பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கிலத் திரைப்படத்தை 1998 ஆம் ஆண்டே தேசியத் திரைப்படக் கழகம் தயாரித்தா லும், தமிழ் மொழியாக்கம் செய்து இப்படத்தைத் திரையிட 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பிலும், ஜாப்பர் பட்டேலின் இயக்கத்திலும் வெளியாகி, தேசிய விருது பெற்ற இப்படம் தமிழகத்து வெள்ளித் திரைகளில் வெளிவர படாதபாடு படுகின்றது என்பதுதான் உண்மை. சாதியத்தின் இறுக்கமும், தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களும் இன்னும் உயிர்த் துடிப்போடு இருக்கின்றன என்பதற்கான சாட்சியங்களே இவை!

 

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு தலித் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் ஏற்படுத்தி, அம்பேத்கர் தமிழ்த் திரைப்படத்தை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட்ட வேண்டும். இயக்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், பொதுவாக மக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் இப்படத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதலே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

பாளையங்கோட்டை செந்தில்வேல் திரையரங்க உரிமையாளரைத் தொடர்ந்து சந்தித்து, இது குறித்துப் பேசி அவரை இத்திரைப்படத்தை அங்கு திரையிட ஒப்புக்கொள்ள வைத்தனர். இப்படம் ஓடும் நாட்களுக்கு ஏற்பாட்டாளர்களே (தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்) திரையரங்கத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையின் பிறகே திரையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநகரின் பல இடங்களிலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளும், எடுப்பான துண்டறிக்கைகளும் பண்பாட்டு அரங்கம் சார்பாக பரவலாக விநியோகிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் இம்முயற்சிக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தது. அனைவரும் எளிதாக இப்படத்தைப் பார்க்கும் வகையில் டிக்கெட்டுகளின் விலையையும் மிகக் குறைந்த அளவிலே (ரூ.20, ரூ.25, ரூ.30) நிர்ணயம் செய்து, “விற்பனைக் குரிய வியாபாரப் பொருளல்ல டாக்டர் அம்பேத்கர்” என்ற செய்தியையும் இதன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் இப்படத்தைப் பார்ப்பதற்கு ஏதுவாக மூன்றாவது நாள் இலவசக் காட்சிகளாக ஓடியது.

 

சனவரி 8, சனிக்கிழமை காலை 11 மணிக்காட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு தொடக்கி வைத்தார். இப்படத்திற்கு தமிழக அரசு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தனது தொடக்க உரையில் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இயக்கப் பொறுப் பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொது மக்களும் திரளாக வந்திருந்து திரைப்படத்தைப் பார்த்தனர்.

 

ஒரு காட்சி முடிந்து மறுகாட்சி தொடங்கும்போது திரை யரங்கின் வெளியே ஏற்பட்ட வாகன நெரிசலும், திரைப் படத்தைக் காண திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டமும் சாலையிலும் பேருந்துகளிலும் பயணித்தவர்களைத் திருப்பிப் பார்க்க வைத்தது. ‘எந்திரன்’ போன்ற பிரபலமாகப் பேசப்பட்ட பட வெளியீடுகளை விஞ்சும் வகையில் செந்தில் வேல் திரையரங்கே அந்த இரு நாட்களும் பரபரப்போடு இருந்தது.

Pin It