“உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர! ஆனால், அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” - என்றார் மாமேதை மார்க்ஸ்.
வர்க்க அடிப்படையில் இந்த உலகம் பிரிந்து கிடப்பதை ஆய்வுக்குட்படுத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே வர்க்க விடுதலைக்கான தீர்வாக முன்மொழியப்பட்ட முழக்கம் தான் அது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மேதை இலெனின் ருஷ்யாவிலும், மாசேதுங் சீனாவிலும், சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோர் கியூபாவிலும் மெய்பித்துக் காட்டினர். இந் நாடுகளிலெல்லாம் மக்கள் வர்க்கங்களாக மட்டுமே பெரிதும் பிளவுண்டு கிடந்தனர்.
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும், நடைபெற்ற புரட்சிபோல இந்தியாவில் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லையே ஏன்?
இந்தியாவில் உழைக்கும் மக்களை வர்க்கங்களாகவும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள், சாதிகளாகவும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் கீழ்ச் சாதிகளாகவும், சுரண்டப்படும் நிலப் பிரபுவத்துவ - முதலாளித்துவ வர்க்கத்தினர் மேல் சாதிகளாகவும் தம்மை வைத்துக் கொண்டனர். அதற்கேற்ப சமூக ஒழுக்கச் சட்டங்களை எழுதி வைத்துக் கொண்டனர்.
இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் மேற்குறிப்பிட்ட சமூக சட்டங்களைப் பழுதில்லாம் நடைமுறைப் படுத்துகின்றனர்.
தம் மீது ஆதிக்கம் செலுத்தும் வகுப்பினர் மீது பாதிப்புக்குள்ளாகும் வகுப்பினர் வெகுண்டு எழுவது இயற்கையின் விதி. அப்படித்தான் மேற்குலக நாடுகளிலெல்லாம் நடைபெற்றன. ஆனால், இந்தியாவில் அந்த விதி பொருந்தவில்லை. சுரண்டப்படும் கீழ்ச்சாதி மக்கள் மீது சுமத்தப்பட்ட கர்ம விதிப்பயனே இதற்குக் காரணம்.
முதல் புரட்சி நடைபெற்ற 1905-க்கு முன்பு ருஷ்யாவில் அனைத்து அதிகாரங்களும் ஜார் இரண்டாம் நிக்காலஸ் என்ற கொடுங்கோல் மன்னனிடமே குவிந்து கிடந்தன. அவன் பிரபுக்களையும் அதிகாரிகளையும் கொண்டு அரசு எந்திரத்தை இயக்கிக் கொண்டிருத்தான்.
அதே வேளையில் ருஷ்ய மக்கள் இன ரீதியிலும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தொழிலாளர் 12 - 15 மணி நேரங்கள் உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பேச்சுரிமை, எழுத்துரிமை தடை செய்யப்பட்டிருந்தன. நாடாளுமன்றம் கிடையாது, மக்கள் சுதந்திரம் கிடையாது.
அப்போது கல்வியறிவற்ற விவசாயத் தொழிலாளர்கள் தான் ருஷ்யா முழுக்கப் பரவிக் கிடந்தனர்.
நில உடைமையாளர்கள் பெரும்பாலும் முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு நெருக்கமானவர்களாகவே இருந்து வந்தனர். ருஷ்ய மக்கள் பெரும்பாலும் தங்களைக் கூலிகளாக நிலவுடைமையாளர்களிடமோ, முதலாளிகளிடமோ விற்க வேண்டியிருந்தது. இந்தக் கொடிய சூழ்நிலையில்தான் உழைக்கும் மக்கள் அமைப்பாக அணி திரண்டனர்.
எட்டு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு ஒன்று கூடும் சுதந்திரம், விவசாயிகளுக்கு நிலம், பேச்சு, எழுத்து, ஊடகச் சுதந்திரம், திருச்சபையையும் அரசையும் பிரிப்பது, போரை நிறுத்துவது, நாடாளுமன்றக் குடியரசுக்கான அரசமைப்பு அவையை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தினர். அப் போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
ஒரு தத்துவத்தின்கீழ் ஆயுதமேந்தி அணிதிரண்ட தொழிலாளர் வர்க்கத்தின் அந்தப் போராட்டம் உலக அரங்கில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டப் பாதையில் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தது என்று சொல்லலாம். அது ஒரு முதலாளித்துவப் புரட்சியாக மட்டுமல்லாமல் சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற நிரந்தரப் புரட்சியாகப் பின்னர் உருமாறியது,
மேதை இலெனின் அவர்கள் தலைமையில், 1917-இல், இந்தப் புரட்சி ருஷ்யாவில் வென்றது. அவருடன் புரட்சியை முன்னெடுத்த ட்ராட்ஸ்கி அவர்கள், “இந்த வேலை நிறுத்தத்தின் பாதி வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ஒரு மாபெரும் தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
தாராளவாத முதலாளித்துவத்தின் எதிர்ப்போ, விவசாய வர்க்கத்தின் தொடக்கநிலை எழுச்சிகளோ அல்லது அறிவு வயப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளோ அல்ல, மாறாக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்தான் முதன் முதலாக ஜாரிசத்தை அதன் கால்களின் மண்டியிட வைத்தது.
பாட்டாளி வாக்கத்தின் புரட்சிகரத் தலைமையகமானது கேள்விக்கிடமற்று ஒரு உண்மையாகத் தன்னை வெளிக்காட்டியது. நிரந்தரப் புரட்சித் தத்துவம் தனது முதல் சோதனையில் வெற்றிகரமாய் தாக்குப்பிடித்திருக்கிறது என்று நான் உணர்ந்தேன்” என்று 1905-ஆம் ஆண்டைய முதல் புரட்சியைப் பற்றி 25 ஆண்டுகள் கழித்து எழுதியிருந்தார்.
பாட்டாளி வர்க்க விவசாயி, தொழிலாளர் ருஷ்யாவில் புரட்சி செய்து விடுதலை அடைந்ததுபோலவே ஆசியாவின் மிகப்பெரிய நிலப்பரப்புக் கொண்ட சீனாவிலும் நடந்தேறியது .அதேபோல சுரண்டலுக்கு எதிராக ஆயுதமேந்திய புரட்சியின் மூலமாகத் தென்அமெரிக்க நாடான கியூபாவில் விடுதலை கிடைத்தது.
இந்தச் சூழ்நிலைகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருக்கும் ஒரு நாடுதான் இந்தியா. சுரண்டல், ஆதிக்கம், அடக்குமுறை, இவை அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்கிற இந்த நாட்டில் தொழிலாளர்கள் இன்றளவும் சுரண்டலுக்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு நிலையிலுள்ள, பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்களுக்கும் இதுதான் நிலை.
ஆனால், பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த இவர்களை, தம்மை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரே குடையின்கீழ் ஒன்று திரட்ட முடியவில்லை.
பாட்டாளிகளான, தொழிலாளர்களான, இவர்கள் வெறும் வர்க்கமாக மட்டும் இல்லாமல், வருண - சாதித் தீண்டாமைக்குள்ளும் இருப்பதுதான் இவர்களின் ஒருங்கிணைவைத் தடுக்கின்ற முக்கியக் காரணியாக இருக்கிறது. “இந்தியாவில் தொழில்கள் மட்டும் பிரிக்கப் படவில்லை, தொழிலாளர்களும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்” - என்றார் மேதை அம்பேத்கர்.
தூய்மைப் பணி, துப்புரவுப் பணி, கையால் மலம் அள்ளுவது, கழிவுகளை எடுப்பது, செங்கல் சூளைகளில் வேலை செய்தல், தோல் - கைவினை போன்ற வேலைகள், செத்த மாட்டை அப்புறப்படுத்துதல், பிணம் புதைத்தல் போன்ற உயர் சாதி சமூகங்களுக்கு இழிந்த அல்லது தகுதியற்றதாகக் கருதப்படும் தொழில்களைத் தலித் மக்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கின்றனர். சமூகமும் சரி.... அரசாங்கமும் சரி... இந்த ஒதுக்கலில் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர்.
உலகையே அச்சுறுத்திய கொரானா தொற்றுக் கால கட்டத்தில், அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் மட்டும் தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் வீதிகளை, அடைபட்ட சாக்கடைக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தச் சூழ்நிலையில்கூட அந்தத் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்புக் கருவிகள், முகக் கவசங்கள், கையுறைகள் எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்கள் எல்லோரும் தலித் தொழிலாளர்கள் என்ற அலட்சியமே இதற்குக் காரணம்.
நகரின் சாலைகளில், தெருக்களில் நாள்முழுக்க குப்பைகளை வீசிவிட்டுச் செல்லும் மக்கள், அடுத்த நாள் காலையில் வந்து பார்க்கும்போது தூய்மையாக இருக்கிறதே அது எப்படி? இரவு முழுக்கக் கண்விழித்து, துப்புரவுப் பெண் தொழிலாளர் கொடுத்த உழைப்புதான் அதற்குக் காரணம். மக்கள் கூடும் பொது இடங்களுக்கெல்லாம் இது பொருந்தும். அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலனோர் தலித் மக்களே!
அவர்களை இந்த அரசும், சமூகமும் எப்போதும் மரியாதைக் குறைவாகவே நடத்துகின்றன. அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு மட்டுமல்ல, உழைப்புக்கேற்ற ஊதியமும் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. கொடுந் துன்பத்திலும் துயரத்திலும் களப்பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கடவுள் என்றும், புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். இக் கொரானா காலத்தில் பாத பூஜை கூடச் செய்தார்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை. இதனால் அந்தத் தொழிலாளர்களின் வாழ்நிலை உயர்ந்துவிடுமா?
கொடிய கொரானா காலகட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில், நாட்டின் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதை யார் கண்டித்தனர்? தங்களுக்குப் பூப்போட வேண்டாம். வயிற்றுக்குச் சோறு போட்டால் போதும். அது தான் இந்தச் சமூகத்தாரிடமும், அரசாங்கத்திடமும் இத்தொழிலாளர் தோழர்கள் முன்வைக்கும் கோரிக்கை.
கொரானா உச்சத்தில் இருந்த சென்ற ஆண்டில், புதுச்சேரியில் தூய்மைப் பணியாளரான தலித் பெண்மணி ஒருவர், தனது தலையில் வேப்பிலையைச் செருகிக் கொண்டு துப்புரவுப் பணிக்கு போகிறார். அவரிடம் தலையில் வேப்பிலை வைத்துக்கொண்டு போவது பற்றி நையாண்டியாகக் கேள்வி கேட்கிறது ஒரு இளைஞர் கூட்டம். அதற்கு, “நாடுவிட்டு நாடு பரவும் ‘குருமா’வைத் தடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறேன்” என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார் அப் பெண்மணி.
என்ன நோய்? என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் அந்த இளைஞர்கள். அதற்கு அவர், “குருமா... குருமா...” என்கிறார். மேலும், இந்நேரத்தில் வீட்டுக்குள்ள இருக்காமல் வெளியே வரலாமா...?” என்கிறார்கள். “ உயிர்மேல் பயம் இருக்கிறது தான். ஆனால், வேலைக்குப் (துப்புரவு) போனால்தான் சோறு!” என்கிறார் அப் பெண்மணி. புதுச்சேரியில் நடைபெற்ற இச் சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவியது.
இதன் உளவியல் என்ன? என்று நாம் சிந்திக்க வேண்டும். உடலுழைப்பைக் கொடுத்து உயிர்வாழும் உழைக்கும் மக்கள் கீழ்ச் சாதிகளாகவும், அந்த உழைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் மேல் சாதிகளாகவும் இருக்கின்ற இப் போக்குதான் இத் தொழிலாளர்களின் வாழ்நிலை, துயர நிலையில் இருப்பதற்குக் காரணம்.
துயரப்பட்ட நிலையிலிருக்கும் இம் மக்கள் அமைப்பாய்த் திரளவேண்டும்; போராடவேண்டும். அதற்கு அம் மக்களிடையே ஊடுருவியிருக்கும் - குறுக்குவாக்கில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் உட்சாதி, தீண்டாமை அமைப்பு முறையே மிகப் பெரிய தடையாக இருக்கிறது.
ருஷ்ய மண்ணில் உண்டான விவசாய, தொழிலாளர் கிளர்ச்சிபோல இம்மண்ணிலும் நடைபெறாமல் இருப்பதற்கு வருண - சாதித் தீண்டாமைதான் காரணம். அந்த அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கான வேலையில் தொழிலாளர்கள் இறங்க வேண்டும். அதுவே தொழிலாளர்கள் அடைய வேண்டிய பொன்னுலகிற்கான வழியாகும்.
- இரா. திருநாவுக்கரசு