திருச்சி பெரியார் சரவணன் எழுதிய 'திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்' நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை:

திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

valasa vallavanகம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்திலிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு கட்சி வேண்டும் என்பதை பெரியார் நன்றாக புரிந்திருந்தார். காரல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

அதில் சொல்கிறார், “இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு கிராமமும் சுயதேவை பூர்த்தி கிராமங்கள். அந்த ஊருக்கு தேவையானது அந்த ஊரிலே கிடைக்கும். ஏனென்றால் அப்போது தொழில் வளர்ச்சியடையவில்லை. மார்க்ஸ் இருந்த காலகட்டத்தில் இந்தியா விவசாய நாடாக இருந்தது. தச்சர், குயவர், வண்ணார், நாவிதர் போன்று ஒரே ஊரில் அனைவரும் இருப்பார்கள். எனவே மார்க்ஸ் சொல்கிறார், ‘ஒவ்வொரு கிராமமும் சுய தேவை பூர்த்தி கிராமங்களாக இருந்தன’ என்றார். ஆனால் மார்க்ஸ் ஒன்றைக் கூற தவறிவிட்டார். அவை ஒவ்வொன்றும் ஜாதியாகப் பிரிந்து இருந்தன. அவருடைய ஆராய்ச்சி சரியான ஆராய்ச்சி, ஆனால் இவை பாரம்பர்யமாக வரும் குலத்தொழில் என்பதை மார்க்ஸ் கணிக்கத் தவறிவிட்டார். மார்க்ஸ் இந்தியாவை நன்றாக புரிந்து வைத்திருந்தார். மனுநீதியைப் படித்திருக்கிறார். மனுநீதியை மேற்கோள் காட்டியே டாஸ் கேப்பிட்டல் தொகுதி 2இல் எழுதுகிறார். ‘இந்தியாவில் ஒரு பசு மாடு இறந்தால் கவலைப்படுகிறார்களே தவிர உழைக்கும் மனிதன் இறந்து விட்டால் கண்டு கொள்ளவில்லை’ பசுவிற்கு கிடைக்கும் மரியாதை கூட இந்தியாவில் உழைக்கும் மனிதனுக்கு இல்லை என்று மார்க்ஸ் 1854 இல் எழுதியிருக்கிறார். பசுவை, குரங்கை வணங்குகிறார்கள் எனவே இந்தியாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி வராமல் இங்கு கம்யூனிசம் மலராது” என்று எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் என்ன சிக்கல் என்றால், தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர்களாக தொடக்க காலத்தில். வந்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். நம்பூதிரி பாட், இவர் தனது சொத்தையெல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்தார் என்பது உண்மைதான். ஆனால் மார்க்ஸ் கொள்கைகளுக்கு நேர் எதிராக கம்யூனிஸ்ட் கட்சியை நாடாளுமன்ற அரசியலுக்குள் கொண்டு சென்றதற்கு நம்பூதிரி பாட்டுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘இந்திய நாடாளுமன்றமும் கம்யூனிஸ்ட்களும்’ என்று நம்பூதிரி பாட் புத்தகம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றம் சென்று புரட்சி செய்யலாம் என்று மார்க்ஸ் ஒருநாளும் சொல்லவில்லை. லெனினும் அப்படி சொல்லவில்லை. லெனினிடம் கேட்கிறார்கள், ‘டூமா’ (நாடாளுமன்றம்) மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, அதில் நாம் கலந்து கொண்டு எதாவது செய்யலாமா? என்று லெனினிடம் கேட்கிறார்கள். லெனின், ‘நாடாளுமன்றத்தை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தலாம் ஆனால் அதை வைத்து மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது’ என்று கூறினார்.

இந்தியாவிலும் அதே நிலைமை தான். அதிகாரக் கட்டமைப்பு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை விட அதிகாரிகள் தான் நிர்வாகங்களை நடத்தி வந்தனர். இன்று வரை அப்படியொரு நிலைமை தான். அந்த அதிகாரிகள் பார்ப்பனர்களாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். முதல் தர பணிகளில் 5 சதவீதம் வரைகூட ஆதி திராவிடர்கள் வரவில்லை. இட ஒதுக்கீட்டினால் ஓரளவு அந்த பணிகளுக்கு ஆதி திராவிடர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல் OBC-யினரும் முதல் தர பணிகளில் 2 சதவீதம் தான் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. எனவே அதிகார வர்க்கத்தின் பிடியில் தான் இந்தியா போன்ற ஒரு அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பெரியார், பொது வாழ்க்கைக்கு வருகிறார். தொடக்க காலத்தில் பெரியாரிடம் பெரிய மண்டி இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பார்த்து, காங்கிரஸிற்கு 1000 ரூபாய் நன்கொடை அனுப்பிவிட்டு, காங்கிரசில் உறுப்பினரானார். மண்டியை அதன் பின் நடத்தவேயில்லை. அதன்பின் பொதுத் தொண்டராகவே முழு நேரமாக இறங்கி விட்டார். இரயில் பயணங்களின் போதுகூட மூன்றாம் வகுப்பு பயணங்கள் தான். தற்போது கூட இரண்டாம் வகுப்பு தான் உள்ளது. அப்போது மூன்றாம் வகுப்பு வரை இருந்தது. அதில் தான் பயணம் செய்வார். பெரியார் இந்த சமூகத்தை நன்றாக புரிந்து வைத்திருந்தார். நாம் திராவிடர்கள். பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) ஒரு நாளும் உடல் உழைப்பு வேலைகளை செய்வதில்லை. மனு தர்மத்திலே அவ்வாறு கூறி இருக்கிறார்கள். பார்ப்பான், ஏர் ஓட்டுகிற நாடு குட்டிச் சுவராகிவிடும். ஏன் எந்த பார்ப்பானும் ஏர் ஓட்டுவதில்லை. உடலுழைப்பு செய்யக்கூடாது என்று மனுவில் எழுதி வைத்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளாக மனுதர்மம் தான் இந்த நாட்டை வெளிப்படையாக ஆட்சி நடத்தியது. இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. பவுத்த ஆட்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டியர் யாராக இருந்தாலும் மனுவை வைத்து தான் ஆட்சி செய்தார்கள்.

வெள்ளைக்காரர்கள் வந்த பின்பு, நேரடியாக மனுவிற்கு பதிலாக, இந்து சாஸ்திரங்களில் இருப்பதை தொகுத்து இந்து லா என்று 1863 இல் முதன் முதலில் தொகுத்தார்கள். அதிலும் மனு இருக்கிறது. அனைத்து ஸ்மிருதிகளும் கலந்து ஒரு கோர்வையாக இந்து சட்டத்தில் இருக்கிறது. 1955 இல் இந்து சட்டம் மீண்டும் எழுதப்பட்டது. அதிலும் மனு இருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகாமல் தடுத்து வைத்திருப்பது மனு தான். இந்திய அரசியலமைப்பச் சட்டத்தில் மனு சட்டத்தைப் புகுத்தி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்பில் நேரடியாக நால் வர்ணத்தைக் கூறவில்லை. ஆனால் இந்துக்கள் நான்கு பிரிவாக இருக்கின்றனர் என்று அரசியலமைப்புச் சட்டம் முகவுரையிலேயே எழுதியிருக்கிறார்கள். சட்டம் படிக்கும் அனைவரும் அதை படித்தாக வேண்டும். இன்னமும் பல தீர்ப்புகள் அதனடிப்படையில் கொடுக்கப்படுகின்றன. 1996இல் கூட கிருஷ்ணகிரி அருகில் சொத்து தகராறில் வன்னியர்கள் சூத்திரர்கள் என்று ஒரு தீர்ப்பு வழங்கப் பட்டதாக கொளத்தூர் மணி ஒரு திருமணத்தில் ஆதாரங்களுடன் விளக்கினார்.

எனவே இன்றைக்கு வரை நால் வர்ணங்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. எனவே அரசர்கள் மதத்தின் பெயரால் பார்ப்பனர்களுக்கு நிலங்களை எழுதி வைத்தார்கள். கோவில்களுக்கும் எழுதி வைத்தார்கள். இன்றைக்கும் தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் மடங்களுக்கு சொந்தமானாதாக இருக்கின்றன. அரசாங்கம் அதை எடுக்க முடியாதவாறு சட்டத்தில் இருக்கிறது. காமராசர் ஆட்சியில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து கோவில் சொத்துக்களை எடுக்கலாம் என்றார். ஆனால் அய்.ஏ.எஸ் அதிகாரி கூறினார், கோவில் சொத்துக்களை நாம் எடுக்க முடியாது அதற்கு நமக்கு அதிகாரமில்லை என்றார். எனவே சட்டப் பாதுகாப்பை அவர்கள் ஏற்படுத்தி வைத்துக் கொண்டார்கள். எனவே 1952 இல் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் தொடங்கிய போது, 1952க்கு முன் வரை இது வெறும் கூலிப் போராட்டமாக இருந்தது. நமது நெருக்கடியின் காரணமாகத் தான் இராஜாஜி 28.03.1952இல் பண்ணையாள் பாதுகாப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

இந்தச் சட்டம் என்ன சொல்கிறதென்றால், ஆறு ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர் களிடம் பண்ணைக் கூலிகளாக இருப்பவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் பண்ணைகளை விட்டு வெளியேற்றக் கூடாது. ஒரு வேலை வெளியேற்ற விரும்பினால் 150 ரூபாய் அதாவது ஆறு மாத கால ஊதியத்தை கொடுத்து வெளியேற்றலாம் என்று அந்த சட்டம் கூறுகிறது. பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் தொழிலாளர்களின் உடனடி வேலை நீக்கத்திலிருந்து பாதுகாத்தது என்ற முறையில் வரவேற்க வேண்டியதே. பெரியாரும் அந்தப் பார்வையில் வரவேற்றார். ஆனாலும் அதுவே முழுமையான பாதுகாப்பு இல்லை.

1952 இல் அண்ணல் அம்பேத்கர் Schedule Caste Federation தொடங்குகிறார். அந்த Federation-க்கு தலைவராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த என். சிவராஜ், அதற்கு பொதுச் செயலாளராக இருந்தவர் தான் ராஜ் போஜ். நாடாளுமன்ற உறுப்பினரான அவர் 1954இல் பெரியார் தொடங்கிய திராவிடர் விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து நாகப்பட்டிணத்தில் பேசினார். முதலில் அம்பேத்கரைத் தான் அழைக்கிறார்கள், ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரவில்லை. ராஜ்போஜ் பேசிய பேச்சும், அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியாரின் பேச்சும் விடுதலை ஏட்டில் வந்துள்ளது. ராஜ்போஜ், ' ஆதி திராவிடர் மக்களுக்கு திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் தான் சரியானது. நீங்கள் கம்யூனிஸ்ட் சங்கத்தில் இருக்காதீர்கள், இந்த திராவிடர் என்ற பெயரே சிறப்பான பெயர். இந்த சங்கம்தான் ஜாதியை ஒழிக்கக்கூடியது, சமத்துவத்தை தரக்கூடியது, நிலப் பகிர்வை, வாழ்விற்கான உத்திரவாதத்தை கொடுக்கக்கூடியது. ஆகவே இந்த சங்கத்தில் இணையுங்கள் என்று அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துவிட்டுப் பேசுகிறார். இந்த மாநாட்டில் பெரியார் 12 தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.

அதில் முக்கியமான ஒன்றிரண்டு தீர்மானங்களை இங்கு கூறுகிறேன். 1) தஞ்சை ஜில்லா பன்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆர்.வி.கோபால், ஆர்.வி.சிங்கம், இராசய்யா, ஏ.என் ஜோசப், நவநீதம் ஆகியோரைக் கொண்ட கமிட்டி அமைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் நமது விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்களே. 2) இந்த மாகாணத்திலுள்ள கோவில்கள், மடங்கள் பேரிலுள்ள ஆயிரக்கணக்கிலுள்ள நன்செய் நிலங்களை அனைவருக்கும் உழுது பயிரிடும் அளவிற்கு இனாமாக வழங்குமாறு இம்மாநாடு சர்க்காரை கேட்டுக் கொள்கிறது. 3) புறம்போக்கு நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு இம்மாநாடு சர்க்காரை கேட்டுக் கொள்கிறது. 4) பெரிய நிலச் சுவாந்தார்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான நிலங்களை ‘எவ்வித நஷ்ட ஈடு’ இல்லாமல் சர்க்கார் எடுத்துக் கொண்டு இந்நாட்டிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு அவரவர் பயிர் செய்யும் வசதிக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்குமாறு இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மார்க்சியத்தில், ஏங்கெல்ஸ் எழுதிய இரண்டு நூல். மிகச் சிறப்பான நூல். அரசு, குடும்பம், தனிச் சொத்து ஆகியவற்றைப் பற்றிய நூல். அடுத்த நூல் கூலி, விலை, லாபம் அந்த நூலில் ஏங்கெல்ஸ் சொல்கிறார், தொழிலாளர்களுக்கு மார்க்சியம் பயிற்றுவிக்க வேண்டியது என்னவென்றால் கூலி கொடு என்பதல்ல, நீ யார் எனக்கு கூலி கொடுப்பதற்கு உன்னிடம் குவிந்துள்ள சொத்துக்கள் எங்களால் வந்தவை, எங்களுடைய முன்னோர்களை ஏமாற்றி சேர்த்தாய் தற்போது எங்களுடைய உழைப்பு தானே உபரி இலாபமாக உன்னிடம் சொத்தாக உள்ளது. எனவே நஷ்ட ஈடு கொடுக்காமல் தொழிலாளர்களுக்கு சொத்துக்களை கொடுக்க வேண்டும் என்று ஏங்கெல்ஸ் எழுதுகிறார். பெரியார் அதை இந்த மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வந்துள்ளார். பண்ணையார்களுடைய நிலங்களை எந்தவித இழப்பீடும் இல்லாமல் விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இது தான் அடிப்படை மார்க்சியம். ஆனால் இங்கிருக்கின்ற தொழிற்சங்கங்கள் என்ன செய்கிறார்களென்றால், போனஸ் கொடு, விலைவாசிக்கு ஏற்றவாறு கூலியை உயர்த்திக் கொடு என்று கேட்கிறார்கள்.              

(தொடரும்)

- வாலாசா வல்லவன்

Pin It