கீற்றில் தேட...

2014-2015 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 12 விழுக்காடும், 2015-2016ஆம் ஆண்டில் 14 விழுக்காடும் சராசரி மழை அளவில் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது. சுதந்தரம் பெற்றபின் அடுத் தடுத்து இரண்டு வறட்சி ஆண்டுகள் அமைவது, இது மூன்றாவது தடவையாகும். 1901 முதல் என்று பார்த் தால் இது நான்காவது தடவையாகும்.

இந்தியாவில் உள்ள 670 மாவட்டங்களில் 307 மாவட்டங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளன. இந்தியாவில் பயிரிடப்படும் நிகர நிலப் பரப்பு 14 கோடி எக்டேர். ஒரு போகத்துக்குமேல் பயிரிடப் படும் பரப்பையும் சேர்த்தால் மொத்த சாகுபடிப்பரப்பு 19 கோடி எக்டேர். இதில் 40 விழுக்காடு பரப்பு இப் போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 91 பெரிய நீர்த்தேக்கங்களில் ஏப்ரல் மாதம் முதல் கிழமையில் அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 23 விழுக்காடு அளவுக்குத்தான் தண்ணீர் இருந்தது. மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், இராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 256 மாவட்டங்களைச் சேர்ந்த 2,55,923 கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் 33 கோடி மக்கள் வறட்சியின் கொடுமையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மகாராட்டிரத்தில் ஒரு சொட்டு நீர் கூடக் கிடைக்காத லத்தூர் பகுதிக்குத் தொடர்வண்டி மூலம் காவல் துறையின் பாதுகாப்புடன் நாள்தோறும் 50,000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் கொடிய வறட்சி நிலவுவதற்கு அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் போதிய மழை பெய்யவில்லை என்பது முதன்மையான காரணம். எனினும் 1991 முதல் நடுவண் அரசும் மாநில அரசு களும் நீர்ப்பாசன வசதியைப் பெருக்காததும், மொத்த விவசாயிகளில் 83 விழுக்காட்டினராக உள்ள சிறுகுறு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, பெரும் பண்ணை-கார்ப்பரேட் வேளாண்மைக்கும், வேளாண் விளைபொருளின் சந்தையில் தனியார் ஆதிக்கத்தை  ஊக்குவித்ததும் மற்ற முதன்மையான காரணிகளாகும்.

இந்தியாவில் 2 எக்டேருக்கும் (5 ஏக்கர்) குறை வாக நிலம் வைத்துள்ள 83 விழுக்காடு விவசாயி களிடம் உள்ள நிலம், மொத்தப் பரப்பில் 40 விழுக் காடாகும். மீதி 17 விழுக்காட்டினராக உள்ள பெரிய விவசாயிகளிடம் 60 விழுக்காடு பரப்பு நிலம் உள்ளது. இவர்கள் மட்டுமே வேளாண்மையில் வருவாய் ஈட்டும் நிலையில் இருக்கின்றனர். ஒரு எக்டேருக்கும் (2.5 ஏக்கர்) குறைவாக நிலம் உடையவர்கள் 70 விழுக்காட்டினர். இவர்களின் நிலம் பெரும்பாலும் வானம் பார்த்த நிலமாக இருக்கிறது.

1991இல் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற முதலாளித்துவ நலன்களைப் பேணும் கொள்கையை நடுவண் அரசும், மாநில அரசுகளும் செயல்படுத்தத் தொடங்கிய பின், வேளாண் தொழில் நசிந்தது. வேளாண்மையில் வேலை வாய்ப்புக் குறைந்தது. வருவாய் தரக்கூடியதாக வேளாண்மை இல்லாத நிலை ஏற்பட்டதால், சிறு, குறு உழவர்களும், வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேளாண் தொழிலைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி வேறு வேலை தேடிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

2011-2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடுவண் அரசின் புள்ளியியல் துறையின் 68ஆவது தேசிய மாதிரி ஆய்வறிக்கையின்படி, 2004-2005 முதல் 2011-2012 வரையிலான காலத்தில் 360 இலட்சம் பேர் வேளாண் தொழிலைக் கைவிட்டு, வேளாண்மை அல்லாத தொழிலுக்கு மாறிச் சென்றுள்ளனர்.

எனவே மொத்த உழைக்கும் அகவையில் இருப்பவர்களில் (Workforce) வேளாண் தொழலில் இருப்போர் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும் நிலைமை சுதந்தர இந்தியாவில் முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது.

வேளாண்மையிலிருந்து வெளியேறி நகரங்களை நாடிச் சென்றவர்களில் பெரும்பாலோர் கட்டுமானத் தொழிலில் கூலி வேலை செய்கின்றனர். மற்றவர்கள் உதிரிப் பாட்டாளிகளாக இருக்கின்றனர். 1951இல் உழவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 71.9 விழுக்காடாக இருந்தது. ஆனால், 2011இல் இது 45.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது (ஃபிரண்ட் லைன், மார்ச்சு 4, 2016).

கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவ சாயிகளின் தற்கொலை ஆட்சியாளர்களுக்குத் தலை வலியான செய்தியாக இருப்பதால், மோடி தலைமை அமைச்சாரான பிறகு தற்கொலை செய்து கொள்ளு பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார்.

பொதுவாக, “விவசாயி” என்ற சொல் சொந்தமாக நிலம் உடையவர் களையும், குத்தகைக்குப் பயிரிடுவோரையும், வேளாண் கூலித் தொழிலாளர்களையும் குறிக்கும். ஆனால் மோடி அரசின் அறிவுறுத்தலின் பேரில், தேசியக் குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் 2014ஆம் ஆண்டில் சொந்த நிலம் உடைய உழவர்களின் தற்கொலையை மட்டும் விவசாயிகள் தற்கொலைப் பட்டியலில் காட்டி யது. எனவே 2013ஆம் ஆண்டில் 11,744 பேர் என்றிருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையைத் தேசியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் 2014ஆம் ஆண்டில் 5,650 மட்டும் என்று கணக்குக் காட்டியது.

2014ஆம் ஆண்டில் குத்தகை விவ சாயிகள், கூலித் தொழிலாளர் ஆகியோர் 6,710 பேர் வேளாண்மைக் கடன் சுமையாலும், வேலை கிடைக் காததாலும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்தால் 2014இல் 12,360 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவரும். இந்த எண்ணிக்கை 2013இல் தற் கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். எனவே மோடியின் ஆட்சியிலும் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது என்பதை மூடி மறைக்க முடியாது.

நடுவண் அரசின் வேளாண் துறை அமைச்சர், 2015இல், நாடாளுமன்றத்தில் “விவசாயி கள் தற்கொலை செய்வதற்கான காரணிகளில் காதல் தோல்வி, வரதட்சணைக் கொடுமை, குழந் தையின்மை ஆகியவையும் அடங்கும்” என்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசி யிருக்கிறார்.

திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, அதற்கு மாற் றாக மோடி அரசு அமைத்துள்ள ‘நிதி ஆயோக்’ ( Niti Aayog ) 2015 திசம்பர் மாதம் வேளாண்மை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், உற்பத்தித் திறனைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கேனும் இலாபம் கிடைக்கச் செய்ய வேண்டும்; மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க வேண்டும்; வேளாண் விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) அளிப்பதற்குப் பதிலாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி யாகப் பணம் செலுத்தலாம் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு அரசின் மூலம் கிடைத்துவரும் குறைந்தபட்ச ஆதரவு ஏற்பாடுகளையும் ஒழிப்பதே இந்த அறிக்கையின் நோக்கமாக உள்ளது. இப்பரிந்துரைகளில் விவசாயிகளுக்கு ஓரளவுக் கேனும் இலாபம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பத்து ஆண்டுகளுக்கு முன், தேசிய உழவர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நடுவண் அரசிடம் அளித்த அறிக்கையில், “விவசாயி ஒரு பயிரைச் சாகுபடி செய்வதற்குச் செலவிடும் மொத்தத் தொகையில் 50 விழுக்காடு அளவுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் அரசு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதுடன் அந்த அளவுக்கு இலாபம் கிடைப்பதற்கான ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்காவில் இது நடப்பில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இத்திசையை நோக்கி மய்ய-மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசிய உழவர்கள் ஆணைய அறிக்கையை அளித்துப் பத்தாண்டுகளானதையொட்டி எம்.எஸ். சுவாமிநாதன் 19.3.2016 அன்று அவருடைய கருத் தைத் தெரிவித்துள்ளார். “விவசாயிகளுக்குத் திட்டவட்ட மான இலாபம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் தான், வேளாண்மையில் இளைஞர்கள் ஈடுபட முன் வருவார்கள். இந்தியாவில் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்கள் 90 விழுக்காட்டினர் 60 அகவையைக் கடந்தவர்கள்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ, நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் வருவாய் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் (2022) இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று கூறியிருக் கிறார். அவ்வாறு நிகழ வேண்டுமானால், வேளாண்மையின் வளர்ச்சி ஆண்டிற்கு 14 விழுக்காடாக இருக்க வேண்டும். இப்போதுள்ள 1.5 விழுக்காடு வளர்ச்சியை வைத்துக் கொண்டு, இதை எப்படிச் சாதிப்பது என்று அவரோ, மற்றவர்களோ கூறவில்லை.

தேசிய உழவர் ஆணையம் மொத்த உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் பெறுமாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந் துரைத்தது. இது நிறைவேற்றப்படவில்லை” என்று சுவாமிநாதன் கூறினார் (“தி இந்து”, ஆங்கிலம், 20.3.2016). ஆனால் “நிதி ஆயோக்” குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதையே நீக்கிவிட வேண்டும் என்று அண்மையில் நடுவண் அரசுக்குப் பரிந்துரைத் துள்ளது. எனவே வேளாண் தொழிலை - உழவர் களின் நலனைக் காப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது அப்பட்டமான பித்தலாட்டமே ஆகும்.

2016-2017ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக் கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் முன்மொழிந்த போது, முன்னுரைக்குப் பின், முதலாவதாக, “வேளாண்மை மற்றும் உழவர் கள் நல்வாழ்வு” என்ற தலைப்பில் அறிக்கையைப் படித்தார். இந்த அரசு வேளாண்மைக்கே முதலிடம் தருவதாகக் கூறினார். முதலாளிகளுக்கான அரசு என்பதை மூடிமறைப்பதற்கான ஓர் அரசியல் உத்தி இது!

இதில் முதல் பத்தியில், வேளாண்மைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.35,984 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இது 2015-2016ஆம் ஆண்டில் வேளாண்மைக்காகச் செலவிடப்பட்ட ரூ.15,809 கோடி யை (திருத்திய மதிப்பீடு - Revised Estimation)விட இப்போது ரூ.20,074 கோடி கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளதாக மோடி அரசு பெருமை பாராட்டியது.

ஆனால் உண்மை என்னவெனில், இந்த 20,074 கோடியில் ரூ.15,000 கோடி என்பது 2014-2015 ஆம் ஆண்டில் வட்டி மானியமாகச் செலவிடப் பட்ட தொகையாகும். இது கடந்த ஆண்டில் அரசின் செலவினத்தில் வேறு பிரிவில் கணக்கிடப்பட்டிருந்தது.

விவசாயிகள் வங்கிகளில் பெறும் கடனில் ரூ.3 இலட்சம் வரையிலான குறுகிய காலப் பயிர்க்கடன்கள் மீதான வட்டியில் 2 விழுக்காடு தள்ளுபடி செய்யப் படுகிறது. 2016-2017ஆம் ஆண்டில் விவசாயி களுக்கான கடன் தொகை ரூ.9,000 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-2016இல் இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8,600 கோடியில் 75 விழுக்காட்டுத் தொகை ஒரு கோடிக்குமேல் கடன் பெற்றவர்களுக்குத் தரப்பட்டது. 25 கோடி வரை ஒருவருக்குக் கடன் தரும் நிலை உள்ளது. பெரிய நிலப் பண்ணையாளர்களும், உழு கருவிகள், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் தயாரிக்கும் முதலாளிகள்தான் ஒரு கோடிக்கும் மேல் கடன் பெறுகின்றனர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

மேலும் வேளாண் கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு 3 விழுக்காடு ஊக்கத் தொகை கடன் தொகையில் கழிக்கப்படுகிறது. இந்த வட்டி மானியம் 2006இல் ரூ.1000 கோடியாக இருந்தது. 2014-2015இல் ரூ.15,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வட்டி மானியத் தொகையை 2016-2017ஆம் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கான செலவினத்தில் சேர்த்துவிட்டதை மாபெரும் சாதனையாக அருண் ஜெட்லி மார்தட்டிக் கொள்கிறார். கடந்த ஆண்டின் திருந்திய மதிப்பீட்டுத் தொகையுடன் (Revised Estimate)) ஒப்பிடுகையில் உண்மையில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.5,074 கோடி மட்டுமே ஆகும். மொத்தத்தில் 2015-2016இல் வேளாண் மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைவிட 2016-2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ரிசர்வ் வங்கி அமைத்த தீபக் மொகந்தி தலைமையிலான குழு, 2015 திசம்பர் 28 அன்று அளித்த அறிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை நீக்குமாறும், அத்தொகையைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. எனவே விவசாயிகளின் வட்டி மானியம் கேள்விக் குறியாக நிற்கிறது!

வேளாண்மைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பாசனத் திட்டங்களுக்கான நிதி, “கிருஷி கல்யாண் செஸ்” (வரி) மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக விதிக்கப்பட உள்ள இந்த வரி மூலம் எவ்வளவு தொகை திரட்டப்படும் என்பது கூறப்படவில்லை.

ஏற்கெனவே கல்வி வரி (Education Cess) மூலம் வசூலாகும் தொகையில் கல்வி மேம்பாட்டுக்காக எவ்வளவு தொகை பயன் படுத்தப்படுகிறது என்பது யாருக்குமே தெரியாது. இந்நிலையில் பாசனத் திட்டத்துக்கும் புதியதாக வரி விதிக்கப் போவதாக நடுவண் அரசு கூறியிருப்பது, கல்வி, சுகாதாரம் போன்றவற்றிலிருந்து அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அவை தனியாரின் கொள்ளைக்குத் திறந்துவிட்டது போல், நீர்ப்பாசனத் தையும் தனியாருக்குத் தாரைவார்க்கப் போகிறதா?

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஆறு ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்திட இலக்கு நிர்ணயித்திருப்பதாக அருண் ஜெட்லி கூறியிருக்கிறார் என மேலே கண்டுள்ளோம். கடந்த 30 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் 19 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் 370 விழுக்காடு கூடியிருக்கிறது. கார்ப்பரேட் துறையினரின் சம்பளம் 1000 விழுக்காடு அதிகமாகி உள்ளது. 30 ஆண்டு களில் உயராத விவசாயிகளின் வருவாய் 6 ஆண்டு களில் இரண்டு மடங்காகிவிடுமா?

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்:

நடுவண் அரசு 2016இல் “பிரதமர் பயிர்க் காப் பீட்டுத் திட்டம்” என்பதை அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்குக் காப்பரணாக விளங்கும் புரட்சி கரமான திட்டம் என்று மோடி கூறுகிறார். உண்மை யென்னவெனில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1947 முதலே நடப்பில் இருக்கிறது. ஆனால் எந்த ஆட்சிக் காலத்திலும் இதனால் விவசாயிகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் பயன்பெறவில்லை.

மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களாலோ அல்லது பெருமளவில் பூச்சி நோய் தாக்குதலாலோ பயிர்கள் பாழ்பட்டு விளைச் சல் பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதே பயிர்க்காப்பீட்டின் நோக்கம் ஆகும்.

ஒரு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட் டுள்ள ஒரு குறிப்பிட்ட பயிர் 50 விழுக்காடு பரப்பள வில் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு கோர முடியும். மேலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையைச் செலுத்தி அதில் சேர்ந்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கோரும் உரிமை உண்டு. அரசு வங்கியில், வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயி கடன் பெறும் போது காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

பயிர்க் காப்பீடு விவசாயிகளுக்கான திட்டம்; ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. 2013ஆம் ஆண்டில் வேளாண் நிதிக்குழு வெளியிட்ட அறிக்கையில், பொதுத் துறை வங்கியில் அல்லது கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளில் 65 விழுக்காட்டினருக்கு - கடன்பெறும் போது பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டும் என்பது பற்றி அறியாதிருந்தனர்; 28 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்காகப் பிரிமீயம் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்தனர்.

மேலும் பயிர்க் காப்பீடு திட்டம் பற்றித் தெரிந்து வைத்துள்ள விவசாயி, தான் பயிரிடும் பயிரின் பரப்பு முழுவதற்கும் காப்பீடு செய்து கொள்ள முடியாது. சாகுபடி செய்யும் பரப்பில் 25 விழுக்காடு பரப்பளவுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு பெற முடியும். எனவே தற்போது மோடி அரசு அறிவித்துள்ள பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்ட அறிக்கையில், 19.44 கோடி எக்டேர் சாகுபடி பரப்பில் 25 விழுக்காடு மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது; அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதை 50 விழுக்காடாக உயர்த்திட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் புள்ளி விவரம் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 2012இல் நாட்டில் உள்ள நெல் விவசாயிகளில் 95.2 விழுக்காட்டினர் பயிர்க் காப்பீடு செய்யவில்லை. இதேபோல் கோதுமை விவ சாயிகளில் 95.3 விழுக்காட்டினர் பயிர்க் காப்பீடு செய்யவில்லை (தினமணி, 10.3.2016, பி.எஸ்.எம். ராவ் கட்டுரை). இதற்குக் காரணம் என்ன?

மொத்த விவசாயிகளில் 70 விழுக்காட்டினர் ஒரு எக்டேருக்கும் குறைவாக நிலம் உடைய வர்கள். இவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்ப தில்லை. எனவே இவர்கள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரவில்லை.

மேலும் பெருமளவில் பயிர் பாழாகும் போது கட்டாயம் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இல்லை. ஏனெனில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட மொத் தப் பரப்பில் 50 விழுக்காடு பரப்பில் பயிர் பாழா னால்தான் எந்தவொரு விவசாயியும் காப்பீடு பெற முடியும். இந்த அளவுக்குப் பயிர் பாழாவது அரிதினும் அரிதாகவே நிகழும்.

அப்போது வருவாய்த் துறையின் கிராம நிர்வாக அலுவலர், அரசின் வாய்மொழி ஆணை யைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட பரப்பு 50 விழுக்காட்டுக்கும் குறைவு என்று அரசுக்கு அறிக்கை தருவார். அந்நிலையில் விவசாயிகள் இழப்பீடு பெறமுடியாது.

தற்போது நடுவண் அரசு கொண்டு வந்துள்ள பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 விழுக்காடு பரப்பு என்பதை 33 விழுக்காடு எனக் குறைக்கப்பட்டுள்ளது. இனி கிராம நிர்வாக அலுவலர் பாதிக்கப்பட்ட பரப்பு 33 விழுக்காட்டுக்கும் குறைவு என்று கணக்குக் கொடுத்தால் போதும், எந்த விவசா யிக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.

இதுவரையில் நடைமுறையில் இருந்த தேசிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட விவசாயக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு மாற் றாக, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2016 காரிப் பருவம் (சூன் 1) முதல் இது நடப்புக்கு வரும். இதன்பாடி காரிப் (சூன்-செப் டம்பர்) பருவப் பயிர்களுக்கு 2 விழுக்காடு பிரீமியம், ராபி (அக்டோபர்-மார்ச்சு) பருவப் பயிர்களுக்கு 1.5 விழுக்காடு பிரீமியம், தோட்டப் பயிர்களுக்கு 5 விழுக் காடு பிரீமியம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். மீதி பிரீமியத் தொகையை அரசே ஏற்கும் எனக் கூறப் பட்டுள்ளது.

நடுவண் அரசு நிதிநிலை அறிக்கைப்படி இதற்காக ரூ.5,500 ஒதுக்கியுள்ளது. மாநில அரசுகள் அனைத் தும் சேர்ந்து ரூ.5,500 கோடி நிதியை ஒதுக்க வேண் டும். அதாவது நடுவண் அரசும் மாநில அரசும் 50:50 விகிதத்தில் இதற்கு நிதி வழங்க வேண்டும். இத்திட் டத்தை இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனமும், பத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

ஒரு மாநிலத்துக்கு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் என ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொடர் பானவற்றில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் தனியார் மருத்துவமனை களும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் பெருமளவில் ஆதாயம் அடைவதைப் போல, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொழுத்திடவே வழிவகுக்கும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பயிர்க் காப்பீட்டுக்கான “அடிப்படை அலகு ஊராட்சி ஒன்றியம்” என்பதை “ஊராட்சி” என்ற அளவீடாக மாற்றுவதாக அறிவித்தார். ஆனால் இப்போது நடுவண் அரசு அறிவித்துள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான பரப்பே அடிப்படை அலகாக நீடிக்கிறது.

இதை உடனடியாக ஊராட்சி அளவில் என்பதாக மாற்றுவதுடன், ஒரு விவசாயியின் பயிர் சேதமடைந்தாலும் (கோடையில் வேகமான காற்றில் வாழை மரங்கள் அடியோடு சாய்வது போன்றவை) அவர் சாகுபடிக்குச் செலவிட்டதை விடக் கூடுதலான தொகை இழப்பீடாகக் கிடைத் திடும் வகையில் உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஊர் விவசாயக் குழுக்களுக் கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இப்படி, பயிர் முற்றிலும் பாழாகும் நிலையில் கூடுதல் இலாபம் கிடைக்காவிட்டாலுங் கூட, செய்த செலவை முழுமையாக மீட்பதற் கான வழியை உண்டாக்குவதன் மூலம் விவசாயிகளை ஊக்கு விக்க முடியும் என்பதுடன், அவர்கள் தற் கொலை செய்து கொள்வதிலிருந்தும் தடுக்க முடியும்.

இணையதள வேளாண்மை

28.2.2016 அன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, “வேளாண் சமூகத்தினரின் நலனைக் காப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்பிரல் மாதம் 14 முதல், ‘இணையதள வேளாண்மை’ தொடங்கப்பட உள்ளது. அந்த இணையதளம் வழியாக நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்ய முடியும்” என்று கூறினார்.

இணையதள வேளாண்மை என்பது எல்லா வகையிலும் விவசாயிகளுக்குக் கேடு பயப்பதாகவும், வேளாண் விளைபொருள் சந்தையை முற்றிலுமாகத் தனியார் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு செல்வதாகவும் உள்ளது. பயிர்களுக்கான விவசாய செலவினம் மற்றும் விலை நிர்ணய ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP) ஆண்டு தோறும் நெல், கோதுமை, கரும்பு, பருத்தி முதலான முதன்மையான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிக்கின்றது. இந்த விலையில் விவசாயியிடமிருந்து அரசே விளை பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். தனியாரும் இதைப் பின்பற்ற வேண்டும் என்கிற விதி இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளாக நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள் முழுவதையும் அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலை யங்கள் மூடப்பட்டு வருகின்றன. மற்றும் ஒழுங்கு முறை விற்பனை நிலையங்கள் உள்ள இடங்களில் நெல் அரசின் கொள்முதல் விலையில் 60-70 விழுக்காடு விலையில்கூட கொள்முதல் வணிகர்கள் வாங்குவதில்லை. ஆலைகளுக்குக் கரும்பு அளித்த வகையில் 2015ஆம் ஆண்டில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.6000 கோடி நிலுவை வரவேண்டியுள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை கரும்பு ஆலைகள் மூலம் ரூ.21,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலு வைத் தொகை தரப்பட வேண்டியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதும், அதன் அடிப்படையில் அரசு கொள்முதல் செய்வது என்பதும் அறவே ஒழிய வேண்டும் என்பதே முன்பு ஆட்சி செய்த காங்கிரசின் கொள்கையும், இப்போது ஆளும் பா.ச.க.வின் கொள்கையும் ஆகும்.

இதற்கான வழிவகுப்பதே “இணையதள வேளாண்மை”. இணையதள வேளாண்மை பதுக் கலுக்கும் கள்ளச் சந்தைக்கும் வழிவகுக்கும். பெரும்பாலான விவசாயிகள் கல்வி பெறாதவர் களாக உள்ள நம் நாட்டில், கிராமங்களில் 40 விழுக்காடு அளவுக்கு மின்சார வசதியே இல்லாத அவல நிலையில்,  இணையதள வேளாண்மை - இணையதளம் மூலமாக விளைபொருள்களை விற்பது என்கிற திட்டம் விவசாயிகளைத் திட்டமிட்டு வஞ்சிப்பதாகும்.

வேளாண்மை இடுபொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தல், விலைபொருளுக்கு உரிய விலையை கிடைத்தல் (செலவு + 50 விழுக்காடு இலாபம்) ஆகிய இரண்டின் மூலமே விவசாயிகள் உயிர் வாழ முடியும்; வேளாண்மையை மேம்படுத்த முடியும்.