இந்தியப் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஓர் புதிய எழுச்சியை உண்டாக்கி, அவர்கட்கு எல்லாத் துறை உத்தியோகங்களிலும் விகிதாசாரப் பங்கு பெற்றுத்தரத் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்பது பெரியார் சம உரிமை கழகத்தின் ஓர் முக்கிய பணி.

இதற்கு உறுதுணையாக நிற்க, எதிர்பாராதவிதமாக, பீகார் மாநிலத் தோழர் இராம் அவதேஷ் சிங் முன் வந்தார்.

இந்தப் பணியைச் சரியான நேரத்தில் சரியான தன்மையில் செய்ய விரும்பிய பீகார் பிற்படுத்தப் பட்டோர் சம்மேளனத் தலைவர் தோழர் இராம் அவதேஷ் சிங், M.P. பெரியார் நூற்றாண்டு விழாவினை பீகார் மாநிலம் முழுவதிலும் 30 நாட்கள் கொண்டாட ஏற்பாடு செய்தார். இந்தப் பணியின் ஏககர்த்தாவாகப் பெரியார் அவர்களை வரித்துக் கொண்ட அவர் என்னையும், தோழர்கள் மா. முத்துசாமி, து.மா.பெரியசாமி, நா.ப.செந்தமிழ்க்கோ ஆகியோரையும் பீகாருக்கு அழைத்து நன்கு பயன்படுத்தினார்.

நாங்கள் அங்குச் சென்றிருந்ததை அறிந்த கேரளத்து நண்பர்கள் எங்கட்கு ஊக்கம் தந்து 21.9.78-இல் பாட்னாவுக்கு எழுதிய மடல் 13.10.78­இல் அங்கு எனக்குக் கிடைத்தது.

“பிற்படுத்தப்பட்டோருக்கு ஜனத்தொகை விகிதாசாரப் பங்கு மத்திய அரசு உத்தியோகங்களிலும் வேண்டும்” என்பதற்கு ஆவன செய்யும்படி அக்கடிதத்தில், கேரள எஸ்.என்.டி.பி. யோகத்தின் செயலாளர் பேராசிரியர்

ஞ.ளு. வேலாயுதம் எழுதியிருந்தார். எஸ்.என்.டி.பி. யோகம் என்பது கேரள சீர்திருத்தச் செம்மல் ஸ்ரீ நாராயணகுரு என்பவரால் நிறுவப்பட்ட ஒன்றாகும். ஈழவர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களின் சமுதாய - கல்வி- உத்தியோகத் துறை முன்னேற்றத்தை இலட்சியங்களாகக் கொண்ட இந்த நிறுவனமே “ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம்” (S.N.D.P.) எனப்படும். 1903-இல் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. 1978-இல் அதன் 75ஆம் ஆண்டு நிறைவு விழா 1978 டிசம்பர் 1 முதல் 31 முடிய கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி, “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மாநாடு­கருத்தரங்கு” நிகழ்ச்சிகள் 17.12.1978-இல் கொல்லத்தில் நடைபெற இருப்பதை முன்னரே எனக்கு அறிவித்திருந்தனர்.

அன்றைய கருத்தரங்கில், அனைத்திந்தியப் பேரவையின் காப்புத்தலைவன் என்கிற முறையில், நான் பங்குகொள்ள வேண்டுமென 6.11.1978-இல் எனக்கு திரு. வேலாயுதம் மடல் எழுதினார்.

17.12.1978இல் கொல்லத்துக்கு நான் வருவதை அறிந்த திருவனந்தபுரம் தோழர் எம். பிரபா அவர்கள் 19.12.1978இல் திருவனந்தபுரத்தில் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் ஏற்பாடு செய்து, 20.11.1978-இல் எனக்கு மடல் எழுதினார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டுக் கேரள மாநிலத்துக்குப் பயணமான நான் வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் அரும்பணி பற்றியும் அறிய விரும்பினேன்.

16.12.1978 காலை 5 மணிக்குக் கொல்லம் சேர்ந்தேன்.

கொல்லத்தில் எஸ்.என்.டி.பி. யோகத்தினர் அமைத்துள்ள மிகப்பெரிய கண்காட்சியையும், அக்கண்காட்சியில் உள்ள அறிவியல் காட்சிப் பகுதியையும், தமிழக அரசு அங்கு வைத்துள்ள பெரியார் நூற்றாண்டு விழாக் காட்சிப் பகுதியையும் 16.12.1978 மாலையில் கண்டு களித்தேன்.

டில்லி சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யரும் மற்றும் இரு பேராசிரியர்களும் பிளாட்டினம் விழா ஆடிட்டோரியத்தில் அன்று மாலை நிகழ்த்திய பேருரைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த விழாவினை ஒட்டிக் கேரளத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அன்று இரவு 9.30 முதல் 1 மணிவரை நிகழ்த்திய பரத நாட்டியம், நாடகம் இவற்றைக் கண்ணுற்றேன்.

பரத நாட்டியத்துக்கான பாடல்கள் அனைத்தும் தூய தமிழ்ப் பாடல்களாக இருந்தது கண்டு தமிழகத்தின் ஓரு பகுதியில் இருப்பது போன்ற உணர்வு கொண்டேன். இரவு நல்ல ஓய்வு.

17.12.1978 காலை 10 மணிக்கு அனைத்திந்திய மாநாடு.

மாநாட்டைத் துவக்கி வைக்க இருந்த மத்திய அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராம் வருகைதர இயலாததால், பெங்களூர் பேராசிரியர் ஏ.எம். தர்மலிங்கம் காலை 11 மணி முதல் ஒரு மணி நேரம் சிறந்ததோர் உரையாற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார். அன்னாரின் நெடிய திண்ணிய ஆங்கிலப் பேச்சு கருத்தாழம் மிக்கதாகத் திகழ்ந்தது.

மாநாட்டுக்குக் கர்நாடக மாநில வருவாய்த் துறை அமைச்சர் திரு. க்ஷ. பசவலிங்கப்பா அவர்கள் தலைமை ஏற்று அரியதோர் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமான கேரள மீனவர் வகுப்புத் தலைவர் திரு. பி.கே. தீவர் (Deevar); அகில கேரள மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் பி. சுப்பிரமணியம், M.B.B.S. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பகல் 1.15-க்கு முற்பகல் மாநாட்டு நிகழ்ச்சி முடிவுற்றது.

மாநாட்டில் பங்கு கொள்ள விரும்பியும் என்னைச் சந்திக்க வேண்டியும் திருச்சி உறையூர் தோழர் ஜி. முத்துகிருஷ்ணனின் மூத்த மகன் நரசிம்மன் கோட்டயத்திலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்தார். அனைவரும் உணவை முடித்துக் கொண்டு, கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைகள் பற்றிச் சிறிது நேரம் உரையாடினோம்.

பிற்பகல் 4 மணிக்கு மாநாட்டுத் தொடர்பான கருத்தரங்கு துவங்கியது.

கேரள மாநில முன்னாள் அமைச்சர் திரு.வைக்கம் புருஷோத்தமன் கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

கருத்தரங்கின் தலைவரும் எஸ்.என்.டி.பி. யோகத்தின் தலைவருமான திரு. என். சீனிவாசன், B.A., B.L., தலைமை உரைக்குப் பின்னர், பிற்படுத்தப்பட்டோர் ­தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளைப் பற்றி நான் நீண்டதோர் உரையாற்றினேன்.

துவக்கத்தில் அய்ந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசினேன். தந்தை பெரியாரை நன்கு அறிந்திருந்த தோழர் பி. கங்காதரன், “தமிழில் உரையாற்றினால் புரிந்து கொள்ளுவோம்” எனக் கூறினார்.

கருத்தரங்கில் கூடியிருந்தவர்களை நோக்கி “நான் தமிழில் உரையாற்ற அனுமதி தருகிறீர்களா?” எனக் கேட்டேன். அனைவரும் கையொலி எழுப்பித் “தமிழில் பேசுங்கள்” எனக் கூறினர். பழைய தமிழகத்தின் ஓர் அங்கமாக இருந்த கேரளத்தில், முதல் நாள் இரவு தமிழ்ப் பாடல்களைக் கேட்டு, மறுநாள் தமிழிலேயே நான் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு,

1.           பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு உத்தியோகங்களில் ஒதுக்கீடு வேண்டும்.

2.           பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய-மாநில அரசு உத்தியோகங்களில் ஜனத்தொகை விகிதாசாரம் வேண்டும்.

3.           கலேல்கர் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த வேண்டும்.

4.           தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் உள்ள சலுகைகளை 1980-க்குப் பிறகும் நீடிப்பதுடன் - இன்றுவரை இவர்களுக்கான ஒதுக்கீட்டைச் சரிவர அமுல்படுத்தாத வடஇந்திய மாநிலங்கள் இந்த ஒதுக்கீட்டைச் சரிவர அமுல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்கிற கருத்துக்களை மய்யமாகக் கொண்டு நான் உரையாற்றினேன்.

நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, சோவியத்து நாட்டினின்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சுப்ரீம் சோவியத் பிரிசீடியத்தின் உறுப்பினர் திரு. E.K. ஃபெடரோவ் அவர்களும் மற்றும் இருவரும் கருத்தரங்கு மன்றத்துக்கு வருகை தந்தனர்.

என் உரை முடிந்த பின்னர் சோவியத்துத் தலைவருக்கும், அவருடன் வருகை தந்தோருக்கும் எஸ்.என்.டி.பி. யோகம் சார்பில் கருத்தரங்கு மேடையிலேயே வரவேற்பளித்தனர். வரவேற்புக்கு நன்றி தெரிவித்து திரு. ஃபெடரோவ் உரையாற்றினார்.

தொடர்ந்து தோழர்கள் கே.பாஸ்கரன், எர்ணாகுளம் பி. கங்காதரன், Ex. M.L.A. ஆகியோர் உரையாற்றினர்.

தமிழில் நான் உரையாற்றியதைக் கேரளத்தார் அனைவரும் பெரிதும் புரிந்து கொண்டனர். மலையாள மொழியில் ஆற்றப்பட்ட உரைகளில் 100க்கு 75 பங்கு எனக்குப் புரிந்தது. நமக்குச் சம்பந்தப்பட்ட செய்தி பற்றிய பேச்சு உரையாடல்கள் இவை மலையாளத்தில் அமைந்திருந்தாலும் பெரிதும் நம் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளலாம் என்பதை நான் அங்குக் கண்டேன்.

18.12.1978 முற்பகல் முழுவதும் விவாதத்தில் கழிந்தது.

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் பேரவையின் செயலாளர்கள் என்கிற பொறுப்பை வகிக்கும் நிலையில் பெங்களூர் பேராசிரியர் ஏ.எம். தர்மலிங்கம் அவர்களும், லக்னோ வழக்கறிஞர் செடிலால் சாத்தி அவர்களும் தயாரித்துத் தந்துள்ள பேரவையின் கொள்கை, சட்டதிட்ட விதிகளின் நகல்களை வைத்து விவாதிப்பதைப் பேராசிரியர் ஏ.எம். தர்மலிங்கம், கொல்லம் என். சீநிவாசன், கொல்லம் பி.எஸ்.வேலாயுதம் ஆகியோருடன் நான் மேற்கொண்டேன்.

தொடர்ந்து பல மாநிலங்களைச் சார்ந்த செயற்குழு உறுப்பினர்களுடனும் கலந்து பேசிய பின்னர் பேரவையின் சட்டதிட்ட விதிகளுக்கு இறுதி வடிவம் தர எண்ணங் கொண்டோம்.

அன்று பகல் 12 மணி அளவில் பேராசிரியர் ஏ.எம்.தர்மலிங்கம் அவர்கள் தம் துணைவியார் அவர்களுடன் பெங்களூருக்குப் பயணமானார்.

பகல் ஓய்வுக்குப் பின்னர் மாலை 5 மணி அளவில் பிளாட்டினம் விழா அரங்கில் நடைபெற்ற வரலாற்று ஆய்வுச் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயன்பெற்றேன். அனைவரும் மலையாளத்திலேயே உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சித் தலைவர் பேராசிரியர் டி.கே. ரவீந்திரன் அவர்களைக் கண்டு அவர் எழுதியுள்ள “வைக்கம் சத்தியாக்கிரகமும், காந்தியும்” (Vaikam Sathyagraha and Gandhi) என்கிற நூல் பற்றியும்; தந்தை பெரியார் அவர்கள் அந்த சத்தியாகிரகத்தில் வகித்த பங்கு பற்றியும் உரையாடினேன்.

அவர் அளித்த விவரங்கள் “வைக்கம் சென்று வர வேண்டும்” என்ற பேராவலை மேலும் அதிகப்படுத்தின.

19.12.1978 காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு, 10.10க்கு திருவனந்தபுரம் அடைந்தேன். தோழர் எம்.பிரபா அவர்களைத் தேடித் தலைமைச் செயலகம் சென்றேன். அவர் அலுவலகம் வேறு இடத்தில் இருந்தது. சுமார் 12 மணி அளவில் அவர் இருக்குமிடம் சேர்ந்தேன்.

நான் அங்கிருந்த சமயம் தோழர் உறையூர் ஜி. முத்துகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விடுத்த பண விடையும், மடலும் கிடைத்தன. நான் வைக்கம் சென்றுவர வேண்டும் என்பது அவருடைய பேரவா.

தோழர் எம். பிரபா அவர்களுடன் தமிழகம், கேரளம், ஆந்திரம் இங்கெல்லாம் உள்ள நாத்திக இயக்கங்களைப் பற்றி மாலை 5.30 வரையில் கலந்து உரையாடினேன்.

வைக்கம் சத்தியாக்கிரகம் பற்றி நான் யாரை யெல்லாம் கண்டு பேசலாம் என்பதைத் தெளிவுபட அவர் எனக்கு எடுத்துரைத்தார்.

மாலை 6 மணிக்குப் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம். இதற்கிடையில், “இந்திரா காந்திக்குத் தண்டனை” என்கிற செய்தி பரவி, திருவனந்தபுரத்தில் கல்லெறி, கலவரம் துவங்கிவிட்டது. பஸ்கள் நின்றுவிட்டன. நானும், தோழர் எம். பிரபா, தோழர் ஏ.கே. ஹமீது ஆகியோர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தை (University Students’ Centre) அடைந்த போது பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சிலர் மட்டுமே அங்குக் கூடியிருந்தனர்.

மாலை 6.45 மணிக்கு, தோழர் எம்.பிரபா தலைமையில் கூட்டம் துவங்கியது. பெரியாரின் தொண்டு பற்றித் தமிழிலேயே உரையாற்றலாம் எனத் துவக்கத்திலேயே தோழர்கள் கூறினர். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இரவு 7 மணிமுதல் 8.30 மணிவரை தந்தை பெரியாரின் தொண்டு பற்றி விளக்கிக் கூறினேன்.

திருவனந்தபுரம் பகுத்தறிவாளர் கழகம், தி.க., தி.மு.க., பிற கட்சிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுவான நாத்திகர்கள் இவர்களைக் கொண்டு இயங்குகிறது. தோழர்கள் எம். பிரபா, ஏ.கே. ஹமீது, சி.பி. செல்வம், கே. சுப்ரமணியம், என். நயினார் மற்றும் பலரும் ஊக்கமுடன் இங்குப் பணியாற்றுகின்றனர். விரைவில் மிகப்பெரிய அளவில் பெரியார் நூற்றாண்டு விழாவை அங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இரவு தோழர் கே.சுப்ரமணியம் இல்லத்தில் தங்கி விட்டு, 20.12.1978 காலை, பேராசிரியர் இரவீந்திரன் அவர்களையும், எம்.பிரபா, மற்றுமுள்ள தோழர்களையும் பார்த்துப் பேசிய பின், பிற்பகல் 2.30 மணிக்குக் கோட்டயம் நோக்கிப் பயணமானேன்; 161 கிலோ மீட்டர் பயணத்துக்கு 5 மணி நேரம் ஆயிற்று.

என் வருகையை எதிர்நோக்கி திரு.எம். நரசிம்மன் கோட்டயம் நிலையத்தில் காத்திருந்தார். அவர் அங்கு இரயில்வேயில் பணிபுரிகிறார். 1970 முதல் திருச்சி சிந்தனையாளர் கழகப் பணிகளில் ஊக்கமுடன் ஈடுபட்ட ஆர்வமும், அமைதியும் மிக்க இளைஞர் அவர்.

இரவு அவருடைய இல்லத்தில் நாங்களும், ஆறுமுகநேரி தோழர் பி. சுப்பிரமணியமும் சந்தித்து, மறுநாள் காலை வைக்கம் செல்லத் திட்டமிட்டோம்.

1.12.1978 காலை 7.05-க்கு வைக்கம் ரோடு நோக்கி நாங்கள் மூவரும் இரயிலில் பயணமானோம். இது 25 கிலோ மீட்டர் பயணம். 7.45-க்கு வைக்கம் ரோடு அடைந்து, அங்கிருந்து பஸ் மூலம், 11 கிலோ மீட்டர் சென்று வைக்கம் சேர்ந்தோம்.

கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், வைக்கம் நகராட்சி மேனேஜர் பால் காநாடன், நகராட்சித் துணைத் தலைவர் என். ராஜப்பன் நாயர் மற்றும் கே.எஸ். சுரேந்திரநாதன் நாயர், ஜான் தாமஸ், ஆசிரியர் கே. வாசுதேவன் ஆகியோருடன் கலந்துரையாடிப் பல விவரங்களைத் தெரிந்து கொண்டோம்.

கேரளத்துத் தலைவர்கள் டி.கே. மாதவன், கே.பி. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், ஏ.கே. பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே. கேளப்பன் நாயர், டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் 30.3.1924-இல் தொடங்கிய சத்தியாகிரகம் தோல்வி காணும் நிலையில் இருந்த போது, தந்தை பெரியார் அவர்கட்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளைப் பெற்ற அடுத்த கணமே புறப்பட்டு, 12.4.1924இல் பெரியார் வைக்கம் சேர்ந்தார்.

தந்தை பெரியார் உலவிய - கர்ஜித்த - சங்கநாதம் புரிந்த வைக்கத்துக்கு 21.12.1978 காலை 8.30-க்குப் போய்ச் சேர்ந்தோம்.

வைக்கம் சத்தியாகிரகம் என்பது என்ன?

வைக்கத்தில் உள்ள “வைக்கத்தப்பன் மகாதேவர் கோயில்” என்கிற ஸ்தலம் கேரளத்தில், கோட்டயம் மாவட்டத்திலுள்ள பெயர் பெற்ற கோயில்களில் ஒன்று.

1.           அந்தக் கோயிலின் நான்கு வாயில்களை நோக்கி வருகிற நான்கு பக்கங்களிலுமுள்ள பெரும்பாட்டைகளில் (On Main Roads) ஈழவர், பறையர், புலையர், மலைஅறையர், மலைப் பண்டாரம் போன்றோர் நடக்கக்கூடாது. இவர்கள் தீண்டப் படாத சாதியினர்.

2.           அந்த மெயின் ரோடுகளில் இந்து மேல் சாதியினர், கிறித்துவர், இஸ்லாமியர் ஆகியோர் மட்டுமே நடக்கலாம்.

3.            கிறித்துவர், இஸ்லாமியர் முதலானோர் கோயில் வெளிப்பிரகார வாயில்களைத் தாண்டி உள்ளே போகக்கூடாது.

அந்த நான்கு பக்கப் பெரும்பாட்டைகளில் நுழைவதற்குத் தடைபோட்டு, நான்கு பக்கங்களிலும் சுமார் 400 அடி, 450 அடி, 600 அடி, 1100 அடி தூரங்களில் - “தீண்டப்படாதவர்கள் இங்கே பிரவேசிக்கக் கூடாது” என்று தனித்தனி அறிவிப்புப் பலகைகளை அப்போது வைத்திருந்தனர்.

அன்று அந்த இடத்தை ஒட்டி உண்டியல் உண்டு. தீண்டப்படாதோர் அந்த உண்டியலில் காணிக்கை போடலாம்; அந்த எல்லைக்கு வெளியே நின்று வைக்கத்தப்பனைச் சேவிக்கலாம்; மேல்சாதி இந்துக்களை வணங்க வேண்டும்; வணங்கலாம்.

இந்தத் தடைகளை உடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் உந்தப்பட்ட திரு. டி.கே. மாதவன் காந்தியாருடைய அனுமதியையும், காங்கிரசின் ஆதரவையும் பெற்று, சத்தியாகிரகத்தைத் துவக்கி விட்டார், திரு.கே.பி. கேசவமேனன் (“மாத்ரு பூமி” ஏட்டின் நிறுவனர்) அவருக்கு உற்ற துணை நின்றார்.

இந்த சத்தியாகிரகத்துக்குக் காந்தியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோரின் ஆதரவு தொடர்ந்து இருந்தது. சத்தியாகிரகம் ஆரம்பித்தவுடன் முதல் நாள் மூவர் கைதாயினர். இரண்டாம் நாள் மூவர் கைதாயினர். தொண்டர்கள் நாயர் வகுப்புக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். எனவே அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் வர இயலவில்லை. கிளர்ச்சித் தலைவர்களும் சிறைப்பட்டனர். ஆகவே சில நாட்களுக்கு சத்தியாகிரகம் நிறுத்தப் பட்டது.

இந்த நிலையில்தான்-தந்தை பெரியாருக்கு கேரளச் சிறையிலிருந்த தலைவர்கள் ஆள் மூலம் ஓர் மடல் அனுப்பி வேண்டுகோள் விடுத்தனர். தந்தை பெரியார் 12.4.1924இல் வைக்கம் சத்தியா கிரகத்துக்குத் தலைமை ஏற்றார்.

வைக்கம் சத்தியாக்கிரகம் நடந்த இடத்திலிருந்து சுமார் 4 பர்லாங் தூரத்தில் வைக்கம் படகுத்துறை (Vaikom Jetty) உள்ளது. அந்தத் துறையை அடுத்து உள்ள சிறிய மைதானத்தில் பல தடவைகள் கூட்டங்களில் பெரியார் ஆற்றிய உரைகளைக் கேட்ட இரண்டு பெரியவர்களை நாங்கள் பேட்டி கண்டோம்.

கேரள மாநில முன்னாள் அமைச்சர் திரு. வி. மாதவன், 21.12.1978 காலை 10.30 மணிக்கு எங்களிடம் ஒப்புக்கொண்டபடி, பிற்பகல் 5.45-க்குப் பேட்டியளித்தார்.

“பெரியாரின் கர்ஜனைகளை நான் பல தடவைகள் கேட்டேன்.”

“அவருடைய கம்பீரமான தோற்றமும் பயங்கரமான மீசையும் அவர் அங்கவஸ்திரத்தை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு அப்படியும் இப்படியும் நடந்து கொண்டு செய்த வீர கர்ஜனையும் கேரளத்து மக்களுக்கு உணர்ச்சியையும் - உத்வேகத்தையும் ஊட்டியது.”

“உங்களுக்கு ரோஷமில்லையா? மானமில்லையா? நீங்கள் மரமண்டைகளா?” என்று கோபாவேசமாகக் கேட்டுவிட்டு, இடையிடையே அவர் சொன்ன குட்டிக் கதைகள் இன்னமும் என் நினைவில் உள்ளன,

இவ்வாறு கூறிக்கொண்டே, பெரியார் அன்று சொன்ன ஓர் கதையை எங்களிடம் விரித்துக் கூறி, பெரியார் பேசிய மேலே சொன்ன பாணியை அப்படியே உட்கார்ந்த வண்ணம் நடித்துக் காட்டினார்,

அவருக்கோ இன்று வயது 82.

இந்தத் தள்ளாத வயதிலும் அந்தக் குட்டிக் கதையைக் கூறும்போது நான்கு தடவைகள் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

“அன்று பெரியாரின் பிரசங்கங்களைக் கேட்ட எவரும் அவற்றை எப்போதுமே மறக்க முடியாது” என்பதைத் திரும்பத் திரும்ப அவர் கூறிய போது அவருடைய உடம்பே மயிர்க் கூச்செரிந்துவிட்டது.

சத்தியாக்கிரகத்திற்கு முன், 1923இல் அவர் வழக்கறிஞராகப் பணியாற்றப் பதிவு செய்து கொண்டார். எனவே சரளமாக அவர் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் விவரங்களைக் கூறினார்.

தேநீரும் சிற்றுண்டியும் எங்கட்கு அளித்து, என் கையைப் பற்றிக்கொண்டே நான்கு படிகள் இறங்கி, வெளி வாயிற்படிக்கு நடந்து வந்து, மகிழ்ச்சி பொங்க எங்களை வழியனுப்பி வைத்தார் அந்தப் பெருமகனார்.

அவரை மீண்டும் சந்திக்க உறுதி பூண்டேன். அங்கேயே மாலை 5 மணி ஆகிவிட்டது.

அருமைத் தோழர் ஆர். மாதவன் (71 வயது) 1924இல் சத்தியாகிரகத்தை நேரில் பார்த்தவர்; அப்போது அவர் ஓர் மாணவர்.

அன்னாருடைய பெருந்துணைகொண்டு, கோயிலின் நான்கு பக்கமும் தடைப்படுத்தப்பட்ட இடம், சத்தியா கிரகம் நடத்தப்பட்ட இடங்கள், சத்தியாகிரகிகள் தங்கியிருந்த இடம், பெரியாரும், காந்தியாரும், இராஜாஜியும் மற்ற தலைவர்களும் பேசிய படகுத் துறை (காயல் கரை - Vaikom Jetty) மைதானம் இவற்றை நேரில் பார்த்தோம். காந்தியாரும், நம்பூத்ரிகளின் தலைவரும் உரையாடிய இல்லத்தையும் பார்த்தோம். இந்த சத்தியாகிரகத்தில் காமராசர் ஓர் தொண்டராக இருந்தார் என்பதும் முக்கியமானது.

மாலை 6.30 மணிக்குக் கோட்டயம் நோக்கி நானும், எம். நரசிம்மன், பி. சுப்பிரமணியன் மூவரும் பயணமானோம். மறுநாள் 22.12.1978 காலை நானும், தோழர் எம். நரசிம்மனும் செங்கணாச்சேரி சென்று, ஓர் நண்பரைப் பார்த்துவிட்டு, காலை 10.30 மணிக்குக் கோட்டயம் சேர்ந்தோம்.

சரியாக 11 மணிக்கு கோட்டயத்தில் பெரியவர் கோபாலன் தந்திரி அவர்களைப் பார்த்தோம். அந்தப் பெரியவரின் வயதும் 82.

வைக்கம் சத்தியாகிரகிகளை நாயர் குண்டர்கள் தாக்குவதைக் கண்ட அவர், “நான் சத்தியாகிரகம் செய்யும் போது என்னைக் குண்டர்கள் தாக்கினால், குண்டர்களின் ஊட்டியைப் பிடித்துக் கடிப்பேன்; குத்திக் கொல்லுவேன் என்று சொன்னதால், என்னை சத்தியாகிரகம் செய்ய அனுமதிக்காமல், சத்தியாக்கிரக நிதி வசூலுக்கு அனுப்பி விட்டனர்” என்று உணர்ச்சியுடன் கூறினார்.

சத்தியாகிரகிகள் தாக்கப்பட்ட கொடுமையை விவரித்தார்.

“மதுரை சிவசைலம் என்கிற தமிழர் ஓர் சத்தியாகிரகி. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, செங்கற்களால் அடித்து நாசப்படுத்தினர்.”

“கூத்தாட்டுக்குளம் இராமன் இளையது என்கிற நம்பூத்ரி ஓர் சத்யாக்ரகி. குண்டர்கள் அவரைப் பிடித்துக் கைகளைக் கட்டிவிட்டு, இரண்டு கண்களையும் விரித்து உள்ளே சுண்ணாம்பை அப்பிவிட்டனர். அவரை சத்யாக்கிரக முகாமுக்கு எடுத்துச் சென்று கழுவி உபசாந்தி செய்தோம். அவர் சாகும் வரையில் கண்ணாடி போட்டால்தான் படிக்க முடியும் என்று ஆகிவிட்டது.”

“சத்தியாகிரகம் நடந்த போது சுமார் பதினாறு நாட்கள் வைக்கத்தில் பெரிய வெள்ளம். அப்போதும் கழுத்தளவு வெள்ளத்தில் நின்று கொண்டு, இரண்டு மணிக்கு ஒரு குழு வீதம், இரண்டு, மூன்று நாட்கள் மறியல் நடந்தது” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் கோபாலன் தந்திரி.

“சத்தியாகிரகத்தில் பெரியார் வகித்த பங்கு என்ன?” என்று நான் கேட்டதுதான் தாமதம்;

“நாய்க்கரோ-அவருடைய கம்பீரமும், வாச்சாரமும் கொண்ட பிரசங்கங்கள் மலையாளக் கரையிலே பிரதான கேந்திரங்கள் யாவற்றிலும் நடந்தது” என்று கூறிப் பெரியாரின் கம்பீரமான தோற்றத்தை எங்கட்கு நடித்தே காட்டினார்.

நானும் நரசிம்மனும் உணர்ச்சி வசப்பட்டோம்.

“வாச்சாரம் என்றால் என்ன?” என்று கேட்டேன்.

“நாய்க்கர் பிரசங்கத்தில் தாரை தாரையாக வார்த்தைகள் கொட்டும்” என்று விளக்கிச் சொன்னார்.

“வைக்கத்தில் நான் இரண்டு, மூன்று பிரசங்கங்களைக் கேட்டேன். ஒரே வீராவேசம்; ஒரே உணர்ச்சி” என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

திரு. கோபாலன் தந்திரி அவர்கட்கு ஸ்ரீ நாராயண குரு அவர்களிடம் நெருங்கிய ஈடுபாடு உண்டு.

ஆரம்பத்தில் தனிக்கோயில், தனிச் சிலைகள் பிரதிஷ்டை என்று உபதேசித்த ஸ்ரீ நாராயண குரு அவர்கள். சக்ரீஸ்வர க்ஷேத்திரம் என்கிற ஊரில் புதிதாக ஓர் கோயிலைப் பிரதட்சிக்க அங்குள்ளவர்கள் அழைத்த போது:

“நமக்கு இஷ்டமில்லா; நாம் வருமில்லா; க்ஷேத்திரங்கள் இனி வேண்டா; ஜனங்களுக்கு இனி தொழிலும், வித்யாப்பியாசமும், விவசாய சாலைகளும் உண்டாக்கிக் கொடுக்கா” எனக் கூறி அவர் மறுத்து விட்டதாக, நூல் ஆதாரப்பூர்வமாக எங்கட்குக் கூறினார். இது 16.6.1927இல் ஸ்ரீ நாராயண குரு அவர்கள் தந்த முடிவான உபதேசம். அன்னார் 1928-இல் (1855-­1928) மறைவுற்றார்.

வைக்கம் வீரரின் - தந்தை பெரியாரின் கம்பீர உரைகளை வைக்கம் வாழுநர் கூறக் கேட்ட நான், அவர் தம் வைக்கம் சத்தியாக்கிரக உரைகளை, அவருடன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட பலரையும் நேரில் கண்டு கேட்க வேண்டுமென்ற பேராவலுடன் ­கோபாலன் தந்திரி அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

எங்கள் இருவரையும் கட்டித் தழுவி அப்பெரியவர் விடை தந்தார்.

இப்படிப்பட்ட பெரியவர்களை - பெரியாரின் ஆரம்ப கால தியாகத்தை -அவர்தம் வரலாற்றின் இருண்ட காலப் பகுதியை விளக்கவல்ல வைக்கம் சத்தியாகிரகிகள் வி.கே. மாதவன், வாசு பணிக்கர், சாத்துக்குட்டி நாயர், குரூர் நீலகண்டன் நம்பூத்ரி பாத் போன்ற பலரையும் காண நான் விருப்பங்கொண்டு, மீண்டும் நான்கு வார காலம் கேரளப் பயணம் செல்ல விரும்புகிறேன்.

எனக்கு வசதியும் வாய்ப்பும் நேராவிட்டாலும் பெரியாரின் வரலாற்றில் இருண்ட பகுதிக்கு ஒளி தேடிச் செல்வதைப் பெருமகிழ்ச்சி தரும் பணியாகக் கருதித் தொடர்ந்து நான் ஈடுபடுவேன்.

(சிந்தனையாளன் - 06.01.1973)

- வே.ஆனைமுத்து

Pin It