சங்கி கும்பலின் பித்தலாட்டமும் உண்மையும்

விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களை ஆளும் சங்கி அரசுகள் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளன.

சங்கிகள் ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறியதற்கான உண்மையான காரணத்தைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் தெளிவான விளக்கத்தை அளிக்காமல் சங்கிகளின் குரலிலேயே படத்தை ஆதரித்துக் கொண்டு இருக்கின்றன.

the kashmir filesகாஷ்மீரில் பண்டிட்டுகள் மட்டும் தாக்குதலுக்கு உள்ளானர்கள் என்பது மிகத் தவறான, உண்மைக்குப் புறம்பான செய்தி ஆகும்.

1997 முதல் முஸ்லிம்கள் அல்லாதவர்களை அதாவது இந்துக்களை, சீக்கியர்களை அல்லது காஷ்மீரி அல்லாதவர்களை அதாவது பீகார் பகுதியிருந்து வந்த கூலிகளை பெரும் எண்ணிக்கையில் கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் இன்றுவரை முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

1997 ஜனவரியில் வந்தாமா அருகில், 1997 மார்ச்சில் சம்கிராம்புரா அருகில், 1998 ஏப்ரலில் பதான்கோட் அருகில், 1998 ஜூனில் சாப்னா அருகில், 2000 மார்ச்சில் சட்டீ சிங்புரி அருகில், 2001 ஆகஸ்டில் பவால்காம் அருகில் அதே மாதம் கான்சிகுன்ட் அசாபல் அருகில், 2001 ஜூலை சேஷ்நாக் அருகில், 2002 ஆகஸ்டில் ஜம்மு நகரத்தில் ராஜீவ் நகர் அருகில் என்று ஒவ்வொரு இடத்திலும் 10க்கும் அதிகமான நபர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதுவரை இது பற்றிய விசாரணைகள் முழுவதுமாக நடைபெறவில்லை.

காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை நாம் இந்திய இராணுவத்தின் செயல்திட்டத்தோடு இணைத்து புரிந்து கொள்ளும்போது மட்டுமே அதன் பின் இருக்கும் சதித் திட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம் அரசாங்க ஏஜென்ட்களையும், ஆள்காட்டிகளையும் மட்டுமே கொலை செய்வோம் என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கின்றது. காஷ்மீர் ஆளுநராக 1984 ஏப்ரலில் அனுப்பப்பட்ட கவர்னர் ஜக்மோகன் பள்ளத்தாக்கில் எங்கெங்கோ இருக்கும் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது ராணுவப் படைகளுக்கு சாத்தியமில்லை என்று அறிவித்து அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேற யோசனை சொன்னார். வெளியேறத் தேவையான உதவிகளையும் வழங்குவோம் என உறுதியளித்தார். அவர்களில் பலர் அவர் சொன்னதை நம்பி புலம் பெயர்ந்தார்கள்.

ஒரு மொத்தமான மக்கள் பிரிவுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆளும் வர்க்கத்திற்கு சாத்தியமில்லை என்பது கேள்விப்படுகையில் நியாயமாக இருக்கும். ஆனால் ஜக்மோகன் மனதில் வேறு சிந்தனைகள் இருந்தன. காஷ்மீரில் பண்டிட்டுகள் அனைவரும் வெளியேறினால் காஷ்மீரில் நடக்கிற போராட்டத்திற்கு மதச்சாயம் பூசலாம். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செய்கிற பிரச்சாரத்திற்கு அது ஆதரவாக இருக்கும் என்பது அவரது திட்டம்.

காரணம் ஜக்மோகன் இந்து முஸ்லீம்கள் இடையே வேற்றுமைகளைக் குறைத்து அவர்களிடையே நெருக்கத்தை உருவாக்க சில முக்கிய நபர்கள் முயற்சி செய்தபோது அந்த முயற்சி செய்த நபர்களுக்கு எதிராக அவர் ஆற்றிய எதிர்வினையே அது.

பல்ராஜ்பூரி 1990 மார்ச்சில் காஷ்மீர் பள்ளத்தாக்கு சென்று பல முஸ்லிம்களுடன் பேசினார். அவர்களில் பலர் பண்டிட்கள் மொத்தமாக வெளியேறுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது என்று தெரிவித்தார்கள். இரண்டு மதப்பிரிவுகளின் பிரிதிநிதிகள் கையொப்பம் இட்ட ஓர் அறிக்கையை அப்போது வெளியிட்டனர்.

முஸ்லிம்களின் சார்பில் ஜம்மூ காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முப்தி பஹவுதீன் ஃபரூக்கி, இந்துக்கள் சார்பில் காஷ்மீர் பண்டிட்டுகளின் தலைவரான ஹெச்.என்.ஜட்டோ அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டார்கள். புலம் பெயர்தலைத் தடுப்பது அந்த அறிக்கையின் நோக்கம். பல முஸ்லிம்களும் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

பண்டிட்டுகளின் பாதுகாப்பின்மை பயத்தைப் போக்க இந்த அறிக்கைகள் போதுமா என்பது வேறு விசயம். இங்கு கவனிக்கப்பட வேண்டியவை இந்த முயற்சிகள் வெற்றி பெறாமல் இருக்க ஜன்மோகன் மேற்கொண்ட நடவடிக்கைகள். ஹெச்.என். ஜட்டோவுக்கு ஒரு போலீஸ் அதிகாரி மூலம் ஜம்முவுக்கு வெளியேறிச் செல்வதற்கு விமனா டிக்கெட், விமனா நிலையத்திற்கு செல்வதற்கு ஜீப் அனுப்பி “ஜம்முவில் குடியிருக்க உனக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்கின்றேன். உடனே வெளியேறு” என்று அவரை அனுப்பி வைத்தார்.

"இந்தக் காரியத்தை ஏன் செய்தாய்" என்று பல்ராஜ் பூரி ஜக்மோகனைக் கேட்கையில் “காஷ்மீரி அடையாளம் இருக்கும் வரை அதனை அமெரிக்கா, பாகிஸ்தான் போன்றவை பயன்படுத்திக் கொள்ளும், இந்துக்கள் முஸ்லிம்கள் இணைந்து வாழ்ந்தால் அது ராணுவப் படைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும்” என்பதே.

காஷ்மீரிய அடையாளத்தை அழிக்க வேண்டும், அதன் இடத்தில் ஒரு முஸ்லிம் அடையாளத்தை நிறுத்த வேண்டும், அப்போது அதனை அடக்குமுறை மூலம் அவதூறு பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்வது இந்தியாவிற்கு எளிதாகிவிடும். இந்துக்கள் முஸ்லிம்கள் நெருக்கமாவதைத் தடுக்க வேண்டும். அப்போது மூர்க்கமான முஸ்லிம்களாக காஷ்மீர் இயக்கத்தினரை அடையாளம் காட்டி அவர்களைக் கொலை செய்வதற்கு ராணுவப் படைகளைத் தூண்டி விடுவது எளிதாகிவிடும். சுயநிர்ணய உரிமையைக் கோருகிற காஷ்மீரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடலாம் என்பதே ஜக்மோகனின் எண்ணமாக இருந்தது.

ஒட்டுமொத்த காஷ்மீர் மக்கள் தொகையில் பள்ளத்தாக்கில் வசித்த பண்டிட்கள் எப்போதுமே பெரும்பான்மையாக இருந்ததில்லை. ஆனால் காஷ்மீரி சமூக வாழ்க்கையில் அவர்களது முக்கியத்துவம் மக்கள் தொகை அளவைவிட பல மடங்காக இருந்தது.

1981 மக்கள் தொகை கணக்குப்படி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் 3.95 சதம், முஸ்லிம்கள் 94.96 சதம். அவர்களின் மக்கள் தொகை இதைவிட எப்போதுமே அதிகம் இருந்தது இல்லை.

இவ்வளவு குறைவான மக்கள் தொகையாக இருந்த போதிலும் பள்ளத்தாக்கில் ஒயிட்காலர் உத்தியோகங்களிலும், ஆசிரியர் பணிகளிலும் இவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதுமட்டுமின்றி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிலப்பிரபுக்க்களாகவும் இருந்தார்கள். ஆனால் சாதாரண விவசாயிகளாகவும் அவர்களில் சிலர் இருந்தனர். புலம்பெயர்வால் அதிகம் பாதிக்கப்படவர்கள் கிரமா பகுதி சாதாரண பண்டிட் விவசாயிகள் ஆவர்கள்.

பண்டிட்டுகளுக்கு காஷ்மீரி தேசிய இயக்கத்தின் பால் ஆரம்பத்தில் இருந்தே ஓர் இரட்டைப் போக்கு இருந்தது. காலப்போக்கில் அவர்களிடம் தமக்கு அநியாயம் நடக்கின்றது என்றும், வேலைவாய்ப்புகள் இதர வசதிகளில் தமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கு தமக்கு கிடைப்பதில்லை என்றும் அதிருப்தி அதிகரித்தது. அவை அனைத்தும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள் என்றும் கருதினார்கள். இந்த நிலைமையை தமிழ்நாட்டில் நீதிக்கட்சி வருகைக்கு முன் பார்ப்பனர்கள் அனுபவித்த சொகுசு நிலைமையுடன் ஒப்பிடலாம்).

உண்மையில் குறிப்பிடத்தக்க விஷயம் காஷ்மீரிய தலைமை முஸ்லிம்களின் மோசமான சமூக நிலையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியைத் துவங்கி 40 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒப்பிட்டளவில் முஸ்லிம்கள் பண்டிட்களைவிட பின்தங்கியே இருக்கின்றார்கள்.

உதாரணமாக 1981 மக்கள் தொகை கணக்கின்படி ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மொத்தத்தில் முஸ்லிம்கள் 64.19 சதம், இந்துக்கள் 32.24 சதம் இருக்கின்றார்கள். ஆனால் உத்தியோகங்களை எடுத்துக் கொண்டால் 1987 கணக்குப்படி முஸ்லிம்கள் கஜெட்டட் ஆபிசர்களில் வெறும் 41.71 சதம், குரூப் 1, குருப் 2 வேலைகளில் 56.24 சதம் இருக்கின்றார்கள். குரூப் 4 மட்டும்தான் முஸ்லிம்கள் தமது மக்கள் தொகை சதவீதத்தைவிட அதிகமாக 65.52 சதம் இருந்தார்கள்.

பண்டிட்களிடம் தமது நிலம், தமது வேலை வாய்ப்புகளை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கின்றார்கள் என்று சற்று அதிருப்தி இருந்த போதிலும் மொத்தத்தில் காஷ்மீரிய மரபான நல்லிணக்கம், அமைதி, சகவாழ்வு என்பவை சமூக அமைதியைக் காப்பாற்ற பயன்பட்டன. மேலே கூறியதைப் போல் காஷ்மீரில் எப்போதுமே மத மோதல்கள் நடந்ததில்லை. இந்தியாவின் பிற பகுதிகளில் பெயரளவில் மோதல் நடந்த காலங்களிலும் காஷ்மீர் அமைதியாகவே இருந்தது. அதற்குக் காரணம் முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை.

1986 இல் முதல் முறையாக அனந்த்நாக் மாவட்டத்தில் மத மோதல்கள் நடந்தன. சில தேவாலயங்கள் நாசப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பள்ளத்தாக்கில் காங்கிரசு சார்பு அரசியல் சக்திகளின் சதிகள் என்று காஷ்மீரிகள் கூறுகின்றார்கள். அமைதி ஏற்படுத்த செய்த முயற்சிகள் ஒரளவிற்குப் பலன் தந்து இந்துக்களின் பாதுகாப்பின்மை உணர்வு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்க விசயம்.

இந்த சூழ்நிலையில்தான் 1989-1990களில் காஷ்மீர் பள்ளத்தாகில் ராணுவம் வளர்ந்து வந்தது. மேலே பார்த்ததைப் போல் சில இந்துக்களை கொலை செய்வது நிகழ்ந்தது. அதாவது சுதந்திரத்திற்காக நடந்த பெரிய ஊர்வலங்களில் சில பேர் மத உணர்விலான கோசங்களை முழங்கினார்கள்.

1995க்கு முன் வெறுமனே இந்துக்கள் என்பதற்காக கொலை செய்யப்பட்ட ஒரே ஒரு சம்பவம் 1993 ஆகஸ்ட் 14 இல் நடந்தது. ஜம்மூவிற்கு போய்க் கொண்டு இருந்த ஒரு பஸ்ஸில் இருந்து 15 இந்துப் பயணிகளை கீழே இறக்கி சுட்டுக்கொன்றது நடந்தது. ஆனால் அந்தக் கொலையை ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜம்மு காஷ்மீர் லிபரேசன் ஃபிரன்ட் இரண்டும் கண்டித்தன.

பொது இடங்களில் வெடிகுண்டுகளைப் போட்டு அப்பாவிகள் இறந்த நிகழ்வுகளும் ஜம்மூ பகுதியில் நடந்தன. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதுவரை அவ்வாறு நடக்கவில்லை.

இருப்பினும் சில பண்டிட்களைக் கொலை செய்தது நடந்தது. ஆகையால் மொத்தத்தில் அந்தப் பிரிவினரிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிலவிய விசயம் உண்மையே.

இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் விசயத்தில் பண்டிட்டுகள் எண்ணிக்கையைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை பல மடங்காக இருக்கின்றது.

பண்டிட்டுகள் மீது நடத்தப்பட்டதாக சொல்லப்படும் ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் கூட இன்றுவரை சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. 2003 ஆண்டு மார்ச் 23, 24 தேதிகளிடையில் இரவு புல்வாமா மாவட்டம் ஷோபய்யா தாலுக்காவின் நதீமார்க் கிராமத்தில் ராணுவத்தினர் 24 பண்டிட்டுகளைக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் மட்டுமே வசித்து வந்த ஒரே கிராமம் நதீமார்க் ஆகும். அங்கு 60 குடும்பங்கள் வசித்து வந்தன. ராணுவ நடவடிக்கை துவங்கியபோது அங்கிருந்து 49 குடும்பங்கள் வெளியேறின. 11 குடும்பங்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அந்த கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டு இருந்தது.

அப்படி இருந்தும் மார்ச் 23 அன்று இராணுவத்தினர் என்று கூறிக்கொண்டு வந்த நபர்கள் அங்கிருந்த மக்களை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டு வீட்டில் இருந்த நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர். சந்தேகப்பட்டவர்கள் தப்பி ஓடினார்கள். மீதம் 23 பேர் மட்டுமே அங்கிருந்தார்கள். 11 பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள்.

இதுவரை சுட்டுக் கொன்றவர்கள் இராணுவத்தினர் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்கள் அரசாங்கத்தால் ஏவப்பட்ட கூலிப்படை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்த இந்திய அரசே செய்த சதியாக அது இருக்க வாய்ப்புள்ளதாக கஷ்மீரிகள் நம்புகின்றார்கள்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடங்கியதில் இருந்து 1990 வரை குறைந்தது 399 காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1990 முதல் 20 ஆண்டுகளில் மொத்தம் 650 காஷ்மீரிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கு கூறுகிறார்.

பண்டிட்டுகளுக்காக கண்னீர் வடிப்பவர்கள் இதுவரை ஏறக்குறைய 70000 மேற்பட்ட காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் கொன்று போட்டிருப்பதைப் பற்றியோ, 10000 மேற்பட்ட மக்கள் காணாமல் போய் உள்ளது பற்றியோ, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் ஆயிரக்கணக்கான மக்களை முடமாக்கியும் இந்திய ராணுவம் அங்கே தனக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி இதை எல்லாம் நடத்தியிருப்பதைப் பற்றியோ வாயே திறப்பதில்லை.

மேலும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் இந்திய ராணுவம் சிறுவர்களைக் கூட விட்டுவைக்காமல் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றது. 2009 ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி 11 சிறுவர்கள் அமர்வு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆசனவாய் வழியே புணரப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டது மருத்துவ விசாரணையில் உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடந்துகொண்ட கீழ்த்தரமான இராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காஷ்மீரிகளை எல்லாம் தீவிரவாதிகளின் ஏஜென்ட்கள் என்று கூறியே ராணுவத்தினர் கொலை செய்வதில் இருந்து எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்தார்கள். எதுவான போதிலும் பண்டிட்கள் மனதில் இருந்த உண்மையான பாதுகாப்பின்மை உணர்வை ஆட்சி இயந்திரம் தனது பிரச்சார நலங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது.

அவர்கள் அனைவரையும் பள்ளத்தாக்கில் இருந்து வெளியே அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தது. சில வாரங்களில் ராணுவத்தை அடக்கி விடுதல் முடிந்து விடும், அவர்கள் அனைவரும் மீண்டும் வீடு திரும்பலாம் என்று அவர்களுக்குப் பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். எத்தனை பேர் இவ்வாறு புலம் பெயர்ந்தார்கள் என்பது விவதாத்துக்கு உரியதாகவே இருக்கின்றது.

1990ல் மொத்த பள்ளத்தாக்கில் இந்துக்கள் மக்கள் தொகை 1.6 லட்சத்தைவிட அதிகம் இருக்க வாய்ப்பில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகையில், சுமார் 2.5 லட்சம் பண்டிட்கள் புலம் பெயர்ந்தார்கள் என்று பலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் 1981 மக்கள் தொகை கணக்கு சரியானது இல்லை என்பதே.

ஜம்முவின் அகதிகள் முகாம்களில் இருக்கும் பண்டிட்டுகளுக்கு இடையே பணியாற்றும் பனூன் காஷ்மீரி அமைப்பின் பிரதிநிதிகளின் போக்கு இந்திய அரசு இயந்திரம் காஷ்மீர் பிரச்சினையை மத ரீதியானதாக சுட்டிக் காட்டுவதில் வெற்றி பெற்றது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

மற்றொரு பக்கம் ஜம்மு காஷ்மீர் லிபரேசன் ஃபிரண்ட், பண்டிட்கள் அனைவரும் எதிர்கால காஷ்மீரில் சம அந்தஸ்திலான குடிமக்களாக இருப்பார்கள் என்று கூறி வருகின்றது. அவர்களைத் திரும்ப பள்ளத்தாக்கிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றது.

புலம் பெயர்ந்த பண்டிடுகளில் கொஞ்சம் வசதியாக இருக்கும் நகர்புறத்தினர் ஜம்முவில் இதர பகுதிகளில் உத்தியோகங்கள் அல்லது வியாபாரம் செய்து வாழ்கின்றார்கள். பெரும் பகுதியாக கிராமப்புற விவசாயிகளான 10000 குடும்பங்கள் 1995 வரை ஜம்மு நகரத்தில் முகாம்களில் வசித்து வருகின்றார்கள்.

அங்கு அவர்களுக்கு வாழ்க்கை தாங்க முடியாததாக இருக்கின்றது. பள்ளத்தாக்கில் அரசாங்கப் பணிகளில் இருந்தவர்களுக்கு இங்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. மற்றவர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் ரூ 1500, கொஞ்சம் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகின்றது. இந்தியாவில் வேறு அகதிகள் எவரையும் அரசு இவ்வளவு நன்றாகப் பராமரிப்பதில்லை.

ஆனால் ராணுவத்தின் அச்சுறுத்தலால் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம் குடும்பங்களின் நிலை பற்றியோ, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது பற்றியோ யாருக்குமே தெரியாது.

எனவே பண்டிட்டுகள் பிரச்சினை என்பது இந்திய அரசு திட்டமிட்டே உருவாக்கி வளர்த்துவிட்ட ஒன்றாகும். பண்டிட்டுகளை முன்னிறுத்தி காஷ்மீர் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.

இல்லை என்றால் 400 பேர் கூட இல்லாத தீவிரவாதிகளைப் பிடிக்க 600000 துருப்புகளை அங்கே இந்திய அரசு நிறுத்தி வைத்திருக்காது. அந்த மக்களை நிரந்தமான மரண பீதியிலேயே வைத்திருந்து உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தி பணிய வைப்பதுதான் இந்திய அரசின் ஒரே நோக்கமாகும்.

விவேக் அக்னிஹோத்ரி யோக்கியமானவனாக இருந்தால் குஜராத் ஃபைல்ஸ் என்றோ, பாபர் மசூதி ஃபைல்ஸ் என்றோ, ரதராத்திரை ஃபைல்ஸ் என்றோ படம் எடுக்கட்டும். அப்படி இல்லாமல் பண்டிட்டுகள் ஏதோ கஷ்மீர் முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது போன்று படம் எடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

- செ.கார்கி

Pin It