2016, 2017-இல் மாநில அரசுகளைப் பிடிக்க வேண்டும்; பட்டியல் வகுப்பு மக்களைக் கவர மேதை அம்பேத்கரை சிக்கெனப் பிடிக்க வேண்டும்!

1. இந்தியாவை ஒற்றை ஆட்சியாகவே வைத் திருக்க வேண்டும்;

2. இந்தியாவின் ஆட்சிமொழியாக - இந்திய அரசின் அலுவல் மொழியாக-இந்தி மட்டுமே இருக்க வேண்டும்;

3. இந்துத்துவ வாழ்க்கை முறை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப நால்வருணப் பிறவி சாதி அமைப்பை - பழக்கவழக்கச் சட்டத்தைக் காக்கும் சட்டங்களை எக்காரணம் கொண்டும் நீக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இவை மூன்றும்தான் 1989 வரையிலும், இனி யும் இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகள்.

4. 1990 முதல் தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்கிற புதிய முதலாளித்துவப் பொருளாதார முறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்ப தும் இந்திய தேசிய காங்கிரசின் தலையாய கொள்கை.

1991க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பாரதிய சனதாக் கட்சிக்கும் இந்த நான்கு கொள்கைகளுமே உயிரானவை.

இந்த இரண்டு அனைத்திந்தியக் கட்சிகளுக்கும் மாற்றாக உருவாகியிருக்க வேண்டிய இந்தியப் பொது வுடைமைக் கட்சிகள், மேலே சொல்லப்பட்ட நான்கு கொள்கைகளில் புதிய பொருளாதாரக் கொள்கையை மட்டும் அன்றும் இன்றும் எதிர்த்து நிற்கின்றன. ஆனால் மற்ற மூன்று கொள்கைகளைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை.

1952-க்குப் பிறகு புற்றீசல் போல் முளைத்த மாநில அல்லது பிராந்தியக் கட்சிகளில், திராவிடக் கட்சிகள் மட்டும் வாய் அளவில் இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்தன.

1957இல் நாடாளுமன்றத்தில் திராவிடக் கட்சிகள் நுழைந்த பிறகு, சில சமயங்களில் இந்தி ஆட்சி மொழி ஆவதை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டன. மற்ற மூன்று கொள்கைகளைப் பற்றி அவை கவலைப்பட வில்லை என்பதுடன், அவற்றைக் காப்பாற்றுவதற்கா கவே இந்திய ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரசுடனும், பாரதிய சனதாவுடனும் மாறி மாறிக் கூட்டு வைத்துக் கொண்டு, பதவிகளையும் பவிசுகளையும் கைப்பற்றுவதிலும் பணக் கொள்ளையடிப்பதிலுமே முழு நாட்டத்துடன் செயல்பட்டன.

மற்ற பிராந்தியக் கட்சிகளான லோகியாவாத சமதர்மக் கட்சிகளும், தேசியவாதக் கட்சிகளும் மேலே கண்ட நான்கு கொள்கைகளையும் வளர்த்தெடுத்திட காங்கிரசுக்கும், பாரதிய சனதாவுக்கும் மாறி மாறித் துணைபோயின.

தொலைநோக்குப் பார்வையுடன், 1948 பிப்பிரவரி யில், “இந்திய ஆட்சியை கி.பி.2000-இல் கைப் பற்றிடத்” திட்டமிட்ட இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் - பாரதிய சனதாக் கட்சி, 2014-இல் தன்னளவில், இந்திய அளவில் மக்களவையில் 543-க்கு 282 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியை அமைத்துவிட்டது.

மத்திய ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய சனதாக் கட்சி, அடுத்து, எல்லா மாநிலச் சட்டமன்றங்களையும் கைப்பற்றிடத் தீவிரமாகத் திட்டமிடுகிறது.

பாரதிய சனதாக் கட்சிக்கு புதியதாக 10 கோடி உறுப்பினர்களைச் சேர்த்தல், 10 இலட்சம் தீவிர உறுப்பினர்களைச் சேர்த்தல், வரலாற்றாளர்கள் - அறிவியலாளர்கள் 5 இலட்சம் பேரை உறுப்பினர் களாகச் சேர்த்தல், இவர்களுக்கு 2015 மே-சூலை காலத்தில் ‘சம்பார்க்’ எனும் பயிற்சி அளித்தல், 2015 ஆகத்து - அக்டோபரில் ‘பிராஷக் ஷான்’ பயிற்சி அளித் தல், 647 மாவட்டங்களிலும் பாரதிய சனதாக் கட்சி அலுவலகங்களை அமைத்துச் செயல்படல் என்று திட்டமிட்டுவிட்டது.

அத்துடன், கடந்த 1967 முதல் தொடர்ந்து இடை வெளியின்றித் தமிழகத்தை ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்திவிட்டு, தனியாகவோ, சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தோ 2016இல் தமிழக ஆட்சியைப் பிடிக்க பாரதிய சனதா திட்டமிட்டுவிட்டது.

இதற்கு வழிகோலும் வகையில், இந்திய மத்திய அரசு அமைச்சர்கள் 29 பேரும், இராஜஸ்தான், அரியானா, மத்தியப்பிரதேச பாரதிய சனதாக் கட்சி முதலமைச்சர்கள் 3 பேரும் தமிழகத்துக்கு வருகை தந்து தமிழக மக்களைச் சந்தித்துப் பேசிக் களத்தின் இருப்பு நிலையை அறிந்து செல்ல எல்லாம் செய்த பாரதிய சனதாக் கட்சி, 12-5-2015க்குப் பிறகு அத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது.

மாமேதை பி.ஆர். அம்பேத்கரின் 125ஆம் பிறந்த நாளை முன்வைத்து, 4-5-2015 திங்கள்கிழமை புது தில்லியில் புத்தர் விழாவை மிகச் சிறப்பாகக் கொண் டாட மோடி அரசு ஏற்பாடு செய்தது.

அத்துடன், மத்திய அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை வழியாகக், கட்டாயமாக, அம்பேத்கரைப் பற்றி ஜப்பார் படேல் (Jabbar Patel) எழுதிய திரைப்படக் கதையை ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பங்களா, ஒடியா முதலான மொழிகளில் - குடிஅரசு நாளான சனவரி 26, நாடு விடுதலை பெற்ற நாளான ஆகஸ்டு 15, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்பிரல் 14 - ஆகிய மூன்று நாள்களிலும் காட்சிப்படுத்தவும், ஒலி, ஒளி மூலம் பரப்புரை செய்யவும் ஆணையிட்டுள்ளார், மோடி.

மேலும், மேதை அம்பேத்கர் 1920களில் இலண்ட னில் தங்கிப் படித்த இல்லத்தை ரூபா 40 கோடி விலை தந்து, மகாராட்டிர அரசு வாங்கிட, மோடி அரசு ஆணையிட்டுள்ளது. அக்கட்டடத்தில் அம்பேத்கரைப் பற்றிய கண்காட்சி மற்றும் நூலகம் அமைக்கவும் இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது.

இவையெல்லாம் அம்பேத்கரின் புகழைப் பரப்பிட ஏற்ற செயல்பாடுகள் என்பதில் அய்யமில்லை.

ஆனால் இந்தியாவிலுள்ள 126 கோடிப் பேரில் ஆறில் ஒரு பங்காக இருக்கிற பட்டியல் வகுப்பு மக்கள் இன்னமும் தனிமையான குடியி ருப்புகளிலேயே இந்தியா முழுவதிலும் குடியமர்த் தப்பட்டிருப்பதை - எந்த விட்டுணு, சிவன் கோவிலிலும் நுழைய முடியாமல் அவர்கள் தடுக்கப் படுவதை - எந்தப் பொது சுடுகாட்டிலும் அவர் கள் பிணம் வைத்து எரிக்க முடியாததை - கொழு குத்திட ஒரு செண்ட் நிலம் கூட அவர்களில் 100க்கு 70 பேருக்குத் தரப்படாமல் இருப்பதை - இப்படிப்பட்ட மானிட சமத்துவ உரிமைக் காப்புக்கு இன்றியமையாத பணிகளை மேற்கொள்ளவும் நிறைவேற்றவும் எந்தக் கட்சி அரசும் உரிய நடவடிக்கையை இன்றுவரை மேற்கொள்ள வில்லை.

எல்லாச் செய்தி ஊடகங்களிலும், ஆறாம் வகுப்பு முதல் எல்லா வகுப்புப் பாடங்களிலும் இவை பற்றிய கொள்கை விளக்கமும், அம்பேத் கரின் அரிய பெரிய இந்துச் சட்டத்திருத்தச் சாதனைகளைப் பற்றியும் கற்பிக்கப்பட எதையும் செய்யவில்லை.

“ஒரு நல்ல வாக்கு வங்கியை” எளிதாக - ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிட மட்டுமே - பஞ்சத்துக்கு ஆண்டி பெருத்த கதையாக, பாரதிய சனதா ஆட்சியின் இந்தப் புதிய கோலம்பூண்ட நடவடிக்கைகள் இருப்பதை - உண்மையான பெரியார், அம்பேத்கர் அன்பர் களும், தொண்டர்களும், பட்டியல் வகுப்பினரும், பிற்படுத்தப்பட்டோரும் உணர வேண்டும் என விழை கிறேன்.

இதில், ‘தமிழன் தறுதலையாக இருக்கிறான்’ என்பதே என் கணிப்பு.

Pin It