செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முடகம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும்அவளைப் புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புகள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்

குருதிக் கடல் நிலத்தின் பெருங்காற்று

பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக் கிடக்கிறது
வெடிகளை அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைந்திருந்தார்
வேழியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்

நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பறறைகளினூடே
வெடிகளை சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது

இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன

அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத்துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறுகதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோ கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.

நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவால் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்

இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக்காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளை கூவியபடியிருக்கிறது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.