"இராணுவ வீரர்கள் இறந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை" - காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட புஹான் வானியின் தந்தை.
காஷ்மீரில் தொடந்து மக்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகளும், பள்ளிகளும் மருத்துவமனைகளும் முடங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய அரசிற்கு அதைப் பற்றி சிறிதும் கவலையில்லை.
"கடந்த 27 வருடமாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் தீயை அணைக்க முயல்வதில்லை. இன்னும் அதிகம் பற்ற வைத்து விட்டுச் செல்கிறார்கள்.
காஷ்மீரில் இருந்த பண்டிட்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கித் தர ஏற்பாடு செய்கிறார்கள். இதன் மூலம் எரியும் தீயில் மேலும் பெட்ரோலை ஊற்றுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
காஷ்மீரில் பற்ற வைத்த நெருப்புக்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமனும் குறிப்பாக பாஜக-விற்கு வாக்களித்த ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள்.
புர்ஹான் வானியும் இதனையே வலியுறுத்தி வந்தார். 2008, 2010, 2016 என்று ஒவ்வொரு முறை காஷ்மீரகம் எரியும் போது கட்டிப் போடுகிறார்களே ஒழிய எங்களது பிரச்சனைகளை சரி செய்ய யாரும் முன் வருவதில்லை.
காஷ்மீரின் பள்ளிக்கூடங்களும் கல்வி நிறுவனங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வருகின்றன. யார் இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. சிறுவர்கள் மீது பழி போடுகிறார்கள். கண்டிப்பாக அவர்களும் செய்வதில்லை. எங்களுக்கான மாற்றம் வேண்டும்." என்று காஷ்மீரில் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்குக் காரணமாக இருந்த புர்கான் வானியின் தந்தை அரசாங்கப் பள்ளி ஆசிரியர் முசாபர் வானி கூறியுள்ளார்.
(Greater Kashmir 19/112016)
காஷ்மீர், 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் மாபெரும் சுதந்திரப் போராட்டம் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. நான் இந்தியன் என்றால் மற்ற மாநிலத்தில் உள்ள மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை நான் ஏன் அனுபவிக்க முடியவில்லை என்ற கேள்விகள் காஷ்மீரிகளை இந்தியாவை விட்டு முழுமையாக தனிமைப்படுத்தி விட்டன.
இந்நிலையில் காஷ்மீரத்தில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை மதரீதியான போராட்டமாக இன்றைய மத்திய அரசு மாற்ற முயல்கிறது. அதன் பெரும் முயற்சியாக காஷ்மீரகத்தின் பூர்வகுடிகளான பண்டிட்களுக்கு தனி இடத்தை ஒதுக்கி, அவர்களுக்கு வீடுகள் கட்டி தந்து, காஷ்மீர மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது. இதனை காஷ்மீரிகள் அனைவரும் முற்றிலுமாக எதிர்க்கிறார்கள்.
பண்டிட்களின் பூர்வீக வீடு இருக்கும் போது அவர்களுக்கு ஏன் தனி குடியிருப்புப் பகுதி? அவர்கள் எங்கள் சகோதரர்கள், எங்கள் அண்டை வீட்டுக் காரர்கள். அவர்களது சொந்த வீட்டிலேயே அவர்கள் வாழ வேண்டும். அரசங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களோடு எங்களை தனிமைப்படுத்துகிறது. நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என காஷ்மீரிகள் எதிர்க்கிறார்கள்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை கைப்பற்ற பயன்படுத்திய திட்டம் தான் இந்தத் தனிக் குடியிருப்புகள். அதே நடைமுறையை இந்திய அரசாங்கமும் பின்பற்றுகிறது. நிலத்திற்காக மக்களைக் கொல்லும் காலனியாதிக்க முறையை இந்தியா வரவேற்கிறதா? நிலத்தின் மீதான அக்கறையை மக்களிடம் காட்டியிருந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக காஷ்மீரகம் என்றோ போர்க்கொடியை தூக்கியிருக்கும். ஆனால் நாம் செய்ய மறுத்து விட்டோம். மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த அரசாங்கம் எதுவும் நிலைத்ததில்லை என்பதே வரலாறாக உள்ளது.
நிலம் தான் வேண்டும், மக்கள் வேண்டாம் என நினைத்தால் கண்டிப்பாக காஷ்மீரகம் நம்மை விட்டுப் பிரிவதைத் தடுக்க முடியாது.
- அபூ சித்திக்