சட்டம் பல்தேசிய இனங்கள் வாழும், அல்லது பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டிற்கு ஏற்றதல்ல. இந்திய அரசியல் சட்டத்தில், 'கூட்டாட்சி' என்ற சொல்கூட இல்லை; வளர்ச்சியடைந்த 18க்கும் குறையாத எண்ணிக்கையில் இருக்கும் தேசிய இனங்களின் இருப்பையும் அது ஏற்கவில்லை. 

மொழித் தேசிய இனத் தாயகங்களின் தளராத போராட்டங்களின் விளைவாக, மொழிவழி மாநிலங்கள் உருவாக்கத்தை (1953-1956) வேறுவழியின்றி இந்திய அரசு ஏற்றது. இருந்தாலும், தேசிய இனங்களின் மரபுவழி வாழ்விட நிலப்பரப்பை மொழிவழித் தேசிய இனங்களின் தாயகமாக அது கருதவில்லை. அவற்றை வெற்று நிர்வாகப் பிரிவுகள் போலக் கருதுகிறது. 

இந்திய அரசியல் சட்டம் - கூறு 3, மாநிலங்களை உடைக்கவோ, பிரிக்கவோ, வேறு மாநிலங்களுடன் சேர்க்கவோ, மாநிலமே இல்லாமல் ஆக்கவோ இந்திய நாடாளுமன்றத்துக்கு உரிமை இருப்பதாகப் பேசுகிறது. 

ஒரு மாநிலத்தையே இல்லாமல் அடிக்கும் சட்டப் பிரிவுகளை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை எந்தத் தேசிய இனமும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தமிழ்த் தேசியர்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு இணக்கமான தேர்தல் அரசியலை ஏற்பதில்லை.

திணிக்கப்படும் ஒற்றையாட்சி முறை

இந்திய அரசியலமைப்பு என்பது வடிவத்தில் கூட்டாட்சி போன்று தோற்றமளிக்கும் ஓர் ஒற்றையாட்சி ஆகும். அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் இந்திய அரசியலமைப்பை "அரைகுறைக் கூட்டாட்சி" (Quasi federal) என்று குறிப்பிடுகிறார். 

ஒற்றைக் குடியுரிமை, ஒற்றை நீதித்துறை, அவசரநிலைப் பிரகடனம் செய்ய உருவாக்கப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள், நூற்றுக்கு மேற்பட்ட ஆட்சிக் கலைப்புகள், பிற கூட்டாட்சி நாடுகளைப் போலன்றி மேலவையில் (ராஜ்யசபை) மாநிலங்களுக்குச் சமமான உறுப்பாண்மை அளிக்கத் தவறிய நிலை, நடுவண் அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சமான அதிகாரப் பங்கீடு (ஒன்றிய அரசுப் பட்டியல்100; பொதுப்பட்டியல் 61; மாநில பட்டியல் 52), மாநிலப் பட்டியலிலிருந்தும், பொதுப்  பட்டியலிருந்தும் எந்த அதிகாரத்தையும் எப்போது வேண்டுமானாலும் பறித்துக் கொள்ள உரிமை பெற்ற ஒன்றிய அரசின் மேலாதிக்க நிலை; ராஜ்ய சபை(மேலவை)யின் ஒரே ஒரு தீர்மானத்தின் மூலம் (அரசியல் சட்டக் கூறு 249), மாநில அதிகாரங்களைப் பிடுங்கிக் கொள்ளும் அதிகாரம், அவசரநிலைப் பிரகடனம் செய்து மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக ஒன்றிய அரசே சட்டம் இயற்றும் மேலாதிக்கம்; இந்திய ஆட்சிப் பணித் துறை மூலம் இந்தியா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவது, காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டதைப் போல வரலாறு முழுவதும் தனி அரசுகளாக நிலவி வந்திருக்கும் மாநிலங்களின் மாநிலத் தகுதியையும் பறித்துக்கொண்டு, ஒன்றியப் பகுதியாக மாற்றுவது… என்று வரைமுறை இல்லாத ஒடுக்குமுறைகளைச் செய்வது, தேசிய இன மொழிகளைப் புறந்தள்ளி இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்பளிப்பு செய்திருப்பது… என இந்திய அரசியல் சட்டம் தேசிய இன உரிமைப் பறிப்பு ஆவணமாகத் திகழ்கிறது.

இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அரசியல் செய்வது தன்மானமுள்ள எந்த தேசிய இனத்திற்கும் ஏற்புடையதல்ல. ஆகவே, தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறைகளை நிலைப்படுத்துகின்ற, தேசிய இனங்களுக்கிடையே சமத்துவத்தை மறுக்கின்ற இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு தேர்தல் அரசியலில் பங்கேற்க தமிழ்த் தேசியர்கள் மறுக்கிறார்கள். 

உலக அரங்கில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு தேசிய இனத்திற்கான அத்தனை இலக்கணங்களையும் கொண்டு விளங்கும் 8 கோடி தமிழ் மக்களைக் கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அரசியலை தமிழ்த் தேசியர்கள் வலியுறுத்துகின்றனர்.

படிப்பாளர்களுக்கு இக்காரணங்கள் போத மாட்டா என்றால், நடைமுறையில் மேலும் பல சான்றுகளைப் பட்டியலிடலாம்:

தமிழினம் ஓர் அடிமைப்பட்ட இனம் என்பதற்கான சான்றுகள் இவை:

 நடைமுறையிலும், தமிழ்மக்கள் அடிமைப்பட்ட மக்களாகவே இந்திய ஒன்றியத்துக்குள் இருந்து வருகிறார்கள் என்பதை இந்திய நடுவண் அரசின் தொடர் செயல்பாடுகள் உணர்த்தி வருகின்றன:

 #மீனவர்_படுகொலை: கேட்க_நாதியில்லா_அடிமைப்பட்ட_தமிழினம்:

தமிழக மீனவர்கள் 575 பேரை சிங்களக் கடற்படை தமிழகக் கடற்பரப்புக்குள்ளேயே வைத்துக் கொன்றதை இந்தியா ஏற்கிறது. ஆனால், இலங்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை. கண்டனம் கூட தெரிவித்ததில்லை.

 2021 மார்ச்சு மாதம், நாகை மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் போன்ற பகுதிகளுக்கு அருகாமையில் கடலில் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையும் கடலோரக் காவல்படையும் இது குறித்து எவ்வித அசைவும் இல்லாமல் இருக்கின்றன. தமிழக அரசு கையறுநிலையில் இருக்கிறது. மீனவர்கள் கொல்லப்பட்டால் உதவித்தொகை என்பதோடு மாநில அரசு நிறுத்திக் கொள்கிறது.

 #ஈழத்தமிழர்_படுகொலை: #அடிமைப்பட்ட_தமிழினத்தால_ஏதும்_செய்ய_முடியவில்லை:

ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரிய தமிழ்நாட்டை இந்திய அரசு எட்டி உதைத்தது. தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்தது. இனப்படுகொலை செய்த இலங்கையைப் பாதுகாக்க இன்றுவரை இந்திய அரசு துணை நிற்கிறது.

இலங்கை நடத்தியது ஓர் இனப்படுகொலை என்பதை இன்றுவரை இந்தியா ஏற்க மறுக்கிறது. சர்வதேச அரங்கில் இனப்படுகொலை செய்த இலங்கையைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

இலங்கை அரசு நடுநிலையான பன்னாட்டு நீதியாளர்களைக் கொண்டு ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இங்கிலாந்து,  ஜெர்மனி, கனடா போன்ற 6 நாடுகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சிகள் என்று அனைத்து தரப்பும் வேண்டுகோள் விடுத்த நிலையில், இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்களிக்காமல் புறக்கணித்தது.

இது ஒட்டுமொத்த தமிழகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் புறக்கணிக்கும் செயலாகும். எட்டு கோடித் தமிழக மக்களை துச்சமாக இந்திய அரசு கருதுகிறது. 

#தமிழர்கள்_என்பதாலேயே_விடுதலை_மறுக்கப்படும்_ சிறையாளிகள்:

ராஜீவ் காந்தி கொலையில் நேரடித் தொடர்பற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை 29 ஆண்டுகளாகச் சிறையிலடைத்து வைத்துள்ள நிலையில், அவர்களைத் தமிழக அரசே விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அமைச்சரவை அதற்கான தீர்மானத்தை இயற்றி ஏற்பளிப்பிற்காக தமிழக ஆளுநரிடம் (2018) அளித்தும், இன்று வரை ஆளுநர் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

சிறையில் இருப்பவர்கள் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்தாலேயே இந்திய பாசிச பா.ஜ.க வின் முகவர் ஆகிய ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்.

#அடிமைப்பட்ட_இனத்துக்கு_உள்_இடஒதுக்கீடு_செய்துகொள்ள _உரிமைஉண்டா?

தமிழக அரசு ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்த நிலையில், அதற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தாமதப்படுத்தினார். மாநில அரசு ஒவ்வோர் அசைவிலும் அவமானப்படுத்தப்படுகிறது.

#கொரோனா_முடக்கத்தில்_அடிமைகள்_மருந்து_வாங்க_அனுமதி _உண்டா?

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க, சீனாவிலிருந்து ஆய்வுக் கருவிகளை தமிழக அரசு இறக்குமதி செய்யும் நிலையில், தன் அனுமதி இன்றி அக்கருவிகளைத் தமிழக அரசு பெற்று விடக் கூடாது என்று பாஜக அரசு கருவிகளை இடைமறித்துக் கைப்பற்றி தான் விரும்பும் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. 

முடக்கக் காலத்தில் பட்டினியில் மக்கள் பரிதவித்த போது, சரக்கு-சேவை வரி என்ற பெயரில் தமிழ்நாட்டின் வரி வருவாயைக் கைப்பற்றிக் கொண்ட இந்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்குச் சேர வேண்டிய பங்கைப் பல முறை வேண்டிக் கேட்டுக்  கொண்டும்  தரவில்லை. இறுதியாக, "பெரிய மனதுடன்" 9,627 கோடி வெளியில் கடன் பெறுவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

#பாசிச_ஆண்டை_அரசு!

2014இல் பதவியேற்றது முதல் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை மொட்டை அடித்து வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தை மாற்றாமலே, ஒரு சர்வாதிகார பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்துத்துவக் கொலையாளிகளை சிறையிலிருந்து விடுதலை செய்கிறது.

 மதசார்பின்மை பேசும் சமூகச் செயல்பாட்டாளர்களை, சிந்தனையாளர்களைச் சிறையில் அடைக்கிறது. இந்துத்துவத்தை எதிர்க்கும் சமூகச் செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

 உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017 மார்ச்சு மாதத்துக்குப் பிறகு, ஒரே ஆண்டில் 1,240 பேர்  'என்கவுன்டர்'  செய்யப்பட்டுள்ளனர். இந்து ராஷ்டிரா உருவாக்கத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் காணாமலடித்து வருகிறது. உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இந்து மத வெறியர்கள் கருவிகளோடு நாடு முழுவதும் வலம் வருகின்றனர். முழு இந்துத்துவ இந்தியாவை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கத்தின் நூறாவது ஆண்டான 2025ல் படைத்து விட திட்டமிடப்பட்டிருக்கிறது.

# ஆளுநர்_என்ற_அராஜகம்!

மக்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற, ஆளுநர் என்ற ஒற்றை முகவரைக் கையில் வைத்துக்கொண்டு, தமிழக மக்களின் அத்தனை உரிமைகளையும் இந்திய ஒன்றிய அரசு முடக்கிப் போடுகிறது.

பா.ஜ.க நேரடியாக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமாகவோ, துணைநிலை ஆளுநர்கள் மூலமாகவோ பா.ஜ.க ஆளுகிறது. அம்மாநில அமைச்சர்கள் அஞ்சி ஒடுங்குகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலைத் தொட்டு வணங்குகிறார்கள். அப்படி அஞ்சாத முதலமைச்சர்களின் கால்கள் உடைக்கப்படுகின்றன. டில்லி சட்டமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வருவதாக இருந்தால், டில்லி துணைநிலை ஆளுநரின் அனுமதி பெற வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் சட்டமியற்றி விட்டார்கள். 

#மாநிலத்_தகுதியையே_ஒழித்துக்கட்டும்_சர்வாதிகாரம்!

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியை வழங்கியிருந்த இந்திய அரசியல் சட்ட கூறு 370 நீக்கப்பட்டு, காஷ்மீரின் மாநிலத் தகுதி பிடுங்கப்பட்டு, காஷ்மீரிகளின் தாயகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 2 ஒன்றியப் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு ஏற்பட்ட இந்நிலை தமிழகத்துக்கும் ஏற்படலாம். முழு இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

#மக்களால்_தேர்ந்தெடுக்கப்பட்ட_அரசுகளைக்_கவிழ்க்கும்_ கயமை!

2014இல் 7 மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக, சூழ்ச்சிகளின் மூலமாக 2018இல் 21 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. 'அரசியல் ஆபரேஷன்' என்ற பெயரில் மாநில ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது. இப்போது 17 மாநிலங்களில் ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். ஆளுநர்களின் இல்லங்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களாகச் செயல்பட்டு வருகின்றன. 

#மாநிலங்களின்_அனைத்துத்_துறைகளையும்_தன்_ அதிகாரத்துக்குக்கீழ்_கொண்டுவரும்_சர்வாதிகாரம்!

இந்திய ஆட்சிப் பணி மட்டுமின்றி, மாநில அரசுப் பணிகளுக்கும் மத்திய அரசே இனி பொதுத் தேர்வு நடத்தும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது. இனி மாநில அரசுப் பணிகளும் பாஜகவின் கையில்தான்.

'நீட்' தேர்வு அறிவிப்பு மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவ மாணவியர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத சூழலை உருவாக்கியதைப் போன்றே, இப்போது இந்தியா முழுவதும் அனைத்துக் கலை, அறிவியல் உயர் கல்விகளுக்கும் நுழைவுத் தேர்வை பாஜக அரசு அறிவித்துள்ளது. இனி ஏழை, எளியவர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும்.

இந்திய மருத்துவச் சேவைகள் (Indian Medical Services) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மொத்த சுகாதாரப் பணியும் இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இனி ஏழைகளுக்கு மருத்துவம் பெறும் வாய்ப்புகள் கிடையாது.

இந்திய நீதிப் பணித்துறை என்ற பெயரில், நீதிபதிகளாக நியமனம் பெறும் வாய்ப்பையும் பாஜக அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. அகில இந்தியப் பொது தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநிலங்களிலுள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் நியமனம் பெறுவார்கள் என்று அறிவிக்கிறது. இனி சாமானிய சாதிகளில் இருந்து நீதிபதிகள் வர மாட்டார்கள்.

பல்கலைக்கழகங்களை பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கும், இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகத்திற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், துணைவேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை ஆளுநர் நியமித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் நிரப்பப்பட இருக்கின்றன.

#இந்துத்துவ_இந்தியா_படைக்க_காவிக்_கல்விக்_கொள்கை!

கல்வித்துறை முழுவதுமே காவி மயமாக்கப்பட இருக்கிறது. எதிர்கால இந்துத்துவ இந்தியாவைப் படைக்க தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். வகுத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இனி, 30 விழுக்காடு மாணவர்கள் பதிவு குறைந்தால் பள்ளிகளை மூடி விடுவது; ஆயிரம் பேருக்குக் குறைந்தால் கல்லூரிகளை மூடி விடுவது; மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்கு இனி ”பொருத்தமான அதிகாரிகளால்” நடத்தப்படும் பள்ளித் தேர்வு;  எட்டாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் பொதுத் தேர்வு நடத்துவது; எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் மூன்று வாய்ப்புகளில் அவர்கள் தேர்ச்சி அடையா விட்டால் கல்வியை விட்டு வெளியேறி வேலைகளைக் கற்கப் போய்விட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நிபுணர் குழு அறிக்கை. 

குறைகூலித் தொழிலாளர்களை உருவாக்குவது, சமூகநீதியை ஒழித்துக் கட்டுவது, இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணித்து இந்து இந்தியாவைப் படைப்பது; ஐந்தாம் வகுப்புக்கு மேல் தமிழை ஒழித்துக் கட்டுவது; 8ஆம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்குவது. இந்து வேத, புராண, இதிகாச, சாஸ்திர, வர்ணாசிரம , சாதியச் சிந்தனைகளால் மாணவர் மண்டைகளை நிரப்பி, பார்ப்பனிய மேலாண்மையை நிரந்தரப்படுத்துவது என்று திட்டம் வகுத்து செயல்படுகிறது.

#மூலத்தை_இழந்து_சீரழிந்துபோன_தமிழக_அரசியல்!

 இதுவரை தமிழ்நாட்டின் அரசியல் என்பது ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டிருந்தது. பார்ப்பனியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியத்தை தமிழக அரசியல் ஆளுமைகள் எதிர்த்து நின்றன. ஆரியத்தை எதிர்த்து களத்தில் நின்ற திராவிடக் கட்சி தேர்தல் களத்திற்கு வந்தபிறகு தன் மூலத்தை இழந்தது. ஆரியத்தை எதிர்த்து அறிவூட்டிய அண்ணா, 1967இல் ஆரியத்துடன் உறவாடத் தொடங்கினார்.

ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தார். தமிழக தன்மான அரசியலின் சரிவு தொடங்கியது. மூலத்தை இழந்த திராவிடக் கட்சி இந்திய தேசியத்துடன் உறவாடியது. நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை தேர்தலில் கூட்டணி வைத்து இந்திய தேசியக்கட்சியான காங்கிரசுக்கு விட்டுப் கொடுப்பதும், அதிக சட்டமன்ற இடங்களைத் தனக்குப் பெற்றுக் கொள்வதும் என இந்திய தேசியக் கட்சியோடு பேரம் பேசும் ஓர் அரசியலை திமுக தொடங்கி வைத்தது. 

நடுவண் அரசில் இருந்த காங்கிரஸ் ஆனாலும், அடுத்து வந்த பாஜக ஆனாலும், ஆரியத்தை ஏற்காத, எதிர்க்கின்ற தமிழ்நாட்டின் மீது கேடுகளை அள்ளித் திணித்து வந்திருக்கின்றன. இந்திய அரசு ஊழல் மிக்க தமிழக ஆட்சியாளர்களை அச்சுறுத்தி, பணிய வைத்து, மேலாண்மை செய்து வருகிறது.

 #கங்காணிகளையும்_நீக்கிவிட்டுநேரடியாக_ஆளுகை_செய்ய_முற்படும்_RSS_பா_ஜ_க!

2014 க்குப் பிறகு தமிழக ஆட்சியாளர்களை அடிமைகளாக நடத்தி பா.ஜ.க.வின் இந்திய ஒன்றிய அரசு, தன் விருப்பப்படி ஆட்டி வைக்கத் தொடங்கியது. இதுவரை தேர்தல் மூலம் பதவியில் அமர்ந்த கங்காணிகளின் மூலமாக மாநிலங்களை ஆட்சி செய்து வந்த பார்ப்பனிய இந்திய அரசு, இப்போது, 2021ல் மாநில அரசில் சமமான பங்காளியாக இருந்து அதிகாரம் செலுத்த விரும்புகிறது. தமிழகத்தில் அதிமுக என்ற மாநில கட்சியிடம் கேட்டு 20 தொகுதிகளைப் பெற்று பாஜக போட்டியிடுகிறது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இவற்றில் தேர்தலில் வெல்லும் கட்சி எதுவாக இருந்தாலும், எதிர்காலத்தில், பாஜகவின் ஒன்றிய அரசுக்கு அஞ்சி, நடுங்கி, பணிந்து, உடன்பட்டு நடப்பார்களா அல்லது உடன்படாமல் எதிர்த்து நிற்பார்களா என்று நாம்எதையும் உறுதியாகக் கூற முடியாது.

ஆனால், அதிமுக கூட்டணியில் 20 இடங்களைப் பெற்று பாஜக போட்டியிடுவது தமிழகத்திற்கு பின்னால் விளைய இருக்கும் பெருங்கேட்டின் முன்னறிவிப்பாகும். தமிழக மண்ணில் இந்துத்துவ நச்சு செடி நேரடியாக வேர் பிடித்து வளர முயற்சிக்கிறது.

இதுவரை தமிழ்நாடு என்ற மாநிலத்தில் தமிழகக் கட்சித் தலைவர்கள் இந்திய அரசின் கங்காணிகளாகச் செயல்பட்டார்கள். இதுவரை கங்காணிகளின் மூலமாக ஆரியம் தமிழகத்தை ஆண்டது. ஆனால் இப்போது நேரடியாகவே மாநில அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆள முயற்சி செய்கிறது. 

'நடுவண் அரசு ஒன்றே போதும், மாநில அரசு என்ற ஒன்று தேவையேயில்லை' என்ற கருத்தைக் கொண்டிருக்கும் கட்சி பா.ஜ.க. மாநிலங்கள் என்பவைஅரசியல் அலகுகள்; அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றும் நோக்கத்தோடு செயல்படும் கட்சி பாஜக. இந்தியாவில மொழிவாரி மாநிலங்களை ஒழித்துக்கட்டி 200 'ஜனபதா'க்களாக (நிர்வாக அலகுகளாக) மாற்றிவிடும் திட்டத்தை வைத்திருக்கிறது. அவ்வாறு செய்ய இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது (அ.ச.கூறு 3).

#நெருங்கிவரும்_இந்து_ராஷ்டிரத்_திட்டம்

இந்தியாவை இந்து ராஷ்டிரம் ஆக அறிவித்து விட வேண்டும் என்பதற்காக, சிறுபான்மை சமயங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறது, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆசியோரின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாட்டை விட்டு விரட்டுவது அல்லது முகாம்களில் அடைத்து விடுவது என்ற கொடூரத் திட்டத்தை வைத்திருக்கிறது.

அச்சத்தினால் சிறுபான்மை மதத்தவர்கள் தம் மதத்தைக் கைவிட்டு இந்துமதத்திற்கு வருவதாக இருந்தால், அவர்களுக்கு சூத்திரத் தகுதி வழங்கி நாட்டில் வாழ அனுமதி அளிப்பதாக இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் சமூகநீதிக் கூறுகள் முற்றிலுமாக வெட்டப்பட இருக்கின்றன.

ஆரியப் பார்ப்பனிய பேரரசாக இந்தியாவை மாற்றியமைக்கும் திட்டத்துடன், மாநில அரசுகளையும் கைப்பற்றிக் கொள்ள விரிவான திட்டத்தோடு களமிறங்குகிறது பாரதிய ஜனதா கட்சி.

தமிழர்களை ஒரு தேசியஇனம் என்று ஏற்காத இந்திய அரசியல் சட்டத்தை தமிழகத் தலைவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்?

நாங்கள் ஒரு தேசிய இனம்; ஒரு தேசிய இனத்திற்கென உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதியையும், உரிமைகளையும் அளிக்கிறாயா, இல்லையா? - என்று உரிமை முழக்கத்தை எழுப்பாமல், இந்திய த்துக்குக் கட்டுப்பட்டு, மாநிலத்திற்குள் கங்காணி அரசை அமைக்க ஆளாய்ப் பறப்பது அவமானகரமானதாகும். 

இந்திய அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி கொடுத்து மாநிலத்தில் அதிகாரத்திற்கு வரக்கூடியவர் எவராக இருந்தாலும், கங்காணியாக இருக்க முடியுமே ஒழிய, தேசிய இனஉரிமை எதையும் பெற்றுவிட முடியாது.

கடந்தகாலத்தில் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து மூலக் கொள்கையை இழந்தவர் அறிஞர் அண்ணா. ஆனால், பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவர்.

1961இல் இப்படிப் பதிவு செய்தார்:

“அடிப்படைப் பிரச்சினை தமிழ்நாடா?திராவிட நாடா? என்ற அளவு, முறை, வகை என்பதுதானா? அல்ல. அடிப்படைப் பிரச்சினை இந்தியப் பேரரசு என்ற ஒன்றின் கீழ் அடிமையாக இருக்கத்தான் வேண்டுமா? அல்லது விடுபட்டுத் தனிஅரசு ஆகவேண்டுமா என்பதுதான்…”

“அடிப்படை பிரச்சினை ‘ஏக இந்தியா’ எனும் பொறி உடைக்கப்பட்டாக வேண்டும். இந்தியப் பேரரசு எனும் திட்டம் தகர்க்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் என்பதை மறத்தல் ஆகாது.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.144, 18.6.1961)

இந்திய சனநாயகம் பார்ப்பன - பனியா – இந்தி - இந்து மேலாதிக்கத்தை சனநாயக முறையிலேயே நிலைநிறுத்துகிறது. இந்திய மக்களாட்சி இந்தி மொழியின மேலாதிக்கத்தை பிற மொழி இனங்கள் மீது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பிரச்சினைக்கு உலகளாவிய அளவில் ஏற்கப்பட்ட தீர்வுதான் என்ன?

சிறியதோ பெரியதோ ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை உருவாக்கிக்கொள்ள உரிமை படைத்தது. உலக ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றின்படி தேசிய இனங்களுக்கு இவ்வுரிமை அதன் பிறப்புரிமை. ஆனால் இந்திய அரசியல் சட்டம் இந்தியாவில் தேசியஇனங்கள் இருப்பதாகவே ஏற்கவில்லை. ஆகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தேசிய இனங்கள் தங்களுக்கான உரிமைகளை இந்திய அரசியல் சட்டப்படி ஒரு போதும் நிலைநாட்டிக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது. 

#இந்திய_சனநாயகத்தின்_பெயரில்_நிலை_நிறுத்தப்படும்_சர்வாதிகாரம்:

இந்திய நாடாளுமன்றத்தில் லோக்சபை எனப்படும் கீழவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 255 பேர் இந்திக்காரர்கள். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தி மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாண்மையை நிலைநிறுத்துவதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

நாடாளுமன்றக் கீழவைக்கு தமிழகம் 39 உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறது. புதுச்சேரியில் இருந்து ஒருவர் என தமிழர்களுக்காகப் பேச 40 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழர்களான இவர்கள், 543 பேர் உள்ள இந்திய நாடாளுமன்றத்தில நிரந்தரச் சிறுபான்மையர். நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபை) உள்ள 245 உறுப்பினர்களில் 114 பேர் இந்திக்காரர்கள்.

இந்திக்காரர்கள் நிரந்தரப் பெரும்பான்மையர். 18 பேர் மட்டுமே தமிழர்கள். இவ்வாறு இந்திய நாடாளுமன்றத்தில் இந்தி மாநிலங்கள் நிரந்தர மேலாதிக்கத்தைப் பெற்று விளங்குகின்றன. மேலும், இந்துத்துவ, இந்துமதவாத உணர்வுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வரம்பு கடந்து ஒன்றுபட்டு நிற்கின்றனர். தற்சமயம் இந்திய நாடாளுமன்றக் கீழவையில் பா.ஜ.கவுக்கு 303 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே எந்தக் கட்சியின் ஆதரவையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய பாசிசச் சட்டங்களை பாஜக நிறைவேற்றி வருகிறது. 

இந்த நாசகாரச் சட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருந்து, அல்லது பலவீனமான எதிர்ப்பை மட்டும் தெரிவித்து, இந்தியச் சர்வாதிகாரத்துக்கு ஒரு சனநாயக முகமூடியை அணிவிக்கும் வேலையை மட்டுமே செய்து வர முடிகிறது.

நாடாளுமன்றச் சட்டப்படியே மாநிலங்களை மொட்டையடிக்க முடிகிறது. ஆகவே, மொழியினங்களின் உரிமைகளை வாக்குச் சீட்டு காத்து விடவில்லை. சனநாயகமான தேர்தல் முறை மூலமாகவே ஒரு இந்திமொழியினத்தின் சர்வாதிகாரத்தைப் பிறமொழியினங்கள் மீது இந்திய அரசியல் சட்டம் நிலைப்படுத்தி இருக்கிறது.

ஆகவே, தமிழ்த் தேசிய இனமாகிய எங்களுக்கு இந்தித் தேசிய இனத்துக்கு இணையாக உரிமையும், அதிகாரமும் வழங்கப்படவில்லை என்பதால் இத்தேர்தல் முறையை ஏற்க முடியாது, இதில் பங்கெடுக்க முடியாது என்று கூறுவது சரியானதே ஆகும். இந்தியாவை ஓர் உண்மையான கூட்டாட்சியாக மாற்றிவிட்டு, மாநிலங்கள் அவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான உறுப்பாண்மை அளித்துவிட்டு, தேர்தலில் பங்கேற்கக் கூறுவதே நியாயமானதாகும்.

#உலக_ஒப்பந்தங்களும்,#தமிழ்த்தேசிய_இனத்தின்_தன்னுரிமையும்

தமிழ்த் தேசிய இனம் தன் தகுதியை உணர்ந்திருக்கிறது. இதுவரை வரையப்பட்டுள்ள அனைத்து அரசியல் அறிவியல் வரையறுப்புகளின்படி, தமிழர்கள் ஒரு தேசிய இனம் ஆவர். 

முதல் உலகப்போரின்போது வெளியிடப்பட்ட அட்லாண்டிக் சாசனப்படியும், முதல் உலகப்போரின் இறுதியில் உருவாக்கம்பெற்ற பன்னாட்டு மன்ற (League of Nations) விதிகளின்படியும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் உருவாக்கம் பெற்ற ஐக்கிய நாடுகள் சாசனப்படியும் (1945), ஐ.நா மனித உரிமைப் பிரகடனப் படியும்(1948), 1966ம் ஆண்டின் பன்னாட்டுக் குடிமை மற்றும் அரசியல் உரிமை ஒப்பந்தப்படியும் (International Covenant on Civil and Political Rights, 1966), தமிழர்கள் ஒரு தேசிய இனம்; தன்னுரிமைக்குத் தகுதியானவர்கள்; தனித் தேசத்தை அமைத்துக்கொள்ள உரிமை படைத்தவர்கள்.

ஒரு தேசிய இனம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது இறையாண்மையுள்ள தேசத்தைப் படைத்துக்கொள்ளலாம். அல்லது, பிரிந்து போகும் உரிமையுடன் பிற தேசங்களுடன் சேர்ந்தும் இருக்கலாம்.

போரிட்டுத்தான் ஒரு தேசம் பிரியவேண்டும் என்பதில்லை. செக்கோஸ்லோவேகியா அமைதியாக இருநாடுகளாகப்பிரிந்து சென்றதை "வெல்வெட் டைவர்ஸ்" (Velvet Divorce) என்று குறிப்பிடுகிறோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏராளமான நாடுகள் இறையாண்மையுள்ள தேசங்களாக உருவெடுத்தன.

1991இல் ஸ்லோவேனியா (மக்கள் தொகை 20 இலட்சம்), 1993 இல் மாசிடோனியா (20 இலட்சம்), 1994இல் குரோஷியா (44 இலட்சம்), போஸ்னியா (40 இலட்சம்), செர்பியா (104 இலட்சம்), செர்பியாவிலிருந்து பிரிந்து கொசாவோ (20 இலட்சம்), மாண்டிநிக்ரோ (8 இலட்சம்) ஆகியவை உருவாயின. 

சனநாயகம் செழித்த ஐரோப்பாவில், போர்ச்சுகல் - 1 கோடி, ஸ்பெயின் - 4 கோடி, போலந்து- 4கோடி, பிரிட்டன் - 6 கோடி, பிரான்சு –6கோடி, ஜெர்மனி - 8 கோடிமக்கள் தொகை கொண்டவை. தமிழகத்தின் மக்கள் தொகை 2011இல் 7.21கோடி.

எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் தமிழகம் சிறியது அல்ல. இன்று, உலகில் தமிழகத்தைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகள் 178: உலகில் தமிழகத்தை விடக் குறைந்த நிலப்பரப்பு கொண்ட நாடுகள் 107 உள்ளன.

#தேர்தல்_அரசியலால்_தமிழினம்_ஈட்டியதும்_இழந்ததும்:

தேர்தல் என்று அறிவித்துவிட்டால், ஓடிப்போய்ப் போட்டியிட வேண்டும்; மற்றவர்கள் வாக்களித்துவிட வேண்டும் என்று கருதுவது சரிதானா?

கடந்த 70 ஆண்டுகளில் தேர்தல் அரசியலில் பங்கேற்று தமிழகம் ஈட்டியது என்ன? இழந்தது என்ன?

சுதந்திர இந்தியாவில் தமிழகம் ஏராளமாக இழந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 1935 - இல் மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதைவிட, இந்தியக் குடியரசு அரசியல் சட்டம்- 1950 மாநிலங்களுக்குக் குறைவான அதிகாரத்தையே வழங்கியது. 1950இல் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைவிட இன்று மாநிலங்கள் குறைவான அதிகாரங்களையே பெற்றிருக்கின்றன. 

ஆங்கிலேயர்கள் பாதுகாத்துக் கொடுத்த காவிரி ஆற்று நீர் உரிமையை இந்திய அரசு இப்போது பறித்தெடுத்துக் கொண்டது. காவிரி ஆற்றை நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் 'ஜல் சக்தி துறை'யின் கீழ் கொண்டுசேர்த்திருக்கிறது. அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று சட்டமியற்றி அணைகளை மாநிலங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது. நுழைவுத்தேர்வுகள் மூலம் தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிறது. இப்படி எண்ணற்ற உரிமைகளைப் பறிகொடுத்து இருக்கிறோம்.

தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர் "என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்! தமிழ்நாட்டின் பிரச்சினையெல்லாம் தீர்ந்து போகும்!" என்று கூறினால், அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்! இதைக் கேட்டு ஆரவாரம் செய்வது எவ்வளவு பெரிய அறியாமை!

#தமிழகக்_கட்சிகள்_உரிமை_மீட்புக்கு_என்ன_திட்டம்_வைத்திருக்கிறார்கள்?*

தேர்தலில் போட்டியிட்டு மாநிலத்தில் ஆட்சியமைக்கும் திமுக, அதிமுக கட்சிகளிடையே நலத்திட்டங்கள் வழங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டின் கடன் 5.70 இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு வட்டி கட்டுவதே பெரும் பிரச்சினை. ஆனாலும் இலவசத் திட்டங்களின் விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டின் உரிமை எதுவுமே மீட்டெடுக்கப்படவில்லை. அனைத்து உரிமைகளும் இந்திய நடுவண் அரசால் பறிமுதல் செய்யப்படுகின்றன. உரிமை மீட்பு பற்றிய திட்டம் எந்தக் கட்சியிடமும் இல்லை.

இந்திய அரசியல் சட்டம் வர்ணாசிரமத்தை, சாதியத்தை ஏற்கிறது. சமூகங்களுக்கிடையே இழிவையும், ஏற்றத் தாழ்வையும் உத்தரவாதப்படுத்துகிறது. வர்ணாசிரமத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் இன்றளவும் தீர்ப்புகளை வழங்கி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் இந்திக்கும், இந்தி தேசிய இனத்துக்கும் நிரந்தர மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

மாநிலங்களுக்கு எந்த உரிமையும் நிலையல்ல என்பதைப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கிறது. அரசியல் சட்டக் கூறு 356 என்ற கொடுவாள் மாநில அரசுகளின் தலைக்குமேலே தொங்கிக் கொண்டே இருக்கிறது. எதன் அடிப்படையில் தேர்தலில் ஈடுபடுவது? பதவி கிடைக்கும், பணம் கிடைக்கும், புகழ் கிடைக்கும் என்பதைத் தவிர, இத்தேர்தலில் பங்கேற்பதில் வேறு எது கிடைக்கும்? 

மாநில முதல்வராக்கிவிட்டால், தமிழினத்தின் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நெஞ்சாரப் பொய் கூறலாமா?

 இன ஒடுக்குமுறையை, சுரண்டலை, தொடரும் தீண்டாமையை, சாதிய வன்மத்தை ஒழிக்க, அரசியல் சட்டம் பத்திரப்படுத்தும் வெகுமக்களின் சூத்திர, பஞ்சமர் பட்டத்தை ஒழிக்க, அரசியல் அமைப்பை மாற்ற எந்த கட்சி என்ன திட்டத்தை வைத்துள்ளது? தேர்தல் எதிர்ப்புக்குரல் தேசிய இன விடுதலைக்குரலாக எதிர்காலத்தில் மாறும். 

"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" "இதுதான் நம் விதி" என்று கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வழியற்ற கிராமத்துப் பெண்கள் வாழ்க்கையை ஓட்டுவது போல, பாரபட்சமான இந்திய அரசியல் சட்டத்தை "இதுதான் நமக்கான அரசியல் சட்டம்; இனி வேறு வழியில்லை" என்று ஏற்றுக்கொண்டு, அந்த அரசியல் முறைமைக்குள்ளேயே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருப்பதாக அனைவரையும் நம்பவைத்து, தனக்கான செல்வாக்கான அரசியல் வாழ்வை உருவாக்கிக்கொண்டு, பிழைப்புவாத அரசியல் செய்து காலத்தை ஓட்டுவதைத் தமிழ்த்தேசியர்கள் ஏற்க முடியுமா? தங்களுடைய தேர்தல் மறுப்பை தேசியஇன விடுதலைப் போராட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதித்தான், தமிழ்த்தேசிய அரசியலாளர்கள் வாக்களிக்க மறுக்கிறார்கள்!

#தீர்வு_நோக்கி

கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில், தமிழ்த் தேச இறையாண்மை அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசிய இனத்துக்கு இருக்கிறது. எந்தவொரு தேசிய இனமும் தமிழ்த் தேசிய இனத்துக்கு மேலேயும் இருக்க வேண்டியதில்லை; கீழேயும் இருக்க வேண்டியதில்லை. ஆனால், இந்தித் தேசிய இனம் இங்கே மேலாதிக்கம் செய்கிறது. இந்தியும் சமஸ்கிருதமும் மேலாதிக்க மொழிகளாக இருக்கின்றன. ஆகவே, சமமற்ற நிலை சுமத்தப்பட்டிருப்பதால், தேர்தல்களில் பங்கேற்க மறுக்கிறது.

பட்டினி கிடந்தவன் ஓடிப்போய் பந்தியில் உட்கார்வதைப் போல, நாம் ஓடிப்போய் தேர்தல் குட்டைக்குள் குதிக்க முடியாது. உலகின் ஏனைய இனங்களைப் போல எம் இறையாண்மையும் ஏற்கப்பட வேண்டும். பதவிக்காகவும், பணத்துக்காகவும் பிழைப்புவாத அரசியலை மேற்கொள்ளாமல், தமிழ்த்தேச இறையாண்மை அரசியலைக் கைக்கொள்ளத் தமிழகத் தலைமைகள் முன்வரவேண்டும். அதில்தான் தமிழ்த் தேசியஇனத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு அடங்கியுள்ளது.

பேராசிரியர் த. செயராமன்

[நெறியாளர், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்]

Pin It