2015 அக்டோபர் 26 முதல் நவம்பர் 24 வரை தமிழகத்தில் குறிப்பாகக் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் பெருமளவில் பாதிப்பு இல்லாத வகையில் மழை பெய்தது. இந்த மழை நீரை நாற்பது ஆண்டாக நீர்நிலைகளில் தேக்கிட முடியாமல், நீர் வரும் வழிகளைப் பாதுகாக்காமல் அரசியல் செல்வாக்கு உதவியுடன் ஆதிக்கச் சக்திகள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்புச் செய்து பட்டாப் போட்டு விற்றுவிட்டனர். இதற்குச் சம்பளம் வாங்கும் அலுவலர்களும் துணை நின்றுள்ளனர்.
நீர் நிலைகள் சரி செய்யப்பட்டிருந்தால் தமிழகம் எப்பொழுதுமே வறட்சியால் பாதித்திருக்காது. மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி, திட்டங்கள் தீட்டியே பணிகளை செயல்படுத்தாமல் பணத்தைக் கொள்ளையடித்தனர்.
2015 நவம்பரில் பெய்த மழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். மேலும் நிவாரணம் என்ற பெயரில் கள ஆய்வு செய்து நிவாரணம் கொடுக்காமல் கூத்தாடி அரசியல்வாதிகள் நிவாரண நிதியை கொள்ளையடித்துள்ளனர். இதுபோன்ற பாதிப்பு நேரத்தில் வியாபாரிகள், பால், உணவுப் பொருட்கள், காய்கறிகள், போக்குவரத்து உரிமையாளர்கள் மனம் போல் பன்மடங்கு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடித்தனர்.
பொதுமக்களுக்கு எவரும் உதவி செய்யவில்லை. உதவி செய்வதுபோல் வேண்டியவர்களை வைத்துப் படம் எடுத்து ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றனர். தாம்பரம் முடிச்சூர் சாலையில் தனியார் சிறிய வாகனங்கள் ஓட்டி, பணத்தைக் கொள்ளையடித்தனர். ஆனால் அரசு மாநகரப் பேருந்து ஓட்டாமல் தனியாருக்கு இணங்கி ஓட்டாமல் இருந்தனர். இன்னும் கூட சாலைகள் சரி செய்யாமல், குண்டும் குழியுமாக உள்ளன.
மழைக்காலத்தில் இறந்தவர்களுக்கு இடு காட்டில் கூடுதல் கட்டணம் இரசீது போடாமல் வாங்கி கொண்டு தான் அடக்கம் செய்தனர். நிவாரணம் என்பது நேர்மையானவர்கள் மூலம் வழங்க வேண்டும், கொள்ளையர்கள் மூலம் கொடுத்தால் எப்படி நிவாரணம் மக்களுக்குக் கிடைக்கும்.
நம்மை ஆட்சி செய்த கட்சிகளிடம் உள்ள பணத்தைப் பறிமுதல் செய்து நாட்டுக்குச் சேர்த்தால் பல ஆண்டுகள் நம்மிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி செய்யலாம். தேர்தல் வருமுன் கொள்ளையர்களுக்கு வெள்ள நிவாரணம் வாய்ப்பாக அமைந்துள்ளது. நீண்ட காலத்திட்டத்தை தீட்டாத எந்த அரசும் நல்ல அரசு இல்லை. கொள்ளையர்கள் கூடாரமேயாகும்.