ambedkar about workersஒவ்வொரு தொழிலாளியும் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத தொழிலாளி, சக தொழிலாளியின் எதிரியாக இருப்பான் என்றார் அண்ணல் அம்பேத்கர். இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்ன? இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் அரசியல் தெளிவின்றி கட்சி ரீதியாகப் பிரிந்து கிடக்க முக்கிய காரணம் என்ன?

அது வேறொன்றும் இல்லை சாதிதான் காரணம். ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஏழை - பணக்காரன் என்ற வர்க்கப் பிரிவினை இருப்பதை உழைக்கும் மக்கள் உணர மறுக்கின்றனர்.

ஆரியப் படையெடுப்புக்கு முன்போ அல்லது பின்னரோ எப்போது சாதி தோன்றி இருந்தாலும், அது இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக நிலையாக உள்ளது என்பது உண்மை. இந்திய நாட்டில் நடைபெற்ற பல்வேறு சமூக - பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகும் இந்த சாதி ஆனது சாகவில்லை.

ஆனால் உழைக்கும் மக்கள் வறுமையால் இறக்கின்றனர்.

இன்று கொரோனா தொற்று நோய்க் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் வழியில் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி சுருண்டு விழுந்து சாகின்றனர்.

இயற்கைப் பேரிடர் மற்றும் கொரோனா தொற்று நோய் காலத்தில் சளைக்காமல் மக்கள் நலப் பணியில் ஈடுபடுகின்றனர் தொழிலாளர்கள். ஆனால் தேர்தல் காலத்தில் அரசியல் விழிப்புணர்வு இன்றி உழைக்கும் வர்க்கமாக ஒன்று சேரத் தயங்குகின்றனர்.

இத்தகைய தயக்கத்தால் தவறான ஆளும் வர்க்கத்தின் கைகளில் ஆட்சி அதிகாரம் செல்வதால், உழைக்கும் மக்களும், சாமான்ய மக்களும் தவறான அரசியல் நிர்வாகத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

எல்லாம் நம் தலையெழுத்து, நம்ம செஞ்ச வினை என்று புலம்பிக் கிடக்காமல் அத்தகைய கேடான மனநிலையை விட்டொழித்து, ஆக்கப் பூர்வமான போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி, மக்களை அரசியல் வழியில் ஒரே வர்க்கமாக உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்டுவதே ஒவ்வொரு தொழிலாளியின் நோக்கமாக மாற வேண்டும்.

"வேலைப் பிரிவினைதான் சாதியின் வர்ணங்கள் என்றால், உலக நாடுகள் பலவற்றில் இந்த வேலைப் பிரிவினை நடந்ததே, அங்கெல்லாம் ஏன் சாதி வரவில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் சாதி வந்தது? குணங்கள் தான் சாதியைத் தீர்மானிக்கிறது என்றால் பிறப்பால் சாதி என்பது ஏன் உருவாகிறது" என்ற கேள்வியைக் எழுப்புகிறார் அண்ணல் அம்பேத்கர்.

பெரும்பகுதியான மக்களின் உழைப்பை சிறுபகுதியான பெரும்பணக்காரர்கள் சுரண்டி வாழ வேண்டும் என நினைக்கின்றனர். இதுவே அடிமை முறையின் அஸ்திவாரம்.

உலகின் பல நாடுகளில் அடிமை முறை தோன்றும் போது, உழைக்க ஒரு பகுதியினர், உண்ண ஒரு பகுதியினர் என்று தோன்றியது கவனிக்கத்தக்கது.

அடிமைச் சமுதாயம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் அமலாக்கப்பட்டது.

மதத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தியாவுக்கே உரித்தான தீண்டாமைக் கொடுமை பற்றியும் கவனித்தல் அவசியமாகிறது.

அந்நாளில் கடவுளின் பெயரால் நடந்த சமூகக் கொடுமைகளைப் பொறுக்காமல், மதம் மாறி தன்மானத்தோடும் கல்வியறிவோடும் மக்கள் வாழ விரும்பினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடிமை முறையிலான மதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் சிறந்த கல்வி பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைக்கு கனம் அதிகம் என்பது பழமொழி. அதாவது அடிமூட்டையானது அனைத்து சுமைகளையும் தாங்க வேண்டும்.

மனுஅநீதி மட்டுமல்ல, புரட்டுப் புராணங்களும் அடக்குமுறைகளை கடவுளின் பெயரால் நியாயப்படுத்துகிறது.

சமூக ஒடுக்குமுறை, வர்க்கச் சுரண்டல் ஆகிய இரண்டையும் சாதிய ஒடுக்குமுறை உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் பல சாதிகள் உள்ளன. ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி என்ற இரு வர்க்கங்கள் மட்டுமே உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு இல்லாவிட்டாலும், மேற்கண்ட வர்க்க ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் எப்போதும் உள்ளன. போராட்டங்கள் நடக்கின்றன. பெரும் பணக்கார முதலாளிகளின் ஆதரவு பெற்ற ஆளும் அரசாங்கங்கள் ஏழையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை சட்டத்தின் பெயரால் அடக்குகின்றனர்.

உலகமயம், தனியார் மயம், தாராளமயத்தால் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் வணிகமயமாகி உள்ள நிலையில், சமூக மற்றும் பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கையானது மோசமான நிலையில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர் படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை. குறிப்பாக 100 பணியிடங்களை எடுத்துக் கொண்டால், 50 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்ற சமூகங்கள் அனைத்தும் சேர்ந்து வெறும் 20 சதவீதம் பணியிடங்களில் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் அரிய வகை ஏழைகள் என்று 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்ற சமூகங்கள் 80 சதவீதம் பணியிடங்களை முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனர். இது எப்படி சாத்தியம்? எல்லாம் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாக தலைமைச் செயலகங்களில் உயர் பொறுப்புகளில் பணியாற்றும் முற்பட்ட வகுப்பினரே இத்தகைய குளறுபடிகளுக்குக் காரணம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் தங்கள் சந்ததிக்குக் கிடைக்கும் கடைநிலை அலுவலர் வேலையைக் கூட மிகப் பெரிய அங்கீகாரமாக் கருதி அத்துடன் திருப்திபட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் அதிகார வெறி கொண்ட, உழைக்காமல் உண்ண நினைக்கும் கூட்டமோ, சட்டங்களை உருவாக்கும் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு, உருப்படாத சட்டங்களால் உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு மதிப்பில்லாத நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

இத்தகைய சூழலில்தான், இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் சாதியை மறந்து, நாம் அனைவரும் உழைக்கும் மக்கள் என்ற ஒரே எண்ணத்தோடு ஒன்று சேர்ந்து, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை அமைக்கப் பாடுபட வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்று அதன்படி நடப்பது அவசியமாகிறது.

இந்நிலை வர வேண்டுமானால், அண்ணல் அம்பேத்கர் கூறியது போல், ஒவ்வொரு தொழிலாளியும் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தின் அரசியலே, சமுதாயத்தையும் அதன் சொத்துக்களையும் திறம்பட நிர்வாகம் செய்யும் வலிமை கொண்டது.

இன்று ஆளும் அரசாங்கங்களால் அனைத்து இந்திய மக்களின் சொத்துக்களான அரசு நிறுவனங்களை விற்கத் தான் இயலும். அவ்வளவுதான் அவர்களின் நிர்வாகத் திறமை.

ஆனால், உழைக்கும் வர்க்க மக்களால் மட்டுமே, எல்.ஐ.சி. போன்ற மக்கள் நலன் காக்கும் பொதுத்துறை அரசு நிறுவனங்களை உருவாக்க முடியும்.

நாடு என்றால் மக்கள். உழைக்கும் மக்கள் தான் இந்திய நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள். அவர்களின் கைகளில் அதிகாரம் சென்று சேர்வதுதான் நாட்டை வளப்படுத்தும்.

- சுதேசி தோழன்

Pin It