1920-களில் இத்தாலியப் படைகளை கொலை நடுங்கச் செய்தவர் லிபியாவின் பாலைவன சிங்கம் உமர் முக்தார்.
அவரைப் பிடிக்க இத்தாலிய ராணுவத் தளபதி தலைமையில் ஒரு படை அமைக்கப்பட்டது. அந்தப் படையின் திட்டம் என்னவென்றால் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோமோ, அந்த இலக்கிற்கு இரண்டு பிரிவுகளாக சென்று அடைய வேண்டும் என்பதே.
படை வீரர்கள் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டு பயணம் துவங்கியது. கடுமையான இருட்டில் மிக நீண்ட தூரம் மிகக் களைப்போடு பயணிக்கிறது அந்தப் படை. காரணம் அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாது, அது பயணத்துக்கு இடையூறாக இருக்கும் என்று தலைமை உத்தரவு. சில இடங்களில் ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள்.
இரவில் ஒரு கணிசமான தூரம் கடந்த நிலையில் ராணுவத் தளபதி இருக்கும் அணிக்கு எதிரே ஒரு படை வருவது போல் தெரிய, தளபதி தனது அணியை நிற்குமாரு உத்தரவிட்டார். ஆனால் அந்தப் படை இவர்களை நெருங்குவது போல் தெரிய... உடனே தளபதி தற்காப்புக்காக சுடச் சொன்னார். ஆனால் எதிரிகள் ஒன்றுக்கு ஐந்தாக திருப்பிச் சுட்டனர், கோபமான தளபதி பதிலடி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். கடுமையான சண்டை நடந்தது. அப்போது இருட்டை வெளிச்சம் ஆக்கும் குண்டு ஒன்று வெடிக்கச் செய்யபட்டது.
அந்த இடமே பட்டப் பகலாக காட்சி அளித்தது... அப்போது தான் அந்த அதிர்ச்சி....
இரண்டு பக்கமும் நின்றது ஆரம்பத்தில் இரண்டு பிரிவுகளாக சென்ற ஒரே படைதான். இருட்டில் பாதை மாறி ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டனர்.
எதிரியை சந்திக்கவே இல்லை. ஆனால் மிகப் பெரிய உயிர் சேதம் நடந்துவிட்டது. சொல்ல முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இது வரலாறு.
இந்த வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக ஒரு நிகழ்வு 27 பிப்ரவரி 2019 அன்று இந்தியாவில் நடந்தது. இந்த சண்டை பிப்- 14ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இருந்தது.
இந்த சண்டையில் இந்தியாவுக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் நம்முடைய படையால், பாக்கிஸ்தானுடையது என்று தவறாக நினைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 6 விமானப் படை வீரர்கள் உள்பட 7 பேர் தாம் யாரால் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிகழ்வை சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா அவர்கள் தமது வருடாந்திர பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லி, இது இந்திய விமானப் படையின் மிகப் பெரிய தவறு என ஒப்புக் கொள்கிறார். அதன் பிறகு ஒரு செய்தி சொல்கிறார்... "இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
அப்படி என்றால் 7 மாதங்கள் என்னதான் நடந்தது? இந்த சம்பவத்திற்கு மனிதாபிமான அடிபடையில் தார்மீக பொறுப்பேற்று அன்றைய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தால் அவர் பெயர் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் அந்த 7 பேரின் குடும்பம் ஆறுதல் அடைந்து இருக்கும்.
அவர்கள் பாக்கிஸ்தானால் கொல்லப்பட்டிருந்தால் உயிர்த் தியாகிகள். மாறாக அறியாமையின் காரணமாக சொந்தப் படையால் கொல்லப்பட்டுள்ளார்கள். நீதி விசாரனை நடக்கிறது, முடியவில்லை.
எந்த நாட்டு விமானம் பறக்கிறது என்று கண்டுபிடிக்கும் ராடார் கருவி பழுதாகி விட்டது என்றால் அவசரப்பட்டு தாக்குதல் நடத்தலாமா? நடத்த வேண்டும் என்கிற அளவுக்கு பாக்கிஸ்தான் மீது வன்மம்.
அண்மையில் 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படவில்லை, பாக்கிஸ்தான் கொடியை பிடித்துக் கொண்டு 'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் கோசம்' போடவில்லை, ராணுவ ரகசியத்தை யாருக்கும் விற்கவில்லை, காஷ்மீரை ஏன் இந்தியாவோடு இணைத்தீர்கள் என்று கேட்கவும் இல்லை. பிறகு என்ன செய்தார்கள்? "இந்தியா ஏன் இப்படி இருக்கிறது... சிறுபான்மையினர் மதவெறிக் கும்பலால் கொல்லப்படுகிறார்கள், அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை... நீங்கள் தலையிட்டால் என்ன" என்று பிரதமரைக் கடிதம் மூலம் கேட்டது தான் இவர்கள் செய்த குற்றம்.
அதிகார வர்க்கத்துக்கு எதிராக கைகளை உயர்த்திய சஞ்சீவ் பட் கைகள் விலங்கிடப்பட்டு ஆயுள் கைதியானார்.
பலரால் பாராட்டப்பட்ட நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் செய்யபட்டார். அதை ஏற்காமல் ராஜினாமா செய்த அவர் மீது ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கும்பல் கொலைகள் தலை விரித்து ஆடுகிறது, நியாயம் மட்டும் எட்டாக் கனியாக இருக்கிறது.
தேஜ் பகதூர் யாதவ் என்ற ராணுவ வீரர் தமக்கு காய்ந்த ரெட்டிகள் உணவாக கொடுக்கப்படுகிறது என்றார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அவர் தேர்தலில் நின்றார், ஆனால் அவர் மனு நிராகரிக்கப்பட்டது.
எதில் அவசரம் காட்ட வேண்டுமோ, அதில் நிதானமாகவும், எதில் நிதானம் வேண்டுமோ அதில் அவசரம் காட்டி மக்களைக் குழப்பி, ஒரு திகில் படம் பார்ப்பது போல இருக்கிறது இந்த ஆட்சி.
இந்த நாட்டில் எதையும் சுதந்திரமாகப் பேச முடியவில்லை, எழுத முடியவில்லை... பிறகு எதற்கு நாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்?
இந்த தேசத்தில் நடக்கும் மலை அளவு நிகழ்வில் கடுகளவு செய்தியே நாம் மேலே கண்டது.
இப்படியான சூழ்நிலையில், நமது பிரதமர் ஐ.நா. உரையில் கர்ஜிக்கிறார், "அமைதியே உலகிற்கு இந்தியாவின் செய்தி"
இந்தியாவில் நாம் பார்க்கும் விசயங்களுக்கும், பிரதமரின் உரைக்கும் எத்தனை எத்தனை முரண்!!!
எங்கே செல்கிறது இந்த தேசம்?
- எம்.நெயினார் முகமது (கலீல்), சென்னை- 75