கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(நடுத்தரமக்களால் முன்னெடுத்துக் கட்டமைக்கப்பட்ட இந்திய ஒன்றியம் இப்போது தேசியத்தைத் தழுவி பன்முகத் தன்மை இல்லாததாக்கப்படுகிறது)

இந்திய ஒன்றியம் என்ற கருத்துரு பெரும் பெருமைக்குரியதாகப் பேசிக் கொள்ளப்படுகிறதேயன்றி உண்மையில் அதை நிறைவேற்றுவதில் இல்லை.  மொழி, சமயம், பண்பாடு எனப் பல்வேறு மாறுபட்ட வேற்றுமைத் தன்மையுடைய மக்களைக் கொண்ட நாட்டில், அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள் சனநாயக வழிகளில் கிடைக்கப்பெற்று சமூகமாகக் கட்டமைக்கப்பட வேண்டுமென்பதுதான் விடுதலைக் கனவாக இருந்தது. அவ்வாறான வேற்றுமைத்தன்மை பெரும் மதிப்பிற்குரியது என்ற உள்ளடக் கத்தை அரசமைப்புச் சட்டம் கொண்டதாக இயற்றப்பட வேண்டும் என்பதுதான் இக்கனவின் சிறப்பியல்பு.

இது பல தோல்விகளையும் பல வெற்றிகளையும் கலந்தே கடந்து வந்துள்ளது. சென்ற இரு கிழமைகளில் நிகழ்ந்த வற்றை அடுத்து இந்திய ஒன்றியக் கருத்துரு குலைந்து வருகின்றது என அச்சமூட்டுவதாக உள்ளது.  பன்முகத் தன்மை, சகோதரத்துவம், தன்னுரிமை ஆகியவை மதிப்பிழந்தவையாகப்பட்ட ஒரு புதிய இந்தியாவை நாம் விரைவில் ஏற்க வேண்டியவர்களாகலாம்.

ஏன் எதற்காக அரசமைப்புச் சட்ட முறையிலான சம்மு காசுமீர் ஒவ்வொரு நடவடிக்கை வாயிலாகத் தீவிரமாக மாற்றப்பட்டு வருகின்றது ஏன் எதற்காக என்றால் அது இந்திய ஒன்றியம் என்ற கருத்துருவைத் தகர்த்துவதற்காகத்தான் எனத் தெரிகிறது.

நெருடும் நடவடிக்கை

புனித நூலெனக் கருதப்படும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிட மேற்கொள்ளும்முறைகள் எவ்வளவு முக்கிய மானதோ அதேபோன்றதாக மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் உள்ளடக்கமும் இருக்க வேண்டும்.

1950லிருந்து சிலகால இடைவெளிகளில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக ஆக்கப்பட்டுள்ளன.  இதுபோன்ற நிகழ்வுகளின் போது கலந்துரையாடல் என்பது ஏதோ ஒரு வடிவத்தில் ஒன்றிணைந்த கூறாக இருந்து வந்துள்ளது. சம்மு காசுமீர் திடீரென மறை வுற்றது போன்று இதுவரை நிகழ்ந்ததில்லை. 80 இலக்கம் மக்களைக் கொண்ட மாநிலத்தை எஞ்சிய அனைத்து உலகத்திலிருந்து துண்டித்து விட்டும், அம்மக்களின் கருத்தை வெளியிட அனுமதிக்காமலும் உரிய உயரிய சட்டநெறிகள் எதையும் பின்பற்றாமல் ஒன்றிய அரசு (Federal State)  எனச் சொல்லிக் கொண்டு அது அடித்து நொறுக்கப்பட்டு விட்டது. 

மத்தியில் குவிந்த முற்றிலும் மய்யப்படுத்தப்பட்ட அரசை இந்திரா காந்தி காலத்திற் குப்பின் சென்ற அய்தாண்டுகளிலும் நாம் பெற்றிருக் கிறோம் என்பதில் அய்யம் இல்லை. இன்னும் என் னென்னவெல்லாம் நிகழவுள்ளதோ என்பது பற்றிக் கவலை கொள்வதா? வேண்டாமா? எனத் தோன்று கிறது.  பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றைத் தவிர எல்லா மாநிலக்கட்சிகளும் தொலை தூரப் பார்வையில்லாமலோ அச்சத்தினாலோ சம்மு காசுமீர் மாநிலம் இரு ஒன்றியப் பகுதிகளாகத் துண்டா டப்படுவதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட னவோ? என்று தோன்றுகின்றது.

விதி 370 இன் படி சம்மு காசுமீர் துய்த்து வந்த உரிமைகளை நரேந்திர மோடி அரசு திரும்பப் பெறுகிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த உயிர்த் தத்துவத்திற்கு எதிரானது என்றுதான் கொள் ளப்படவேண்டும் என்று பலப்பல வழக்குரைஞர்கள், அரசமைப்புச்சட்ட வல்லுனர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். இப்போது இந்த வெற்றியைப் பெற்று விட்டோம் எனக் கருதும் இந்த அரசு தன்னுடைய வேலைத் திட்டத்தை இதே போன்ற சூழ்ச்சியுடன் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிடத் தீவிரமாகத் துணித் திடும்.  இதற்குக் குறுக்காக அறமன்றங்கள் மட்டும் நிற்க லாம்.  அதிலும் இந்திய ஒன்றிய அரசு தன் நடவடிக் கைகள் மேலோங்கிடும் என்று எண்ணிக் கொண்டிருக் கிறது.

சம்மு காசுமீர் என்ற ஒரு மாநில அரசு மறைந்து விட்டதாக நமக்குத் தெரிகிறது. தங்களின் மாநிலம் திடீரென ஒருநாள் இரு ஒன்றியப் பகுதியில் கூறுபோடப் பட்டு அவை உண்மையில் தில்லியால் ஆளப்படுகிறது என அவர்களிடம் தெரிவிப்பது அவர்களை வேறேந்த வகையிலும் இவ்வளவு இழிவுபடுத்தமுடியும் என்று எண்ணவே முடியாது.

சிறப்பு உரிமைகளின் பின்னணியிலுள்ள உயிரான மெய்ப் பொருள்:

தலித்துகள், பழங்குடிகள் என்றும் மணிப்பூர், மிசோராம், நாகாலந்து மற்றும் சிக்கிம் (விதி 371 இன் கீழ்) இன்னும் இதுவரை சம்மு காசுமீர் என இவை பல்வேறு மாறுபட்ட தன்மையுடைய சமூகங்களாத லால் இவற்றிற்கு நேர்மையான காரணங்களுக்காகப் சிறப்பு உரிமைகள் அளிக்கும் விதி 370ஐ இந்திய அரசமைப்புச் சட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.  நாடு முழுமைக்கும் எல்லா வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான உரிமை அளிப்பது ஒரு இணைக்கமான சமூகத்தை உருவாக்காது. 

உண்மையில் இதற்கு நேர்எதிர்மறை யானதுதான் பல்வேறு மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட இந்த நாட்டிற்குப் பொருத்தமானதாக இருக்கும். பல்வேறுவகை வேறுபாடுகளைக் கொண்ட இந்தப் பெரிய நாட்டில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு, சமயங்களுக் கென சிறப்பு உரிமைகள் அளிப்பது அவர்களை ஓர்மை உணர்வு உள்ளவர்களாக்கும்.  சம்மு காசுமீர் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட சூழலில் அம்மாநிலத் திற்கு உத்திரவாதங்கள் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது.

விதி 370இன் படி தன்னாட்சி வழங்கப்பட்டது. இரண்டு காரணங்களுக்காக வாதத்திற்குரியது  ஒன்று, இந்தியாவும் பாக்கிசுத்தானும் இம்மாநிலத்தைப் பறித்துக் கொண்டபோது சம்மு காசுமீர் தன்னுரிமை கொண்டதாக இருந்தது.  இரண்டாவதாக, இந்தியாவில் இசுலாமியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மாநிலத்திற்கென ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தை அளித்தது. விதி 370 இல் உறுதியளித்துள்ள வாக்குறுதி களைத்தக்க வைக்க இவ்விரு தன்மைகளும் பெரிதும் முக்கியமானவையாகியுள்ளன. இருப்பினும் எப்போதும் ஓர்மையை முதலாவதாக எண்ணும் இராசுட்டிரிய சுயம்சேவச் சங்கத்திற்கும், சனசங்கங்கத்திற்கும் விதி 370ஐ நீக்குவதுதான் முதன்மையாக இருந்து வந்திருக்கிறது. 

விதி 370 எப்போதும் வாதத்திற்குரியதாக இருந்துவந்தாலும் அந்தவாதம் ஒருபோதும் எந்த அளவிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதில் புது தில்லிக்கோ சிறீநகருக்கோ புனிதம் இருப்பதாகக் கருதவில்லை ஒன்று குடியரசுத் தலைவரின் தொடர் அறிவிக்கைகளால் 1950 லிருந்தே திட்டமிட்டுத் தன்னாட்சி உரிமைக்கான வாக்குறுதி வெற்று வாக்குறுதியாகக் கப்பட்டது. இன்னொன்று, அதைப் பேரம் பேசும் பொரு ளாக்கி அது தன் வளையை வலுப்படுத்திக் கொண்டது.  விதி 370 இன் உள்ளீட்டை வெற்றாக்கிவிட்டபோதிலும் அந்த விதி சம்மு காசுமீரிகளின் தனிச்சிறப்புக்குரிய பண்பு அங்கீரிக்கப்படும் வகையில் ஒரு முக்கியமான அடை யாளமான மதிப்பைத் தக்கவைத்துக் கொண்டது.

மோடி அரசின் நடவடிக்கை எத்தன்மையதாகினும் பழைய காசுமீரின் நிலைமை இனியும் நிலை பெறாது என்று வாதிடப்படுகிறது. 2014லிருந்து அரசு இரும்புக் கரம் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் வன் முறை, நிகழ்ச்சிகளால் பாதுகாப்புப் படையினர் பலி யாதல், வெகுளியான மக்கள் கொலை செய்யப்படுதல் என நிலைமை மோசமடைந்து வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இறுதியில் சம்மு காசுமீர் சிறைப்பட்டதிலிருந்து நீக்கப்பட்டதும் தம்மண் கைப்பற்றப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தினுடனான துயருற்ற மக்களைத்தான் தில்லி அரசு கையாள வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் பெருகு கிறதோ இல்லையோ வன்முறைகள் பெருகி மாதங் களாகவும், ஏன் ஆண்டுகளாகவும் நிகழக்கூடும் என நாம் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.

பன்மைத்தன்மையைப் புறந்தள்ளல்

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதியின் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் ஆகசுத்து தொடக்கத்தில் அரசு எடுத்த இந்த முடிவை வரவேற்கின்றனர்.  இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல. சம்மு காசுமீரில் நீண்ட காலமாகத் தொடரும் வன்முறை இவர்களைச் சலிப் படையச் செய்வதுடன் இதைப் பற்றிக் கவலையற்றவர் களாக்கிவிட்டது. எனவே, காசுமீரிகளை அவர்கள் மண்ணில் அடக்கி வைக்கும் அரசின் உறுதியான கடும் நடவடிக்கைகளை அவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ள லாம். காசுமீரிகள் இந்திய ஒன்றியத்துயுடன் இணைந் திருக்கவில்லை என நாம் பேசுகிறோம்.  ஆனால் இந்திய ஒன்றிய அரசு ஒருபோதும் காசுமீரை இணைத்துக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையைச் சொல்ல வேண்டும். 

வன்முறைக்கு முன்பு காசுமீர் இயற்கை எழில் பொங்கும் விடுமுறைக் காலச் சுற்றுலாவுக்கான ஒரு இடமாகத்தான் இருந்தது அல்லது திரை நட்சத்திரங்கள் துள்ளித் திரியும் மலைப் பகுதிகளாக இருந்தது.  நம்மை ஒத்த குடிமக்களாகத்தான் காசுமிரிகளும் நாம் கொண்டிருந்த கனவுகளுடன்தான் இருந்தார்கள் என நாம் ஒருநாளும் எண்ணிப் பார்த்ததில்லை.  அந்த மாநில மக்கள் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றுறுதியை நாம் அய்யுற்றும் பயங்கரவாதத்திற்கும், ஆயுதச் சண்டை களுக்கும் அந்த மாநிலந்தான் காரணம் என்றும், அவர்கள் பாக்கிசுத்தான் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலத்தில் வாழ்பவர்களாகத்தான் நினைத்தோம்.

அதே நடுத்தர வகுப்பு மக்கள் விடுதலை இயக்கத் திற்கு வித்திட்டு நவீன அரசமைப்புச் சட்டத்திற்கு வழிகண்டதுடன் நாட்டைக் கட்டமைக்கும் அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்தனர்.  ஆனால் இப்போது இந்தியக் கருத்துரு கொடுந்தன்மை கொண்ட தேசியத் தைத் தழுவிக் கொண்டு நாட்டின் பன்முகத்தன் மையைப் புறந்தள்ளிவிட்டது.  இப்போது காசுமீர் மக்கள் என்ன உணர்வுடன் உள்ளனர் என்பதைப் பற்றி கவலையற்றவர்களாக உள்ளோம். சென்ற திங்கள் முதல் இருவாரங்களில் அவர்கள் நாட்டுக்குள் சிறைப்படுத்தப் பட்ட நிலைக்குள்ளாகப்பட்டுள்ளது பற்றி நாம் சிறிதும் கவலை அற்றவர்களாக இருக்கிறோம்.  காசுமீரில் நிலங்கள் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தப் பட்டதைப் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசிக்கொள்கிறோம். 

அழகிய காசுமீரி பெண்களை நாட்டின் பிற பகுதி ஆண்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இயற்றுவோர் பேசிக் கொள்கின்றனர்.  மேலும் இந்தப் பள்ளத்தாக்கில் மக்கள் சமூக வடிவத்தை மாற்றி இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலிருந்து எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம்.  இந்திய ஒன்றியக் கருத்துரு வேர் வரை உலுக்கப்பட்டு நடுக்கம் கொள்ள வைக்கப்பட் டுள்ளது. இந்திய ஒன்றியக் குடியரசு நாட்டின் வரலாற்றில் மூன்று நிகழ்வுகள்.

1975, சூன் 25 இல் அவசர நிலை அறிவிக்கப்பட்டு பெரும்பாலான அடிப்படை உரிமைகள் நிறுத்திவைக்கப்பட்டு மறுக்கப்பட்டது முதல் நிகழ்வு.   அப்போது மக்கள் வாக்களித்து இந்தியாவை மீட்டெடுத் தனர்.  அடுத்தது, பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்ட 1992 திசம்பர் 6 ஆம் நாள். எனினும் இதற்கு ஈடுசெய் யாமலும் தண்டனையின்றியும் நாம் பசப்பித் தப்பி விட்டோம்.  இப்போது 2019 ஆகசுத்து 5இல் அரசமைப்புச் சட்டம் எழுத்தளவில் இல்லாவிட்டாலும் அதன் உயிர்ப்புத் தன்மை அழித்துப் பாழாக்கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் தகர்த்தப்பட்டு ஒழிக்கப்பட்டு ஒன்றியத்தில் உறுப்பான ஒரு மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.     இந்தத் தற்போதைய மரண அடியிலிருந்து இந்திய ஒன்றியக் கருத்துருவை மீட்டெடுப்பது கடினமாகும்.

19.9,2019 நாளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா

தமிழாக்கம் : இரா.பச்சமலை