உழைக்கும் மக்களின் உற்ற தோழனாகக் களத்தில் நின்று செயல்பட்டவர்; தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து முகங்கொடுத்து வந்தவர்; காவல் துறையின் அடக்குமுறைகளை எதிர் கொள்வதற்காகவே சட்டம் பயின்றவர்; காவல் துறையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வழக்குகளில் தொடர்ந்து ஏழைகளுக்கும் மக்கள் போராளிகளுக்கும் நீதி பெற்றுத் தந்தவர்; கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் போராளிகளுக்கான சட்டப் பாதுகாவலராக இருந்து, ஒன்றிய, மாநில அரசுகளின் - காவல் துறையினரின் அடக்குமுறைகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தமையால் காவல் துறையினராலேயே கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு ஆட்பட்டவர் தோழர் செம்மணி.
பிறருக்கு எடுத்துக்காட்டான புரட்சிகர வாழ்க்கை முறையைச் சொந்த வாழ்வியலாக ஆக்கிக் கொண்டதால் சொந்த வாழ்வில் சொல்லமுடியாத நெருக்கடிகளை எதிர் கொண்டவர்; தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர், மக்கள் வழக்கறிஞர் தோழர் செம்மணி, 03.12.2020 வியாழன் அன்று திடுமென நெஞ்சகத் தாக்கத்திற்கு ஆட்பட்டு நாகர்கோயில் பெதசுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோழருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பெற்றும் பயனின்றி மாலை 3 மணி அளவில் இத் தமிழ்மண்ணை விட்டுப் பிரிந்தார்.
தென் மாவட்டங்களின் நடைபெற்ற அனைத்து சாதி ஒழிப்புக் களங்களிலும், மக்கள் உரிமைப் போராட்டங்களிலும், தமிழ்த்தேசிய விடுதலைத் தளத்திலும், சட்டப் போராட்டக் களத்திலும் ஓய்வின்றிக் களம் கண்ட தோழர் செம்மணி, தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டது தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மக்கள் நலன் பேணும் இயக்கங்களுக்கும் மாபெரும் இழப்பாகும்.
தோழரின் பிரிவால் தவிக்கும் தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் தோழர்களுக்கும்; தோழரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும் சிந்தனையாளன் இதழின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் தேற்றுதலையும் உரித்தாக்குகிறோம்.
போர்க் களங்கள் மட்டுமே நிரம்பியிருந்த தோழர் செம்மணியின் வாழ்வு, இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் போராட்ட வாழ்க்கைக்கான அரிச்சுவடியாக அமையட்டும். போராளித் தோழர் செம்மணிக்கு வீரவணக்கம் !
- முனைவர் முத்தமிழ்