தமிழெழுத்தின் சீர்மையும் பிறமொழி யெழுத்துகளின் குறைபாடும்

இதுபோது வழக்கிலுள்ள தமிழ் அரிவரியைப் பிற மொழியரிவரிகளோடு ஒப்புநோக்கினால்தான், முன்னதின் சீர்மை விளங்கும். வடமொழி யரிவரியில், gh, bh; ங, ட: bh, m ஆகிய இவ்வீரெழுத்துகள் சிறிதே தம்முள் வேற்றுமையுடையன. kh என்னும் எழுத்தும் ஸ்வ என்னும் கூட்டெழுத்தும் ‘ரவ’ போலும் தோன்றும், முன்னும் பின்னும் கீழும் சேர்த்தெழுதும் கூட்டெழுத்துகள் (சம்யுக்தாக்ஷரம்) 160க்கு மேலுண்டு. இதனால் மிக நுணுக்கியும் வரிநெருக்கியும் எழுத முடியாது. கூட்டெழுத்துகள் பலவற்றிற்குத் தனி அச்சுருக்கள் (types) வேண்டும். உயிர்மெய் வரிகள் (33 * 14) 462.

வடமொழி யரிவரியையே கொண்ட இந்தி யெழுத்துகளில் இக்குறைபாட்டோடு இடை கடை வரும் அகர வூமையெழுத்துகளும் (Silent letters) உண்டு. உயிர்மெய் வரிகள் (33 * 12) 396.

தெலுங்கரிவரியில், ஓ bh; ப, வ; ந, ஸ ஆகிய இவ் வீரெழுத்துகள் முன்னும் பின்னுங் கீழும் சேர்த்தெழுதுங் கூட்டெழுத்துகள், இடத்தை அடைப்பன. மொ, மோ, யி, யீ, ய, யோ, ஹொ, ஹோ ஆகிய உயிர்மெய்யெழுத்துகள் ஏனையவற்றினும் வேறுபட்ட உயிர்க்குறியுடையன. உயிர்மெய் வரிகள் (33 * 35) 455. இவையல்லாது ‘நகராப் பொல்லு’ என்னும் ஒரு தனி னகரமெய் வரியும் ‘பண்டிர’ அல்லது ‘சகட்டிரேப்ப’ என்னும் றகரமெய்யும் ஒரு மெய்க்கு அல்லது உயிர்மெய்க்குப்பின் எழுதி முன் பலுக்கப்பெறும் ‘வெலுப்பல கிலக’ என்னும் ரகரவரியும் உள்ளன.

கன்னட அரிவரி தெலுங்கரிவரியைப் பின்பற்றிய தாதலின், அதிலும் இத்தகைய குறைபாடுண்டு. கன்னட உயிர்மெய் வரிகள் (34 * 14) 476.

மலையாள அரிவரியில், (குற்றியலுகர) லு, ஞு என்னும் ஈரெழுத்தும் kh, ch, p, v ஆகிய நாலெழுத்தும் மயக்கத்திற்கிடமாவன, கு, கூ என்னும் ஈரெழுத்தும் நுணுக் கெழுத்தில் கூர்ங்கண்ணருக்கன்றி வேறுபாடு தெரியா. உகர ஊகாரமேற்ற உயிர்மெய்கள் (uniform) ஓரியல் வடிவு கொண்டன வல்ல. முன்னும் பின்னும் கீழும் மேலும் சேர்த்தெழுதும் கூட்டெழுத்துகள் 300க்கு மேற்பட்டன. இவற்றுட் சிலவற்றுக்கேனும் தனி அச்சுருக்கள் வேண்டும். நீலீ, தீ, ஹ், ஸ் ஆகிய நாலெழுத்தும் இரட்டிக்கும் கூட்டெழுத்துகளில் கீழெழுத்து ஒன்றாகவே இருக்கும். உயிர்மெய் வரிகள் (36 * 16) 576.

தமிழிலோ ஒவ்வோர் எழுத்தும் எளிதாய் வேறுபடுத் தறியக்கூடிய தனி வடிவுள்ளது. மெய்கள் பதினெட்டே. இதனாலும், கூட்டெழுத்தின்மையாலும் எத்துணையோ குறைகின்றது. உயிர்மெய் வரிகள் (18 * 12) 216. ஆய்தம் ஒன்று ஆக, தமிழெழுத்துகள் மொத்தம் 247 தாம்.

சில உயிர்மெய் வரிகள் தமிழில் ஓரியல் வடிவு கொண்டனவல்லவெனின், இக் குறைபாடு தெலுங்கு கன்னட மலையாளத்திலும் உள்ளதே! அதற்கென் செய்வது?

உருதுவிற்குரிய பாரசீக - அரபி யரிவரியில் உயிர்மெய் வரிகள் இல்லாவிடினும், பலவெழுத்துகள் ஒரே வடிவுகொண்டு மேற்கீழ்ப் புள்ளித்தொகை வேறுபாட்டா லேயே வேறுபடுத்தப்படுகின்றன. பெரும்பாலும், ஒவ்வோ ரெழுத்திற்கும் சொல்லின் முதலிடை கடைக்குரிய மூவேறு வடிவுண்டு. யகரவரி இகரத்தையும், வகரவரி உகரத்தையும் குறிக்கின்றன.

நுணுக்கியும் நெருக்கியும் அழகாகவும் தெளிவாகவும் மணிபோல் எழுதப்பெறும் எழுத்துகளுள் தலைமையானது உரோம எழுத்து. அதற்கடுத்தது தமிழே. தமிழ் எழுத்து வடிவை மாற்றினால், பல இன்னலும் அழகிழப்பும் நேரும். பிறமொழி யெழுத்துகளில் எத்துணையோ குறைபாடிருக்கும் போது அவற்றையெல்லாம் கவனிக்காமல் தமிழெழுத்தை மட்டும் மாற்றுவது எற்றுக்கு? மேலும், ஒரு அல்லது சில செய்தித்தாளில் எழுத்தை மாற்ற விரும்பின், அதுபற்றிப் பாடப்புத்தகங்களிலும் இலக்கியத்திலும் ஏன் மாற்ற வேண்டும்? ஏற்கெனவே தமிழெழுத்துப் பலமுறை தகுந்த முறையில் சீர்திருத்தப் பெற்றே இற்றை வடிவெய்தியுள்ள தென்பதைத் தமிழ் எழுத்து மாற்றக்கோட்பாட்டினர் அறிவாரா? அவர் விரும்புவது சீர்திருத்தமா? அல்லது (சீர்கேடான) மாற்றமா?

தமிழெழுத்தில் செய்ய வேண்டிய திருத்தம்

தமிழெழுத்தில் இப்போது செய்ய வேண்டிய திருத்தம் இரண்டே. ஒன்று ‘ஈ’யை நீக்கி (மேற்சுழியிட்ட) ‘இ’யை வைத்துக்கொள்வது; இன்னொன்று ஒளகார உயிரிலும் அதனையேற்ற உயிர்மெய்களிலும் ‘ள’ வரியைச் சற்றுச் சிறிதாக்குவது (மேற்சுழியிட்ட) ‘இ’ வரிதான் முதலாவது இருந்து பின்பு இடைக்காலத்தில் அது விலக்கப்பட்டுக் கிரந்த வரியாகிய ‘ஈ’ புகுத்தப்பட்டது. ஒளகார வரியிலுள்ள ‘ள’ வரியும் ‘ஊ’ வரியிற்போல் முதலாவது சிறிதாகவேயிருந்து பிற்காலத்தில் தவறாகப் பெரிதாக எழுதப்பட்டது.

தமிழ்ப்புலவர் செய்த தவறு

இந்நூற்றாண்டில் எழுத்துப் பற்றித் தமிழுக்கு இருவகையில் ஊறு நேர்ந்தபோது தமிழ்ப்புலவர் தடுத்திலர். ஒரு மொழியில் பல கருத்துகேட்கும் சொல்லிருக்கும்போது, அவற்றுக்குப் பதிலாகப் பிறமொழிச் சொற்களையும், எழுத்துகளையும் வேண்டாது புகுத்துவது, ஒரு மொழியைக் கெடுக்கும் வழியாகும். தமிழில் ஒரே யுயிர்கொண்ட உயிர்மெய் வரிகளெல்லாம் ஓரியல் வடிவுகொண்டிருத்தல் வேண்டுமென்பது திருந்திய கருத்தன்று. எடுத்துக்காட்டாக ஐகார உயிர்மெய்களை எடுத்துக் கொள்ளின், அவை ஓரியல் வடிவுகொண்டிராமைக்குத் தகுந்த காரணமுண்டு. பழைய ‘னை’ என்பதற்குப் பதிலாக ‘னை’ என்று எழுதின், கூட்டெழுத் தாயெழுதுங் கையெழுத்தில் அது இரு னகரம்போல் தோன்றும். இம் மயக்கத்தை நீக்குதற்கே ஐகார வுயிர்க்குறி, பல சுழிகளும் வளைவுகளுங் கொண்ட எழுத்துகட்கெல்லாம் மேலிடப் பெற்றுள்ளது. இங்ஙனமே ஆய்ந்து நோக்கின் ஓரியல் வடிவு பெறாத பிற உயிர்மெய் வரிகட்கும் காரணம் தோன்றும். அச்சுவடிவு ஒன்றையே கவனித்துக் கையெழுத்து வடிவை நோக்காதவர்க்கே, தமிழ் உயிர்மெய் வரிகள் ஒழுங்கில்லாதனவாகத் தோன்றலாம். கையெழுத்தும் முக்கியம்; ஆங்கிலத்தில் அதனையும் அச்சு வடிவில் அமைத்திருக்கின்றனர்.

‘ªª’ என்னும் பழைய ஐகார வுயிர்மெய்க் குறியை ‘¬’ என்று இணைத்தும். கு ஙு சு ஞு டு ணு முதலிய உயிர்மெய் வரிகளை ஒரே முறையில் வரையும் ஒற்றைக் குறியாகவும் எழுதுவதெல்லாம் எளிமையும் தெளிவும் மட்டுமன்று, காலச் சிக்கனமும் பற்றியதாகும். ஆதலால், எவ்வகையிலும் (மேற்காட்டிய இரு வரிகளையன்றி) மாற்றம் செய்யத் தேவையில்லை. புதிய எழுத்து மாற்றம் செய்தித்தாள்கட்கு இன்றியமையாததாயின் அவைமட்டும் அதை ஆளட்டும். ஏனையர்க்கு வேண்டா.

இன்று செய்ய வேண்டியது

புதிய எழுத்து மாற்றம் புகுத்தப்படின், பல்கலைக் கழகப் பாடப் புத்தகக் குழுவையும், தனிப்பட்டவர்க்கும் பொதுமக்கட்குமுரிய எல்லா நூல்நிலையங்களையும், தமிழ்நூல் வெளியீட்டாளரையும், தமிழ்ச் சங்கங்களையும், பலவகை ஆவணங்களையும் மாணவரையும் தாக்கிப் பல இடர்ப்பாட்டை விளைவிக்கும். ஆதலால், இதைப் புகுத் தாதவாறு அரசியலாரை வேண்டிக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத் தமிழர் புதிய எழுத்துமாற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை யென்றும், பழைய எழுத்தையே கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. தமிழ்ச்சொற்களைப் போன்றே தமிழ் எழுத்தையும் தூய்மையாகப் பேணத் துணிந்த யாழ்ப்பாணம் தழைத் தோங்குக!

(செந்தமிழ்ச் செல்வி, நவம்பர் 1951)

Pin It