ஒரே பொது மொழி இருந்தால் ஒற்றுமை நிலவும் என்றார், காந்தியார். ஒரே மதம் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும் என்றார், ஜின்னா. இருபெருந் தலைவர்கள் கருத்தும் இன்று பொய்த்து விட்டதைக் காண்கிறோம்.

இது மட்டுமா? ஒரே கொள்கையை உடையவர்களிடத்தில் கூட ஒற்றுமை கிடையாது என்பதும் உலகில் காணப்படும் உண்மையாயிருக்கிறது.

வங்காளத்தில் ஒரே பொது மொழிதான் இருந்தது. வங்காளி மொழி. ஆனால் மத அடிப்படையில் மோதல் ஏற்பட்டது; இரத்த ஆறு ஓடிற்று. கிழக்குப் பாகிஸ்தான் உருவெடுத்தது. அதன் பிறகு இன்றுங்கூட சிறுபான்மை மதக்காரர் பெரும்பான்மை மதக்காரர்களால் இரு சார்பிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்படுகின்றனர். அகதிகளாகப் பல்லாயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இனி, மேற்குப் பாகிஸ்தானை எடுத்துக் கொண்டாலும் அங்குள்ள பொது மொழி உருது, அம்மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்கவில்லை; பொது மதமான இஸ்லாமும் ஒற்றுமையை உண்டாக்க முடியவில்லை. அரசியல் ஆதிக்கம்பதவி வேட்டை பெயரால் இன்று அடிதடி, கலவரம், துப்பாக்கி வேட்டு, கொலை முதலியன நிகழ்வதைக் காண்கிறோம்.

ஒரே தாய் மொழியான மலையாளத்தைப் பொது மொழியாகக் கொண்டுள்ள கேரளத்தில் என்ன நடக்கிறது? தொடர்ந்து மூன்றாண்டு கூட ஒரு மந்திரி சபை பதவியிலிருக்க முடியவில்லை; அடிக்கடி இடைத் தேர்தல் நடக்க வேண்டியிருக்கிறது.

இனி, ஒரே கொள்கையை உடையவர்களிடையிலாவது ஒற்றுமை நிலவுகிறதா என்றால் அதுவுமில்லை. ஒரே சோஷலிசக் கொள்கையைக் கொண்ட சீனாவும் ருஷ்யாவும் மோதிக் கொண்டிருக்கின்றன; இந்தியாவிலும் இரண்டுவித கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதைக் காண்கிறோம். ஆளும் கட்சியிலும் 23 பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம். யார்யாரைக் கவிழ்ப்பது, எப்படிக் கவிழ்ப்பது என்பதே நோக்கமாக உடையவர்கள் ஆளும் கட்சியிலும் சரி, எதிர்க்கட்சிகளிலும் சரி, மலிந்து கிடக்கின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒற்றுமை என்பது விரிந்த மனத்தால் விளையக் கூடியதே ஒழிய, வெளிப் பகட்டுக்களால் ஏற்படக் கூடியதல்ல. ஒரே குடும்பத்தில், ஒரே ஜாதியில், ஒரே சுற்றத்தில் ஒற்றுமை இருக்கிறதா? பணப் பேராசை, பொறாமை, கெட்ட எண்ணம், அடுத்துக் கெடுக்கும் ஈனச்செயல் இவை போன்ற நச்சு ஊற்றுக்கள் மனித நெஞ்சில் ஊறிக் கொண்டிருக்கும் வகையில் ஒற்றுமை என்பது பேச்சளவிலும் ஏட்டளவிலும்தான் இருக்க முடியும்.

ஆதலால் மனிதரிடையே உயர்ந்த பண்புகளை வளர்ப்பதற்கு முயல்வதே முக்கிய வேலை. இதை எப்படி வளர்ப்பது? நாட்டுப் பற்று மூலம் முடியுமா? மொழிப்பற்று மூலம் முடியுமா? அல்லது மதப்பற்று, சாதிப்பற்று, கொள்கைப் பற்று மூலம் முடியுமா?

இல்லை; முடியாது. மனிதாபிமானம் என்ற மனிதப் பற்று ஒன்றின் மூலமாகத்தான் முடியும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காக, அவன் துயரத்தை நீக்குவதற்காக, அவன் குறைகளைப் போக்குவதற்காகத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும். இதில் ஜாதி, மதம், இனம், பால், நிறம், கட்சி முதலிய வேற்றுமைகளைப் பாராட்டக் கூடாது. மனிதப் பிறவி என்ற பொதுநோக்கு வேண்டும். கிணற்றுக்குள்ளே விழுந்துவிட்டவரைத் தூக்குவதில் எப்படி மனித உயிர் அன்பு மட்டுமே மனத்தில் நிற்கிறதோ அதேபோலத்தான்; வாழ்க்கைக் கிணற்றில் வீழ்ந்து கிடப்பவரைத் தூக்குவதிலும் பரந்த கண்ணோட்டம் இரக்கம் அன்பு வேண்டும்.

இதைவிட்டு மொழி வெறியையும் மத வெறியையும் வளர்த்துக்கொண்டு, தேசியம், பக்தி என்றெலாம் கூறிக் கொண்டிருப்பது. ஒற்றுமையை வளர்க்காததுடன், கிணற்றில் வீழ்ந்த மனிதன் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவது போன்ற செய்கையே ஆகும்.

மனித குலத்திடம் அன்பு காட்டி உதவுவதுதான் பகுத்தறிவு என்பது. இது, குறுகிய இருட்டறைகளை விட்டு வெளியேறிப் பரந்த புல் வெளியில் நடமாடுவது போன்றதாகும்.

சாதிமதமூடநம்பிக்கை ஒழிப்பு என்பது மனிதாபிமானம் என்ற அறிவுப்பாதையில் நடந்து செல்வதாகும்.

இம்முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதுதான் பரந்த எண்ணங்கொண்டவர்களின் கடமை.

சுயமரியாதை (பகுத்தறிவு) இயக்கம் மனித அன்பு இயக்கம், குறுகிய பார்வையில்லாத, உலக அறிவியல் வாத, நீண்டகால முயற்சியின் ஒரு பகுதி. இதில் கலந்து தொண்டாற்றுவது, தங்கச் சுரங்கம் தோண்டுவது போன்றது. மிக மிகத் தொல்லையானது; துன்பமானது; உடனடியான பலனைத் தராதது. ஆனால் வருங்காலத்து மக்களுக்கும், இக்காலத்துச் சிறுவர்கட்கும் நெஞ்சுறுதியையும் தன்னம்பிக்கையையும் தரக்கூடிய பல சத்துச் சேர்ந்த உயர்ந்த ரகமான “டானிக்!''

("அறிவுப் பாதை' 111965)

Pin It