“இந்துமதம்” என்று ஒரு மதம் இல்லை, பிராமண மதம், வேதமதம் என்பதே இந்து மதம் என்று சொல்லப்படுகிறது, இந்து மதம் பிறவி வேறுபாட்டை நிலைக்க வைக்கிற வருணாசிரமத்தில் தான் உயிர் வாழ்கிறது, வருணாசிரமத்தின் விளைவு தான் தீண்டாமை.

பார்ப்பன மதத்தின் அடுத்த உயிர்நாடியாக இருப்பது பார்ப்பனியப் புரோகிதம். கடவுள் வணக்கம் தொடங்கி நல்ல நிகழ்ச்சிகள், தீய நிகழ்ச்சிகள் எல்லா வற்றிற்கும் பார்ப்பனரையே குருவாக அழைப்பதாலும், சமற்கிருதத்தையே ஓதுவதாலும் பார்ப்பனியம் உயிர் வாழ்கிறது. சூத்திரர், வைசியர், சத்திரியர் ஆகிய எல்லோரையும் இது ஆட்கொண்டிருக்கிறது. இது, குறைந்தது குப்தர் ஆட்சிக்காலம் முதல் - வடநாட்டிலும், பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முதல் தென்னாட்டிலும் நடைமுறையில் இருக்கிறது.

பார்ப்பன மதத்தின் அடுத்த உயிர்நாடி சிலை வணக்கம் என்பதுதான். இது இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் இருக்கிறது. இதை வெகு மக்களின் தலைவர்கள் உருவாக்கி மக்களிடையே பரப்பினர். சிலை வணக்கம் தவிர்த்த மற்றெல்லா வற்றையும் பார்ப்பனர்களே உருவாக்கினர்.

பார்ப்பனர்களின் சமுதாய, அரசியல், பொருளாதார, வாழ்வியல் கொள்கைகள் மிகவும் தெளிவாக மனுநீதி யிலும், அர்த்த சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளன. பார்ப்பனரல்லாத மக்களுள் பெரும்பலோர் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை; இவற்றைப் படித்ததில்லை; படித்தவர்கள் இவற்றை ஆய்வு செய்வதில்லை. அப்படிச் செய்யாததால்தான் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையானது உண்மையில் தங்களுக்கே உரியது - தங்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என மூடத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

புத்தருக்குப் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மகாத்மா ஜோதிராவ் புலே, பண்டித அயோத்திதாசர், சொக்கமேளா, ஸ்ரீநாராயண குரு, வடலூர் வள்ளலார், அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகர், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் அம்பேத்கர் இவர்கள் 1870 முதல் ஒரு நூற்றாண்டுக் காலம் மேலே கண்ட மூட நம்பிக்கைகளைத் தகர்க்க எல்லாம் செய்தனர். “பார்ப்பன மதம் எப்போது தோன்றியது? அதற்கு மூல கர்த்தா யார்?” என்று கேட்பது மிகப் பெரிய கேள்விகள் என்று எல்லோரும் கருதுகி றார்கள். ‘வேதமதம் அனாதி காலந்தொட்டு இருப்பது’ என்று விடை கூறி, இந்த ஒரு கேள்வியிலிருந்து பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்து மதத்தைப் பின்பற்றுகிற எந்தத் தலைவரை வேண்டுமானாலும் - எந்தக் கர்த் தாவை வேண்டுமானாலும் நீங்கள் பின்பற்றுங்கள்; மனுநீதி சொல்வதைப் புறக்கணியுங்கள்; பார்ப்பனப் புரோகிதம் செய்வதைக் கைவிட்டுவிடுங்கள் ; சிலைகளை உடையுங்கள்; சிலைகளை வணங்குவதை நிறுத்துங்கள்; பார்ப்பானை அவமதியுங்கள்; வருணம் மீறித் திருமணம் செய்துகொள்ளுங்கள். ‘இவற்றை எல்லாம் செய்த பிறகும் நீங்கள் இந்துக்கள் தான்’ என்று கூறியதன் மூலம், பார்ப்பனியத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதைப் பார்ப்பான் தடுத்துவிட்டான். இதைப் பற்றி ஒவ்வொரு வரும் நுμக்கமாகச் சிந்திக்க வேண்டும். இவை இன்றுவரையில் உயிரோடு இருப்பதற்குக் காரணம் இக் கொள்கைகள் உண்மையானவை என்பதால் அல்ல. இவற்றை எல்லாம் அந்தந்தக் காலத்து அரசர் களும் அரசுகளுமே மக்கள் பேரில் சுமத்தின. மக்கள் எல்லோரும் இவற்றை மீறாமல் பின்பற்ற வேண்டும்; மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசுகள் தாம் விதித்தன; அப்படி மீறாமல் தண்டிக்கவும் செய்தன.

இந்து அரசர்கள், இசுலாமியப் பேரரசர்கள், வெள்ளை யர்கள், இந்தியர்கள் என்கிற எல்லா ஆட்சிக்காலங் களிலும் இதுவே பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். இன்றும் மனுநீதி, பராசரஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் இவற்றின் பெயரால் - பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் என்கிற பெயரால் - இந்திய அரசமைப்புச் சட்டம் இவற்றைக் காப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவற்றை எதிர்த்து இந்தியாவில் தோன்றிய எல்லா இயக்கங்களும் 1870க்குப் பிறகே தங்களுக்குச் சொந்தமான கிழமை ஏடுகள் மாத ஏடுகள் மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்தன. ஆனால், வெகு மக்களுக்குப் படிப்பறிவு மறுக்கப்பட்டு வந்ததால் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே பரவவேண்டிய அளவுக்குப் பரவவில்லை. அத்துடன் இந்திய அளவிலான ஓர் அமைப்பைக் கட்டுவதை ஆதித் திராவிடர் இயக்கத் தலைவர்களோ, திராவிடர் இயக்கத் தலைவர்களோ வட இந்தியாவிலோ - தென்னிந்தியாவிலோ எப்போதும் செய்யவில்லை.

தென்னிந்தியாவில் ஆதித்திராவிடர் இயக்கம் 1890களிலேயே மூர்க்கமாக எழுந்தது; திராவிடர் இயக்கம் 1912 முதலே நல்ல புரிதலோடு எழுந்தது. இவர்கள் வைத்த முதலாவது கோரிக்கை ஆட்சியில் வகுப்புவாரியாகப் பங்கு வேண்டும் என்பதுதான். திராவிட இயக்கம் வைத்த அடுத்த கோரிக்கை தென்னாட்டுத் திராவிட மக்கள் தில்லிக்காரர் ஆதிக்கத்திலிருந்தும் - பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட - பிரிட்டிஷ் ஆட்சியால் நேரடியாக ஆளப்படுகிற ஒரு தனிநாடு வேண்டும் என்பதுதான். 1917இல் டாக்டர் டி.எம். நாயர் முன்வைத்த திராவிட நாடு கோரிக்கை 1926இலும், 1931லும் தில்லி மாநிலங்கள் அவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் - பெரியாரால் 1939இல் வைக்கப்பட்ட அதே கோரிக்கை எல்லாம் மேலே கண்ட உள்ளடக்கத்தோடுதான், 1945 ஆகஸ்டு வரையில் இருந்தன.

அப்படி அவர்கள் கோரியது தனிச் சுதந்திர நாடு ஆகாது. “பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் அடங்கியிருப்பதைவிட, நேரடியாக வெள்ளையனுக்கு அடங்கியிருக்கிறோம்” என்பதையே அவை குறிக் கோளாகக் கொண்டவை. “வெள்ளையன் ஆதிக்கம், வடநாட்டான் ஆதிக்கம், பார்ப்பான் ஆதிக்கம் இவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட தனிச் சுதந்திர திராவிட நாடு வேண்டும்” என்கிற கோரிக்கை 1945 செப்டம்பர் 30ஆம் நாளில்தான் பெரியார் அவர்களால் முன் வைக்கப்பட்டது. இதுவே சரியான ஒன்று. “திராவிட நாடு” என்று பெரியார் கருதிய தென் மாநிலங்கள், 1-11-1956இல் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதற்கு இடையில் முன்வைக்கப்பட்ட தட்சிணப் பிரதேச ஏற்பாட்டை எதிர்த்து ஒழித்த பெரியார் - மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையை மனமார வரவேற்றார். அதன் சரியான விளைவாக “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தனிச் சுதந்தரத் தமிழ்நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார். அதற்கான சில போராட்டங்களையும் அவர் நடத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1957இல் முதன் முதலில் தேர்தலில் ஈடுபட்டது. 1962 வரையில் திராவிட நாடு கோரிக்கையை ஏற்றிருந்த அக்கட்சி, பின்னர் - “தேர்தலா? கட்சியா?” என்பதை முன்வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் - திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அதிகாரப் பூர்வமாக 1963இல் கைவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், 1968இல், “சுய மரியாதைத் திருமணம் செல்லும்” எனும் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டம் இந்துச் சட்டப்படி ஏற்கப்பட்டுள்ள திருமண வடிவங்களுள் ஒன்றாக ஆகும் தகுதியை மட்டுமே பெற்றது. அது இந்தியா முழுவதற்குமான சட்டமாக ஆக முடியாது. ‘அந்த வடிவம் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய திருமண முறை’ என்னும் தகுதி அச்சட்டத்திற்கு இல்லை.

சுயமரியாதை இயக்கம் போன்ற ஓர் இயக்கம் மற்ற மாநிலங்களில் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் எந்த எதிர்ப்புமின்றி அச்சட்டத்தை நிறைவேற்றியதுபோல, வேறு எந்தச் சட்டமன்றமும் இப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற முடியாது. இதற்கான இணக்கமான முயற்சியை இந்திய அளவில் செய்வதற்குத் திராவிட முன்னேற்றக் கழகமோ, மற்ற திராவிட இயக்கங்களோ இன்றுவரை முன்வரவில்லை. இது பற்றிய சரியான புரிதலும் இவர்களுக்கு இல்லை.


சுயமரியாதை இயக்கம் அனைத்திந்திய இயக்க மாக ஆக வேண்டும் என, 1937இலேயே பெரியார் ஈ.வெ.ரா. அறிவுறுத்தினார். திராவிடர் இயக்கம் அல்லது பார்ப்பனரல்லாதார் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டுமென்று 1971லேயே தெளி வானதொரு கோரிக்கையைப் பெரியார் முன்வைத்தார். அனைத்திந்திய இயக்கமாக உருவாக்குவதற்கு ஏற்ற வலிமையான ஒரு செய்தி ஊடகம் வேண்டும் என்பதை அவர் தெளிவுபட உணர்ந்திருந்தார். சென்னையில் இருந்து வெளிவரும் The hindu ஆங்கில ஏட்டின் தரத்திற்கு ஒப்ப - திராவிட இயக்கத்தினருக்கு ஒரு ஆங்கில நாளேடு வேண்டும் எனத் திட்டவட்டமாக அவர் அறிவித்தார். இது மிகவும் தொலைநோக்கான பார்வை கொண்டது. ஏன்? எப்படி?

திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோதே - அனைத்திந்திய ஆட்சிமொழி, படிப்பு மொழியான ஆங்கிலத்தில், 1917இல் “Justice” என்கிற நாளேட்டைத் தொடங்கினர்; “திராவிடன்” என்கிற தமிழ்நாளேட்டையும், “திராவிடப் பிரகா சிகா” என்கிற தெலுங்கு நாளேட்டையும் தொடங்கினர். “Justice” ஆங்கில ஏடு வெள்ளையருக்கு உண்மையை உரைப்பதாகவும் பார்ப்பனருக்குப் பதில் கூறுவதாகவும் திறமையாக வெளியிடப்பட்டது.

இன்று நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை கைவிடப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட பன்மொழிச் செய்தி ஊடகங்கள் திராவிட இயக்கத்தாருக்கு இல்லாமலிருப்பது மிகப் பெருங்குறையாகும். இன்றுள்ள திராவிட இயக்க நாளேடுகள்”, “விடுதலை”யும், “முரசொலி”யும் மட்டுமே ஆகும். இவை தமிழர்களுக்கு மட்டுமே செய்திகளைத் தருகின்றன.

ஒரு நாளேட்டைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, இந்தியிலோ மற்ற மொழிகளிலோ நடத்துவதில் உள்ள துன்பங்கள் பார்ப்பனரல்லாதாருக்கும், பார்ப்பனருக்கும் ஒரே மாதிரியில் உள்ளவை யாகும். ஆயினும், இவ்வளவையும் தாண்டி, பார்ப்பனர் மற்றும் வடநாட்டினர் தங்களின் சமுதாய ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் இவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் தொலை நோக்கத்துடன் 190 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில நாளிதழ் களை வெளியிட்டு வருகின்றனர். 120 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிற அப்படிப்பட்ட ஆங்கில, இந்தி நாளேடுகள் 40க்கு மேல் உள்ளன.

எடுத்துக்காட்டாக “The Statesman” நாளேடு 1818இல் நிறுவப்பட்டது - இன்றுவரை வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து வெளிவரும் “The Hindu” ஏடு 1878இல் நிறுவப்பட்டு, இன்று வரை வெளியிடப்பட்டு வருகிறது. “The Times of India” நாளேடு 1838இல் தொடங்கப்பட்டு 172 ஆண்டுகளாக வெளியிடப் பட்டு வருகின்றது. “Central Chronicle” 52 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இவையன்னியில் The Indian Express, The Asian Age, The Patriot மற்றும் கேரளாவி லிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் ஆங்கில நாளேடுகள் வெளிவருகின்றன. கேரளாவிலுள்ள மலையாள மனோரமா, மாத்ருபூமி நிறுவனம் என்னும் பெயரில் ஆங்கில, மலையாள நாளிதழ்களை 126 ஆண்டுகளாக வெளி யிடுகிறது. ‘தினமணி’ தமிழ் நாளேடு 1934 முதல் வெளிவருகிறது.

இந்தி மொழியில் Banaras Akbar (1845), Praja Hitaishi (1861), Hindustan (1883), Bharat Bharat (1887), Rajasthan Kesri (1920), மேலும், Dainik Jagaran, Dainik Bhaskar, Amar ujala, ஆகிய ஏடுகளும் வெளியிடப்படுகின்றன. தமிழர், திராவிடர், பார்ப்பனரல்லாதார், ஆரியர் “தமிழ்நாடு தமிருக்கே” - “திராவிடநாடு திராவிடருக்கே” என்னும் கோட்பாடுகளை அடியோடு இவை எதிர்ப்பவையாகும். ஈழ விடுதலை யையும் இவர்கள் எல்லோரும் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மேலே கண்ட எல்லா ஏடுகளும், தமிழ் நாட்டிலிருந்தும் பிறமொழி மாநிலங்களிலிருந்தும் வெளிவருகிற தாய்மொழி ஏடுகளும் இந்தி, இந்தியா, இந்து ஆதிக்கக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவையாகும். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு, இச் சூழலில் இந்தியாவை உடைப்பது என்றால் என்ன? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

(I) இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி. நீதிமன்ற மொழி. அலுவல் மொழி என்று கூறுகிற அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள விதிகள் 343, 344, 345, 346, 347 முதலான பிரிவுகள் அடியோடு நீக்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். அத்துடன் இரயில்வே, அஞ்சல், வங்கி உள்ளிட்ட எல்லா நடுவண் அரசுத் துறைகளின்கீழ் - எல்லா மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்களிலும் அன்றாட அலுவல்களை நடத்தும் நிருவாக மொழி யாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குசராத்தி, பஞ்சாபி, வங்காளம், அசாமி என அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக வந்து சேர இணக்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இத்துடன் இந்திய நாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசிடவும், வினாக்கள் எழுப்பவும் உரிமை வேண்டும். உச்சநீதி மன்றத்தில் அவரவர் தாய்மொழியில் முறையீடு செய்ய உரிமை வேண்டும். மய்ய அரசுக்கு, மாநில அரசுகள் விடுக்கும் மடல்கள் அவரவர் மாநில மொழியில் விடுக்கப்பட உரிமை வேண்டும். கணினியிலும் இணையத் தளத்திலும் இப்போது மொழிபெயர்ப்புப் பணிகள் திறமையாக நடைபெறு கின்றன. மய்ய அரசு சீர்மைகருதி ஒரே நேரத்தில் எந்த இந்திய மொழியில் உள்ள செய்தியையும் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்த்துக் கொள்ள முடியும்.

(II) இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய அயலகப்பணி என்கின்ற “அனைத் திந்தியப் பணிகள் தேர்வு ஆணையத்தை” அடியோடு அகற்ற வேண்டும். இந்திய உயர் அதிகார வர்க்கம் தான் உயர் ஆங்கிலக் கல்வி காரணமாகவும் - மேல் சாதியில் பிறந்த செல்வாக்கின் காரணமாகவும் - பெரிய சொத்துடைமை காரணமாகவும் இன்றுவரை ஆளும் ஆதிக்க வர்க்கமாக விளங்குகிறது. இந்த அதிகார வர்க்கத்தைத் தெரிவுசெய்து எடுக்கின்ற களமாக உள்ள இந்த அமைப்பு உடைக்கப்பட்டு, அந்தந்த மாநிலத்தவரே அவரவர்களுக்கான ஆட்சி அலுவலர் களைத் தெரிவு செய்துகொள்ளும் அதிகாரம் 9 வேண்டும். அந்த அதிகாரம் என்பது எல்லா மத, சாதி மக்களிடையே விகிதாசாரம் பிரித்துத் தரப்பட ஏற்ற வகையில் சட்டம் செய்யப்பட வேண்டும்.

(III) இந்தியா முழுவதிலும், தரையின்கீழ் உள்ள கனிமங்கள் இந்திய அரசுக்குச் சொந்தம் என்பதால், இந்தியப் பெரும் பணக்காரர்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் அந்நிய நாட்டுப் பெருங்குழும முதலாளிகளும் இவற்றைக்கொள்ளையடித்து இந்தியாவை அடிமைநாடாக ஆக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்த உரிமை இந்திய அரசிடமிருந்து அடியோடு பறிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் பாதுகாப்பு, நாணயம் அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகளைத் தவிர்த்த மற்றெல்லா அதிகாரங்களும், முற்றாக அந்தந்த மாநிலங்களுக்கு வந்து சேரவேண்டும். இன்று படையையும் காவல்துறையையும் பயன்படுத்தி நாசமாக்கப்படும் ஜம்மு - காசுமீர், நாகாலாந்து, மணிப்பூர், அசாம் முதலான எல்லா மொழி மாநிலங்களுக்கும், தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களுக்கும் -“பகிர்வு செய்யப்பட்ட தன்னாதிக்கம் என்கிற அடிப்படையில் தன்னாட்சி உரிமை வந்து சேர நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து வழிகாண வேண்டும்.

இந்த ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக்கொடி என்கிற உரிமையும் வேண்டும். இதையே இந்தியாவுக்குள் தன்னுரிமை என்கிறோம்.

“இந்தியாவை உடைத்தல்” என்பதும் இதுதான். இந்தி, இந்தியா, இந்து ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் இதன்வழியாகவே நிறைவேறும்.

தமிழ்நாட்டில் மட்டும் - தமிழரிடையே மட்டும் செயல்பட்டுக்கொண்டு எவ்வளவு காலத்துக்கு நாம் இயங்கினாலும் நாம் கோரிய பலன் விளையாது. இந்தியா முழுவதிலும் சென்று நாம் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட வேண்டும். இக்கோரிக்கைகளைப் பரப்புகிற வலிமையான ஊடகங்களாக, நாளேடுகள் தமிழிலும், நாள் மற்றும் வார, நாள் ஏடுகளாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட வேண்டும். இவற்றைச் செய்வதை விடுத்து, ஆயுதம் தாங்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. ஆனால், தத்தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய பல இலட்சக்கணக்கானோர் இப்படிப்பட்ட பணிகளுக்குத் தேவை. தனித்தனிக் குழுக்களாக இயங்குவோர் எல்லோரும் அடிக்கடி கூடுவதும், மனம்விட்டுக் கலந்துபேசுவதும் - நோக்கங்களிலும், கருத்துகளிலும், ஹிμம்முறைகளிலும் உள்ள வேறுபாடுகள் இவற்றைப் பையப் பைய நீக்கிக்கொண்டு, ஒரே குறிக்கோளை வரித்துக்கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதவை யாகும்.

அமைப்புகள் பலவாக இருப்பினும், குறிக்கோள் ஒன்றாக இருந்தால், அதன் வலிமை பெரிதாக இருக்கும். எத்தனைக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் பார்ப்பனர்களைப் பார்த்துச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கருத்துகளைக்கொண்ட பார்ப்பனர்கள் தங்களின் சமுதாய ஆதிக்கம், இன நலன், பண்பாட்டு ஆதிக்கம் இவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஒன்றுபட்டு இயங்குவதைப் பார்த்துத் தமிழர்களாகிய நாமும் நல்ல படிப்பினை களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒருவரையருவர் காலை வாரிவிடுவதை விட்டு விட்டு, முடிந்தவரையில் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றுபட்ட கருத்துள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். இதுகருதி எத்தகைய பங்களிப்பை ஆற்றவும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி ஆயத்தமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட தன்மையில் ஒரு தலைமுறைக் காலத்துக்கேனும் பாடுபட்டால் அன்றி, நம் தலைவர்கள் ஒரு நூற்றாண்டுக் காலம் உழைத்து நம் விடுதலைக்கென உருவாக்கித்தந்த கொள்கைகளை எந்த ஒரு துறையிலும் நாம் வென்றெடுக்க முடியாது. இவைபற்றித் தனித்தனியாகவும் கூட்டாகவும் சிந்திப்போம்; வாருங்கள்!

(சிந்தனையாளன் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

Comments

7 comments

7
S Ragu
miga arumaiyana thoguppu..
ssk
கடவுளும். மதங்களும் , சாதிகளும், இல்லாவிட்டால் இந்தியா எவ்வளவோ வளர்ச்சி பெறும். குறுகிய எண்ணத்தினால், டாக்டர் படிப்பு படித்தவனும் சாதி பார்க்கிறான். அறிவியல் படித்தவனும் அணு ஏவுகணை சோதனைக்கு முன் தேங்காய் உடைகிறான். எதற்கு இவர்கள் படிக்கச் வேண்டும்? அந்த வாய்ப்பை வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம். இந்த நிலையில் வளர்ச்சி எப்படி இருக்கும். தான் என்ற எண்ணம் ஒழிந்து நாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டு அளவிலாவது வந்தால் முதலில் தமிழ்நாடு சிறப்படையும். பின் பற்றும் இந்தியா சிறப்படையும். நாம் என்ற எண்ணத்தோடு அனைத்து கட்சியினரும் ஒன்றாக மக்களுக்கு தேவையான பணி செய்தால் தமிழ்நாடு முன்னேறும்.
Guest
எத்தனைக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் பார்ப்பனர்களைப் பார்த்துச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கருத்துகளைக்கொண்ட பார்ப்பனர்கள் தங்களின் சமுதாய ஆதிக்கம், இன நலன், பண்பாட்டு ஆதிக்கம் இவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஒன்றுபட்டு இயங்குவதைப் பார்த்துத் தமிழர்களாகிய நாமும் நல்ல படிப்பினை களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒருவரையருவர் காலை வாரிவிடுவதை விட்டு விட்டு, முடிந்தவரையில் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றுபட்ட கருத்துள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். ??
durai ilamurugu
அன்புள்ள அய்யா,
ஆகத்து மாத சிந்தனையாளன் இதழில் அய்யா திரு வே. ஆனை முத்து அவர்களின் தேசிய இனச் சிக்கல்கள் குறித்த கட்டுரை கண்டேன்.அது குறித்து சில கருத்து களை பதிவு செய்ய விழைகிறேன்.
1 பகிர்வு செய்யப் பட்ட தனனாதிக்கம் என்ற கருத்து மிகவும் புதுமையாக உள்ளது. இறையாண்மை என்பது முழுமையானது. யாருடனும் பகிர்ந்து கொள்ள இயலாத ஒன்று ஆகும். பகிர்வு என்ற கருத்து வந்தமறு நொடியே இறயனணமை என்ற கோட்பாடு மறைந்த்து விடுகிறது அது நிற்க
இ ந்தியா போன்ற "எது மதிரியும் இல்லாத புதுமாதிரி நாட்டிற்கு பகிர்வு செய்ய்ப்பட்ட தன்னாதிக்கம் என்ற செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்த முயலுவதில் தவறு ஒன்றும் இல்லை. அனால் அது தேசிய இனங்களின் முழு உரிமை ஆகாது ; பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையே தேசிய இனங்களின் பிறப்புரிமை ஆகும் .ஆனால் அதை எட்டுவதற்கு மிக நீணட் காலம் ஆகும் எனவே பகிர்வு செய்யபட்ட தன்னாதிக்கம் என்ற கருதை ஒரு இடைக்கால நடைமுறையாக ஏற்றுக்கொள்ளலாம்.
1அதில் அய்யா பாதுகாப்பு, செய்திதொட்ர்பு ,நாணயம் அகியவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளார் . வெளி நாட்டுகொள்கைள் குறித்த செய்தி குறித்து எதுவும் சொல்லப் படவில்லை. எமது கருத்தில் அது பொதுப்பட்டியலில் வைக்கப்படவேண்டும். தேசிய அரசுகளின் ஒப்புதலைப் பெற்றபிறகே மய்ய அரசு வெளி நாட்டுகொள்கைள் குறித்த முடிவுகளை எடுக்கவேண்டும். இல்லை யென்றால் தமிழ நாடு - சீலங்கா போன்ற முரண்பாடான வெளி நாட்டுக் கொள்கைகள் எடுக்கப்படும் .அவை மோதலில் போய் முடியும் .
2 கனிம வள்ங்கள் மய்ய அரசின் கையிலிருந்து பிடுங்கப்பட்டு மாநில அரசுகளிடம் போய்ச் சேர வேண்டும் என்பது சரி.ஆனால் அது மட்டுமே போதாது. அது பெரு முதலாளிகளின் சுரணடலலிருந்து விடுபடுவதற்கு வேறு பாதுகாப்புகளும் தேவை . இன்று மய்ய அரசு எதிர்த்தும் ஒரிய அரசு பொச்கோ நிறுவனத்திற்கு நிலம் கொடுத்துள்ளதைக் கவனிக்கவேண்டும். இந்த ஏற்பாட்டில் விடுபட்டுப் போன செய்தி பல மாநிலங்களில் ஓடும் நதிகளின் நீரை எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்பதைப் பற்ற்றிக் கூறப் படவில்லை . இன்றைக்கு பற்றி எரிகின்ற சிக்கலாக இருப்பது அதுவே. அதையும் அந்த
மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிடுவதா/ அல்லது அதற்கென்று தனி ஏற்பாடு செய்ய்படுமா? இன்று உள்ள குறுகிய அதிகாரத்தை கொண்ட அமைப்பிலேயே நதிகள்
எந்த மாநிலத்தில் அதிகம் பாய்கிறதோ அதன் முழு உரிமை ஆகிவிடுகிறது. வரை யறுக்கபட்ட இறையாண்மை தேசிய இனங்களுக்க்கு வழங்கப்பட்டால் நதி நீர் சிக்கலுக்கு தீர்வு என்ன? எமது கருத்துப்படி இதற்கானதீர்வு மய்ய அரசிடம் இருக்கக் கூடாது. இல்லையெனில் அது நதி நீர் சிக்கலை வைத்துக் கொண்டு மாநிலங்களின் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடும். இதற்கு தொடர்புடைய இரு மாநிலங்களும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது தான் இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தோன்றவில்லை.
3 இனி காசிமீர் நாகலந்து போன்ற தேசிய இன போராட்டங்களுக்கும் வரையறுக்கப்பட்ட தன்னாதிக்கம் என்ற தீர்வு சரி இல்லை, அவற்றின வரலாறு , நீண்டகால போரட்டம், போராட்ட வடிவங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த மானிலங்களுக்க்கு பிறிந்த்துபோகும் உரிமையுடன் கூடியமுழு இறையாண்மை அளித்துவிடுவதே முறை ஆகும் இதற்கு குறைந்த எந்த அதிகாரப் பகிர்வும், அந்த தேசிய இனங்களுக்கு உகந்ததாக இருக்காது.சிக்கலலை முழுமையாகத் தீர்க்க இயலாது.
4 தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மொழி சிறுபான்மையோர், மத சிறுபான்மையோர் இத்தகைய ஏற்பாட்டிற்கு முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பார்களா என்பது அய்ய்மே. அவர்கள் இந்தியம் என்பதற்குள் தாங்கள் பாதுகாப்ப்பாக இருப்பதாக உண்ர்கிறார்கள் என்று எண்ணுகிறேன் தலித்துகள் நிலையும் கிட்டத்த்தட்ட அதுதான். இவர்களின் முழுநம்பிக்கையயும்,ஆதரவும் இன்றி எந்த விதமான தன்னாதிக்கப்போராட்டமும் வெற்றி பெற இயலாது. என்வே அவர்களின் முழு நம்பிக்கையும் போரட்ட்திற்கு ஆதரவாகத் திரட்டப்பட வேண்டும் இதற்கு அடிபடையாக் வரையறுக்கப்பட்ட இறையண்மை உடைய தமிழகத்திலும் அவர்களுக்கு முழு உரிமை உடன் வாழும் , தொழில் புரியும் உரினமையும் உண்டு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். தன்னாதிக்கம் பெறுகின்ற நாளில் யாரேல்லாம் தமிழ் நாட்டில் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இணையான குடிமக்களாகக் கருத்ப்படவேண்டும் .அன்றி அது தேவையில்லை நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறிவிடுகிறோம் என்று கூறுகின்ற சிறுபாண்மயோருக்கு அவ்விதம் செய்வதற்கு உரிய பாதுகாப்பும் பொருள் செலவும் வழ்ங்கப்படவேண்டும் இதைக் குறிப்பிட்டு சொல்லவேன்டியதற்கு காரணம் உண்டு பாகிச்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறை சிறிய அளவில் கூட நடக்கக் கூடாது எனபதே. மேலும் இப்பொழுதே சில தீவிர தமிழ் தேசிய குழுக்கள் "வடுகர் வல்லதிக்கம், மலையாகளின் டீகடைகள் தமிழரை சுரண்டுகின்றன. கருநாடகருக்கும் ,தமிழருக்கும் சோழர் கால்த்தில் இருந்தே இனப் பகை , காவிரியில் நீர் வராவிட்டால் உட்லன்ட்ஸ் உணவகத்தை தாக்க்குவோம்" என்ற முழக்கம் எழுப்பி வருகின்றனர் . மேலும் தமிழ் பழமை வாத்தை முன்வைத்தும், இந்து மன்னர்கள் கட்டிய கோவில்களை மட்டுமே தமிழ் தேசிய அடையாளாமாகக் காட்டியும் வருகின்றனர். இந்த குறைகள் களையப்படவேண்டும்
. "ஈழத்தமிழர்க்ளுக்கு உதவுவதற்காக் தனித்தமிழ் நாடு வேண்டும் . தமிழ் நாடு தனி நாடாக இருந்தால் சிங்களவனுக்கு எதிராக தமிழ் படை தாக்குதல் தொடுக்கும்" போன்ற வாத்ங்கள் தவிர்க்கப் படவேண்டும். ஈழதமிழர்க்ளுக்காக தமிழ் நாடு தனியாகப் பிரிதல் வேண்டும் என்ற கருத்தே தவறான அடிபடையில் எழுந்த ஒன்று ஆகும். இதில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடைய்தாய் இருக்குமா என்பது அய்யமே.
சுருக்கமாகக் கூறின் தமிழ் நாட்டின் உழைக்க்கும் மக்களின் உரிமைக்கு ஆதரவாகவும் பெண்ணுரிமை , தீண்டமை ஒழிப்பு, நிகரரமையை நோக்கி நகர்தல் இவற்றை மய்யக் கருவாக வைத்தே தமிழர் விடுதலைப்போராட்ட்ங்கள் நடத்தப்படவேண்டும் இந்த போராட்டங்களும் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கான போராட்ங்களுடன் இணைத்தே நடத்தப் பெரறவேன்டும் . இல்லாவிட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
rasheedera
அன்புடைத் தோழ, இக்கட்டுரையின் செய்திகள் மிகப்பழமையான் செய்திகள். இங்கே சொல்லப்பட்டவை யாவும் ஏற்கனமே சொன்னவைதாம்.அய்யா ஆணைமுது கட்சி துவங்கி இன்று பெரியார் தி.க. தோண்றியவரை இத்தனை நாளும் இப்படி சிந்திக்காமல் காலம் போன கடைசியில் உபதேசங்கல் சொல்வது தேவையற்றது, பயனற்றது. களத்திற்கு வாருங்கள். சிரிய போராட்டம் அமையுங்கள்.வேதிக்கு அதாவது மக்களிடம் வாருங்கள்.ஒற்றுமை கிட்டும் .உணர்வு எழும்பும்.வழி கிடைக்கும். வலி சுமக்காமல்வழி கிடக்காது. காகிதக் கத்திகள் பயன்படமாட்டா.குறைந்தது பெரியார் தி. க. அறிவித்த அக்.2. திருச்சிப் போராட்டத்திலாவது இணையுங்கள்.நல்லதுவக்கமாக இருக்கும். அது சாதி இல்லை எனும் சட்ட பாசாங்குக்குக் கிடைக்கும் அடியாக இருக்கும். பொது வாழ்வில் மானம் பாராதே என்ற பெரியாரின் சிந்தையோடு தொடங்குங்கள். எதிர் நிருவனங்கள் நிச்சயம் அஞ்சும்.மக்கள் நம்புவார்கள். ஆதரிப்பார்கள். நல்ல வாய்ப்பிது .தோழமையோடு சொல்கிறேன். செய்கை ஒன்றுதான் ஒற்றுமைக்கு வழி. நன்றி.
tamizpaiyan
nalla iruku
Dr.Aanburaj
Hinduism is the native /sutheysi culture of Hindustan. It does not belong to parbanargal. It belongs to all. Your articles are insultive of all Non-brahmins like thiruvalluvar,vallalar and Vaikuntar Ayya etc.Becuse of your wrong concepts youa re aunable to get enmass support

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.