transfer pricingமாற்று விலை என்றால் என்ன? மாற்று விலை என்பது பொதுவாகத் தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையேயான சரக்கு, சேவைப் பரிவர்த்தனைகளின் விலைகளைக் குறிக்கிறது,

பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மாற்று விலைகளாகும். ஒன்றோடொன்று சார்புடைய நிறுவனங்கள், கூட்டு நிறுவனம், பன்னாட்டு நிறுவனம் ஆகியவை தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் விலைகளையும் இது குறிக்கிறது. இது ஒன்றோடொன்று தொடர்பில்லா நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் நிலைமைகளிலிருந்து வேறுபட்ட நிலைமைகளின் கீழ் நடைபெறலாம்.

மாற்று விலையானது ஒரு நிறுவனம், தன்னுடைய துணை நிறுவனங்களுக்குள்ளோ அல்லது பொதுவாகக் கட்டுப்படுத்தப்படும் அதே நிறுவனங்களுக்கிடையே பரிமாறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளை மாற்றுவதை அனுமதிக்கிறது. மாற்று விலை என்பது ஒரு கணக்கியல் நடைமுறையாகும், இது ஒரு நிறுவனத்தின் ஒரு பிரிவு மற்றொரு பிரிவிற்கு எந்த விலையில் பொருட்கள், சேவைகளை வழங்குகிறது, எந்த விலையில் அதனிடமிருந்து பொருட்கள், சேவைகளை வாங்குகிறது என்பதைக் குறிக்கிறது. மாற்று விலை நடைமுறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மாற்று விலை என்பதை உள்விலை / அக விலை என்றும் குறிப்பிடலாம். இது நிறுவனத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் வெளிப்புற விலை அல்லது சந்தை விலையிலிருந்து வேறுபடலாம்.

மாற்று விலைக்குப் பின்வரும் உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம். ரொட்டி தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு ‘ம’ தானியத்திலிருந்து ரொட்டி மாவு தயாரிக்கிறது. இரண்டாவது பிரிவு ‘ர’ ரொட்டி தயாரிக்கிறது. ‘ம’ பிரிவு ரொட்டி மாவை கிலோ 5 ரூபாய் விலைக்கு ‘ர’ பிரிவுக்கு விற்கிறது. ‘ம’ பிரிவு ரொட்டி மாவை கிலோ 40 ரூபாய் விலைக்கு வெளிச்சந்தைக்கு விற்கிறது. இதில் ’ம’ பிரிவு, ‘ர’ பிரிவுக்கு விற்ற கிலோ 5 ரூபாய் விலை மாற்றுவிலை ஆகும். இது சந்தை சக்திகளால் நிர்ணயிக்கப்படவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையேயான வணிகப் பரிவர்த்தனைகள், ஒன்றை ஒன்று சாராத இரு நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனை உறவுகளை வடிவமைக்கும் அதேச் சந்தை சக்திகளுக்கு உட்பட்டதாக இருக்காது. ஒன்றோடொன்று தொடர்புடைய நிறுவனங்களில் ஒரு தரப்பினர் மற்றொன்றுக்குப் பொருட்கள் அல்லது சேவைகளை எந்த விலைகளுக்குப் பரிமாறிக் கொள்கின்றனவோ அந்த விலையே ”மாற்று விலை" என்று அழைக்கப்படுகிறது. இது அந்தப் பொருள் அல்லது சேவையின் உள்ளார்ந்த மதிப்புடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், சந்தை மதிப்பிலிருந்து வேறுபடலாம்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குட்பட்ட பல்வேறு துணை நிறுவனங்களிடையே அதனதன் பங்களிப்பிற்கு ஏற்ப இலாபங்களை (வட்டி மற்றும் வரி செலுத்துவதற்கு முந்தைய வருவாய்) தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொள்வதற்கான ஒரு முறையாக மாற்று விலையைப் பயன்படுத்துகின்றன.

ஒரு பெரிய கூட்டு நிறுவனம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின், பிரிவுகள் ஒவ்வொன்றும் அதனதன் சொந்த இலாபத்திற்குப் பொறுப்பாகும், பிரிவுகள் பெரும்பாலும் வெளி வாடிக்கையாளருடன் பரிவர்த்தனை செய்வது போல தங்களுக்குள்ளும் பரிவர்த்தனை செய்து கொள்கின்றன. உள் பரிவர்த்தனைகள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத்தைப் பாதிக்கவில்லை என்றாலும், அவை தொடர்புடைய உட்பிரிவுகளின் இலாபத்தைப் பாதிக்கின்றன. அதிக மாற்று விலையானது வாங்கும் பிரிவின் வருவாயைக் குறைத்து விற்பனைப் பிரிவின் வருவாயைக் கூடுதலாக்கும்; குறைந்த மாற்று விலையானது விற்பனைப் பிரிவின் வருவாயைக் குறைத்து வாங்கும் பிரிவின் வருவாயைக் கூடுதலாக்கும்.

மாற்று விலை நிர்ணயிப்பு சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும் செயல்முறை என்ற போதும் நிறுவனங்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. நாடுகளுக்கிடையே காணப்படும் வரி வேறுபாடுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் தவறான முறையில் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தவறாகப் பயன்படுத்தி மாற்று விலையின் மூலம் “சட்டப்பூர்வமாக” கூடுதல் இலாபம் பெறுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) தாய் நிறுவனத்திற்கும் அதன் பல்வேறு துணை நிறுவனங்களுக்குமிடையே வருவாய்களை ஒதுக்கீடு செய்வதற்கு மாற்று விலையிடல் முறையைப் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனங்கள் இந்த நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி தங்கள் வரி செலுத்த வேண்டிய வருவாயின் அளவை மாற்றுவதன் மூலம் அவை செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வரியின் அளவைக் குறைக்கின்றன. மாற்று விலைப் பொறிமுறையை நிறுவனங்கள் வரி மோசடி செய்வதற்கான வழிமுறையாகப் தவறாகப் பயன்படுத்துகின்றன.

எல்லைக்குட்பட்ட அல்லது எல்லை தாண்டிய உள்குழுப் பரிவர்த்தனைகளில் உருவமுள்ள, அருவமான சொத்து, சேவைகள் மற்றும் கடன்களின் பரிமாற்றங்கள், நிறுவனத்தின் காப்புரிமைகள், வர்த்தக குறியீடுகள், அறிவுசார் சொத்துரிமைகள் என இவை அனைத்துக்குமே மாற்று விலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக ஒரு நிறுவனத்துடன் இணைந்த வெளிநாட்டு உற்பத்தி அமைப்பிடமிருந்து வாங்கப்படும் பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் வரிக்குட்பட்ட வருவாயைக் குறைக்கலாம். நிறுவனம் அதன் வெளிநாட்டுத் துணை நிறுவனங்களிடம் தனியுரிமத் தொழில்நுட்பம் அல்லது ’பிராண்ட்’ பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமக் கட்டணங்களைக் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நிறுவனத்தின் வரிக்குட்பட்ட வருவாயைக் கூடுதலாக்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவிலை நிர்ணயம் குறித்த கை நீளக் கொள்கை (Arm’s length principle) வழிகாட்டுதல்களை பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) வழங்கியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் மாற்றுவிலை நீதித்துறை மறுஆய்வு மற்றும் பிற பூசல் தீர்வு வழிமுறைகளுக்கு உட்பட்டவை. சர்வதேச வரிச் சட்டங்கள் பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) மற்றும் அதன் மதிப்பாய்வுக்கு உட்பட்ட தணிக்கை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை தணிக்கை செய்யப்படுகின்றன.

ஒரு நிறுவனம் தொடர்புள்ள நிறுவனத்துடன் செய்யும் பரிவர்த்தனைகளை, அது தொடர்பில்லா நிறுவனங்களுடன் செய்யும் பரிவர்த்தனைகளைப் போலவே செய்ய வேண்டும் என்பதே கை நீளக் கொள்கை. நிறுவனங்களுக்குள்ளேயான பரிவர்த்தனைகள், நிறுவனங்களுக்கு வெளியேயான பரிவர்த்தனைகளைப் போல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் மாற்றுவிலைகள் கரக் கொள்கைக்குட்பட்டு நிர்ணயிக்கப்படுகிறதா, இல்லையா என்பது எப்படிக் கண்டறியப்படுகிறது?

ஒரு நிறுவனத்தின் மாற்றுவிலையை அது தொடர்பில்லாத நிறுவனத்துடன் செய்யும் பரிவர்த்தனை விலையுடன் ஒப்பிட்டு இரண்டு விலைகளும் எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பது கணக்கிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் மாற்றுவிலையுடன் சந்தைபடுத்துவதற்கான செயல்பாடுகள், அபாயங்கள் ஆகியவற்றிற்கான செலவுகளைச் சேர்க்கும் போது கிடைக்கும் விலை, தொடர்பில்லாத நிறுவனத்திற்கான விலையுடன் பொருந்தி வருகிறதா என சோதனை செய்யப்படும். அவ்வாறு சோதிக்கும் போது இரண்டு விலைகளும் ஏறத்தாழ சமமாக இருக்குமானால் கரக் கொள்கைக்குட்பட்டு மாற்றுவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும், இரண்டு விலைகளுக்குமிடையே அதிக வேறுபாடுகள் இருக்குமானால் கரக்கொள்கைக்குட்பட்டு மாற்று விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் அறிய முடியும்.

மாற்றுவிலைகளைப் பயன்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு வரிமோசடியில் ஈடுபடுகின்றன?

ஒரு பன்னாட்டு நிறுவனம் அதன் உள் விலைகளைச் சரிசெய்வதன் மூலம் இலாபத்தை வரிப் புகலிடங்களுக்குக் கடத்த முடியும், அங்கு அவர்கள் வரிக் குறைப்பு அல்லது வரி விலக்கு பெற இயலும், மேலும் செலவுகளை அதிக வரி கொண்ட நாடுகளுக்குக் கடத்தலாம், அங்கு அவை வரி வருவாயிலிருந்து கழிக்கப்படுகின்றன. இதன் மூலம் வரி வருவாய் ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு வரிப் புகலிடத்திற்கு மாற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் பணக்கார உரிமையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

நிறுவனங்கள் அதிக வரி நிலவும் நாடுகளில் உள்ள தங்கள் பிரிவுகளிடமிருந்து அதிக விலையில் விற்பதன் மூலமோ அல்லது அவற்றிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்குவதன் மூலமோ அவற்றின் வருவாய், இலாபத்தைக் குறைக்கின்றன. அதே சமயம் குறைந்த வரி நிலவும் நாடுகளில் உள்ள பிரிவுகளிடமிருந்து குறைந்த விலையில் விற்பதன் மூலமோ அல்லது அவற்றிடமிருந்து அதிக விலையில் வாங்குவதன் மூலமோ அவற்றின் வருவாய், இலாபத்தை அதிகரிக்கின்றன. அதிக வரி உள்ள நாடுகளில் மாற்று விலைகளின் மூலம் நிறுவனங்கள் தங்கள் வரவைக் குறைத்து, செலவை அதிகரித்துக் காட்டி, வரிப் புகலிடங்களுக்கு இலாபத்தைக் கடத்த முடிகிறது.

குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட நாடுகளுக்கு மாற்றப்படும் பொருட்களை அதிக விலைக்கு உயர்த்துவதன் மூலம் அதிக வரியுள்ள நாடுகளின் நிறுவனங்கள் வருவாயையும், பெருநிறுவன வரிகளையும் குறைத்து அதிக இலாபங்கள் பெறுகின்றன.

உதாரணமாக இந்தியாவில் உள்ள ‘’அப்பு’’ என்ற பொம்மை நிறுவனம் 20 ரூபாய் செலவில் பொம்மை தயாரித்து அதே 20 ரூபாய் விலைக்கு மொரிசியஸில் உள்ள “மிஷா” என்ற அதன் துணை நிறுவனத்திற்கு விற்கிறது. “மிஷா” வாடிக்கையாளருக்கு பொம்மையை 300 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவில் மொரிசியஸை விட நிறுவன வரி அதிகம். ஆகவே இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் விற்பதன் மூலம் அப்பு தன் வருவாயைக் குறைத்து வரிவிதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறது. மொரிசியஸில் அதிக விலைக்கு விற்பதால் இலாபமும் அதிகரிக்கும் ஆனால் அங்கே வரி குறைவு என்பதால் கூடுதல் வருவாய் பெற முடியும்.

மாற்றுவிலை குறித்து வரி நீதிக்கான வலையமைப்பு (Tax justice network) கூறும் விளக்கம் பின்வருமாறு:

மாற்று விலை நிர்ணயம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் நாடுகளில் இருந்து இலாபத்தை மாற்றுவதற்கும், செயற்கையாக அதிக விலைக்குப் பொருட்களையும் சேவைகளையும் விற்கும், வரிப் புகலிடத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு மாற்றும் ஒரு நுட்பமாகும். வேறொரு நாட்டில் உள்ள அதன் துணை நிறுவனத்திடமிருந்து உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வரிப் புகலிடத்தில் உள்ள அதன் துணை நிறுவனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உதாரணமாக ஒரு பேனாவை 200 டாலருக்கு விற்கும் வரிப் புகலிடத்தில் உள்ள துணை நிறுவனத்திடமிருந்து பேனாப் பெட்டிகள் வாங்குவதன் மூலம், பன்னாட்டு நிறுவனம் தனது இலாபத்தை நாட்டை விட்டு "நகர்த்துகிறது".

மற்றொரு உதாரணம்: ஈக்வடாரில் வாழைப்பழம் உற்பத்தி செய்ய ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு $100 செலவாகும் என்று வைத்துக் கொள்வோம். அது ஈக்வடாரில் எந்த இலாபமும் இல்லாமல் $100க்கு வரிப் புகலிடத்தில் அமைந்துள்ள ஒரு துணை நிறுவனத்திற்கு வாழைப்பழப் பெட்டியை விற்கிறது. வரிப் புகலிடத்தில் உள்ள துணை நிறுவனம் உடனடியாக அந்தப் பெட்டியைப் போலந்தில் உள்ள ஒரு துணை நிறுவனத்திற்கு $300க்கு விற்று, வரிப் புகலிடத்தில் $200 இலாபம் ஈட்டுகிறது. அந்தப் போலந்துத் துணை நிறுவனம் ஒரு பேரங்காடியில் $300 உண்மையான சந்தை விலையில் வாழைப்பழப் பெட்டியை விற்கிறது, போலந்தில் செய்யப்படும் விற்பனையில் எந்த இலாபமும் இல்லை. இதன் விளைவாக, பன்னாட்டு நிறுவனம் ஈக்வடாரிலும், போலந்திலும் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் வரிப் புகலிடத்திற்கு மாற்றப்பட்ட இலாபத்திற்கும் $200 வரி விதிக்கப்படாது.

இவ்வாறு, பன்னாட்டு நிறுவனங்கள் வரி செலுத்தும் பொறுப்பைத் தவிர்த்து, தாங்கள் செயல்படும் நாடுகளுக்குப் பங்களிக்காமல் மோசடி செய்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு அல்லது வரியைத் தவிர்ப்பதற்குக் கடைப்பிடிக்கும் மிகவும் பொதுவான வழி, அவர்கள் பெறும் இலாபத்தை அவர்கள் உண்மையாக உற்பத்தி, வணிகம் செய்யும் நாடுகளிலிருந்து வரிப் புகலிடங்களுக்கு மாற்றுவதன் மூலம்தான். இதனால் அந்நிறுவனம் உற்பத்தி, வணிகம் செய்யும் நாட்டில் அதன் இலாபத்தைக் குறைத்துக் காட்ட முடிகிறது என்பதால் குறைவாகவே வரிசெலுத்துகிறது அல்லது வரி செலுத்தவே தேவை இல்லாமற்போகிறது. மேலும் நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்ட இலாபத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டாக, ஒரு பன்னாட்டு நிறுவனம் அயர்லாந்தில் ஏட்டளவில் மட்டுமே ஒரு போலி நிறுவனத்தை அமைத்து, அதன் வர்த்தகச் சின்னத்தின் (brand) உரிமையாளராக அதனை மாற்ற முடியும். போலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனத்தின் பிற துணை நிறுவனங்களிடம் (அதாவது மற்ற நாடுகளில் சேவைகளை விற்கும் நிறுவனங்களிடம்) வர்த்தக சின்னத்தைப் பயன்படுத்த அதிக உரிமக் கட்டணம் வசூலிக்கிறது. இது நிறுவனங்களுக்கு அவை வரிப் புகலிடத்திற்கு செலுத்த வேண்டிய செலவுகளைத் தோற்றுவிக்கிறது, திறம்பட அவர்களின் இலாபங்களைக் குறைத்து வரிப் புகலிடத்திற்குக் கடத்துகிறது.

நிறுவனங்கள் சர்வதேச அளவில் பரிமாறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இறக்குமதி வரிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒன்றோடொன்று தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கான தங்கள் செலவையும் குறைக்கின்றன.

அமேசான், மைக்ரோசாஃப்டு, கூகுள், மெட்டா, அடோப், ஏஒஎல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மாற்று விலைகளில் சாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி பல மில்லியன் முதல் பில்லியன் டாலர்கள் வரையிலான வருவாயை வரிக் கடப்பாடுகளிலிருந்து விடுவித்து இலாபத்தைப் பெருக்கியுள்ளன. உள்நாட்டு நிறுவனங்களும் மாற்று விலைகளில் சாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன.

வரி மோசடிக்கான நிஜ உலக உதாரணங்கள் பின்வருமாறு

  1. கூகுள்:

அக்டோபர் 2010இல் ப்ளூம்பெர்க் நிருபர் ஒருவர் எழுதியுள்ளார்: "டபுள் ஐரிஷ்" மற்றும் "டச்சு சாண்ட்விச்" போன்ற பெயர்களில் அழைக்கப்படும் மாற்றுவிலை விளையாட்டுகள் மூலம் மூன்று ஆண்டுகளில் எப்படி கூகிள் இங்க் நிறுவனம், தனக்கான வரிகளில் $3.1 பில்லியனைக் குறைத்தது என்றும், இறுதியில் வரிவிகிதம் 2.4 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

கூகுள் நிறுவனம் சிங்கப்பூரில் ஒரு மண்டலத் தலைமையகத்தையும் ஆஸ்திரேலியாவில் துணை நிறுவனத்தையும் கொண்டுள்ளது. ஏனென்றால் சிங்கப்பூரும் ஒரு வரிப் புகலிடமாகச் செயல்படுகிறது. ஆஸ்திரேலியத் துணை நிறுவனம் அதன் பயனர்களான ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தும் சேவைகள் வழங்குகிறது. ஆஸ்திரேலியத் துணை நிறுவனம் உலகளவில் கூகுளுக்கு ஆய்வுச் சேவைகளும் வழங்குகிறது. 2012-13 நிதியாண்டில், கூகுள் ஆஸ்திரேலியா $358 மில்லியன் வருவாயில் சுமார் $46 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது. $4.5 மில்லியன் வரிக் கடன் பெற்ற பிறகு, அது செலுத்த வேண்டிய கார்ப்பரேட் வரியின் மதிப்பு $7.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்.

ஆஸ்திரேலியாவில் கூகுள் ஏன் அதிக வரி செலுத்தவில்லை என்று கேட்டதற்கு, கூகுள் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான மெயில் கார்னெகி சொன்ன பதில், அவர்களின் தலைமையிடம் இருக்கும் நாடான சிங்கப்பூரின் பங்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டது என்பதே. $66 பில்லியன் வருவாய்க்கு எதிராக $3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த வரி செலுத்தியதாக கூகுள் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் இறுதி வரி விகிதங்கள் 19% மட்டும்தான். இது அமெரிக்காவின் அப்போதைய 35% பெருநிறுவன வரி விகிதத்தை விடக் குறைவு. 2019இல், ஆஸ்திரேலியாவின் வரி தவிர்ப்புப் பணிக் குழுவுடனான 2008 - 2018 நிதியாண்டு தொடர்பான "நீண்டகால" வரிச் சர்ச்சையைத் தீர்க்க 481.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலுத்துவதாக கூகுள் அறிவித்தது.

  1. கோகோ கோலா

கோகோ கோலா தனது வெளிநாட்டுத் துணை நிறுவனங்களுக்கு இடையேயான நிறுவன உரிம ஏற்பாடுகளுக்கு மாற்று விலைகளின் மூலம் குறைந்த கட்டணம் வசூலித்ததாக அமெரிக்க வருவாய்த் துறை வழக்குத் தொடர்ந்தது. 2020இல் அமெரிக்க வரி நீதிமன்றம் கோகோ கோலாவை 3.3 பில்லியன் டாலர் கூடுதல் வரி செலுத்துமாறு தீர்ப்பளித்தது.

  1. மெட்டா

மெட்டா நிறுவனம் (முன்பு ஃபேஸ்புக்) 2010இல் $6.5 பில்லியன் அசையாச் சொத்துக்களை அயர்லாந்திற்கு மாற்றியதன் மூலம் அதன் வரிக் கட்டணத்தை கணிசமாகக் குறைத்ததாக அமெரிக்க வருவாய்த் துறை குற்றஞ்சாட்டுகிறது. இந்த வழக்கில் அமெரிக்க வருவாய்த் துறை வெற்றி பெற்றால், வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து மெட்டா $9 பில்லியன் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

  1. மெட்ரானிக்

அயர்லாந்தை தளமாகக் கொண்ட, மருத்துவ சாதனத் தயாரிப்பாளரான மெட்ரானிக் உலகளவில் குறைந்த வரி செலுத்தும் புகலிடங்களுக்கு அறிவுசார் சொத்துக்களை மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுக்கான வரி ஆண்டுகளில் மெட்ரானிக் மற்றும் அதன் போர்ட்டோரிக்கன் உற்பத்தித் துணை நிறுவனங்களுக்கு இடையிலான அருவச் சொத்துக்களின் பரிமாற்றம் குறித்தது. நீதிமன்றம் முதலில் மெட்ரானிக்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அமெரிக்க வருவாய்த் துறை இதற்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

நிகோலஸ் ஷாக்ஸான் தனது “புதையல் தீவுகள்” புத்தகத்தில் பெருநிறுவன வரி மோசடி குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்: இன்று வரை, கணக்கியல் தரநிலைகள் இந்த வகையான தந்திரங்களைத் திறம்பட மறைக்கின்றன, நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளிலிலிருந்து பெறப்படும் முடிவுகளை (பெரும்பாலும் "சர்வதேசம்" என்று அழைக்கப்படும்) ஒரே வகையாகக் காட்ட அனுமதிக்கின்றன, இதில் யாருக்கு என்ன இலாபம் என்பதைப் பிரித்தறிய முடியாது.”

பன்னாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதற்கும், சிறிய போட்டியாளர்களை விட அவை பொதுவாக வேகமாய் வளர்வதற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மாற்று விலை அல்லது தவறான விலை எனக் கூறும் நிகோலஸ் ஷாக்ஸன் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களின் சக்தியைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் வரிப் புகலிடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

- சமந்தா

Pin It