nallakhili 300சங்கப் பரிவாரத்தின் பத்தாண்டு ஆரண்ய காண்டம் முடிந்து, மோதியின் பட்டாபிஷேகமும் கோலாகலமாக நடந்தேறி விட்டது! மந்திரி சபையும் களைகட்டத் தொடங்கி விட்டது! ஆனால் இடையே கிஷ்கிந்தா காண்டத்தில் மோதிக்கு முடிசூட்டப் பாடாற்றிய அனுமர்களை எட்டி உதைத்து விட்டது பாஜக.

மோதி அரியணையின் கீழ் சாமரம் வீசும் இடமேனும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கின்றனர் சில சுக்ரீவர்கள்!

இவர்களின் நிலையை என்னென்பது? வசப்படாக் காவிரி முதல் எட்டாக் கச்சத்தீவு வரை எதையும் வளைத்துக் காட்டுவார் எங்களின் மோதி எனத் தமிழகமெங்கும் முழங்கியவர்கள் இன்று அம்மனிதரின் திருவிளையாடல்கள் கண்டு திகைத்து நிற்கிறார்கள்.

தமிழனுக்குக் காவிரியும் கிடையாது, கச்சத்தீவும் கிடையாது எனச் சொல்வதற்கு வெட்கப்படவில்லை பாஜக அரசு. எல்லாம் போகப் போகச் சரியாகி விடும் என வெட்கமில்லாமல் சமாளிக்கும் தமிழகப் பங்காளிகளும் இருக்கிறார்கள்.

தமிழரின் பாரம்பரிய உரிமைகளைத் தர மறுக்கும் மோதி இந்துத்துவத்தின் பாரம்பரியக் காவிச்சரடுகளைத் தமிழகத்தில் அவிழ்த்து விடத் தயங்கவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பின்னுகிறார், அரசு வேலைகளில் இந்தியை நுழைக்கிறார், மத்திய அரசுப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடுகிறார். ஆசிரியர் நாளை குரு உற்சவமாக்குகிறார்!

பாவம்! மோதி ஆட்சிக்குப் புதுசாம்! அதனால் புரியாமல் ஏதேதோ செய்கிறாராம்! மோதிக்குக் கம்பளம் விரித்தவர்கள் அவருக்குப் புரியாததைப் புரிய வைத்து விடுவார்களாம். மோதிக் கூட்டத்துக்கு இவர்களின் மொழிக் கொள்கையைப் புரிய வைக்க 'ஷாகா'க்கள் ஏதும் திறக்கப் போகிறார்களா, தெரியவில்லை.

மோதிக்கு இவர்கள் மொழியியல் வகுப்-பெடுப்பது சரி, மொழித் திணிப்பு பற்றி இவர்களின் பார்வை தெளிவானதுதானா? கலைஞர், ஜெயலலிதா, வைகோ, கி. வீரமணி என எவரானாலும் ஏதேனும் இந்திச் சலசலப்பு வரும் போதெல்லாம் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற மந்திரத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்பதென்றால், அவ்வெதிர்ப்பு நம் தமிழின் வாழ்வை என்றென்றும் தழைத்தோங்க வழி-செய்துள்ளதா?

தமிழ்ப் பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்கலாமே என எவரும் வாய் திறந்தால் போதும்! உடனே அவர்கள் எங்க பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் எப்படி வரும் எனப் படபடப்பார்கள். இதே போல் நம் திராவிடக் கட்சியினரிடம் எத்துறையிலும் நமக்குத் தமிழே வேண்டுமெனக் கேட்டால், உடனே அவர்கள் இங்கிலீஷின் இடத்தில் இந்தி புகுந்து விடாதா? என பயங்காட்டுவார்கள்.

தமிழகத்தில் இந்தியின் இடமென்ன? ஆங்கி-லத்தின் இடமென்ன? தமிழின் இடமென்ன? என்னும் குழப்பத்தில் விளையும் வினாக்கள் இவை.

இந்தி மொழி 1938 இராஜாஜி தொடங்கி 2014 மோதி வரை 2 காரணங்களைச் சொல்லி தமிழகத்துள் நுழைந்து வருகிறது:

1. கல்வியகங்களில் பாட மொழி.

2. நடுவணரசுக்கும் மாநில அரசுகளுக்குமான இணைப்பு மொழி.

இவ்விரு காரணிகளே இந்தித் திணிப்பின் அடிப்படைகள் எனலாம்.

1938இல் அன்றைய சென்னை மாகாணத் தலைமையமைச்சராக இருந்த இராசகோபாலாச்சாரி பள்ளிக்கூடங்களில் இந்தியைப் புகுத்தினார். அதனை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறி-ஞர்கள் கடுமையாக எதிர்த்தனர். பெரியாரின் தலைமையில் பெரும் போராட்டம் பற்றிப் படர்ந்த போது இராஜாஜி பின்வாங்கிக் கொண்--டார். ஆனால் அதே காலக் கட்டத்தில் பள்ளி-களில் கோலோச்சி வந்த ஆங்கிலத்துக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

இராஜாஜி இத்தனைக்கும் இந்தியைக் கட்டாயமாக யாரும் படிக்க வேண்-டாம், தேர்வும் எழுத வேண்டாம், விரும்பியவர் படித்துக் கொள்ளலாம் என மழுப்பினார். ஆனால் இராஜாஜியின் இந்தச் சூதுத் திட்டத்தைத் தெளிவாகவே உணர்ந்து ஏற்க மறுத்தவர் எவரும் தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் எதற்கு? எனக் கேட்கவில்லை.

கட்டாய ஆங்கிலத்தை எதிர்க்கத் தேவையில்லை என்றே பெரி--யார் தெளிவாகச் சொன்னார். அன்றைய நிலை-யில், பொறியியல், மருத்துவத்தை ஆங்கிலத்தில்தான் படிக்க முடியும் என்ற போதும் அவற்றைத் தமிழில் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எவரும் எழுப்பவே இல்லை.

1948, 1950 எனத் திரும்பத் திரும்பத் தமிழகப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப்படுத்த காங்கிரஸ் அரசு செய்த முயற்சிகள் பெரியார், அண்ணா உள்ளிட்டோர் நடத்திய போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன.

1950இல் இந்திய அரசமைப்புப் பேரவையில் இந்தியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழி-யாக்க முயற்சிகள் நடந்த போது, இதனைத் தென்னிந்தியர்கள் ஏற்க மாட்-டார்கள் என இராஜாஜி முணுமுணுத்தார்!

தமிழ் ஒழிந்தால் போதும்! இந்தியின் இடத்தில் ஆங்கிலமே இருந்து விட்டுப் போகட்டும் என்பதே இராஜாஜி உள்ளிட்டோரின் நிலை. ஆம்! 1938இல் இந்திக்கு வக்காலத்து வாங்கிய இந்த இராஜாஜி 1957இல் சென்னை நுங்கம்-பாக்கத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றில் பெரியாருடன் சேர்ந்து கலந்து கொள்ளத் தயங்கவில்லை! இந்த அரங்கில் இராஜாஜி அப்படியே குட்டிக்கரணம் அடித்தார்.

இந்தியைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். சரி, இந்தியின் இடத்தில் தமிழை ஆதரித்தாரா? இல்லவே இல்லை! அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென முழங்கினார்.இதைத் தொடர்ந்து பேசிய பெரியார் ஆங்கிலத்துக்கு ஆதரவான இராஜாஜியின் கருத்து தமக்கும் உவப்பானதே என்றார்.

இராஜாஜியின் குள்ளநரித்தனம் என்னமாய் வெளிப்படுகிறது! இந்தி தமிழகத்தில் பயிற்று மொழியாவது பற்றியா கேள்வி? அடிப்படைக் கேள்வியே அது இந்திய அலுவல் மொழியாக இருக்கலாமா? கல்விக்கூடங்களில் ஒரு மொழிப் பாடமாக இருக்கலாமா? என்பதுதானே! அந்த இடங்களில் இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்ளலாம் என இராஜாஜி கூறியிருந்தால் கூட அவ்வளவு மோசமில்லை. ஆனால் சந்தடிச் சாக்கில் ஆங்கிலத்தைத் தமிழ-கத்தில் பயிற்று மொழியாக்க ஆசைப்படுகிறார். இந்திப் பூச்சாண்டி காட்டி ஆங்கிலம் திணிக்கும் திருப்பணியை இங்கு வெற்றிகரமாகத் தொடங்கி வைக்கிறார் இராஜாஜி!

1959இல் அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்தி(ய)வெறி வழிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி 1965 சனவரி 26க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக இருக்க முடியுமென்றும், அன்று முதல் இந்தியாவில் ஆங்கிலத்துக்கு வேலையில்லை என்றும் சொன்னார்.

இந்த அறிவிப்பு வந்த நாள் முதலே தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது. தென்னிந்தியாவிலும், இன்னும் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்தது. 1959 செப்டம்பர் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. குறிப்பாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திக்கு எதிராக முழங்கினர். நேரு இந்திச் சூட்டைத் தணிக்க முயன்றார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, இந்தியுடன் ஆங்கிலமும் ஒரு துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் எனத் தேனொழுகப் பேசினார். நேரு எய்த மாய அம்பில் வீழ்ந்தோர் அவரின் வஞ்சக உரைக்கு நேரு உறுதிமொழி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ நேருவின் உறுதிமொழியைக் காப்பாற்று என இன்றைய அரசியல் நண்டு சிண்டுகளும் முழங்குகின்றன.

தமிழர் நாவில் அவர்கள் ஒப்புதலுடனேயே தமிழ்க்கொல்லி மருந்து தடவிய நேரு உண்மை-யிலேயே பெரிய ராசதந்திரிதான். நேருவின் பாரத விலாசில் தமிழன் விரும்பும் வரை ஆங்கிலம் கிடைக்கும், அவனே விரும்பினால் இந்தியும் கிடைக்கும். ஆனால் அவன் எவ்வளவு விரும்பி--னாலும் தமிழ் மட்டும் கிடைக்கவே கிடைக்காது. தமிழனுக்கு நேரு கிண்டிக் கொடுத்த இந்தத் தில்லிவாலா அல்வாவைத்தான் அமுதெனச் சுவைத்தனர்  திராவிட இயக்கத்தினர்.

என்னதான் நேரு உறுதிமொழி கொடுத்தாலும் இந்தி ஏதோ ஒரு வடிவத்தில் நுழைந்து கொண்டுதான் இருந்தது. ஆல் இண்டியா ரேடியோவாக இருந்த அகில இந்திய வானொலியின் பெயர் ஆகாஷவாணி என இந்திக்கு மாற, உடனே பல தமிழ் எழுத்தாளர்களும் எதிர்க்க, தில்லி பின் வாங்கியது. தமிழகத்தில் இந்தி நுழையும் போதெல்லாம் நேரு பழைய உறுதிமொழியை நினைவுபடுத்துவார், உடனே தமிழகக் கொதிப்பு சற்றே அடங்கிப் போகும்.

கல்வியகங்களில் ஆங்கிலம், தமிழுடன் இந்தியும் படிக்கலாம் என நடுவணரசு சமயம் கிடைக்கும் போதெல்லாம் கூறி வந்தது. தில்லியின் இந்த மும்மொழிக் கொள்கை அநீதிதியானது என்றும்,  தமிழகத்துக்குத் தமிழ், இந்திய, உலகத் தொடர்புகளுக்கு ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையே முறையானது என்றும் அண்ணா அறிவித்தார். மும்மொழிக் கொள்கையா? இருமொழிக் கொள்கையா? என்னும் வினா அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் தமிழக மொழிக் கொள்கையின் மையப் புள்ளியாயிற்று!

நேரு உறுதிமொழியை மீறி இந்தி ஒட்டகம் அவ்வப்போது தலையை நுழைத்துக் கொண்டே இருந்ததால் 1965 வந்தால் இந்தி முழு இடத்தையும் பிடித்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தால் எழுந்த இந்தி எதிர்ப்புணர்வு தமிழர் நெஞ்சில் தணலாய்க் கனன்று கொண்டேதான் இருந்தது.

இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர 1963 சனவரி 21 அன்று நேரு தன் உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் சட்டமாக முன்மொழிந்தார். 1965க்குப் பிறகுங்கூட இந்திய அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடரலாம், அதாவது English may continue என்றது சட்டம். இல்லை, ஆங்கிலம் தொடர வேண்டும், அதாவது   English shall continue என்பதாகச் சட்டம் அமைய வேண்டும் என்றார் அண்ணா.

மே சொல்லுக்கு ஷல் என்றும், அதாவது 'வேண்டும்' என்றும் பொருளுண்டு என்றார் நேரு. அப்படியானால் ஷல்லே இருந்துவிட்டுப் போகட்டுமே, சந்தேகத்தைக் கிளப்பும் மே எதற்கு எனக் கேட்டார் அண்ணா. ஒன்றுக்கும் உதவாத நேரு உறுதிமொழி காக்கவே இத்தனை ஆர்ப்பாட்டம். இந்தி காக்க நேருவும் ஆங்கிலம் காக்க அண்ணாவும் இங்கிலீஷ் இலக்கணத்தில் பல்லாங்குழி ஆடினர். நேருவின் இந்தி விளக்குமாற்றுக்கு ஆங்கிலக் குஞ்சம் கட்ட முனைந்தார் அண்ணா! இறுதியில் நேருவின் மே குஞ்சம் கட்டிக் கொண்டு 1963 அலுவல் மொழிகள் சட்டம் நாடாளுமன்றத்தில் அரங்கேறியது. இந்தத் தமிழ்க்கொல்லிச் சட்டத்துக்கு ஷல் குஞ்சம் கட்டினால்தான் ஆச்சு எனத் திமுகவினர் போராட்டங்களில் குதித்தனர்.

1963 நவம்பரில் அண்ணா இந்தியைத் திணிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதியைக் கொளுத்தி 500 தொண்டர்களுடன் சிறைப்பட்டார். 1964 சனவரி 25 அன்று திமுக உறுப்பினர் கீழப்பழுவூர் சின்னச்சாமி இந்தியை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். தமிழகமெங்கும் நடுவணரசு அலுவலகப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களைத் திமுகவினர் தார் பூசி அழித்தனர்.

1964 மே 27 நேருவின் மறைவுக்குப் பிறகு இந்த மே, ஷல் கூத்துக்கெல்லாம் வேலையில்லாமல் போயிற்று. அவருக்குப் பின் தலைமையமைச்சரான இந்தி வெறியர் லால் பகதூர் சாஸ்திரியும், அவரது கூட்டாளிகள் மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா உள்ளிட்டவர்களும் இந்திக்கு ஆதரவான செயல்பாடுகளில் விறுவிறுவென ஈடுபடத் தொடங்கினர்.

நடுவணரசும் மாநில அரசுகளும் இனி இந்தியில்தான் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசத் தொடங்கினர். தில்லியில் அவர்கள் முடுக்கிய இந்தி எக்ஸ்பிரஸ் 1965 சனவரி 26 அன்று சரியாகச் சென்னையை வந்தடையும் என்பதைத் துல்லியமாக மோப்பம் பிடித்தனர் திமுகவினரும் தமிழக மாணவர்களும். அதை ஒட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மளமளவென வெடித்தன.

periyarrajaji 600அக்காலக் கட்டங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் இராஜாஜி தலைகாட்டத் தொடங்கினார். அப்போதுதான் அவரது உள் அந்தரங்கம் அம்பலமானது. அது அவர் குரலில் முழக்கமாய் ஒலித்தது:

இந்தி  

ஒருபோதும் வேண்டாம்!

ஆங்கிலமே

 எப்போதும் வேண்டும்!

நேரு நீட்டி முழக்கிய உறுதிமொழிக்கு   Hindi Never; English Ever என்று இங்கிலீஷ் ஹைக்கூ பாடினார் இராஜாஜி. நேரு மாமாவுக்கு ஆங்கிலம் ஒருபோதும் வேண்டாம்! இந்தியே எப்போதும் வேண்டும்! ராஜரிஷி ராஜாஜிக்கு இந்தி ஒருபோதும் வேண்டாம்! ஆங்கிலமே எப்போதும் வேண்டும்! ஆக மொத்தம் இரு மேதாவிகளுக்கும் தமிழ் ஒருபோதும் வேண்டாம்!

நேருவின் இந்திக்கு இராஜாஜியின் ஆங்கிலம் மேல் எனத் திமுக கருதியது! படிப்படியாக அதுவே திமுகவின் உறுதியான முழக்கமும் ஆயிற்று.

இந்தியம் இந்தியை அரியணையேற்றக் குறித்த அந்தச் சனவரி 26ஆம் நாள் நெருங்க நெருங்கத் தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அந்நாளை துக்க நாளாகக் கொண்டாடுவதெனத் திமுக செயற்குழு 1965 சனவரி 8ஆம் நாள் முடிவெடுத்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுகவினரும் கல்லூரி மாணவர்களும் இந்திய அரசமைப்பின் 17ஆவது பிரிவைக்கொளுத்திச் சாம்பலாக்கினர். இந்தி அரக்கி உருவப் பொம்மைகளுக்கு எரியூட்டினர். இந்தப் பெரும் போராட்டங்கள்தகித்துக் கொண்டிருக்கையில், அந்தச் சனவரி இருபத்-தாறும் நெருங்கியது.

மொழிப் போராட்டத்தைத் தடுத்து சனவரி இருபத்தாறை இந்தியின் இன்ப நாளாக்கிடக் கருதிய அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் 25 அன்றே பலரையும் சிறையிலடைத்தார். போராட்டக்காரர்களை காங்கிரஸ் குண்டர்கள் காவல்துறை கண்முன்னே நையப் புடைத்தனர்.

காங்கிரஸ் அட்டூழியத்தையும் அரசின் அடக்குமுறையையும் எதிர்த்து 1965 சனவரி 27ஆம் நாள் அமைதி ஊர்வலம் சென்ற சிதம்-பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்-கள் மீது காவல்துறை நடத்திய சரமாரித் துப்பாக்கிச் சூட்டுக்கு இளநிலை அறிவியல் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த இராசேந்-திரன் பலியானார். நெடுமாறன் என்ற மாணவர் படுகாயமுற்றார். திமுக உறுப்பினர் சிவலிங்கம் சென்னை கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையமருகே தீக்குளித்தார். சென்னையில் விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தார்.

போராட்டத் தீ தமிழகப் பட்டி தொட்டி-யெங்கும் பரவியது. இந்த உண்மையான தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்க காங்கிரஸ் அரசு இராணுவத்தை அனுப்பியது. 500 போராளிகளுக்கு மேல் பலியாகி, 5 ஈகியருக்கு மேல் தீக்குளித்து நடந்த தமிழக வரலாற்றின் மாபெரும் மொழிப் போராட்டம் பிப்ரவரி நடுவில் முடிவுக்கு வந்தது. நேருவின் உறுதிமொழி காக்கப்படுமென காங்கிரஸ் தில்லி ஆண்டைகள் அறிவித்ததும் அண்ணாவும் இராஜாஜியும் போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போராட்டம் தொடர்ந்தது. என்றாலும், இந்தியை எதிர்த்துத் தமிழ் காக்கும் குறிக்கோள் ஈடேறாமலே அந்தப் பெரும் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அந்தப் போராட்டங்களில் திமுகவினரும் மாண-வர்களும் எரியூட்டிய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவை நீக்கவோ திருத்தவோ எந்த வாக்குறுதியும் இன்றியே போராட்டம் ஓய்ந்தது பெருந்துயரமே! நேரு இருந்த போது தீட்டிய திட்டம் அவருக்குப் பிறகும் சிறப்பாகவே வேலை செய்தது, செய்து கொண்டிருக்கிறது.

ஆம், இந்திப் பகை தடுக்கும் கேடயமே ஆங்கிலமென அன்றும் இன்றும் கூறி வருகின்றன திராவிடக் கட்சிகளும், திராவிட ஒட்டு அமைப்புகளும்.

இந்தி இந்தியாவின் அலுவல் மொழியானால் அது இந்தி மேலாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும். அவ்விடத்தில் ஆங்கில மொழி வந்தால் அது இந்தியாவின் பல மொழி பேசும் மக்களிடையே சரிநிகரான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதே அண்ணா காலந்தொட்டுப் பலரும் விளம்பி வரும் கருத்து. அதைத்தான் இன்றைய ஞாநிகள் ஆங்கிலத்தில் லெவல் ப்ளேயிங் ஃபீல்டு என்கின்றனர். கல்வியகங்களில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகத் தமிழச்சியும் படித்து, இந்திக்காரியும் படித்தால் அது நிகரான போட்டிக் களத்தை உருவாக்குமாம்.

நல்லது! நாம் கட்டுரைத் தொடக்கத்திலேயே கண்டது போல், இந்தி நுழைவது கல்வியைச் சொல்லி மட்டுந்தானா? நடுவணரசின் அலுவல் மொழி என்ற பெயரிலுந்தானே? இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வதன்படி, இந்தி முதன்மை அலுவல் மொழி என்றால், ஆங்கிலம் வெறும் துணை ஆட்சி மொழி மட்டுமே! அதுவும் தமிழன் விரும்பி ஏற்கும் வரையே! இங்கே நிகர்ப் போட்டிக் களம் எங்கே வந்தது? உபிக்காரனும் மபிக்காரனும் வக்கணையாக ஜீ, மாஜீ என்று இந்தியில் பேசிக் கொள்வானாம். ஆனால் தமிழனும் மலையாளியும் மட்டும் ஐயா, அம்மை எனப் பறையாது சார், மேடம் என உறவாட வேண்டுமாம்! என்ன கதை இது? என் அரசும் கேரள அரசும் தமிழிலும் மலையாளத்திலும் உரையாடிக் கொள்ளுமென மொழியுரிமை நாட்டியிருந்தால் அதைத் தமிழனுக்கும் மலை-யாளிக்கும் இந்திக்காரனுக்குமான சம மொழி நீதி எனக் கொள்ளலாம். அலுவல் மொழி அவ-னுக்கு இந்தி, நமக்கு ஆங்கிலம் என்பது எப்படி நிகர்ப் போட்டிக் களமாகும்?

வங்கிக் காசோலை, தொடர்வண்டிப் பயணச்--சீட்டு என மைய அரசு அடையாளங்கள் அனைத்திலும் இந்தியும் ஆங்கிலமும் மட்டுந்-தானே துருத்தி நிற்கின்றன? சீர்காழியிலிருந்து திருவாரூருக்கு ரயிலில் பயணம் செய்ய தமிழ்ப் பாமரன் அன்னிய மொழி ஆங்கிலம் கற்க வேண்டுமாம்! ஆனால் உபிக்காரன் தாய்மொழி இந்தியிலேயே நெல்லூர், அம்பத்தூர் என எங்கும் வலம் வருவானாம்! இதெப்படிச் சமநிகர்க்களமாகும்?

நடுவணரசு அலுவல் மொழியாக, மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்பு மொழி-யாகத் தமிழ் கூட வேண்டாம், ஆங்கிலம் மட்டுமே கோலோச்சலாம், அங்கு இந்திக்கு வேலையில்லை என தில்லி பேசினாலேனும் இந்த நிகர்க்கள நீதியின் நியாயத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். என்னால நீ கெட்ட, உன்னால நான் கெட்டன் என்பது போல், உனக்கும் உன் தாய்மொழி இந்திக்கு இடமில்லை, எனக்கும் என் தாய்மொழி தமிழுக்கு இடமில்லை என்றால், இருவர் ஆட்டத்துக்கும் ஆங்கிலம் ஒரு வகையில் சமமான போட்டிக் களத்தை அமைத்துக் கொடுக்கும் எனலாம். ஆனால் மத்திய

நடவடிக்கை என்றாலே வடக்கத்தியானுக்கு இந்தி, தமிழனுக்கு ஆங்கிலம் என்றால், அது சுத்தப்- போங்காட்டம் இல்லையா?

ஆமாம்! நேருவின் உறுதிமொழியை எந்தப் புளி தேய்த்துக் கழுவினாலும் இந்திதான் இளிக்கும், மிஞ்சிப் போனால் ஆங்கிலம் பல்லைக் காட்டும். ஒருபோதும் தமிழ் ஒளிராது.

nehru- -rajaji 300நேரு மீது தமிழ்வெறியில் கல்லெறிவதாகப் பண்டித நேரு அன்பர்கள் முகம் சுழிக்கலாம். எங்கள் தலைவர் நேரு பிரான் கூற்றுக்கு உள்-நோக்கம் கற்பிப்பது முறைதானா? என்றுங்கூட கோபிக்கலாம். ஆனால் நேருவின் அந்தரங்க நோக்கமறிய நாம் கொஞ்சம் பின்னே போய் அவரது பழைய கடிதம் ஒன்றைப் பிரித்துப் படிப்பது தவறில்லைதானே?

அது நேரு தமது நாடாளுமன்ற உறுதிமொழிக்கு முன்பே இந்திக் கொள்கை பற்றி எழுதிய கடிதம்! ஆமாம், தமிழக இந்தி எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கில், 1950கள் தொடக்கத்திலேயே இந்தியின் இடத்தில் ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் நேரு பசப்பத் தொடங்கியிருந்தார்.

அந்த மழுப்பலைக் கூட அன்றைய அவரது அரசின் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பொறுக்க மாட்டாமல் எதிர்த்த போது, அவரை ஆற்றித் தேற்ற 26.08.1956 தேதியிட்டு ஒரு கடிதம் எழுதினார் நேரு.

அன்பு நண்பர் திரு. மௌலானா அவர்களே, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்! இன்றைய சூழலில் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியைத் திணித்தால் மாநில மொழிகள் அந்தந்த இடத்தில் அமரும் பெரும் அபாயம் உள்ளது!

அப்படி ஒரு வேளை ஆங்கிலத்தையும் வெளியேற்றி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்திக்கு அதற்குரிய இடம் ஒருபோதும் கிடைக்காமல் போய்விடும் அல்லவா? எனவே ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடிக்கும் வகையில் நாம் வேலை செய்ய வேண்டும் ஐயா!

ஆகா! நேரு முகத்தில் இந்திக் காமம் வழிவது கடிதத்தில் என்னமாய்த் தெரிகிறது பாருங்கள்! மாநில மொழிகள் ஒருபோதும் வேண்டாம், இந்தியே எப்போதும் வேண்டுமெனத் தமது அந்தரங்கச் சதியைப் பிட்டு பிட்டு வைக்கிறார். ஆசை வெட்கமறியாது, நேருவின் இந்திக் காமம் நேர்மையறியாது. இதுதான் நேரு உறுதிமொழியின் உள்குத்து.

 நேருவின் நரித் தந்திரத்தைத் திமுகவுடன் உறவாடி நிறைவேற்றினார் சூதறிஞர் இராஜாஜி. 1957இலேயே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்-தவர்தானே இவர்? "எப்போதும் ஆங்கிலம்" என்ற இராஜாஜியின் மந்திரம் ஓதித் தமிழக நிர்வாகத்துக்கும் கல்விக்கும் அடிக்கல் நாட்டினர் திமுகவினர். பின்னர் வந்த திமுக, அதிமுக ஆட்சிகளில் ஆங்கிலம் மளமளவென வளர்ந்து இன்று பல்லடுக்கு மாடிக் கட்டடமாக நெடி-துயர்ந்து நிற்கிறது.

 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட நேருவின் உறுதிமொழி காப்போம் என்றே திமுக முழங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவை நீக்குவது பற்றி எல்லாம் பேச்சுமில்லை, மூச்சுமில்லை.

இந்திய ஆட்சியர் பணித் தேர்வுக்கு ஆங்கில அறிவு கட்டாயம் தேவை என்ற நிலையைத் திராவிடக் கட்சிகள் எதிர்க்கவில்லை, போகட்டும். ஆனால் தமிழக அரசுக்கான விஏஓ, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவைக் கட்டாயப்படுத்தும் வன்கொடுமையை எப்படி நியாயப்படுத்துவது? இந்த ஆங்கிலத் திணிப்பு எந்த இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு?

தமிழக அரசுப் பள்ளிகளில் 1970கள் முதற்-கொண்டு இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆங்கிலவழி வகுப்புகளைத் திறந்து வருகின்றனவே? இது கூட இந்தித் திணிப்பை எதிர்க்கும் கேடயந்தானா? யாருமே இல்லாத கடையில ஏன்டா டீ ஆத்துற? என்பது போல, இந்திக்கு மருந்துக்கும் இடமில்லாத தமிழக வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் ஆங்கிலத்தைத் திணிப்பதுதான் திராவிடத்தின் இருமொழிக் கொள்கையா?

இந்திப் பூச்சாண்டி காட்டி ஆங்கிலம் திணிப்பதில் கலைஞர், ஜெயலலிதா இருவருமே கில்லாடிக்குக் கில்லாடிகள்!

தமிழ்ச் சான்றோர் பேரவையின் 100 தமிழர் பட்டினிப் போராட்ட முயற்சியைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயத் தமிழ்க் கல்விக்குக் கலைஞர் அரசாணை பிறப்பித்த போது, ஜெயலலிதாவும், கி. வீரமணியும் பதறினர். ஐயோ! பள்ளிக் கல்வியில் தமிழ் வளர்ந்தால், இந்திப் பாம்பு புகுந்து விடாதா?எனப் பீதி கிளப்பினர்.

தமிழுரிமைக் கூட்டமைப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள், பாமக இணைந்த தமிழ்ப் பாது-காப்பு இயக்கத்தினரும் ஆங்கிலப் பெயர்ப் பலகை எதிர்ப்பு, ஆங்கிலத் திரைப்பெயர் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திய போது, கலைஞரும் வைகோவும் Òநமக்கு இந்திப் பிசாசு பிடித்து விடும் எச்சரிக்கைÓ என மிரட்டினர்.

தமிழனிடம் இந்திப் பூச்சாண்டி காட்டி ஆங்-கிலம் புகட்டியதன் விளைவு? அது இன்று தமி-ழன்னையைச் சிறைப்படுத்தும் பூதமாய் உருப்-பெருத்து நிற்கிறது. இந்திப் பகை தடுக்கும் கேடயமெனத் திமுக ஏந்திய ஆங்கிலம் இன்று தமிழ்க் கழுத்தறுக்கும் கொலைவாளாகிப் போயிற்று.

அப்படியானால் இந்தி எதிர்ப்புக்குச் செய்த தியாகம் வீணா? இந்திக்கு எதிராக அன்று போராட்டம் நடத்திய திமுகவினர் பதவிக்கு வந்த பின் சென்னையிலேயே இந்தியில் விளம்-பரம் செய்து வாக்குக் கேட்கும் இழிநிலையைப் பாருங்கள்! இதைச் சொல்லி பாஜக இல.கணே-சனும், காங்கிரஸ் பீட்டர் அல்ஃபோன்சும் கிண்டலடிக்கிறார்களே? அப்படியானால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெறும் பதவி வேட்டை அரசியலுக்குத்தானா? என இன்று பல தமிழ் இளைஞர்களும் கேள்வி கேட்கின்றனர்.

இந்தக் கேள்வி நமது இந்தக் கட்டுரையிலும் வெளிப்படுவதாகத் தோன்றலாம். ஆனால் திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய இந்தியக் கட்சிகளின் கிண்டலும் நமது விமர்-சனமும் அடிப்படையிலையே வேறுவேறு. திமுகவின் சந்தர்ப்பவாத மொழிக் கொள்கையைச் சாக்கிட்டுத் தமிழைக் குழிதோண்டிப் புதைப்பதே அவர்கள் நோக்கம்; திமுகவின் மொழிக் கொள்கை முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, ஆங்கிலம், இந்தியின் இடத்தில் தமிழை நிலைநிறுத்துவதே நமது நோக்கம்.

 இருமொழிக் கொள்கை, நேரு உறுதிமொழி ஏற்பு எனத் திமுக மொழிக் கொள்கையில் சறுக்கிய இடங்கள் பல என்பது உண்மையே. ஆனால் கொள்கைச் சறுக்கல்களுக்கு இடையே 1938 தொடங்கி 1965இல் உச்சந்ததொட்ட அந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கமும் மாற்றமும் புரட்சிகரமானவை.

தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும், அதன் தொடர்ச்சியாக எழுந்த சமற்கிருத&இந்தி எதிர்ப்புந்தான் "அவாள்ளாம் வந்தா இவாள்ளாம் போவா" என அக்கிரகாரத் தமிழ் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படங்களை அழகு தமிழில் உரையாட வைத்தன. ஸ்ரீமான், ஸ்த்ரீ, நமஸ்காரம் எனப் புழங்கிக் கொண்டிருந்த அன்றைய சமற்கிருத சீதோஷ்ணம் அழித்துத் திருவாளர், தாய்மார், வணக்கம் எனத் தமிழ்த் தட்ப-வெப்பத்தைத் தமிழகத்தில் படரச் செய்தன.

மணிப்பிரவாள நடை அழித்து அன்றைய ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய ஜெயமோகன் வரை, அன்றைய பக்தவத்சலம் தொடங்கி இன்றைய இல. கணேசன் வரை, நல்ல தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்தது தமிழ் மறுமலர்ச்சியும் வடமொழி எதிர்ப்புமே!

இந்தித் திரையிசைப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த தமிழர்களைத் தமிழிசைப் பக்கம் புரட்டிப் போட்டவர் இளையராஜா என அவரைப் பலரும் புகழ்வதுண்டு. ஆனால் அந்த இசைஞானி இசையாட்சிக்குக் களமமைத்துக் கொடுத்தது இந்தி எதிர்ப்புப் போராட்டமே. 1938 தொடங்கி இந்தி எதிர்ப்புப் போர் தொடுத்தவர்களின் அரும் பெரும் தியாகத்தின் நல்விளைச்சலே இளையராஜாவின் வெற்றி. எஸ்.டி. பர்மன், சங்கர் ஜெய் கிஷன், முகமது ரஃபி, லதா மங்-கேஷ்கர் எனத் தமிழகம் நோக்கிப் படையெடுத்து வந்த இந்தி இசைப் படைப்பாளிகளை விலக்கி நிறுத்தும் களத்தை அமைத்துக் கொடுத்தது மொழிப் போராட்டப் படையணியே என்பதை நாம் மறக்கலாகாது.

 நம்மை எல்லாம் இந்தி படிக்காதடித்து விட்டுத் திமுகக்காரன் வீட்டுப் புள்ளைங்க மட்டும் இந்தியில் படிக்கறாங்க என அங்கலாய்க்-கிறார் விஜயகாந்த். ஆனால் அமீர் கான், ஷாரூக் கான் எனக் கன்னடம், ஆந்திரம் உள்ளிட்ட முழு இந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் சிவப்புத் தோல் நடிகர்களைத் தமிழகத்துள் அண்ட விடாது தடுத்துக் கறுப்பு எம்ஜியாரை மிளிரச் செய்தது எது? தமிழர்களின் இந்தி எதிர்ப்பே அல்லவா?

இந்தி படிக்காமல் போனதால்தான் தமிழன் கீழ்மை அடைந்து விட்டான் என்பது எவ்வளவு பெரிய புளுகு! ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் இந்திய விளம்பரங்கள் இந்திக்கு அடுத்து மொழிபெயர்க்கப்படுவது அல்லது மொழிமாற்றப்படுவது தமிழில்தான். இதன் மூலம் தமிழர்களுக்குப் புதுப் புது வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கும் உண்மையைக் கல்லூரி மாணவர்கள் உணர வேண்டும். இந்தியில் அமீர்கான் குடித்துக் காட்டும் கோக்கைத் தமிழில் பருகிக் காட்டும் வாய்ப்பை :இளைய தளபதி" விஜய்க்கு வாங்கிக் கொடுத்ததுங்கூட அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் உண்மைத் தளபதிகளே!

இந்தி படிக்காமல் போனதால் தமிழர்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவில்லை. மாறாகத் திரைப்படம், தொலைக்காட்சி எனத் தமிழ் ஊடகங்கள் வட இந்திய ஊடகங்களுக்கு இணையாக வெற்றி உலா வருவது இந்தி எதிர்ப்பின் வீரியத்தைக் காட்டும்.

எனவே தமிழ் இளைஞர்களே! இந்திக்கு எதிராக இன்னுயிர் நீத்த அந்த மொழிப் போராளிகளின் ஈகம் எள்ளி நகையாடித் தள்ளி விடத்தக்கதன்று; உங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்த வெற்றுச் செயலன்று; உங்கள் வயிற்றுப் பாட்டுக்கும் மான வாழ்வுக்கும் வழி சமைக்க வந்த அரும் பெரும் செயலது! உள்ளபடியே, நீங்கள்உங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள விரும்பினால் இந்தியைத் துரத்தியடியுங்கள்! வணிகர்களாகத் துடித்தால் இந்தி ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள்! இந்தி எதிர்ப்பு வெறும் மொழிப் பற்றில் அடங்கி விடுவதன்று, அது உங்கள் பொருளியல் நலனோடு பின்னிப் பிணைந்தது.

anna---rajaji- 600

(எப்போதும் ஆங்கிலம்: என்ற இராஜாஜியின் மந்திரம் ஓதித் தமிழக நிர்வாகத்துக்கும் கல்விக்கும் அடிக்கல் நாட்டினர் திமுகவினர்)

திராவிடக் கட்சிகளின் குறைப் புரிதல் தோய்ந்த இந்தி எதிர்ப்பே தமிழர் வளர்ச்சிக்கு உதவியிருக்கக் கூடுமானால், இந்தியைக் கல்வித் துறையிலிருந்து விரட்டியதே நம் வாழ்வை வளப்படுத்தியிருக்கக் கூடுமானால், நமது அயல் மொழி ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையை இன்னும் இன்னும் நேராக்கிக் கூராக்குவது தமிழர்களை எந்தக் கொடுமுடியில் ஏற்றி நிறுத்தும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நடுவணரசின் ஆட்சியர்ப் போட்டிக்கான நுழைவுத் தேர்வை இந்திக்காரர்கள் இந்தியில் எழுதும் போது, நாங்கள் மட்டும் ஏன் ஆங்கி-லத்தில் எழுத வேண்டும் என்னும் கேள்வியை முன் வைத்துத் தமிழக மாணவர்கள் போராடத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறியே. இது நேருவின் உறுதிமொழி என்ற மோசடியை மட்டுமல்ல, சமப் போட்டிக் களம் என்ற சரசக் கூத்தையும் வீழ்த்தக் கட்டியம் உரைப்பது.

இந்தியைத் தமிழர் விரும்பும் வரை, ஆங்கிலம் தொடரலாம் என்னும் நேருவின் உறுதிமொழியும் சரி, ஆங்கிலம் எப்போதும் தொடர வேண்டும் என்னும் அண்ணாவின் எண்ணமும் சரி, இரண்டுமே தமிழுக்குக் கேடானவை. எம்மை ஆள இந்தியும் வேண்டாம், ஆங்கிலமும் வேண்டாம், எந்தமிழே வேண்டும் என்பதே மொழிச் சமநீதியை நிலைநாட்ட உதவும்.

தமிழகக் கல்வியகங்களில் இந்தித் திணிப்பு-மட்டுமல்ல, ஆங்கிலத் திணிப்பும் கூடாது, வேறெந்த மொழித் திணிப்பும் கூடாது, அங்கு தமிழ் மொழி ஒன்று மட்டுமே பயிற்று மொழியாக வேண்டும், முதல் கட்டாய மொழிப் பாடமாக வேண்டும் என்பதே சமநீதி மொழிக் கொள்கை. இரண்டாம் மொழிப் பாடமாகக் கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு என எதையும் அவரவர் விரும்பிப் படிக்கத் தடையில்லை.

இந்தியோ, ஆங்கிலமோ, இந்திய ஒற்றுமை பேண ஓர் ஒற்றை இணைப்பு மொழி தேவை என்பதும் ஏமாற்றுத் திட்டமே. இந்தியத்தின், ஏன், உலகத்தின் தேசிய இனங்களை இணைக்க ஒன்றல்ல, இரண்டல்ல, பற்பல மொழிகள் தேவை. தமிழகம் ஆந்திரத்துடன் எந்த மொழியில் உறவாட வேண்டுமென தில்லி சொல்லத் தேவையில்லை.

இப்படி மொழி அரசியல் செய்வது வளர்ந்து வரும் அறிவியல் உலகில் பிற்போக்குத்தன-மில்லையா? எனக் கேட்போரும் உண்டு. உள்ள-படியே, வளர்ந்து வரும் கணினிமயச் சூழலில் ஒற்றை இணைப்பு மொழி பற்றிப் பேசுவதுதான் பெரும் மூடநம்பிக்கை. எந்திரத்தனமான அரசு நிர்வாகக் கடிதப் பரிமாற்றங்களை மொழி-பெயர்த்துத் தர எளிய மென்பொருள் சாதனங்--களே போதுமானவை. ப்ராத்மிக், மத்யமா என ஏமாற்றும் தம்பட்ட இந்திப் பிரசார சபாக்ள் ஏதும் தேவையில்லை.

பெரியார், மறைமலை அடிகள், அண்ணா உள்ளிட்ட மொழிப் போர்த் தலைவர்களும், ஆயிரக்கணக்கான மொழிப் போர் வீரர்களும் ஏற்கெனவே வகுத்துக் கொடுத்துள்ள போராட்டப் பாதையில் மென்மேலும் முன்னேறுவோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என நம் தமிழ்ச் சான்றோர்கள் உணர்வு பொங்கக் கூறியதை மெய்ப்பித்துக் காட்டுவோம். அன்னைத் தமிழ் காப்போம் என்பது வெறும் உணர்ச்சி முழக்க-மன்று, அது தமிழ் இளைஞர்களின் வாழ்வுரிமை-யோடு, உண்மைப் பொருளியல் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது என்பதைத் தமிழர்களுக்குப் புரிய வைப்போம்! இந்தப் புரிதலின் வெளிச்சத்தில் தமிழன்னையை அரியணை ஏற்றிக் காட்டுவோம்! தமிழை வாழ வைப்போம், தமிழர்களை ஆள வைப்போம்!

இதை நனவாக்கிக் காட்ட என்ன வழி? நேரு உறுதிமொழிக் குப்பையைப் பெருக்கித் தள்ளுவோம்! மொழிப் போரில் இன்னுயிர் நீத்த, இன்னலுற்ற அந்த மாவீரர்களின் நினைவாய்ப் புத்தம் புது உறுதிமொழியைத் தமிழர்க்களிப்போம்! அந்த உறுதிமொழியே இனி முரணற்ற மொழிக்கொள்கை முழக்கமாகத் தமிழர்தம் மேடைகளில் ஒலிக்கும்:

இந்தியும் ஆங்கிலமும்

ஒருபோதும் வேண்டாம்!

செம்மொழித் தமிழே

 எப்போதும் வேண்டும்!

Pin It