கடந்த ஏற்காடு, திருவரங்கம் இடைத் தேர்தலின் பொழுது அ.தி.மு.க.வினர் மருத்துவமனை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு வாக்குகளுக்காகப் பணம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் செவிமடுக்க மறுத்தது மட்டுமல்லாமல் அது குறித்த ஒரு விசாரணையும் செய்யவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது ஒரு வாக்குக்குக் குறைந்தது ரூ.200/-என்று ஆளுங்கட்சியான ஜெயலலிதா கட்சியால் அளிக்கப்பட்டு அப்படிப் பணம் வழங்குவதற்காகவே 144 தடையுத்தரவு தமிழகத்தில் தேர்தல்ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டது என்ற செய்திக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. மாறாகத் தங்களின் பதவிக்காலத்தில் இப்படிப்பட்ட முறைகேடுகளைக் கண்டும் காணாமல்அனுமதித்துவிட்டு பதவி ஓய்வுக்குப் பின் தமிழகத்தில் தேர்தல்களில் பண நடமாட்டத்தைத் தடுக்க முடியவில்லை என்று ஒப்புக்கு புலம்பிய ம(கா)னுபாவர்களைப் பார்த்திருக்கிறோம்.
2016 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெயயலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் பணம் நிரப்பப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தேர்தல் ஆணையம் வாளாவிருந்தது. வாகனங்களை மறித்துப் பறக்கும் படை என்ற பெயரில் சோதனை மேற்கொள்ளும் அலுவலர்கள் சிறுதாவூர் என்ற பெயரைக் கேட்டதும் அஞ்சி நடுங்கியதில் வியப்பொன்றுமில்லை. தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு
டி.என். சேஷன் பட்டபாடுவந்து போயிருக்கு மல்லவா? சாதாரணவியாபாரிகள், ரிசர்வ் வங்கிக்குச் செல்லும் பணலாரிகள், ஏ.டி.எம்.க்கு கொண்டுசெல்லபடும் பணம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்ததாகத் தினமும் உதார் விட்டுக்கொண்டிருக்கும் தமிழக தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. வினர் பணம் பதுக்கிவைத்திருப்பது குறித்து நம்பகமான புகார் அளித்தால் கூட நடவடிக்கைக் எடுக்க தயங்குவது மட்டுமல்ல, நடவடிக்கைஎடுக்கும் பணியிலுள்ள தேர்தல், வருவாய், காவல்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணம் உடனேஇடம் மாற்றப்படுகிறது.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பது என்ற “தலை சிறந்த கலையை” ஜெயலலிதா 2005-ஆம் ஆண்டு கும்மிடிபூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தல்களில்துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்துவருகிறார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழக அரசின் நிர்வாகம் வந்துவிட்டதாக நம்பப்படும் நிலையில்அதிரடி சோதனைகளின் பொழுது பிடிபட்ட பணங்களில் பெருந்தொகை உரியவர்களால்கணக்குக் காட்டப்பட்டுத் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 24.04.2016 ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தொகைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. கடந்த 22.04.2016 அன்றுகரூரில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்லவம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களின் பினாமி எனக் கூறப்படும் அன்புநாதன் என்பவரிடமிருந்து ரூ.250 கோடிகள் அளவில் பணம் கைப்பற்றப்பட்டதுஎன்றுசெய்தித்தாள்களில் வந்தாலும் ரூ.4.75 கோடிமட்டும் தான் பறிமுதல்செய்யப்பட்டதாகவும் இந்தியாவிலேயே இவ்வளவு அதிகமான பணம் பறிமுதல்செய்யப்பட்டது கரூரில் தான் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்காணி பெருமிதத்துடன் பேட்டியளித்துள்ளார்.
இதில்வேடிக்கைஎன்னவென்றால் 22.04.2016 அன்று சோதனை நடந்து கொண்டிருக்கும் பொழுதே ராஜேஷ் லக்கானி மேற்படி அன்பு நாதனின்குடோனில் ரூ.10.3 லட்சம் ரொக்கம், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், காலிப்பெட்டிகள், வாக்காளார் பட்டியல்ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டதாகவும் அங்கு நின்றிருந்த மத்திய அரசுக்குச் செவந்தமானஆம்புலன்ஸ், ஒரு டிராக்டர், 4 சொகுசு” கார்கள்கைப் பற்றப்பட்டதாகவும் அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுவிட்டுப் பின்னர் மக்களின் கேள்விகள் எழுந்ததும் ரூ. 4.75 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டதாகக் கூறியதன் மர்மம் என்ன?
தி.மு.கழக பொருளாளர் மரியாதைக்குரிய தளபதி அவர்கள் ஜெயலலிதா மக்களை நம்புவதைவிட பணத்தையும் தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே நம்பியுள்ளார் என்று கூறியிருப்பது சரியான உண்மையும், பொருத்தமான கூற்றாகவுமே பார்க்க முடிகிறது. துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல ஆம்புலன்சுகளில் கரன்சி நோட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கெனவே கடத்தப்பட்டுள்ளதும் தற்பொழுது சிக்கியுள்ள பணம் கடுகளவே இருப்பதாகவும் கருதலாம்.
அதிலும் குறிப்பாக யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஆம்புலன்சில் மீது “மத்திய அரசு” என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது குறித்து மத்திய அரசின் மத்தியப் புலனாய்வு முகமை உடனடியாக வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அளித்ததகவல்கள் அடிப்படையில் சென்னை பெரம்பூரில் அ.தி.மு.க. வின் தஞ்சை மாவட்ட நிர்வாகியாகவுள்ள விஜயகுமார் அவரது மகன்கள் விஜய் கிருஷ்ணசாமி, ஆனந்த்கிருஷ்ணன் ஆகியோரிடம் ரூ.4.72 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், வேதாரண்யம் அருகே ஆம்னி பஸ்ஸில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூ.3.40 கோடி மற்றும் தலா 1 கிராம் எடையுள்ள 245 தங்க நாணயங்கள் பறிமுதல்செய்யப்பட்டிருப்பதும் தமிழகத்தில் ஆளுங்கட்சி பணத்தை மட்டும் முதன்மையாக நம்பி களத்தில் இறங்கியிருப்பதும் அதற்குய்வதகமாக தேர்தல் ஆணையத்தின் மந்த கதியானசெயல்பாடுகள்அமைந்திருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.
எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கும் ஜெயலலிதா கட்சியினர் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடிவீதம் செலவுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணத்தை ஆங்காங்கே பதுக்கிவைத்து ஆம்புலன்ஸ், அரசு மற்றும் காவல்துறைவாகனங்கள் மூலம் பட்டுவாடாசெய்ய முற்பட்டுள்ளதாகவும் அதற்குத் தலைமை தேர்தல்ஆணையத்தில் தமிழகத்திலிருந்து சென்று முக்கிய பொறுப்பிலுள்ள ஒரு ஆணையரே உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது.
இச்செய்தி உண்மையெனில் மக்களாட்சித் தத்துவம் என்பது மண்ணோடு மண்ணாகி “குடியரசு கோமான்கள்”மீண்டும் கோலோச்சும் காலம் தான் வரும். எனவே தமிழக மக்கள் ஜெயலலிதா போன்ற தீய, அழிவு சக்திகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஜெயலலிதாவையும் அவரது கட்சியையும் முழுவதுமாகத் தோற்கடிக்க வேண்டும்.