கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உலக வணிக அமைப்பு (World Trade Organisation - WTO) நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான மாநாடு தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டைனா நாட்டின் தலைநகரில் 2017 திசம்பர் 10 முதல் 13 வரையில் நான்கு நாள்கள் நடைபெற்றது. உலக வணிக அமைப்பில் 164 நாடுகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடைபெறுகிறது. உலக வணிக அமைப்பின் விதிகளின்படி, அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வணிக நடைமுறைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதே இம்மாநாட்டின் நோக்கம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளும் அவற்றின் பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மறுகாலனியாதிக்கத்தை விரிவுபடுத்தி, மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பையும் மலிவு விலையில் சுரண்டுவதற்கான வழிமுறைகளை வகுப்பதே இம்மாநாடுகள் நடத்தப்படுவதன் உண்மையான நோக்கமாகும்.

அய்க்கிய நாடுகள் மன்றத்தில் 193 நாடுகள் உள்ளன. இவற்றுள், தொழில் வளர்ச்சி பெற்றுள்ள 35 நாடுகள் தவிர, மற்ற நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எனப்படுகின்றன. இந்த 35 நாடுகளில் ஆசியாவில் உள்ள நான்கு நாடுகள் தவிர, மற்றவை வடஅமெரிக்காவும் மேற்கு அய்ரோப்பிய நாடுகளுமாகும். உலக மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்களைக் கொண்ட இந்நாடுகள் உலக வருவாயில் 80 விழுக்காட்டைப் பெறுகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அர்ஜென்டைனாவில் திசம்பரில் நடைபெற்ற மாநாட்டில், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், உணவு தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price - MSP) ஆண்டுதோறும் நிர்ணயிப்பது, அதன் அடிப்படையில் உழவர்களிடம் கொள்முதல் செய்வது, தானியங்களைச் சேமித்து வைப்பது, குறைந்த விலையில் பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்குவது, இவற்றுக்காக அரசுகள் மானியத் தொகையைச் செலவிடுவது ஆகியவற்றைக் கைவிட வேண்டும். ஏனெனில் இவை உலக வணிக அமைப்பின் வேளாண்மை குறித்த ஒப்பந்தத்திற்கு (Agreement on Agriculture - AoA) எதிரானவை; வணிகக் குலைவு (Trade - distarting) நடவடிக்கைகள் என்று தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் வலியுறுத்தின.

ஆனால் இந்தியா - சீனாவின் தலைமையிலான 120க்கும் மேற்பட்ட மூன்றாம் உலக நாடுகள், தங்கள் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, உழவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பேணுவதற்காக உணவு தானியங்களின் கொள்முதல் - சேமிப்பு - பொது விநியோகம் முதலான நடவடிக்கைகளைக் கைவிட முடியாது என்று உறுதியுடன் மறுத்தன. மேலும் தொழில் வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகள் 160 பில்லியன் டாலர் (ரூ.10.72 இலட்சம் கோடி) தொகையை ஆண்டுதோறும் வேளாண் மானியமாக அளிப் பதை முதலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்து வாழ்கின்றனர். வறுமை நிலையில் இருக்கும் 85 கோடி மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காக நியாய விலைக் கடைகளையே பெரிதும் நம்பி உள்ளனர். இவ்வாறு பல கோடி மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய செய்தி உலக வணிக அமைப்பு மாநாட்டில் விவாதிக் கப்பட்டது பற்றி ‘தி இந்து’ ஆங்கில நாடு தவிர, “தமிழ் - தி இந்து” நாளேடு உள்ளிட்ட தமிழ் நாளேடுகளில் செய்தி வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சிகளின் செய்திகளிலோ, விவாதங்களிலோ இது இடம்பெறவில்லை என்பது ஊடகங் களின் சமூகப் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

உலக வணிக அமைப்பின் தாய் அமைப்பான ‘காட்’ எனப்பட்ட “ணிகம் மற்றும் காப்பு வரி குறித்த பொது ஒப்பந்தம்” (General Agreement on Trade and Tariff - GATT) என்கிற அமைப்பு 1947ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலை மையிலான பணக்கார முதலாளிய நாடுகளின் முன்முயற்சி யால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் நாடு பெரும் வல்லரசாக உருவானது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச ஆட்சி ஏற்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி பெற்றிருந்த முதலாளிய நாடுகள், தங்கள் சந்தை ஆதிக்கத்தையும் சுரண்டலையும் நிலைநாட்டுவதற்காகவே காட் அமைப்பை ஏற்படுத்தின.

ratioshop 6001970களில் பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வாலும், தேசிய இனங்களின் எழுச்சிப் போராட்டங்களாலும் முதலாளிய உற்பத்தி நெருக்கடிகளைச் சந்தித்தது. எனவே 1980களில் முதலாளியம், உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியது. சோவியத் நாட்டில் சோசலிச நடைமுறைகளில் சரிவும் முதலாளிய ஆதரவுப் போக்கும் ஏற்பட்டன. இந்த அரசியல், பொருளாதாரச் சூழலில் அமெரிக்காவின் தலைமை யிலான தொழில் வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் பொருளாதார ஆதிக்கத் தையும் சுரண்டலையும் தங்குதடையின்றி விரிவுபடுத்து வதற்காக ‘காட்’ அமைப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டன.

இதற்காக, 1986இல் தென்அமெரிக்க நாடான உருகு வேயில் காட் அமைப்பில் உள்ள நாடுகளுடன் வணிகம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்வது குறித்து, பேச்சு வார்த்தை தொடங்கியது. இதை அடுத்து, 1990இல் சோவியத் நாட்டில் சோசலிச ஆட்சி முறை வீழ்ச்சியுற்றதுடன், 15 தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளாகச் சிதறுண்டது. உலக அரங்கில் எல்லாத் தளங்களிலும் அமெரிக்காவுக்குக் கடும் போட்டியாக இருந்த சோவியத் நாட்டின் வீழ்ச்சியால் அமெரிக்கா ஒற்றை அதிகார ஏகாதிபத்தியமாக உருப்பெற்றது. அதனால் காட் ஒப்பந்த விதிகள் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களில் செயல் தலைவர்களால் (CEOs) முதலாளிய நிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்ப வகுக்கப்பட்டன. காட் ஒப்பந்தம் 1994இல் ஏற்கப்பட்டது. 1995 சனவரி 1 முதல் காட் ஒப்பந்தம் உலக வணிக அமைப்பு என்ற பெயரில் செயல் பாட்டுக்கு வந்தது.

உலக வணிக அமைப்பின் விதிகள் சுருக்கமாக, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்று கூறப்படுகின்றன. இதன்படி மூன்றாம் உலக நாடுகள் தங்கள் நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மீது கொண்டுள்ள கட்டுப் பாடுகளைக் கைவிட வேண்டும். எல்லாத் துறைகளிலும் தனியார் மயத்தை அனுமதிக்க வேண்டும். தனியார் மயமும், சந்தையில் தடையற்ற போட்டியும் உற்பத்தியைப் பெருக்கும்; தரமான, விலைகுறைவான பொருள்களைக் கிடைக்கச் செய்யும்; தொழில்கள் வளர்ச்சியடைவதால் வேலை வாய்ப்புப் பெருகும்; நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று உலக வணிக அமைப்பின் புதிய பொருளாதாரக் கொள்கை கூறியது.

இந்தியாவில் எல்லாத் துறைகளும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டன. தற்போது கல்வியில் 50 விழுக்காடும் மருத்துவத்தில் 70 விழுக்காடும் தனியாரிடம் இருக்கின்றன. கல்வியும் மருத்துவமும் இலவயமாக அளிக்கப்பட வேண்டி யது மக்கள் நல அரசின் (Welfare State) கடமையாகும். ஆனால் இவை தனியாரின் கொள்ளைக்குத் திறந்து விடப் பட்டுள்ளன. அதுபோல் வேளாண்மையையும் தனியாரின் கொள்கைக்குத் திறந்துவிட வேண்டும் என்று உலக வணிக அமைப்பின் அர்ஜென்டைனா மாநாட்டில் பணக்கார நாடுகள் வலியுறுத்தின.

1994இல் காட் ஒப்பந்தத்தில் வேளாண்மை புதியதாகச் சேர்க்கப்பட்டது. வேளாண்மை குறித்த ஒப்பந்தத்தில், வடஅமெரிக்கா, மேற்கு அய்ரோப்பிய நாடுகள் போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள், அந்நாடுகளின் வேளாண் மைக்கு அளிக்கும் மானியங்கள் வணிகக் குலைவு அல்லா தவை (Non-trade distorting) என்று வகைப்படுத்தப்பட்டன. அந்நாடுகளில் பயிர்களின் உற்பத்திச் செலவில் 40 விழுக் காடு அளவுக்கு வெவ்வேறு பெயர்களில் அரசு நிதி உதவி செய்கிறது. வடஅமெரிக்காவில் 2 விழுக்காட்டினர், அய்ரோப் பிய நாடுகளில் 5 முதல் 10 விழுக்காட்டினர் மட்டுமே வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது இங்கு நினை வில் கொள்ளப்பட வேண்டியதாகும். எனவே இந்நாடுகளில் வணிகத்திற்கான வேளாண்மை என்ற நிலைதான் இருக்கிறது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் வேளாண் தொழி லைச் சார்ந்து வாழ்கின்றனர். எனவே இந்நாடுகளில் வேளாண்மை என்பது மக்களின் வாழ்வாதாரத்திற்கானதாக இருக்கிறது. ஆனால் இந்நாடுகளில் 1986-88களில் ஓராண் டில் மொத்த விளைச்சல் மதிப்பில் பத்து விழுக்காடு அளவுக்கு மட்டுமே வேளாண்மைக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் மானியம் தரவேண்டும் என்று காட் ஒப்பந்தம் கூறுகிறது. இந்த மானியம் வணிகத்தைக் குலைக்கும் மானியம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1986இல் நிலவிய விலையில் பத்து விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட தொகையின் அளவுக்கு மட்டுமே 2017ஆம் ஆண்டிலும் இந்தியாவின் மானியத் தொகை இருக்க வேண்டும் என்று உலக வணிக அமைப்பு வலி யுறுத்துகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இடுபொருள்கள் விலையும், வேளாண் தொழிலாளர்களின் கூலியும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதனால் 1986இல் அளித்த மானியத் தொகையைவிட அதிகமாக மானியத்தை இந்தியா வும் மற்ற நாடுகளும் அளிக்க வேண்டியுள்ளது.

1999இல் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உலக வணிக அமைப்பின் அமைச்சர் நிலையிலான மாநாடு கூட்டப்பட்டது. உலக வணிக அமைப்பின் விதிகள் உழவர் கள், தொழிலாளர்கள் முதலான உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கின்றன என்று கூறி பல இலட்சம் பேர் சியாட்டில் நகரில் மாநாடு நடைபெறவிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். அதனால் அம்மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே 2001இல் அரபு நாடுகளில் ஒன் றான கத்தாரின் தலைநகரான தோஹாவில் உலக வணிக அமைப்பின் மாநாடு நடந்தது. தோஹா நகருக்கு எளிதில் எவரும் வரமுடியாது என்பதால் மாநாடு அங்கு நடத்தப் பட்டது. சியாட்டில் நகரில் ஏற்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தோஹா மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகளின் கோரிக்கைகள் சில ஏற்கப்பட்டன. இதன்படி மூன்றாம் உலக நாடுகளின் வணிகநலன் தொடர்பான கோரிக்கைகளை முதலில் விவாதித்து முடிவு செய்வது என்று தீர்மானிக்கப் பட்டது. இதுவே தோஹா வளர்ச்சித் திட்டம் எனப்படுகிறது.

2017 திசம்பரில் அர்ஜென்டைனாவில் நடைபெற்ற மாநாட்டில் பணக்கார நாடுகள், இணைய வணிகம் (e-commerce) முதலீட்டை ஊக்குவித்தல் முதலானவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரின. ஆனால் இந்தியா, சீனா உள்ளிட்ட 120 நாடுகள் தோஹா வளர்ச்சித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாதவரையில் புதிய விடயங்கள் குறித்து 2019இல் நடைபெறும் மாநாட்டில் பேசலாம் என்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலக நாடுகள் 1986இல் நிர்ணயிக்கப்பட்ட பத்து விழுக்காடு தொகைக்குமேல் மானியம் வழங்குவதால் உலக வணிக அமைப்பில், தகராறுகளைத் தீர்க்கும் மன்றத்தில் (Dispute Settlement Mechanism) வழக்குத் தொடுக்கப் போவதாக 2013இல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் நடந்த மாநாட்டில் பணக்கார நாடுகள் மிரட்டின. இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் தானியங்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நடைமுறையை அடியோடு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின.

இதை மூன்றாம் உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. பணக்கார நாடுகள் அளித்துவரும் 160 பில்லியன் டாலர் மானியத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பின. இருதரப்பையும் சமரசம் செய்யும் வகையில் “இடைக்காலத் தீர்வு விதி” (Peace Clause) என்பது உருவாக்கப்பட்டது. இதன்படி, ஏற்கெனவே கொள்முதல் - சேமிப்பு நடைமுறையைக் கொண்டுள்ள நாடுகள் அவ்வாறே தொடர்ந்து செய்து கொள்ளலாம். புதியதாக எந்த நாடும் கொள்முதல்-சேமிப்பு நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது. மேலும் சேமித்து வைத்துள்ள தானியத்திலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடாது. 2017க்குள் இடைக்காலத் தீர்வு விதியை நீக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு (Permanent Solution) காணப்பட வேண்டும் என்று பாலி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. 2015இல் நைரோபியில் நடந்த மாநாட்டிலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. 2017இல் அர்ஜென்டைனா மாநாட்டிலும் இதுகுறித்து முடிவு எடுக்க முடியவில்லை.

அர்ஜென்டைனா மாநாட்டில் அமெரிக்கா, சீனாவும் இந்தியாவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (GDP) பொருளாதார வளர்ச்சி விகிதத்திலும் உலகில் முன்னணியில் உள்ளன; அதனால் இடைக்காலத் தீர்வு விதி அவற்றுக்குப் பொருந்தாது என்று வாதிட்டது. மூன்றாம் உலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு இந்தியாவும் சீனாவும் தலைமை தாங்குவதால் இவ்விரு நாடுகளையும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற பிரித்தாளும் ஏகாதிபத்திய சூழ்ச்சியே இது! உடனே, இந்தியாவில் 60 கோடி மக்கள் வறுமையில் இருப்பதாக இந்தியாவின் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு அலறினார். உலக அரங்குகளில் அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. ஆயினும் மோடி, அமெரிக்காவை இந்தியாவின் சிறந்த நட்பு நாடு என்று கூறிவருகிறார்.

வேளாண்மையில் விளைச்சல் என்பது மழை, தட்ப-வெப்ப நிலைகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அதனால் உழவர்களின் வருவாய் ஊசலாட்டமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் உழவர்களில் 85 விழுக்காட்டினர் 5 ஏக்கருக் கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு உழவர் களாவர். இவர்கள் தங்கள் விளைபொருள்களை நல்ல விலை கிடைக்கும் வரையில் சேமித்து வைத்திருந்து விற்கமுடியாத நிலையில் இருப்பவர்கள். அறுவடை முடிந்ததும், பயிரிடு வதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக விளை பொருளை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அறுவடைக்காலத்தில் தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலையில் நெல், கோதுமையை வாங்கும் நிலையைத் தடுக்கவும், குறைந்த அளவு வருமானமேனும் உழவர்களுக்குக் கிடைப்தை உறுதிப்படுத்தவும் நடுவண் அரசு ஆண்டுதோறும் நெல், கோதுமை, கரும்பு மற்றும் சில பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price - MSP) அறிவித்து வருகிறது.

அரசு அறிவிக்கின்ற விலையில் நெல், கோதுமை ஆகியவற்றை நடுவண் அரசு, இந்திய உணவுக் கழகம்  (Food Corporation of India - FCI) ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கொள்முதல் செய்து, கிடங்குகளில் சேமித்து வைக்கிறது. இது அறுவடைக் காலங்களில் நெல், கோதுமை ஆகியவற்றின் விலையைத் தனியார் வியா பாரிகள் மிகவும் குறைக்கவிடாமல் தடுக்கிறது. அதேசமயம் தனியார்தானிய விற்பனைச் சந்தையிலும் ஓரளவுக்குச் சீரான விலை இருக்குமாறு செய்கிறது. இது உழவர்கள் தங்கள் விளைபொருளைத் தனியார் சந்தையில் விற்பனை செய்தாலும் குறைந்த அளவு வருவாய் பெறும் நிலையை உறுதி செய்கிறது.

1943இல் வங்காளத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் 20 இலட்சம் மக்கள் மாண்டனர். அப்போது போதிய உணவு தானியம் இருப்பு இருந்தும் அதை மக்களுக்கு வழங்குவதற் கான கொள்முதல் ஏற்பாடோ, பொது விநியோக முறையோ இல்லாததால்தான் மக்கள் மாண்டனர் என்று பொருளியலுக் காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூறுகிறார். எனவே மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், உழவர்களுக்குக் குறைந்த அளவிலேனும் வருவாய் கிடைக்கவும் அரசு தானியங்களைக் கொள்முதல் செய்து, பொது விநியோக முறையில் வழங்கும் ஏற்பாடு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. ஆனால் உலக வணிக அமைப்பின் மூலம் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் இந்தியாவில் இந்த ஏற்பாட்டை அடியோடு ஒழித்து, பன் னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயல்கின்றன.

1956இல் இந்தியாவில் கடுமையான வறட்சியால் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது இதுகுறித்து ஆராய அமைக்கப்பட்ட அசோக் மேத்தா குழு, அரசு, அறுவடைக் காலங்களில் உழவர்களிடம் தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து வைத்து, பற்றாக்குறைக் காலத்தில் அதைப் பொதுச் சந்தையில் விற்று, கேட்பு-வழங்கல் (Demand - Supply) சமநிலையைப் பேண வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்காக இந்திய உணவுக் கழகத்தை ஏற்படுத்தும் சட்டம் 1964இல்தான் இயற்றப்பட்டது. இந்திய உணவுக் கழகம் 1965 சனவரி முதல் நாள் தஞ்சை மாவட்டத்தில் முதன்முதலாகக் கொள் முதல் செய்யத் தொடங்கியது. இந்திய உணவுக் கழகம், கோதுமைக் கொள்முதலில் 90 விழுக்காடும் நெல் கொள் முதலில் 75 விழுக்காடும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொள்முதல் செய்கிறது. இந்த இருப்பிலிருந்துதான் இந்தியா முழுவதற்கும் பொது விநியோகத் திட்டத்திற்கான கோதுமையும் அரிசியும் வழங்கப் படுகிறது.

உலக வணிக அமைப்பின் மாநாடுகளில் இந்திய அரசு, நாட்டின் உணவுக் பாதுகாப்புக்காகக் கொள்முதல் செய்வ தையும், சேமிப்பதையும், பொது விநியோக முறையில் வழங்குவதையும் கைவிட முடியாது என்று கூறிவருகின்ற போதிலும், இந்த நடைமுறைகளைப் படிப்படியாகக் கைவிடு வதற்கான செயல்களைக் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. நடுவண் அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கையைப் போட்டிப் போட்டுக் கொண்டு பின்பற்றுகின்றன.

1997இல் பொது விநியோகத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குமேல் (APL) இருப்பவர்களுக்கு அதிக விலையிலும் வறுமைக்கோட்டுக்குக்கீழ் (BPL) இருப்பவர்களுக்குக் குறைந்த விலையிலும் அரிசி அல்லது கோதுமையை வழங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் தரமற்ற தானியத்தை அதிக விலை கொடுத்து நியாய விலைக் கடையில் வாங்குவதைவிட, இன்னும் கூடுதல் விலை கொடுத்து தரமான அரிசியைத் தனியார் கடையில் வாங்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இதன்மூலம் பொது விநியோகத்தின்கீழ் வழங்கும் தானியத்தின் அளவைக் குறைக்கும் நோக்கம் நிறை வேறியது.

அதேபோல், நடுவண் அரசு, கொள்முதல் செய்யும் அளவைக் குறைத்து வருகிறது. அறுவடைக் காலங்களில் பெருமுதலாளிய நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை அனுமதிக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தனியார் வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சென்று விட்டதை அரசு தடுக்கவில்லை. இதனால் அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைந்த விலையில்தான் நெல்லை உழவர்கள் விற்று வருகின்றனர்.

2013இல் இந்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இதன்படி இந்திய அளவில் 67 விழுக்காட்டி னருக்கு- அதாவது கிராமப்புறங்களில் 75 விழுக்காட்டினருக் கும் நகர்ப்புறங்களில் 50 விழுக்காட்டினருக்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி கிலோ ரூ.3, கோதுமை ரூ.2, சிறுதானியங்கள் ரூ.1 விலையில் ஒருவருக்கு 5 கிலோ வீதம் வழங்கப்படும். 2016ஆம் ஆண்டில் எல்லா மாநிலங்களிலும் இது நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த விலையில் தானியங்கள் வழங்கப்படும். அதன் பிறகு நடுவண் அரசு கொள்முதல் செய்யும் விலையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நியாய விலைக் கடையில் வாங்குவோர் வெளிச் சந்தையில் வாங்கும் நிலையை உருவாக்கும். அந்நிலையில் அரசு கொள்முதல் செய்வதோ, சேமித்து வைப்பதோ தேவை யற்றதாகிவிடும். குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பதும் நிறுத்தப்படும். உணவு தானியச் சந்தை தனியாரின் முழு ஆதிக்கத்திற்குச் சென்றுவிடும்.

அந்நிலையில், உலக அளவில் உணவு தானிய வணிகத்தில் 80 விழுக்காட்டைக் கொண்டுள்ள கார்கில், மான் சான்ட்டோ, டு-பாண்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த விலையில் அரிசி, கோதுமையை இந்தியாவில் இறக்குமதி செய்யும். அமெரிக்காவில் உற்பத்திச் செலவு குறைவு, ஆனால் இந்தியாவில் உற்பத்திச் செலவு அதிகம். அதனால் இந்திய உழவர்கள் தங்கள் விளைபொருளை விற்க முடியாமல் தங்கள் நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று, அதில் கூலிகளாக வேலை செய்யும் நிலை ஏற்படும். மோடி அரசு இந்த ஒப்பந்த வேளாண்மையை ஊக்குவிக்கிறது. வேளாண்மை முற்றிலும் தனியார் மயமானதும், விளைபொருள்களின் விலை உயர்த்தப்படும். மக்க ளால் வாங்கி உண்ண முடியாத நிலை ஏற்படும். எனவே பொதுவிநியோகத் திட்டமும், அரசு கொள்முதலும், சேமிப்பும் அரசால் கைவிடப்படக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டியது உயிர் வாழ்தலுக்கான போராட்ட மாகும்.