கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி என்று தமிழைப் பாராட்டுவதை உயர்வு நவிற்சி என்று ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு அஃது உண்மை நவிற்சியே என்று தன் அறுபதாண்டுக் கால ஆய்வுப் பணிகளால் நிறுவிக் காட்டியவர் மொழிஞாயிறு ஞா. தேவ நேயப்பாவாணர் ஆவார். அவர் அகத்தியர் காலந்தொட்டுத் தமிழை அடர்த்து வருகின்ற வடமொழிப் பிணிப்பினின்று முற்றும் மீட்ட மொழிமீட்பர்! தமிழின் வேர்களைத் தேடித் தேடித் துருவிக் கண்டறிந்த மொழி மூலர்! மொழிநூல், மாந்தநூல், வரலாற்று மெய்ம்மைகளை வெளிக்கொணர்ந்த ஆராய்வாளர்! தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை உலகுக்கு உரைத்த தமிழ்வாணர்! இவ்வுண்மையை வெளிப்படுத்தும் ஊடகங்களாகவே அவரின் நூல்கள் வெளிவந்தன. அவரின் வேர்ச் சொற் கட்டுரைகளும் இந்த உண்மையை (ஒருவாறு) எடுத்துக் காட்டின. என்றாலும் விரிவாக எழுதவேண்டும் என்று பாவாணர் விரும்பியுள்ளார். வேர்ச்சொற்கட்டுரைகள் செந்தமிழ்ச் செல்வியில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தபோது வ.சு. அவர்கட்கு எழுதிய மடலில், “தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும்’’ என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டியவாறெல்லாம் என்னைத் தகுதிப்படுத்தி வருகிறேன். இன்னும் ஐந்தாண்டிற் குள் அது நிறைவேறிவிடும் என்பது என் நம்பிக்கை என்று 1972இல் பாவாணர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அவ்வண்ணமே 1977இல் தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் என்ற இக்கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கினார்.

தமிழின் தலைமையை அறுதியும் இறுதியும் உறுதியுமாக ஐயம் திரிபு அற நாட்டுதற்காகவே இக்கட்டுரைத் தொடரை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார் பாவாணர். தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் தனிச்சொற்கள் என்றும் இணைச் சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் முத்திறத்தன. தனிச்சொற் கட்டுரைத் தொடர் 40 கட்டுரைகள் கொண்டது. இணைச் சொற்கள் மெல்-வல், அம்மை-அப்பன் போல்வன. தொகுதிச் சொற்கள் ஆ(அ) - ஈ(இ) - ஊ(உ) ஆகிய முச்சுட்டுச் சொற்கள் போல்வன. இணைச் சொற் கட்டுரை 5. தொகுதிச் சொற் கட்டுரை 5 என்று இக்கட்டுரைத் தொடரின் அமைப்புக் குறித்து முன்வரையறுத்திருந்த பாவாணர் பின்னர் 50 தனிச் சொற்களையும் 20 தொகைச் சொற்களையும் தெரிந்து கொண்டுள்ளதாய்க் குறிப்பிட்டுள்£ர். தனிச் சொற்களும் தொகுதிச் சொற்களும் முறையே தனியடியாரும் தொகை அடியாரும் போல்வன என்று விளக்கினார். ஆயினும் அவர் மறைவிற்கு முன் 1. உம்பர் 2. உய் 3. உருளை 4. அரத்தம் 5. கண் 6. காந்து 7. காலம் 8. கும்மல் 9. அத்தி 10. எல்லா 11. கலித்தல் 12. மகன் 13. மன் 14. தெய்வம் 15. புகா (உணவு) 16. பள்ளி 17. பாதம் 18. புரி (வளை) 19. பொறு 20. பகு 21. பேசு 22. திரும்பு ஆகிய 22 தனிக் கட்டுரைகளும் 1. பூனைப் பெயர்கள், 2. நெருப்புப் பற்றிய ‘சுள்’ அடிச்சொற்கள் என்ற இரு தொகுதிக் கட்டுரைகளுமே வெளியாகின.

இக்கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள பெரும்பான்மை யான கருத்துகள் பாவாணரின் முன்னல்களில் கூறப்பட்டு இருப்பனவே. எனினும் அவற்றை அறிவியல் முறைப்படி நெறிப்படுத்தியும் தெளிவாக விளக்கியும் திறம்பட வலியுறுத்தியும் கூறியிருப்பது புதுச் சிறப்பாகும். ஒவ்வொரு கட்டுரையும் எழுவகையான சிறப்புக் கூறுகளைத் தாங்கி வெளிவந்துள்ளன.

1. வேரினின்று சொல் திரிந்த வரலாறு காட்டல்

(சொல்லின் தோற்றமும் வழிமுறைத் திரிபும் கூறுதல்)

வேர்ச்சொல்லில் இருந்து தலைப்புச் சொல் எங்ஙனம் திரிந்து வந்துள்ளது என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாக வும் எடுத்துக் காட்டுகிறார். சான்றாகப் பேசு என்ற சொல்லின் வேர் விளக்கத்தைக் காண்போம். பொள்ளுதல் = துளைத்தல், பொள்ளல் = துளை, பொள் = துளை, உட்டுளை, பொள் > பொய், பொய்தல் = துளைத்தல், துளைக்கப்படுதல், துளையினின்று ஒழுகுதல், பொய் = துளை, மரப்பொந்து, பொய் = பெய், பெய்தல் = மேனின்று ஒழுகுதல், வார்த்தல், பெய் = பேய், பேய்தல் = பெய்தல் (உ.வ.) பேய்ந்துங் கெட்டது ஓய்ந்துங் கெட்டது (பழ.) பேய் = பேயு = பேசு, ஒ.நோ: தேய் = தேயு = தேசு, பேசுதல் = வான், நீரை ஒழுகவிடுவது போன்று வாய், சொல்லை ஒழுகவிடுதல்.

பொறு என்ற சொல்லிற்கு இதனினும் சுருக்கமாக வரலாறு வரைகின்றார். புல் = பொல் = பொர் = பொரு = பொறு என்று திரிவை முதலில் எடுத்துக்காட்டுகின்றார். பொருதல் = பொருந்துதல், பொருந்தித் தாக்குதல். பொரு - பொருப்பு = வான்முகட்டைத் தாங்குவதாகக் கருதப்பட்ட மலை என்ற அளவில் வேர் விளக்கம் அமைகிறது.

2. இருவகை வழக்குச் சொற்களை எடுத்துக்காட்டல்

“பாவாணர் தாம் எடுத்துக் கொண்ட ஒரு கருத்தை நிறுவுவதற்கு நாட்டு வழக்கைக் காட்டுவார். நாட்டின் உட்பிரிவாம் மாவட்ட வழக்கைக் காட்டுவார். வட்டார வழக்கென்றும் சுட்டுவார். உள் வட்டார வழக்குகளையும் ஊர் வழக்குகளையும் குறிப்பார். உலக வழக்கையும் குடிவழி தொழில்வழி வழக்குகளையும் தெரிவிப்பார். இவ்வாறு உலகியல் வழக்குகளிலும் செய்யுள் வழக்குகளிலும் தழும்பேறியவர் பாவாணர்’’ என்று பாவாணரின் வழக்குத் திறத்தை வரணிப்பார் இளங்குமரனார்.

இக்கட்டுரைத் தொடரிலும் காலம் என்ற சொல் வழக்குகளைக் குறிக்க வந்த பாவாணர், “காலக் கொடுமை, காலங் கண்டவன், காலங் கடத்தல், காலங் கடத்துதல், காலங்கழிதல், காலங்கழித்தல், காலங்காட்டி, காலங்காலத் தாலே, காலங்கிட்டுதல், காலங்கூடுதல், காலங்கூடிவருதல், காலங்கெடுதல், காலஞ்செய்தல், காலஞ்செல்லுதல், காலஞ் சொல்லி, காலத்தாலே, காலத்தின் கோலம், காலந்தள்ளுதல், காலந்தாழ்தல், காலந்தாழ்த்துதல், காலப்பயிர், காலம் பண்ணுதல், காலம் பார்த்தல், காலம்பெற, காலம் போதல், காலம் போக்குதல், காலமல்லாக் காலம், கால மழை, காலமறிதல், காலமாதல், காலம் மாறுதல், காலமெல்லாம், கால வரம்பு, கால வரையறை, கால வழக்கம், அந்தக் காலம், இந்தக் காலம், எந்தக் காலம், ஆங்காலம், போங்காலம், வருங்காலம், ஆயிரங்காலத்துப் பயிர், ஊறு காலம், நல்ல காலம், கெட்ட காலம், கேடு காலம், நீண்ட காலம், பஞ்ச காலம், பனிக்காலம், பேறு காலம், போன காலம், வந்த காலம், மழைக் காலம், வெயிற் காலம்’’ என்று 53 உலக வழக்குகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

“காலம் செய்கிறது ஞாலஞ் செய்யாது, காலத்திற் கேற்ற கோலம், காலத்திற்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி யெடுத்து ஆடினதாம், காலமல்லாக் காலத்திற் காய்த்ததாம் பேய்ச்சுரைக்காய், காலமறிந்து ஞாலம் ஒழுகு, காலமறிந்து பிழையாதவன் வாலம் அறுந்த குரங்காவான், காலம் போம் சொல் நிற்கும் கப்பல் போம் துறை நிற்கும், காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது’’ என்று எட்டு பழமொழிகளை எடுத்துக் காட்டியுள்ளார். “கால மெல்லாம் பாடுபட்டும் கையில் கால் துட்டைக் காணோம்’’ என்ற மரபுக் கூற்றையும் சுட்டியுள்ளார்.

செய்யுள் வழக்குகளாக, “இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், முக்காலம், காலப்பெயர், கால மயக்கம், கால மலைவு, கால வழு, கால வழுவமைதி, காலவாகுபெயர், காலவிடைநிலை’’ என்று 11 இலக்கணப் பெயர்களை எடுத்துக்காட்டியதோடு 17 தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார். “இதுகாறுங் கூறிய இருவகை வழக்குச் சொற்களே போதுமாதலின் பிற செய்யுட்சொற்கள் இங்குக் காட்டப்படவில்லை’’ என்று சிறப்புக் குறிப்பும் வரைந்துள்ளார் பாவாணர்.

3. திரவிட இனச்சொற் காட்டுதல்

தமிழ் திரிந்து திரவிடமாகவும், திரவிடம் மேலும் திரிந்து பிராகிருதமாகவும் ஆரியமாகவும் மாறியிருப்பதால் இயன்ற இடங்களில் எல்லாம் திரவிட இனச் சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார். கண் என்ற சொல்லுக்கு மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு, துடவம், கோத்தம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கோண்டி, கொண்டா, குய், குவீ, குருக்கு, மால்த்தோ, பிராகுவீ ஆகிய 17 மொழிகளில் இனச்சொல் காட்டியுள்ளார்.

4. ஆரியச் சொற்கள் தமிழினின்று திரிந்துள்ளதை அறிவியல் முறைப்படி எடுத்துக் காட்டுதல்

“காணுதல் என்னும் சொல் தமிழிற் புறக்கண்ணாற் காணுதலையும், அகக்கண்ணாற் காணுதலையும் குறிக்கும்.  முன்னது பார்த்தல் பின்னது அறிதல். தியூத்தானிய மொழிகளில் காண் என்னும் சொல் cun(con)-ken-can-keen என்று திரிந்துள்ளது. cunning, ken, can என்ற சொற்களாகவும் வழங்குகிறது. kon (con) என்ற சொல்லில் முதலெழுத்து உயிர் முன்பின்னாக முறைமாறி (kno) க்னா என்றும் க்னோ என்றும் திரிந்துள்ளது. இலத்தீனத்தில் ககரம் எடுப்பொலியாகி gna என்றாகும். கிரேக்கத்தில் இவ்வொலி இரட்டிக்கிறது. gignonosko சமற்கிருதத்தில் க (ga) ஜகாரமாகத் திரிந்துள்ளது. (jna) இந்தி, ஜான். ஜகரம் சில மொழிகளில் z- ஆகியுள்ளது. உருசியன் znate. பெருசியன் far-zan” என்று ஆரிய மொழிகளின் திரிபு முறைகளை ஒலியியல் நெறிகளுக்கேற்ப விளக்கி வரைந்துள்ளார் பாவாணர்.

5. ஆரியக் கூட்டுச் சொற்களும் தமிழாய் இருத்தலை எடுத்துக்காட்டல்

“Above என்னும் ஆங்கிலச்சொல் a+be+ufan என்னும் முச்சொற்கூட்டு’’ என்று பிரித்துக்காட்டிய பாவாணர் a என்ற சொல் அண் (மேல்) [-on-an-a] என்ற தமிழ்ச் சொல்லி னின்றும் be என்ற சொல் பூ [-sxt.bhu-E.be] (பூத்தல்= தோன்றுதல், உண்டாதல்) என்ற தமிழ்ச் சொல்லினின்றும் uயீணீஸீ என்ற சொல் உம்பர் [-உப்பர் -uதீமீக்ஷீ-uயீமீக்ஷீ-uயீமீஸீ] என்ற தமிழ்ச் சொல்லினின்றும் தோன்றியுள்ளதை எடுத்து விளக்கி யுள்ளார். “இங்ஙனம், பல செருமானியக் கூட்டுச் சொற்களின் உறுப்பாகத் தமிழ்ச்சொற்கள் உருத்தெரியாது திரிந்து பின்னிப் பிணைந்து கிடக்கின்றன’’ என்று அறிவுறுத்தினார்.

ஸம்ஸ்க்ருதம் என்னும் பெயரையும் ஸம்+கிருத எனப் பிரித்த பாவாணர் ‘ஸ்’ என்ற எழுத்து இடைச் செருகல் என்று தெளிவுபடுத்தினார். கும்-கும்ம என்ற தமிழ்ச் சொல்லினின்று cam, com, sym, san என்ற ஆரிய முன்னொட்டுகள் திரிந்து உடன், உடன்கூடிய, கலந்த என்ற பொருள் உணர்த்துதலை எடுத்துக் காட்டினார். கருத்தல் (=செய்தல்) என்ற சொல் க்ருத எனச் சமற்கிருதத்தில் வழங்குவதையும் எடுத்துக்காட்டி சமற்கிருதம் என்ற சொல்லின் பொருள் “கலந்து செய்யப்பட்டது’’ என்பதையும் தெளிவுபடுத்தினார்.

6. ஆரிய இனச்சொற்களில் குறிப்பாகச் சமற்கிருதத்தினின்றும் ஆங்கிலத்தினின்றும் சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டல்

கலித்தல் என்னும் தமிழ்ச்சொல் ‘கனு’ எனத் தெலுங்கில் வழங்கும். கனு இலத்தீனத்திலும் கிரேக்கத்திலும் geno, genos எனத் திரியும். அதினின்று gen, geny, gony என்ற பின்னொட்டுக்களும், gender, gene, geneology, general, generate, generic, generous, genersis, genetic, genial, genital, genitive, genices, genocide, gens, genteel, gentile, gentle, gentry, genuine, genus என்ற சொற்களும் பிறந்துள்ளதைப் பாவாணர் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.  Gen என்ற கிரேக்கச் சொல் சமற்கிருதத்தில் ‘ஜந்’ என்று திரியும். அதினின்று ஜந, ஜநக, ஜநந, ஜநநீ, ஜனயதீ, ஜநி, ஜநித, ஜநித்ர, ஜநீ, ஜந்து, ஜன்ம, ஜந்மத், ஜன்ய, ஜாத, ஜாதக, ஜாதி, ஜான என்ற சொற்களும் ஜ, ஜா என்ற பின்னொட்டுக்களும் பிறந் துள்ளதைப் பட்டியலாக நிரல்படுத்தியுள்ளார் பாவாணர்.

7. வடமொழியாளர் காட்டும் வேர்ச்சொல் தவறு என மறுத்தல்

“சமற்கிருதத்தின் தனியுடைமையல்லாத நூற்றுக் கணக்கான அடிப்படைச் சொற்கள் அதற்கும் தமிழுக்கும் பொதுவாகவுள்ளன. அவற்றுட் பெரும்பாலன தமிழ் என்பது அறிவியற் சொல்லியலால் இன்று வெட்டவெளியாகிறது’’ என்றுரைத்த பாவாணர், “சமற்கிருதச் சொற்களில் ஐந்தில் இருபகுதி தூய தமிழே’’ என்று அறிவித்தார். “கடன் கொண்ட தமிழ்ச் சொற்களையெல்லாம் சமற்கிருதச் சொல் லென்று காட்டற்கு, பொருந்தப்பொய்த்தலாகவும் பொருந் தாப் பொய்த்தலாகவும் குறிக்கோட் சொற்பிறப்பியலையே (Tendentious etymology) வடமொழியினர் கையாண்டு வந்திருக்கின்றனர்’’ என்பதைப் பாவாணர் கண்டறிந்தார்.

உல் என்ற வளைவுக் கருத்து வேரினின்று தோன்றி உல் - உல - உலவு - உலகு - உலகம் என்றவாறு திரிந்து உலகம் என்ற சொல் உருவாகியுள்ளது. தெ.லோகமு - சமற். லோக - இந்தி. லோக் என்று எடுத்துக்காட்டிய பாவாணர் வடமொழியாளர் ‘பார்க்கப்படுவது’ என்று பொருள்காட்டு வதைச் சுட்டுகின்றார். “‘லோக்’ என்னும் ஆரியச் சொல்லிற்குப் பார் (look) என்பது பொருள். E. look, OE. Locian, Os. Locon OHG Luogon, WG LOk. இச்சொல் நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபே. நகர (னகர)லகரங்கள் ஒன்றோடொன்று மயங்கும். உலகு (உலகம்) என்னும் சொல்லிற்கு உருண்டையானது அல்லது சுற்றிவருவது என்னும் பொருள் பொருந்துமா, அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருள் பொருந்துமா என்று அறிஞர் கண்டு கொள்க’’ என்று வடமொழியாளர் கருத்தை மறுத்துள்ளார். மேலும் உலகம் என்ற சொல் மக்கள் என்ற பொருளில் இலத்தீனில் vulgur என வழங்குதலையும் எடுத்துக்காட்டி தன் கருத்திற்கு வலிவு சேர்த்துள்ளார்.

இக்கட்டுரைத் தொடரில் சற்றொப்ப 1500 சொற்களுக்கு வேர் விளக்கம் காட்டியுள்ளார் பாவாணர். இவற்றுள் பல சொற்கள் திராவிட மொழிகளிலும் ஆரிய மொழிகளிலும் பிற மொழிகளிலும் வழங்குவதை எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றுள் முகாமையான சொற்கள் குறித்துப் பாவாணர் தம் முன்னூல்களில் சுட்டிக் காட்டியிருக் கின்றார். 1931இல் எழுதிய முதற்கட்டுரையிலேயே அண், அரத்தம், இலக்கம், உம்பர், உருண்டை, உருள், கால், கும்மல், திரும்பு, தெய்வம், பக்கம், பாங்கன், பாதை, பாழி, மன் முதலிய சொற்கள் ஆரிய மொழிகளில் வழங்குவதை எடுத்துக்காட்டியுள்ளார் பாவாணர். பாவாணரின் புத்தாய் வாக வெளிவந்த கட்டுரை கலித்தல் என்பதாம்.

கலித்தல் என்பது பிறப்புக் கருத்து வேர்ச்சொல். அதன் மூலம் கல். கல் என்ற வேர் கன் எனத் திரிந்து கன்று என்ற சொல்லைப் பிறப்பிக்கும். கன் தெலுங்கில் கனு என்றாகும். (“ஆபிரகாமு ஈசாக்குனு கனெனு’’ என்ற திருப் பொத்தக வரியை மேற்கோளாகக் காட்டியுள்ளார்) இச்சொல் பிராகுவீ மொழியில் khan என்றும் கடபா மொழியில் karr என்றும் குருக்கு மொழியில் kharj என்றும் வழங்குவதைப் பாவாணர் எடுத்துக்காட்டி இச்சொல்லின் பொருண்மையை நிறுவியுள்ளார். தெலுங்குக் கனு ஆரிய மொழிகளில் Gen- ஜந் என்று திரிந்து வழங்குவதை விரிவாகக் காட்டியுள்ளார்.

இக்கட்டுரையில் பாவாணரின் இன்னொரு கருத்து மாற்றத்தையும் காண முடிகிறது. “கன்னி என்ற சொல் கன்னுதல் (கனிதல்) என்ற சொல்லினின்று பிறந்தது’’ என்று வடமொழி வரலாற்றில் கூறியவர் இக்கட்டுரையில் குன்னி என்ற சொல் கன்னி எனத் திரிந்து சிறுமியைக் குறிக்கும் வழக்கையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இத்தொடரில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கட்டுரை ‘காண்’ என்பதாம். இக்கட்டுரையில் கண் என்ற சொல் கள் = கலத்தல், கள் = கருமை, கள் = சுடுதல், கள் = குத்தல் என்ற நான்கு வேர்களில் இருந்து தோற்றுவதற் கான வாய்ப்பு இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். “கண் எல்லாப் பொருள்களோடும் பார்வையாற் கலப்பதாலும், கருமையாய் இருப்பதனாலும், உடம்பிற்கு விளக்காய் இருப்பதனாலும், இரு கடையும் கூராய் இருப்பதனாலும் மேற்கூறிய நாற்பொருளும் அதன் பெயருக்குப் பொருந்து மேனும் ஒருவர் பார்த்த மட்டில் தெளிவாகப் புலனாவது கண்ணின் கருவிழியே யாதலாலும் சில சிற்றுயிர்கட்கும் பறவைகட்கும் கருவிழியே அன்றி வெள்ளிவிழியின்மை யாலும் கருமைக் கருத்தே கண் என்னும் சொல்லின் பொருட் கரணியமாகும்’’ என்று பாவாணர் விளக்கி வரைந்திருத்தல் குறிக்கத்தக்க ஒன்றாகும்.

தூய தமிழ்ச் சொற்கள்

இக்கட்டுரைத் தொடரில் அகனி, இலங்கம் (லிங்கம்), இறாட்டை, இறாட்டினம், கம்மல், கம்மி, கும்பம், கும்பா, சந்தி, சந்திப்பு, சுரம், சொன்னம், தீவம், தேவன், தேவி, பங்கம், பத்தி, பாகம், மகுடம், மந்திரம், மந்திரி, யாத்திரை முதலிய சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே என்று நிறுவி யுள்ளார். ஆராய்ச்சியின்மையாலும் ஏமாளித்தன்மை யாலுமே பல தென்சொற்கள் வடசொல் எனத் தமிழராலும் நம்பப்பட்டு வருகின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், “ஞானம் போன்று தெளிவாகத் தெரியும் வடசொல்லைத் தென் சொல்லென்று கூறுவதனால் தமிழனுக்கு அறியாமைப்பட்டம் வருவதோடு, வடமொழி கடன்கொண்ட தென்சொல்லும் வடசொல்லாகி, தமிழுக்குத் தீங்கே நேரும் என்பதைத் தெற்றெனத் தெளிந்துகொள்க’’ என்று எச்சரித்துள்ளார்.

பாவாணர் இக்கட்டுரைத் தொடருள் எழுதவிருந்த இரு சொற்களைப் பற்றிச் சில செய்திகளைக் காண்போம். “தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டற்குத் ‘தா’ என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா - ச. தா,தத் (dod) இலத். (do) தோ கிரேக்கம். தி. தோ’’ என்று தமிழர் மதத்துள் பாவாணர் விளக்கிக் காட்டியுள்ளார்.

இத்தொடரின் நிறைவுக் கட்டுரையாக ஆ - ஈ -ஊ என்ற முச்சுட்டுச் சொற்களை எழுதக் கருதியிருந்தார் பாவாணர். “முச்சுட்டுச் சொற்கள் தமிழின் தலைமையை அறுதியும் இறுதியும் உறுதியுமாக ஐயந்திரிபற நாட்டும்’’ என்பது அவர் கூற்று, ஆரியமொழிச் சுட்டுகட்கெல்லாம் தமிழ்ச்சுட்டுகளே அடிப்படையாதலால் வேறுபொருட் சொற்களை வடமொழியாளர் உடனடியாய் ஒப்புக் கொள்ளாவிடினும் சுட்டுப்பொருட் சொற்களைத் தமிழ்ச்சொல் என்று ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது.

“தமிழ்ச்சுட்டுகள் மூவேறு இடத்தைத் தப்பாது சுட்டும் மூவேறு தனி எழுத்தொலிகள் அல்லது ஓரெழுத்துச் சொற்கள், ஆரியச் சொற்களோ பெரும்பாலும் இடமாறிக் குறிப்பனவும், ஈரிடத்திற்குப் பொதுவானவும் அடிதிரிந் தனவுமான பலவெழுத்துச் சொற்கள். இஃதொன்றே தமிழ்ச்சுட்டின் முன்மை காட்டச் சாலும்’’ என்று கூறிய தோடு அமையாது, “திரவிடச் சுட்டுகள் சமற்கிருதச் சுட்டு கட்கும் அதனோடு சேர்ந்த வேறுபல இந்திய - ஐரோப்பிய குடும்ப மொழிச் சுட்டுகட்கும் மூலமான, யாப்பேத்தியச் (Japhetic) சுட்டடிகளை ஒத்துள்ளன’’ என்ற கால்டு வெலாரின் கூற்றையும் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“இந்தைரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப்புதைந்து கிடக்கிறது. இதைக் கண்டு பிடிக்கும் வரை மேலையர் மொழியாராய்ச்சி எல்லாம் விழலுக்கு நீர் இறைத்தலும், வானத்து மீனுக்கு வன் தூண்டில் இடுதலுமேயாகும்’’ என்று திட்டவட்டமாக உரைத்த பாவாணர் “என் வாழ்வின் குறிக்கோள் தமிழைத் திரவிடத் தாயாகவும் ஆரியத்தின் மூலமாகவும் உலகறிய நாட்டி அதை வடமொழிப் பிணிப்பினின்று அடியோடு மீட்பதே” எனச் செம்மாந்து கூறினார். தமிழின் விடுதலைக்காக அடிப்படைக் கருவிகளை - அரிய நூற்களை ஆக்கித் தந்துள்ளார். அவர் வழிஞராகிய நாம் ஆராய அணியமாவோம். ஆய்வுகள் செய்வோம். தமிழே முதல் தாய்மொழி என்பதை இத்தரைக்கு உணர்த்துவோம்.

Pin It