senior journalist jawaharஇரா.ஜவஹர் அவர்களுக்கு செவ்வணக்கம்...

பலப் புத்தகங்கள் நம்மை மிரளச் செய்யும், படித்தால்
மூச்சு முட்டும், கண்ணைச் சுற்றும், நா தள்ளும்
பலப் புத்தகங்கள் நம்முடன் மல்லுக்கு நிற்கும்
வாசிப்பையேத் தொடர் போராட்டமாக்கும்
பலப் புத்தகங்கள் நம்மைப் பரிகசிக்கும்
என்னை வாசிக்க உனக்குத் தகுதி உண்டா
எனப் பகடி செய்யும்
எழுத்திற்கும் எளிய வாசகனுக்கும் இடைவெளியைப்
பெரிதாக்கி அவனைத் தாழச் செய்யும்
இருண்மையையே எழுத்தின் உச்சமெனக் கொண்டாடும்...

ஜவஹரின் புத்தகங்களை நீங்கள் அறிவீர்களா அன்பர்களே
அவை வாசகரை கரங்கோர்த்து அழைத்துச் செல்லும்
எளிய மக்களால் எதையும் அறிய இயலும் என ஊக்கப்படுத்தும்
அவர் எழுத்து நமக்கு நன்னம்பிக்கை ஊட்டும்....
ஜவஹரின் புத்தகங்கள் நம்முடன் நேர்படப் பேசும்
அன்பர்களே அவைக் கதை பேசும்...

மாயமந்திரக் கதைகளா அவை? அல்ல அல்ல
அள்ள அள்ளக் குறையாத மார்க்சிய ஆய்வுக் கதைகள் அவை
மார்க்சியத்தின் கதை சொல்லி ஜவஹர்...
இடப்புறம் சாய்ந்தாடும் ஜவஹரின் எழுத்துக்கள் மார்க்சியம் பாடும்
அவரது பெருமையைப் பரைசாற்ற
"கம்யூனிசம் நேற்று இன்று நாளை" ஒன்றே போதும் அன்பர்களே!
மறக்கடிக்கப்பட்டவற்றை மீண்டும் மதிக்கவைத்தார்
மறைக்கப்பட்ட உண்மைகளுக்கு ஒளி காட்டினார்...

அந்நூலின் தாக்கத்தில் நான் அவரைத் தலைவா
எனத் தொண்டனிட்டேன்...
அவரோ தோழா எனத் தோள் கொடுத்தார்
என் பேராசானே என நான் பணிந்தேன்
அவரோ மகளே என எனை வரித்துக் கொண்டார்...

மகளிர் தினம் உண்மை வரலாற்றில்
பெண்ணிய விழுமியத்தின் வேர்களை அவர்
கண்களின் மூலம் நாங்கள் கண்டு கொண்டோம்
கலை, இலக்கியம், பண்பாடு, விஞ்ஞானம்
என அனைத்துப் பெருமைகளையும் அபகரித்த ஆதிக்கவர்க்கம்
மகளிர் தினத்தையும் தனதாக்கி முதலாளித்துவப்
புதைகுழியில் அமிழ்த்தியபோது,
அதன் முட்கொடிகளில் சிக்கி மூர்ச்சையாகி,
அதன் குப்பைக் கூளங்களில் குற்றுயிரானப் பெண்ணியத்தை,
அந்தக் கற்பனைக் கதம்பக் கூளங்களிலிருந்தும்,
அதைக் கட்டுண்ட எண்ணற்ற முடிச்சுகளிலிருந்தும்
விடுவித்து உயிர்ப்பித்து, புத்தொளி பாய்ச்சி
உண்மையை மிளிரச் செய்த நம் ஜவஹர்
பெரியாரின் புதல்வர் அல்லவா!

பெற்றோர் துணைமாலை, ராமசாமியின் அன்பு வெள்ளத்தில்
திளைத்த அவனுக்கு வறுமை ஒரு பொருட்டாகுமா!
அவர்கள் அளித்த வண்ணப் பென்சில் பெட்டகத்தை
தன் பொக்கிசமாய்க் கண்ட சின்னஞ்சிறுவன் ஜவஹர்
அன்றரிந்திருப்பானா வரைவுகோல் தான் என்றென்றுக்கும்
தனக்கானப் பேராயுதம் என்பதை,
தான் ஒரு மார்க்சியக் கதை சொல்லி என்பதை....
முழு நேரக் கட்சி ஊழியனாக இரவு முழுதும் ஜவஹர்
சுவரில் ஸ்டென்சில் அடித்த நாட்களும், சுவரெழுத்து
எழுதிய நாட்களும் ஏராளம்....

வசந்தம் வரும் இனிய இதழ்களை வெளியிட்டவர்....
தொடர் போராட்டங்களால் சிறையைத் தொட்ட அவர்
பாதங்கள் மாணவனாக கல்லூரி வாசலைத் தொடவில்லை....
அதனால் தானோ என்னவோ பகட்டுணர்வோ,
பாசாங்கோ அறியாது அவர் எழுத்து...
போதனையின் சாயலோ, மேட்டுமையின் மேதமையோ
அவர் எழுத்துக்களில் காணக் கிடைக்காது...
எளிமையாய், தெளிவாய் வளமான உண்மையை
இனிதாய் சுருங்கச் சொல்லி நம் இதயத்தைத்
தொடுவதே அவர் எழுத்தின் தனிச்சிறப்பு...
கல்லூரிப் படிப்புடன் தன் வாசிப்பை வதம் செய்பவர்கள்
மத்தியில் வாசிப்பையே வரமாக வரித்துக் கொண்டு
இன்றும் புத்திளம் ஆய்வு மாணவனாகத்
தன் பணியைத் தொடரும் இந்த மார்க்சிய அறிஞரை
செதுக்கிப் பண்படுத்தியது படிப்பும் பட்டறிவுமே...
தொழிலாளர்களின் இன்னுயிர்த் தோழராய்
தொழிற்சங்கத் தலைவராய் உழைத்தவர்
நம் அருமைத் தோழர் ஜவஹர்...

கட்சி ஜவஹரை விடுவித்த போதும்,
தடம் மாறாமல் தொடர்ந்து தன்
ஆசான்களின் வழியில், அமைப்பிற்கு
வெளியிலிருந்தும் அக்கறையுடன் அமைப்பிற்காக
செயல்படும் அவரல்லவா மார்க்சியவாதி...
வாசிப்பையும் எழுத்துப் பணியையுமே
தன் முதன்மைக் கொண்டாட்டங்களாக்கிக் கொண்ட
அவர் நீண்ட நெடியக் கரும்புத் தோட்டங்களாக
விரியும் மார்க்சியத்தைத் தன் எழுதாயுதத்தால்
சிறு சிறு துண்டமாக்கி வாசகர் பருகச் சாராய்த் தருபவர்....
தான் உள்வாங்கிய அமுதத்தை விண்ணமாக்கி
வாசகர் சுவைத்துத் திண்ணக் கொடுப்பவர்...
மார்க்சியக் காட்டின் மலைத் தேனி அவரின்
எழுத்துக்கள் உழைக்கும் வர்க்கத்தின் ராயல் ஜெல்லி...
மார்க்ஸின் புதல்வர்கள் பலருள் எங்களவராகத்
தானும் வளர்ந்து எங்களையும் வளர்த்தெடுக்கும்
தந்தையல்லவா ஜவஹர்....

மார்க்ஸுக்கு பொருளாதாரத்தின் மீது தீராத காதல்...
ஜவஹருக்கோ பொருளாதாரப் பேராசிரியை மீது தீராத காதல்...
இயக்கவியலின் வழியில் பரிபூரணத்தில் நம்பிக்கையற்ற அவர் தான்,
தன் பூரணத்தின் மீது பரிபூரண நம்பிக்கையோடு காதல் கொண்டவர்...
அவரின் தனித்துவமிக்கப் படைப்புகள் ஏராளம்,
அதில் டார்வினையும், பாலுவையும் தவிர
மற்றவை யாவும் உழைப்பாளிகளுக்கே சொந்தம்...
அவர் பெற்றெடுக்காத செல்லக் குட்டிகள் அவருக்கு ஏராளம்...
இவர் ஒருவருக்காகவே 365 1/4 நாட்களையும்
தந்தையர் தினமாகக் கொண்டாடலாம் அன்பர்களே...

இதற்கு மேல் நீட்டி முழக்கினால்
எம் தந்தை சங்கடப்படுவார்...
மார்க்சியவாதியாக என்னைக் கடிந்து கொள்வார்
என்பதால் இன்று இத்துடன் விட்டு வைக்கிறேன்
நாளைக்கு எனக் கொஞ்சம் மீதம் வைக்கிறேன்
அன்பர்களே.

- சமந்தா

Pin It