இன்று தமிழும் தமிழினமும் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில், தமிழக வரலாற்றில் என்றுமில்லாத அளவு தமிழ் உணர்வும், இன உணர்வும் வளர்ந்து செழித்திருந்தன. உண்மையுணர் வுடன் நமது மொழி, நமது இனம் வளர்க்கப்பட வேண்டும், மேம்பாடடைய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை யுடன் பொதுநோக்குடன் உழைத்தனர். அன்றைய காலக்கட்டம் மக்கள் மிகவும் பின்தங்கி அடிமை ஆட்சியில் அல்லல்பட்ட நேரம்.

இதில் மொழி நிலையில் மொழித் தூய்மைக்கு முதலிடம் கொடுத்தவர் மறைமலையடிகள். வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினர் அப்பாத்துரையார், சீனி வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள். மொழி வரலாற்றில் மிகப் பெரிய திருப்பத்தை உண்டாக்கியவர் பாவாணர். மொழி, இன உணர்வை ஊட்டியவர்கள் பாரதிதாசன், இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்கள். இதற்காக இவர்கள் அடைந்தது, பயனாகப் பெற்றது வறுமை. கிடைத்த பரிசு தொல்லைகள்தான் அன்று உண்மையான தொண்டர் களுக்கு. அதற்காக அவர்கள் கவலைப்படவில்லை. பின் வாங்கவில்லை, சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிட்டனர். இருந்தாலும் இவர்களின் பணி கற்றவர்களிடம் மட்டும் தான் சென்றடைந்தது. எளிய மக்களிடம் செல்லவில்லை. காரணம் பெரும்பாலோர் கல்வியறிவில்லாதவர்கள்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில்தான் அக்காலத்தில் கட்டிப்பறந்த பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து நீதிக்கட்சி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இது குமுக மாற்றத்திற்கான அமைப்பு. அது மேலும் வளர்ந்து, பல சான்றோர்களின் உழைப்பால் வளர்ந்து 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா கொண்டுவந்த தீர்மானத்தால் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இது எளிய மக்களிடம் பெரிய ஆதரவைப் பெற்றது. மாற்றத்தையும் உண்டாக்கியது. இதில் இணைந்த அண்ணா போன்ற கற்ற இளைஞர்கள் கூட்டம் பெருகியது. அவர்கள் குமுக மாற்றத்தோடு, மொழி, இன உணர்வுகளை யும் பார்ப்பனக் கொடுமைகளையும், வடமொழியால் தமிழுக்கு ஏற்பட்ட இழிவுகளையும் தங்களின் பேச்சாற்றல் மூலம் எளிய மக்களிடமும் கொண்டுசென்றனர்.

1965 மொழிப்போர்

இவர்களின் பணியால் எளிய மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் மொழி, இன உணர்வுகள் பெருமளவில் வளர்க்கப்பட்டன. பின்னர் இவர்கள் பெரியாருடன் முரண்பட்டு 1949இல் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, மிகத் தீவிரமாகப் பட்டிதொட்டியெல்லாம் மொழி இன உணர்வைப் பரப்பினர். அதோடு பேராயக் கட்சி ஆட்சியில் நடைபெறும் அடக்குமுறைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறினர். இதில் இருந்தவர்கள் பலர் நன்கு கற்றவர்கள். தமிழின் தமிழ் நாட்டின் வரலாற்றை ஓரளவு அறிந்தவர்கள். தமிழ், தமிழின மேம்பாட்டோடு குமுகச் சீர்திருத்தக் கருத்துகளையும் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் பேச்சாற்றலும் சேர்ந்து மாணாக்கர்கள், இளைஞர்கள், எளிய மக்கள் என அனைவரிடமும் உணர்வு பெருகியது. இவர்களால் இளைஞர்கள் எளிய மக்கள் என அனைவரும் உணர்வு பெற்றனர். முன்னர்ச் சொன்ன அறிஞர்கள் மூலம் கற்றவர்கள் மேலும் பல ஆய்வுகள் செய்யவும் உண்மைகளை அறியவும் துணை நின்றனர். இத்தகைய மாற்றங்களால் தமிழ்நாடு மிகப் பெரும் எழுச்சியைப் பெற்றது. இவை எல்லாம் பெரும்பாலான தமிழர்களின் ஒன்றுபட்ட உணர்வால் உழைப்பால் கிடைத்த பயன்.

இதன் உச்சக்கட்ட விளைவுதான் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற மொழிப்போர். தமிழின வரலாற்றில் நடை பெற்ற மிக எழுச்சிமிக்க போர். இதனுடைய பயனாகக் கிடைத்ததுதான், 1967இல் நடைபெற்ற ஆட்சி மாற்றம். இதுவரை தமிழர்களின் ஒற்றுமையாலும் மொழி, இன உணர்வாலும் பகுத்தறிவுச் சிந்தனையாலும், முற்போக்கு எண்ணங்களுக்கு இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாடே முன்னணி மாநிலமாக விளங்கியது. இதுவரை நடைபெற்றன வெல்லாம் தமிழினத்தின் வளர்ச்சியாக வலிமையாகக் கருதத்தக்க வினைப்பாடுகள். இந்த ஒன்றுபட்ட முற் போக்குச் சிந்தனையால்தான் இந்தியா முழுவதும் ஆணவ ஆட்சி நடத்திய பேராயக் கட்சியை இரண்டாவது மாநில மாகப் புதைகுழிக்குள் தள்ளி மீண்டும் எழமுடியாத நிலையைத் தமிழ்நாட்டில் செய்ய முடிந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது, நடக் கிறது என்பதெல்லாம் நாளும் காணும் கொடுமைகள்தான். அதைவிட்டு உலகத் தமிழ்க் கழகத்தின் நிலைக்கு வருவோம்.

உலகத் தமிழ்க் கழகம்

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் என அமைப்புக்கள் தொடங்கி மக்களின் பேராதரவைப் பெற்று மிக விரைவில் வளர்ந்து இருபதாண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே ஆட்சியையும் கைப்பற்றினர். இது மக்களின் ஒருமித்த உறுதுணையால் நடைபெற்றது. ஆனால் உண்மையான மொழி, இன உணர்வாளர்களுக்கு இவர்களின் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே நம்பிக்கையின்மை தோன்றி யுள்ளது. அறிஞர்கள் பின் விளைவுகளை முன்னரே அறியும் ஆற்றல் பெற்றவர்கள். அந்த வகையில்தான், மொழி நலனை மட்டும் முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் பலர் சேர்ந்து மொழி வரலாற்றில் மிகப்பெரும் உண்மையான திருப்பத்தை ஏற்படுத்தியவரான பாவாணர் அவர்கள் தலைமையில், மிகப்பெரும் மொழி இன நலப் போராளியாக விளங்கிய பெருஞ்சித்திரனார் அவர்களைப் பொதுச் செயலராகவும் கொண்டு 6-10-1968இல் உலகத் தமிழ்க் கழகம் தொடங்கப் பட்டது. இதில் தமிழ்க்குடிமகன் போல் இன்னும் ஏராளமான பேர் பங்கு பெற்றிருந்தனர். இதன் முதல் மாநாடு பறம்புக் குடியில், மிகப்பெரும் அளவில் சிறப்புடன் நடந்தது.

பின்னர்த் திருச்சி மதுரை போன்ற நகரங்களிலும் வெகுவலுவான முறையில் மிகப்பெரும் அறிஞர்கள் துணை யுடன் நடந்தது. மூன்றாண்டுகளுக்குள் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 300க்கும் மேற்பட்ட கிளைகள் தோற்றுவிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இப்படி வேகமாக வளர்ச்சி பெற்றதைக் கண்ட பாவாணர் அவர்கள் மகிழ்வடைந்து இப்படியே வளர்ந்தோமானால் விரைவில் ஆட்சியையே பிடித்துவிட லாம் என்று கூறினார். இப்படி வளர்ந்த கழகம் தமிழ் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நலனையும் வளத்தை யும் அடிப்படையாகக் கொண்டு அதே உணர்வுடையவர் களால் வளர்க்கப்பட்ட கழகம். தமிழினத்திற்கே தனியுடைமை யாகிப் போன ஒற்றுமைக்குறைவு தோன்றியது. அதன் விளைவு தமிழ்க்குடிமகன் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து வேறு அமைப்பைத் தொடங்கினர். அதன் பின்னர், பெருஞ் சித்திரனார் அவர்கள் பாவாணர் மறைவிற்குப் பின் 8.11.1981 இல் ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதுவும் வளர்ச்சி பெற்றது. சில ஆண்டு களில் அதிலும் பிளவு. வலுக்குறைந்தது. பெருஞ்சித்திர னாரின் மறைவிற்குப் பின் அந்த அமைப்பும் மறைந்து போனது. அந்த அமைப்பைத் தொடர முயற்சிகள் செய்தும் முடிய வில்லை. தமிழ்க்குடிமகன் அரசியலுக்குப் போய்க் கட்சி மாறி மானக்குறைவான முறையில் மடிந்து போனார்.

தான் என்ற தன்முனைப்பு

பொதுமக்களை நம்பித் தொடங்கிய அமைப்பு இன்றும் ஆட்சியில் இருக்கிறது. இன, மொழிக்குப் பெரும் கேட்டைச் செய்துகொண்டு செல்வாக்கோடு மக்களை ஏமாற்றிக் காலம் தள்ள முடிகிறது. ஆனால் நல்ல அறிஞர்களால் தன்மானம், மொழிமானம், இனமானமுள்ள உண்மையான நேர்மையான பொது நோக்குடைய அறிஞர் களால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஏன் இவ்வாறு உடைந்து சிதறிச் சின்னாபின்னமாகிப் போனது? சிந்திக்க வேண்டாமா? இதை ஆய்ந்து பார்த்தால் தமிழனின் பலவீனங்கள் புலப்படும். அவை என்ன? முதலில் தான் என்ற தன் முனைப்பு, அதனால் ஏற்படும் முரண்பாடுகள், பொது நலனுக்காகத் தன் முனைப்புகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காத, இணைந்து நின்று இலக்கை அடைய முடியாத முயலாத, பொது நலனுக்குக் கேடான தன்மான உணர்வு. இவை கற்றவர்கள், அறிஞர்களிடம் அதிகம். முற்காலத்தில் அரசர்களிடம் இந்த உணர்வு மிகுந்திருந்தபடியால் தமிழ் அரசர்களே ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொண்டு அழிந்து போனார்கள். அதன் விளைவு தமிழினம் மிகக் கீழான நிலைக்கு அரசிழந்து, உரிமையிழந்து அடிமையாகிப் போனது. இன்றும் அரசியல் முன்னேறிவிடவில்லை. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் வெட்கம் கெட்ட மானமற்ற காற்றில் பறந்த எச்சில் இலை கோயில் மேலிருந்து கூத்தாடுது என்ற இழிந்த நிலை தொடர்கிறது.

இதற்கு என்ன காரணம்? அறிஞர்கள், கற்றவர்கள் கொள்கை மறந்து இனநலன் மறந்து, பகைமை கொண்டு தன்முனைப்பால் தனித்தனியாகச் சிதறிப் போனதுதான். இதற்குத் தமிழ்க் கழகமே சான்று. உட்பகை என்ற அதி காரத்தை இந்த அறிஞர்கள் அறியாமல் இருக்க இயலாது. அதை அவர்கள் வாழ்வில் நடைமுறைப் படுத்தவில்லை. “வேலியே பயிரை மேய்ந்தால் வெள்ளாளன் என்ன செய்வான்’’ என்பதுபோல நல்வழி காட்டும் - தீயோரையும் நல்வழிப்படுத்தும் அறிஞர்கள், மக்களுக்குள் பிரிவினை ஏற்பட்டாலும் அறிவுரை கூறித் திருத்த வேண்டிய உயர்நிலையில் இருக்கும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ வேண்டிய அறிஞர்கள் தொடங்கிய அமைப்பு அதுவே ஒற்றுமை குலைந்து சிதறிப் போகு மானால், அவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்? அறிவை மதியாத இனம் எப்படி முன்னேறும்? அதன் விளைவைத் தானே இன்று காண்கிறோம்.

அதுமட்டுமன்று, பண்டைய காலத்திய அனைத்து வல்லமை படைத்த அரசனே ஏழைப் புலவர்களின் அறிவுரை களுக்கு அடிபணிந்து நடந்தான். அதற்கு – அப்புலவர்களின் சான்றாண்மை, துணிவுதான் கரணியம். ஆனால் இன்று அரசியல் அரம்பர்கள், அறக்கேடர்களின் அடிமைகளாகக் குற்றேவல் செய்பவர்களாகக் குறுகிப் போனார்கள். இவர்களிடம் தன்மான உணர்வையோ, செம்மாந்த வாழ் வியல் அறங்களையோ கொள்கை கோட்பாடுகளையோ எப்படி எதிர்பார்க்கமுடியும், அதற்காக அனைவரும் அப்படித்தான் என்றும் கூற முடியாதுதான். இருந்தாலும் பெரும்பான்மையர் அத்தகையினரே. மக்களாட்சி என்ற இன்றைய மானங்கெட்ட ஆட்சியில் பெரும்பான்மை தானே பேசுகிறது. வாழ்வியல் நெறிகள் எல்லாம் புறக் கணிக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவாய், அரம்பர்கள், அறக்கேடர்கள், சூழலுக்கேற்ப நிறம்மாறும் போலிகளின் கை மேலோங்கிவிட்டது. நல்நெறி, அறவாழ்வு, தூய ஆட்சி முறை, குறள் கூறும் வாழ்வியல் நிலைகள் பற்றிக் கூறுவதெல்லாம் வாழ்வியல் ஒழுங்குநெறிகள் பற்றிக் கூறுவதெல்லாம் பயனற்றுப் போகின்றன.

தேரான் தெளிவும்...

இத்தனை கேடுகள் வளரக் காரணமாக இருந்தது, மிகப்பெரும் அறிஞர்களால் உயர்ந்த நோக்கத்துடன் ஒரே நோக்குடன் தொடங்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகம் சிதைந்து போனதுதான் காரணம் என்று கூறலாம். அது வலிமை பெற்று வளர்ந்திருக்குமானால், தமிழ் நாட்டிற்குத் தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகள், கேடுகள், வீழ்ச்சிகளைத் தடுத்திருக்கமுடியும். கண்டிப்பாகச் செய்திருக்க முடியும். எவ்வாறென்றால் அந்த அமைப்பில் இருந்தவர்கள் எல்லாம் எளிமையானவர்களாக இருந்தாலும் தூய வாழ்வினர், கொள்கைப் பற்றாளர்கள். உண்மையாகவே மொழி, இன நலத்தில் அதன் மேம் பாட்டில் அக்கறையுள்ளவர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த பொய்மையும் ஏமாற்றுதலும் செய்ய அறியாத நம்பிக்கைக்குரியவர்கள். அதனால்தான் அந்த அமைப்பு வேகமாக வளர்ச்சி பெற்றது.

அதே நிலை தொடர்ந்திருக்குமானால் நல்லவர்கள், பண்பாளர்கள், அறிஞர்கள் மேலும் அதில் இணைந்து அது வலுப்பெற்றிருக்கும். ஆட்சியைப் பிடிக்கவில்லை யானாலும் ஆட்சியாளரை வழிநடத்தும் வலிமையையாவது பெற்றிருக்க முடியும். ஆனால் அப்படி வளராமல் சிதைந்து போனது மிகப்பெரும் அவலம். தமிழுக்கு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி. இத்தனைக்கும் அதில் இருந்தவர்கள் நன்கு கற்றுத் துறைபோகிய பேரறிஞர்கள். இருந்தும் ஏன் அப்படி நடந்தது. இந்த அறிஞர்கள் பின்வரும் திருக்குறளை அறியாமல் இருந்திருக்க இயலாது.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.’’ இருந்தும் அந்த அவலம் ஏற்பட்டு விட்டது. தமிழர் வரலாற்றில் தொடர்ந்து வரும் அவலங் களில், ஒற்றுமைக்குலைவில் இதுவும் ஒன்று என்பது அறியமுடிகிறது.

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு

இங்கு இன்னொரு செய்தியையும் நாம் உணர வேண்டும். 1950ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் மிகப் பெரும் வலிமையுடன் இருந்த கட்சி, பொதுவுடைமைக் கட்சி. அதில் உள்ளவர்கள் உறுதி படைத்த கொள்கைக் குன்றுகளாக, மக்கள் நலனில் சமநிலைக்குமுகம் அமைய மாபெரும் ஈகங்களைச் செய்தவர்கள். தூய தன்னலமற்ற பொதுவாழ்வினராக விளங்கியவர்கள். எத்தனை பேர் எவ்வளவு பெரிய ஈகங்களைச் செய்தார்கள் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. திமுகவின் தொடக்கத்திற்குப் பின் அவர்களின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. திமுக மாபெரும் வளர்ச்சி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் கொள்கை கோட்பாடுகள் இன்று நாடு அறிந்த ஒன்றுதான். பொது வுடைமையினருக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது. அவர்கள் பின்வரும் குறளை மறந்து செயல்பட்டதன் விளைவுதான் அவர்கள் அந்நிலை அடையக் காரணம். “நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.’’

தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறியாமல் தமிழ் மக்களின் மொழி உணர்வையும் வரலாற்றையும் அறியாமல் காலடியில் உள்ளதை அறியாமல் எங்கோ தொலைவில் பார்வையைச் செலுத்திக் கொண்டு ஓடினார்கள். இடறி வீழ்ந்து இழிவடைந்து போனார்கள். அவர்கள் நேர்மையும் தூய தொண்டும் மதிப்பிழந்து போயின. தமிழ்மக்களின் நாடித்துடிப்பறிந்து திமுகவினர் செயல்பட்டதால் வெறும் மேடைப் பேச்சாலும் பொதுக் கூட்டங்களாலும் மக்களைக் கவர்ந்து இருபதாண்டுகளுக் குள்ளாகவே ஆட்சியைப் பிடித்து வரலாறு காணாத அறக்கேடுகள், ஊழல்கள், அரம்பத் தனங்கள் செய்து இன்றும் ஆட்சியில் இருக்க முடிகிறது. எண்பதாண்டு களுக்கும் மேலான பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்குக் கிடைத்த பயன் என்ன? வளர்ச்சி என்ன?

இவை எல்லாம் தமிழக வரலாற்றில் சென்ற நூற்றாண்டிலிருந்து வரும் அரசியல் குமுக மொழி இன நிகழ்வுகள். திமுகவின் வளர்ச்சியால் இந்த இனமும் மொழியும் தமிழர் வாழ்வியல் அறப்பண்புகளும் மிகக் கேடான வீழ்ச்சியை அடைந்துவிட்டன. இந்த நிலையில் பல ஆண்டுகளாக உயிரற்றுக் கிடந்த உலகத் தமிழ்க் கழகம் உயிரூட்டப்பட்டு மீண்டும் நடைபயிலத் தொடங்கியுள்ளது வரவேற்று மகிழத்தக்க வினைப்பாடுதான். அதோடு அதன் கொள்கை ஏடாக முதன்மொழி என்ற இதழும் வெளிவருவது மிகவும் மகிழ்வளிக்கும் வினைப்பாடுதான். உலகத் தமிழ்க் கழகம் போன்று எத்தனையோ அமைப்புக்கள் தோன்றின. அதைத் தோற்றுவித்த முகாமையானவர்கள் மறைந்த பின்னர் அந்த அமைப்பும் மறைந்து விடுகின்றது. ஈரோட்டைச் சார்ந்த வேலா. இராசமாணிக்கம் என்பவர், “குறளாயம்’’ என்ற அமைப்பை மிகச் சிறந்த நோக்கோடு தொடங்கி, குறளியம் என்ற இதழும் தொடங்கினார். அதன் வளர்ச்சிக்குப் பெரும்பொருட் செலவில் பெரும் முயற்சி செய்தார். அவரின் மறைவிற்குப் பின் அதுவும் மறைந்து போனது.

இப்படி இன்னும் எத்தனையோ. ஆனால் தமிழ்ப் பகை அமைப்புக்கள் வளர்கின்றன. எனவே இந்த வரலாற்று உண்மைகளை உணர்ந்தும் “முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்’’ என்ற குறளுக்கு இலக்கணமாகி விட்டன. தமிழன் திறமையற்ற வனா? இல்லைதான். பின் ஏன் அவர்கள் மொழி இன நலன் கருதி அமைக்கப்பட்ட அமைப்புக்கள் வளர இயலாமல் மறைந்துவிடுகின்றன. அதைத் தோற்றுவித்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும் அக்கொள்கையில் உறுதி யான பற்றுடையவர்கள்தான். தூய்மையான பொதுநோக் குடையவர்கள்தான். அதன் வளர்ச்சியில் மிகுந்த உறுதி யுடனும் நம்பிக்கையுடனும் உழைக்க முன்வந்தவர்கள் தான். இருந்தும் ஏன் அது நலிவடைந்து போகிறது? இதில் ஏதோ ஒரு பெரும் குறைபாடு இருப்பதாகவே அறிய முடிகிறது.

தமிழினம் எதிர்பார்க்கிறது

அதை அறிந்து அவற்றைத் தவிர்த்து முன்னைய வரலாறுகளை நினைவில் கொண்டு, இனி அப்படியரு நிலை ஏற்பட்டு விடாமல், மொழி, இன நலனுக்கு முன்னின்று உழைக்கும் முன்னணி அமைப்பாக விளங்கும் வகையில், முன்னர் ஏற்பட்ட தவறுகள் ஏற்பட்டு இவ்வமைப்பு முடங்கிப் போகாமல் வளர்ச்சி பெறும் வகையில் விதிமுறைகள் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று உணர்வாளர்கள் விரும்புகின்றனர். இதில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் உண்மையான நல்ல மொழி, இன உணர்வாளர்கள்தான் என்பதில் ஐயம் இல்லை. முன்பு போல தன் முனைப்பு முன்வந்து தளர்ந்து போகும் நிலை உருவாகிவிடக்கூடாது.

தமிழும், தமிழினமும் மிகவும் கேடான, கீழான, இடர்ப்பாடான நிலைக்குப் போய்விட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். இதைத் தடுத்து நிறுத்தி, மேலும் மேம்பாடடையச் செய்யும், இனமொழியின் பாதுகாப்புப் பாசறையாக, படைவீடாக, பகையழிக்கும் படைக்கருவி யாக, கொள்கை வகுக்கும் உயர் கூடமாக, அரசுக்கே வழி காட்டும் பேரறிஞர்களின் உயர் அவையாக உலகத் தமிழ்க் கழகம் உலக அளவில் விளங்கும் வகையில் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும் என்பது உண்மைத் தமிழறிஞர்கள், தமிழன்பர்களின் மிகப்பெரும் நம்பிக்கை. அதற்கேற்ற முறையில் அமைப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று தமிழினம் எதிர்பார்க்கிறது. வளர்க! வாழ்க!

Pin It