மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன. இந்த தீர்ப்புகள் குறித்துச் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாக அம் மாநகரங்களில் முறையே டிசம்பர் 92 ஜனவரி93 மற்றும் நவம்பர்-டிசம்பர் 97 இல் நடைபெற்ற முஸ்லீம் இனப் படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறி விட்டன. அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அத்தகைய நாசகாரச் செயல்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லீம் இனப் பேரழிவுக் கலவரங்களை மறப்பது நியாயமா?

Jawahirullah மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால் அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லீம் இனப் பேரழிவுக் கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டு வெடிப்புகள் பற்றிய படங்களைப் பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரைப் பேட்டி கண்டு குண்டு வெடிப்பில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றனர். இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவுக் கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். முதலில் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றியும் பின்னர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குறித்தும் ஆய்வு செய்வோம்.

முதலில் கோவையில் 1998 பிப் 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு

குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153 ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்கத் துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்குக் காரணமானவர்களை, அவர்களது தலைவர்களைத் தாக்க வேண்டுமென்பது தான். எனவே இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது. பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்குத் திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரைப் போன்றோரைக் கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள் தனமாகும்.

இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலா வரும் பயங்கரவாதிகள். இந்தப் பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதைக் கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இரு மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

இனி நவம்பர்-டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்குச் செல்வோம்.

நவம்பர் சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இட ஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சினையை முன் வைத்துப் பேரணி மற்றும் மாநாட்டிற்காகப் பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வந்த வேளையில் தான், அந்தச் செய்தி 39 இப்ராஹீம் சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற எண்ணில் அப்போது இருந்த த.மு.மு.கவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது. கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டை மேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்குக் காவல் துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தமது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி(22), மற்றும் ஷபி(20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர். இத்துடன் பிரச்சினை முடிவடைந்து விட்டது என்பது தான் அந்தச் செய்தி. ஆனால் இதற்குப் பிறகு வந்த செய்திகள் நமது நெஞ்சத்தைப் பிளப்பதாக இருந்தது.

பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13.26.1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சி சாலை- டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவிமார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சி பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. அந்தக் கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிகடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடிய பின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது வன்முறை கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர். அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹிபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டை மேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப் கான் மருத்துவமனைக்கு வந்த போது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.

தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறை கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே நம்மிடம் எனது கல்யாண பட்டு எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை என்று நம்மிடம் சொன்னார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன் வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.

பிரபலப் பத்திரிகையாளரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் ‘எ காங் இன் தி வீல்’ என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

நாடாளுமன்றத்தின் கவனத்தைத் தப்பும் அளவிற்குக் கோவை கலவரங்கள் லேசானது அல்ல நய்யார் சபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அல்லது சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது.

இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத் தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர். என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்குச் சிறிய பிரச்சினை அல்ல.

12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்கு சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை.

நமது வர்ணனையை விடத் தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நாய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி விக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.

கோவையில் நவம்பர்- டிசம்பர் 1997 இல் இந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைதுச் செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறிக் குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்களை முன் நின்று நடத்திய காவல் துறை அதிகாரிகளோ அல்லது ஹிந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120, பி153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை. செல்வராஜ் கொல்லப்பட்டட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த இராமகோபாலன், அப்துல் நாசர் மஃதனியைப் போல் வருடக் கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூடச் சிறையில் தள்ளப்படவில்லை.

மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல் துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.

எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3 ஆம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரில் உடல்களைக் கோவை அரசு மருசத்துவமனையில் இருந்து பெற்று அதனைக் கோட்டை மேட்டிற்கு எடுத்து வந்து, இறுதித் தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாகக் கோவை சுண்ணாம்புக்கலவாய் அடக்கவிடத்தில் அடக்கப்பட்டது. கோவை வரலாற்றில் மதக்கலவரத்தினால் ஏற்படும் மரணங்களின்பொழுது நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்மை ஆனால் அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றிய போது, நல்ல காவல் துறை அதிகாரிகள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு பதில் வன்முறை தீர்வாகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாகக் கிட்டும் என்று நான் குறிப்பிட்டேன். அன்றைய கோவை மாவட்டக் கலெக்டர் சந்தானமும், ஊர்வலப் பாதுகாப்பிற்குத் தலைமை தாங்கிய ஐ.ஜி.ஆர்.வி, கோபாலனும் எனது உரையைப் பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.

வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவுச் செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதிகிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில் தான், தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துகள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்து அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தாம் குண்டு வெடிப்புகள்.

சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரைச் சிறையில் சந்தித்த போது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்தை உணர முடிந்தது. தி இந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்குப் பெரும் தண்டைனயாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்குச் சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.

நீதிபதி உத்திரபதி நீதி வழுவாமல் தனது இறுதி தீர்ப்பை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து மும்பை குண்டு வெடிப்பு பின்னணியை ஆராய்வோம்.

மும்பையில் மார்ச் 12 அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த தீர்ப்புச் சில வாரங்களுக்கு முன்பு வெளி வந்துள்ளன. 14 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 123 நபர்களில் 100 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளி வந்த பிறகு நிலவும் நிலை குறித்து சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் சாகரிகா கோஷ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

ஒரு மயான அமைதி நிலவுகின்றது. இந்தத் தீர்ப்பை மனக் குழப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒரு துளியளவு இரக்கமும் வெளிக்காட்டப்படவில்லை.

சுயபரிசோதனை செய்வதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. மக்கள் மன்றத்தில் சந்தேகத்தின் பலன் குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் அளிக்கப்படவில்லை. நீண்ட காலமாக நடைபெற்று வரும் விசாரணை குறித்துச் சந்தேகத்தைக் கிளப்புவது தேசவிரோத மற்றும் போலி மதசார்பற்ற செயலாகக் கருதப்படுகின்றது.

இருப்பினும் மூத்த வழக்குரைஞர்கள் மும்பை குண்டு வெடிப்பு விசாரணையை நிற்கும் ஆவணங்கள், பெரும் அளவிலான சான்றுகள் மற்றும் அவற்றுக்கான எதிர் ஆவணங்கள், நீண்ட நெடிய விசாரணை, மனிதனின் இயற்கையான ஞாபக மறதிகள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பாவம் நீதிபதி பி.டி.கோடே எப்படி நீதியாக தீர்ப்பு அளித்திருக்க முடியும். ஒரு மூத்த வழக்குரைஞர் இந்த வழக்கு விசாரணையை ஒரு குளறுபடியான விசாரணை என்றும் மக்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சஞ்சய்தத் பிரச்சினையில் பொது மக்களிடையே ஏற்பட்ட உக்கிரம் நிறைந்த விவாதத்தைத் தவிர மற்றபடி நிசப்தம் தான் நிலவுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தானே.

14 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பை குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாக இருந்த பேரழிவுக் கலவரங்கள் குறித்து விரிவாகப் பெரும்பாலான ஊடகங்கள் பேசவில்லை. இருப்பினும் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 இல் மும்பையில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று இன்று வலிமையான குரல் எழுந்து வருகின்றது.

மும்பை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 257. ஆனால் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் நடைபெற்ற கலவரங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1788 என்று சர்வதேசப் பொது மன்னிப்பு நிறுவனம். தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகின்றது.

இக்கலரவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1998ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட போது மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பிறகு உச்ச நீதிமன்ற நீதிபயாகிப் பணியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். ஆனால் இதுவரை முஸ்லிம் பேரின அழிவு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. கலவரத்தில் ஈடுபட்ட அந்தக் கொடியவர்கள் யார்?

நீதிபதி கிருஷ்ணா கூறுகிறார்:

ஜனவரி 6, 1993 முதல் பெரும் அளவில் கலவரமும் வன்முறையும் இந்து வகுப்புவாதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன. இந்து வகுப்புவாத அமைப்புகள் செய்த பிரச்சாரமும், சாம்னா மற்றும் நவாக்கல் இதழ்களில் எழுதப்பட்டவையும் கலவரத்தைத் தீவிரப்படுத்தி அதனை உச்ச நிலைக்குக் கொண்டுச் சென்றன. இதன் பிறகு சிவவேசனை தலைவர்கள் கலவரத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினார்கள். தொடர்ந்து அவர்களது எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் வகுப்புவாதத்தை அவர்கள் கொளுந்து விட்டு எரிய வைத்தார்கள். சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவையெல்லாம் நடந்து வந்தன. ஜனவரி1, 1993 அன்று சிவசேனையின் பத்திரி¬யான சாம்னாவில் இந்துக்களை வன்முறையில் ஈடுபட தூண்டும் கட்டுரை ஒன்று பிரசுரமாகியது.

மிகத் தெளிவாக நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கலவரத்திற்குக் காரணமானவர்கள் யார் என்று தெளிவுபடுத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை.

சாம்னா பத்திரிகை மீது சமுதாயங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியதாக இந்தியத் தண்டனையியல் சட்டத்தின் 153 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மும்பை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளர் ஜே.பி.டிசொசா வழக்குத் தாக்கல் செய்தார்.சாம்னா மீது அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றமும் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு மாறாக மராட்டிய அரசு சாம்னா மற்றும் நவாக்கல் பத்திரிகைகளைப் பல வகையில் ஆதரித்து அவற்றின் விஷமக் கருத்துக்களுக்கு ஆர்வமூட்டியது.

துவேஷத்தையும் வன்முறையையும் பரப்பிய இந்தப் பத்திரிகைகளுக்கு பொது மக்கள் நிதியில் இருந்து விளம்பரங்களும் அளிக்கப்பட்டன. குற்றத்தைத் தூண்டும் வகையில் எழுதியவருக்கு வன்முறையில் ஈடுபட்டவருக்கு அளிக்கப்படும் அளவில் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடம் உண்டு. மும்பை குண்டு வெடிப்பில் 257 பேர் உயிர் இறந்தார்கள். இந்தக் குண்டு வெடிப்பை நடத்தச் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விடப் பன்மடங்கு அதிகமாக மக்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு என்ன தண்டனை? சாம்னா பத்திரிகை தொடர்ந்து வன்முறைப் போக்கைப் பரப்புவதற்காக விளம்பரங்கள், தண்டனைக்குப் பதிலாக வெகுமதியாக அளிக்கப்பட்டன.

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் பாகம், இரண்டாவது அத்தியாயத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

26 டிசம்பர் 1992 அன்று மகா ஆரத்திகள் தொடங்கின. இது வகுப்புவாதப் பதட்டத்தை அதிகரித்ததுடன் அரைகுறையாக ஏற்படுத்தப்பட்டிருந்த அமைதியையும் குலைத்தது. மகா ஆரத்தி நடைபெற்ற சில இடங்களில் வகுப்பு வாதத்தை தூண்டும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இத்தகைய மகா ஆரத்திகளில் பங்குக் கொண்ட பிறகு கலைந்து செல்லும் கூட்டத்தினர் வழியில் தங்கள் கண்களில் பட்ட முஸ்லிம் கடைகளை அடித்து நொறுக்கினர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகச் சிவசேனைக்காரர்கள் ஒன்று திரண்டார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இராணுவ மதிநுட்பத்துடன் நடத்தப்பட்டன. முஸ்லிம் நிறுவனங்களில் பட்டியல், முஸ்லிம் வாக்காளர் பட்டியல் இவற்றைக் கையில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளது போல் கையில் வாக்காளர் பட்டியலுடன், இராணுவ மதிநுட்பத்துடன் செயல்படுவது என்பது சதித்திட்டமே. ஆனால் டிசம்பர் 92 மற்றும் ஜனவரி 93 மும்பை கலவரத்திற்குச் சதிதிட்டம் தீட்டிய சிவசேனை பயங்கரவாதிகள் மீது இ.பி.கோ 120 பிரிவின் படி எந்தவொரு வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. சுமார் 2000 இந்தியர்கள் உயிர் இழப்பதற்குக் காணமாக இருந்தவர்கள் என்று நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் மீது இன்று வரை சதித்திட்டம் தீட்டினார்கள் என்று வழக்குப் போடப்படவில்லை என்ன காரணம்?

உயிர் இறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதினாலா?

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் முஸ்லிம் சமூகப் பேரழிவுக் கலவரங்களை நடத்துவதற்கு எவ்வாறு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதை விவரிப்பதுடன் நிற்கவில்லை.

இந்தக் கலவரங்களைத் திட்டமிட்டு, அதற்கு உதவிகள் புரிந்து, எல்லா வகையிலும் அது நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த நபர் யார் என்பதையும் நீதிமான் ஸ்ரீ கிருஷ்ணா அம்பலப்படுத்துகிறார். தனது அறிக்கையின் இரண்டாம் பாகம் மூன்றாம் அத்தியாயத்தில் மும்பை கலரவரத்தை முன் நின்று நடத்திய பங்கரவாதி குறித்து அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

சிவசேனையின் தலைவர்கள மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர் பால் தாக்கரே என்பது தெளிவாகத் தெரிகின்றது. முஸ்லிம்களைத் தாக்க வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும். இந்தத் தாக்குதல்களுக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்குச் சாட்சி சொல்ல ஒரு பயலையும் விட்டு வைக்கக் கூடாது என்று பால் தாக்கரே உத்தரவுப் பிறப்பித்தார். இது போன்ற உத்தரவுகளைப் பால் தாக்கரே தொலைபேசியில் போட்டுக் கொண்டிருக்க ரமேஷ் மோரே மற்றும் சர்போட்தார் ஆகியோர் அங்கு வந்து தங்கள் பகுதியில் உள்ள நிலைகளை விவரித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் இது போன்ற உத்தரவுகள் போடப்பட்டன. வட மண்டலக் கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ஏ. கானைப் பிடித்து அல்லாஹ்வின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். மண்டுக்கரை முடித்து விடுங்கள். ஆனால் முடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று பால் தாக்கரே உத்தரவு போட்டார்.

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் தொகுதி, அத்தியாயம் 2 இல் இன்னும் தெளிவாகப் பயங்கரவாதி தாக்கரேவை பின் வருமாறு வர்ணிக்கிறார்:

ஜனவரி 8, 1993 முதல் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் சொத்துகளுக்கு எதிரான தாக்குதலில் சிவசேனையும் அதன் உறுப்பினர்களும் தான் முன்ணணி வகித்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கிளைத் தலைவர்கள் முதல் சிவசேனையின் தலைவரான பால் தாக்கரே வரை அனைத்துச் சிவசேனை தலைவர்களும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான பதில் தாக்குதலை ஒரு தேர்ந்த இராணுவத் தளபதி போல் செயல்பட்டுப் பால் தாக்கரே சிவசேனைக்காரர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மதச்சார்பற்ற, மனித உரிமை அமைப்புகள் டிசம்பர் 92, ஜனவரி 93 கலவரங்களில் ஈடுபட்டதாக ஸ்ரீ கிருஷ்ணா ஆணையத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட 31 காவல் துறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி வருகின்றார்கள். ஆனால் பால் தாக்கரே மற்றும் அவரது பயங்கரவாகதக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று குரல் வலிமையாக வைக்கப்படாதது வருத்தத்திற்குரியதாகும்.

குடிமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்பது அரசியல் சாசனம் தரும் உரிமையாகும். அரசியல் சாசனத்தின் 21ம் பிரிவு இந்திய குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை கடமை என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் மும்பை பற்றி எரிந்தது. முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகள் மிக மலிவாகப் பறிக்கப்பட்டன.

இதற்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையில் அமைந்த ஆணையம் மிகத் தெளிவாகக் குற்றஞ்சாட்டிய பிறகும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற அரசுகளும் பயங்கரவாதி தாக்கரே மற்றும் அவரது எடுபிடிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது அரசியல் சாசனச் சட்டம் அரசுகளுக்கு அளித்துள்ள பொறுப்புகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பட்டீலை ஆதரித்ததற்கு நன்றி தெரிவிக்கப் பயங்கரவாதி பால் தாக்கரே வீட்டிற்கு இன்றைய மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஸ்மூக் நேரில் சென்றுள்ளார். இது வெட்கக் கேடானது. (சஞ்சய்தத் தற்பொழுது பிணையில் வந்தபொழுது அவரிடம் கைகுலுக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப்பெரிய கலவரத்திற்குக் காரணமான பால்தாக்கரேவை முதலமைச்சரே வீடுதேடிச் சென்று சந்திக்கிறார்.) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட சரிவிற்கு என்ன காரணம் என்பதை தேஸ்மூக் போன்ற காங்கிரஸ்காரர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அந்த அறிக்கை அடையாளப்படுத்தியுள்ள பால் தாக்கரே உள்ளிட்ட பயங்கரவாதிகளை அரசு கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நடுநிலையான நீதிபதி முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டம். பால் தாக்கரே போன்றோருக்கு உச்சபட்சத் தண்டனையான தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் வாதாடும் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்கள் உள்ளத்தில் காங்கிரஸ் ஆட்சிகளின் கையாலாகாத போக்கினால் ஏற்பட்ட ரணத்தைக் களைய உதவிடும்.

மொத்தத்தில் கோவை மற்றும் மும்பை குண்டுவெடிப்புகளுக்கு காரணம் அதற்கு முன்பு அந்த இரு மாநகரங்களிலும் நடைபெற்று முஸ்லிம் பேரழிவு கலவரங்கள் தான். சட்டம் தனது கடமையை அப்போது செய்திருந்தால் குண்டு வெடிப்புகள் என்ற மாபாதகக் குற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு செயல்படுவார்களா?