மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கைகள் வெளியீடு என அரசியல் கட்சிகளைப் பின் தொடர்ந்து செய்திகள் ஒரு புறம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு புறம் மசூத் அசாரை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்தது பேசுபொருளாக வலம் வருகின்றது. இவ்வேளையில் சத்தம் இல்லாமலும் அதிக கவனம் பெறாமலும் ஒரு நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.

samiyarikal 600சமஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் சாமியார் அசீமானந்தும் அதில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007 பிப்ரவரியில் ஹரியானா மாநிலம் பானிபட் அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 68 பேர் உயிரிழந்தனர். அதில் 44 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை (NIA - National Investigation Agency) 2011 இல் சாமியார் அசீமானந்தையும் அவரது கூட்டாளிகளையும் குற்றவாளிகளாக அறிவித்தது.

இதில் அசீமானந்த் முக்கியக் குற்றாவாளியாக அறிவிக்கப்பட்டார். சாமியார் அசீமானந்த் யாராக இருக்க முடியும்? அய்யத்திற்கு இடமின்றி அவர் RSS அய்ச் சேர்ந்தவர்தான். சிறையில் தன்னைப் பேட்டி காண வந்த பெண் பத்திரிக்கையாளரிடம் “எங்கள் சங்கத்தில்(RSS) நீங்கள் இருந்திருக்கிறீர்களா?” என்று கேள்வியைக் கேட்டுவிட்டு பேட்டி கொடுத்தவர்தான் அசீமானந்த். இன்று அவர் முன்னாள் RSS உறுப்பினர்.

இந்த அசீமானந்த் முதலில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். பின்னர் 2014இல் அவர்கள் ஆட்சி வந்ததும் 2015 ஆம் ஆண்டில் ஒப்புதல் வாக்குமூலங்கள் தன்னை மிரட்டிப் பெறப்பட்டவை என்று (ஏ)மாற்றினார். சாட்சிகள் காட்சிகளை மாற்றினர். நீதிமன்றம் விடுவித்தது. சாமியார் சத்தமில்லாமல் வீடு அடைந்தார். வீடுபேறு அடைவது என்றால் என்ன என்பது இப்போது விளங்குகிறது.

பாதிக்கப்பட்ட பலர் வழக்கு தொடுத்திருந்தனர். என்ன செய்வது? அசீமானந்த் காவியல்லவா உடுத்தியிருக்கிறார். காவல் துறை காவித் துறையை என்ன செய்ய முடியும்?

மிகவும் எளிமையாக ஒரு செயலைச் செய்து முடிக்கும் தன்மையை ஆங்கிலத்தில் “Cake Walk” என்று சொல்வார்கள். எந்த ஒரு குற்றத்திலும் இருந்து விடுதலையாவது என்பது அவர்களுக்கு “Cake Walk” போன்றது. 2007 மே மாதம் அய்தராபாத்தில் நடந்த மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் இருந்தும், 2007 அக்டோபர் மாதம் நடந்த அஜ்மர் குண்டு வெடிப்பில் இருந்தும் அசீமானந்த் விடுவிக்கப்பட்டார். அவருக்கு விடுதலை வழங்கிய நீதிபதி K.இரவீந்தர் ரெட்டி அதற்குப் பின் பா.ஜ.க வில் இணைந்தார். பா.ஜ.க வில் இணைவதற்கான தகுதி என்ன என்று புரிகிறது.

எத்தனை குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினாலும் காவித் தீவிரவாதிகள் இங்கு உற்சாகமாக உலவிக்கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் என்று மக்களை உசுப்பேற்றுவார்கள்.

பா.ஜ.க வெற்றி பெற இப்போது யாகம் நடத்தியிருக்கிறார்கள். இந்த யாகத்தில் எத்தனை அப்பாவி மக்களின் உயிர் பலியிடப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும். 

இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தால் பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்க்கையைக் குடைவார்கள். இன்னும் பல சாமியார்கள் வீடுபேறு அடைவார்கள்.

எனவே மீண்டும் இந்த நாடு காவித் தீவிரவாதிகளின் கைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது.அதற்கு நம் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதம் நம்முடைய வாக்குச் சீட்டு. காவியைத் துரத்த வரவேண்டும் கருப்பும் சிவப்பும்!

Pin It