தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தபின்பு வழக்கம் போலவே தமிழ்நாடு ‘செம்மொழி’ என்ற சொல்லையும் மலினப்படுத்தி விட்டது. எதற்கெடுத்தாலும் செம்மொழி என்ற அடைமொழி. செம்மொழியின் பேரால் அமைப்புகள். செம்மொழியின் பேரால் போட்டிகள், பரிசுகள், சிறப்புகள் என்று தெருவெல்லாம் செம்மொழி முழக்கம்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி நடுவணரசால் 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் தமிழ் எப்போதும் செம்மொழியாகவே விளங்குகிறது. இப்போது நாம் செம்மொழி என்று அழைப்பதை முன்பு செந்தமிழ் என்று அழைத்தோம். தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாகச் செந்தமிழாகவே விளங்குகிறது.

கீழை ஆரியத்தால் மூவாயிரம் ஆண்டாகத் தாக்குண்ட தமிழ் கடந்த முந்நூறு ஆண்டாக மேலை ஆரியத்தாலும் தாக்குண்டு தடுமாறிக்கொண்டுள்ளது.

இந்தப் போக்குகளை எதிர்த்து மனோன்மணியம் சுந்தரனார் தொடங்கி நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகளார், பரிதிமாற்கலைஞர், பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று ஒரு பட்டாளமே பாடுபட்டது; நாமும் பாடுபட்டுக்கொண்டுள்ளோம்.

மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலிய அமைப்புகள் செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி என்று இதழ்களைத் தொடங்கிச் செம்மொழி ஆய்வுகளை நிகழ்த்தின. இருந்தும் தமிழைச் செழுந்தமிழாக மாற்ற முடியவில்லை. இந்நிறுவனங்களும் தோல்வியில்தான் முடிந்தன.

இன்றைக்குச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் நடுவணரசால் பல கோடி உருபாச் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செம்மொழியின் பேரால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்போகிறது.

தமிழின் நிலையை நினைத்தால் வேதனைதான் பெருகுகிறது. எங்கும் தமிழ் இல்லை, எதிலும் தமிழ் இல்லை. தமிழக அரசு ஆயிரம் கோடி உருபாவையாவது இந்த மாநாட்டிற்குச் செலவு செய்யும். இந்தப் பணத்தில் தமிழுக்கு ஏதேனும் உருப்படியாகச் செய்யலாம். அரசுப் பணத்தில் தி.மு.க. மாநாடாகச் செம்மொழி மாநாடு நடந்தேறப் போகிறது. கோவை மக்கள் மாநாட்டை எதிர்நோக்கிக் கலக்கத்தில் உள்ளார்கள். இப்போதே ஆயிரக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டப்பட்டு விட்டதாகப் புலம்புகிறார்கள்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்

என்னும் இரண்டு வகைக் கேடுகளையும் செய்துவரும் திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் வாயிலிருந்து தமிழ் மறைவதைப் பற்றிக் கவலைப்படாமல் கல்வியில் தமிழ் இல்லை ஆட்சியில் தமிழ் இல்லை என்று கவலைப்படாமல் எழுத்து மாற்றத்தைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுள்ளது.

இந்தி வராமலிருக்க இருமொழிக் கொள்கை என்றார்கள். இந்தியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆங்கிலக் காவலர் இந்து இராம் தமிழக அரசின் தலைமைச் செயலகத் திறப்பின் விருந்து விழாக் கொண்டாட்டத்தில், ‘தமிழ் நாட்டில் இந்தியில் பாடுகிறார்களே’ என்று (ஆங்கிலத்தில் பாடியிருந் தால் மகிழ்ந்திருப்பார்) முதல்வரிடம் தன்னுடைய கவலையைத் தெரிவித்தார். முதல்வர் உடனே தன்னுடைய பாணியில் ‘பாட்டில் இந்தி இருக்கலாம்; தமிழ் நாட்டில் இந்தி இருக்கக்கூடாது’ என்று சொற்சிலம்பம் ஆடினார்.

நிலைமை என்ன? தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் ஆங்கில முழக்கத்தோடு இந்தி முழக்கமும் சேர்ந்து கொண்டது. ‘எந்தப் பக்கம் வந்து புகுந்து விடும், அது எத்தனை பட்டாளம் கூட்டிவரும்’ என்று பாவேந்தர் பாடியதெல்லாம் பழைய கதை.

தமிழ்நாட்டில் இயங்கும் நடுவணரசு அலுவலகங்கள் இந்திக்கு முதன்மை தந்து ஆங்கிலத்தை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளன. தமிழ்நாட்டு அலுவலகங்கள் ஆங்கிலத்துக்கு முதன்மை தந்து தமிழை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளன. தனியார் நிறுவனங்களும் உலகமய மாக்கலின் விளைவாய்ப் புற்றீசல்போல் புறப்பட்டுள்ள பெருந்தொழில் நிறுவனங்களும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களும் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளன. தமிழுக்கு அங்கு இடமில்லை.

இவ்வளவு ஏன்? மாண்புமிகு தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டுள்ள ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்’ நடுவணரசின் நிறுவனம். அங்கும் இந்தியும் ஆங்கிலமும்தான் ஆட்சிமொழிகள். செம்மொழி பருப்பு தமிழால் வேகாது. இது செம்மொழி நிறுவனத் தலைவர் கலைஞருக்குத் தெரியாமலா இருக்கும்?

உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் மாநாட்டை நடத்த முடியாமல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் மாநாட்டை நடத்தக் களமிறங்கியுள்ளது தமிழக அரசு. முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளின் முடிவில் நிறைவேற்றப்பட்ட செயல்திட்டங்கள் முடங்கிவிட்டன. சென்னை, அண்ணாமலை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் தோற்றுவிக்கப்பட்ட திருக்குறள் இருக்கைகள் செத்து விட்டன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் முறையாகச் செயல்பட தமிழக அரசு கோடிக்கணக்கில் பணவுதவி செய்திருந்தால் நடுவணரசிடம் செம்மொழித் தகுதி கேட்டு மண்டியிட்டிருக்க வேண்டிய தேவையில்லை.

பெரியார் முதல் வீரமணி வரை அண்ணா முதல் கலைஞர் வரை தமிழ் பற்றியும் தமிழர்கள் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் எந்த அளவிற்குப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது அவர்களுடைய எச்சத்தால் காணக்கிடைக்கின்றது. நினைத்தால் வருத்தம்தான் மிஞ்சுகிறது. இவர்கள் மட்டுமா? இடச்சாரி வலச்சாரிகளும் முற்போக்கு பிற்போக்குகளும் இந்தப் பாதையிலேயே நடைபோடுகிறார்கள்.

கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையுடைய மண்; பலகோடி ஆண்டுகள் பழமையுடைய மலை; 70 ஆயிரம் ஆண்டுத் தொடர்ச்சியுள்ள மரபணு கொண்ட மாந்தன் வாழும் நிலம்; 50 ஆயிரம் ஆண்டுப் பழமையுடைய மொழி பேசும் மக்கள். இவ்வளவும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் சொந்தமானவை. தலைவர்கள் இவற்றை உணர்ந்தாற்போல் தெரியவில்லையே.

600 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளம் தமிழ்நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை கருநாடகம் தமிழ்நாடு. 1200 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆந்திரம் தமிழ்நாடு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரிசா தமிழ்நாடு. 6000 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவே தமிழ்நாடு. இந்தியா தீவாக இருந்த காலத்திலிருந்தே அது நாவலந்தீவு என்ற பெயரில் தமிழ்நாடாக இருந்தது.

இவற்றையெல்லாம் நம் தலைவர்கள் உணர்ந்திருந்தார்களா? வரலாற்றில் பதிவு செய்தார்களா? பாடநூலில் இடம்பெறச் செய்தார்களா? இயக்கங்களில் இடம்பெறச் செய்தார்களா?

ஆதிச்சநல்லூரில் 1856இல் முதன்முதல் அகழாய்வு நடந்தது. அதன்பிறகுதான் 1886இல் மொகஞ்சதரோ - அரப் பாவில் அகழாய்வு நடத்தப்பெற்றது. சிந்துவெளியைவிடத் தொன்மையானது ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது அறியப்பட்டது. நம் ஆசான் பாவாணர் அடிக்கடி மேற்கோள் காட்டும் தொடரான ‘பேரன் பாட்டனைப் பெற்றான்’ என்பது போல் சிந்துவெளி அழிவுக்குப்பின் தமிழர்கள் தெற்கே பரவினார்கள் என்று மீண்டும் மீண்டும் ஆரிய அறிஞர்கள் கூறி வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கே முப்பதாயிரம் - இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை மறைத்துவிட்டு ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த கி.மு. 1500 ஆண்டுக்கு முன்பு தமிழர்களும் அவர்களைப் போலவே இந்தியாவுக்குள் கி.மு. 5000த்தில் வந்தார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.

கி.மு. 1000த்திலேயே எழுத்து பற்றிப் பேசுகிறது தொல்காப்பியம்! ஆனால் கி.மு. 300க்கு முன்பு தமிழில் எழுத்தில்லை என்று அடித்துச் சொல்லும் ஐராவதம் மகாதேவன்தான் மாநாட்டின் துணைத்தலைவர். இவரும் தமிழர்கள் வந்தேறிகள் என்று அவ்வப்போது ‘ஆய்வுரை’ நிகழ்த்துகிறார்.

70 ஆயிரம் ஆண்டாக இந்த மண்ணில் வாழும் தமிழனுக்கு வானியல் அறிவு, வேளாண் அறிவு, மருத்துவ அறிவு, இசையறிவு, பண்பாட்டறிவு இருக்காதா? பண்டைத் தமிழரின் திணை வாழ்க்கை இவற்றைத்தானே உணர்த்துகிறது.

செம்மொழி ஆய்வு இனி வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உயிரியலார், பயிரியலார், மண்ணி யலார், நீரியலார், நிலவியலார், மொழியியலார், வேளாணியலார், இசையியலார், கலையியலார், தொல்லியலார், தொழில் நுட்பவியலார், தமிழியலார், மருந்தியலார், மாந்தவியலார், வரலாற்றியலார், பண்பாட்டியலார், மெய்யியலார், வானியலார், குமுகவியலார், தொழிலியலார், கடலியலார், கனிமவியலார், இவர் போன்றே இன்ன பிற துறையினர் ஒருங்கிணைந்து செம்மொழி ஆய்வை மேற்கொள்ள வேண்டும். பத்தாயிரம் ஆண்டினும் மேலான பழந்தமிழ்ச் செழுமையை மீட்டெடுக்க வேண்டும்.

தமிழர்களுக்குப் பொய்பேசித்தான் உண்மையை மெய்ப்பிக்க வேண்டுமென்ற தேவையில்லை. ஆரியர்கள், ‘பொய்யுடை யருவன் சொலல் வன்மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே’ என்ற நிலையில் உள்ளனர். தமிழர்கள் ‘மெய்யுடை யருவன் சொலல்மாட்டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே’ என்ற நிலையில் உள்ளனர். இதற்கு மாற்றுவழி கண்டாக வேண்டும்.

Pin It