rajapakse ranil and maitriஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இன்றைய பிரதமர் ராஜபக்சே, நேற்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகிய மூவரில் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்கள் யாருமில்லை. வேண்டுமானால் கூடுதல் கேடு செய்தவர்கள் யார் என்று சொல்லலாம். அதில் ராஜபக்சேவுக்கு முதலிடம்.

2009இல் தமிழினத்தையே அழித்துவிடும் நோக்கில் ராஜபக்சே இனப்படுகொலையில் ஈடுபட்டிருந்தபோது, சிறிசேனாதான் ராணுவ அமைச்சர். இருவருக்கும் முன்னோடியாக, உலகம் முழுவதும் சென்று, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்னும் கருத்தை விதைத்தவர் ரணில். எனவே தமிழின அழிப்பில் இவர்கள் மூவருக்கும் பங்கு உண்டு.

நல்லவர் போல் நடித்து, நாடெங்கும் சென்று, தமிழர்களுக்கு கேடு விளைவித்தார் ரணில் என்பதால்தான், 2005 இலங்கைத் தேர்தலில், ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் மக்களைக் கேட்டுக்கொண்டனர். அதுவே ராஜபக்சே வெற்றிக்கும், நம் இன அழிவுக்கும் வழிவகுத்து விட்டது.

இப்போது மீண்டும் ராஜபக்சே, சட்டத்திற்குப் புறம்பாகப் பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றமும் நவம்பர் 5 வரையில் முடக்கப்பட்டுள்ளது. முதலில் 16 ஆம் தேதி வரை என்றனர். கடும் எதிர்ப்புகள் கண்டு, அதனை 5 ஆம் தேதி என்று மாற்றி உள்ளனர்.

ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகச் சரிந்து கிடக்கிறது. அவர்களின் ஆண்டு வருமானமான 14.5 மில்லியன் டாலர் ரூபாயில், 12 மில்லியன் டாலருக்கும் மேலாகக் கடன் கட்டிக் கொண்டுள்ளனர். கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீரழிந்துகொண்டிருக்கும் சிறீலங்கா, சீனாவின் இன்னொரு மாநிலம் ஆகிவிடும் போல் தெரிகிறது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது நம்மூர்ச் சொல்லாடல். தமிழினத்தை அழிக்க வேண்டும் கருதிய சிங்கள இன வெறியர்கள் இன்று தங்களையே அழித்துக் கொண்டுள்ளனர்.

காலம் நின்று கொல்லும்!

Pin It