நாம் யாருக்கும் மேலல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல, நாம் ஆள ஆட்கள் வேண்டாம். நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம். நம்மிடையே தரகர் கூடாது. தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும், எப்படித்தான் துணியும்?

இந்து மதம் என்பதிலே உள்ளக்கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்மை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதை விட்டு, மாளவழிதேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார். அதன் இடுக்கிப் போய்ச் சேரார், இழிவைத் தேடார்.

நமக்கு நாலு; ஆறு நாற்பத்தெட்டுத் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம், நமக்கு ஒரே ஆண்டவன் போதும், உருவமற்ற தேவன், ஊன் வேண்டாத சாமி, ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி ஆடல் பாடல், அலங்காராதிகள், அப்பம், பாயசம், அகாரவடிசல் கேட்காத சாமி, அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி, அர்ச்சனை உண்டியல் என்று கூறி அக்ரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும்.

நம்மிடமிருந்த தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சினைப் பெற்று நம் பாசூரர்களுக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.

ஆள்நடமாட ஓர் உலகம்; ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஓர் உலகம், நாம் தங்க ஓர் உலகம், மேலே ஏழு கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம். அதல விதல், சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம், பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம், இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம். ஓட்டிலே, நமக்கு இவை வேண்டும்.

நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும் சோலையும், வாவியும், நதியும் மக்களுக்குச் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும் கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும்உலவும் உலகம் வேண்டாம், நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ்ச் சாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

Pin It